செல்லும் செல்லாதததுக்கு செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!
செல்லும் செல்லாதததுக்கு
செட்டியாரைக் கேள்! பாப்பாமலர்!
ஓர் ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பெரிய வியாபாரி,
அதோட பணத்தை வட்டிக்கும் விடுவாரு. அவர் பேரு சக்கரை செட்டியார். நூறு ரூபாய் பணத்துக்கு
ஆறு ரூபாதான் வட்டி அதிகமில்லை. மாதா மாதம் பத்துரூபாய் கட்டிவிட வேண்டும். பத்து மாசத்தில்
கடனை தீர்த்துவிட வேண்டும்.
பத்துமாச வட்டி அறுபது ரூபாய், பத்திரம் எழுத கூலி
முக்கால் ரூபாய், பத்திர மகமைப்பணம் ஒண்ணேகால் ரூபாய் என மொத்தம் அறுபத்திரண்டு ரூபாய்
முதலிலேயே பிடித்தம் ஆகிவிடும். மீதி முப்பத்தெட்டு ரூபாய்தான் கொடுப்பார். அதை பத்து
மாதங்களில் நூறு ரூபாயாக திருப்பிட வேண்டும். கொடுப்பது முப்பத்தெட்டு ரூபாய். பத்திரம்
நூறுரூபாய்க்கு எழுதி வாங்கிவிடுவார்.
வட்டியை இப்படி வறுமையாளர்களிடம் கசக்கி பிழிந்து
எடுத்து எடுத்து கொழுத்துப்போன செட்டியார் வெளியூர்களில் கொடுத்த பணத்தை வசூலிக்க ஒரு
நாளு அயலூருக்கு போனாரு.
அங்க வசூல் பண்ண பணம் ஒரு ஐம்பதாயிரம் தேறுச்சு!
இந்த கதை நடக்கிற காலத்துல நோட்டு எல்லாம் கிடையாது. தங்கக் காசுதான். அதனால இந்த பணத்தை
எல்லாம் ஓர் துணிப்பையில் போட்டு இடுப்பிலே கட்டிக்கொண்டார். ஊர் திரும்பணும் பொழுது
போயிருச்சு! அவருக்குத் துணையா ஓர் காவலாளு இருப்பான். அன்னிக்குன்னு பார்த்து அவனுக்கு
உடம்புக்கு சுகமில்லாம போயிருச்சு. அதனால அவனும் வரலை. செட்டியாருக்கு அசலூர்ல தங்கறதுக்கு
அச்சமா இருந்துச்சு! ஆனது ஆவட்டும்னு கிளம்பிட்டாரு.
பத்துமைல் நடக்கணும் வழியிலே ஆளரவம் இல்லாத காடு
வேற துணைக்கு ஓரு ஆளு இருந்தா தேவலைன்னு அவருக்குத் தோணிச்சு. வழியிலே ஓர் வாலிபன்
வாட்டசாட்டமா செக்கு உலக்கையாட்டம் நின்னுக்கிட்டு இருந்தானாம். செட்டியாரு அவனை பார்த்து,
யாரப்பா நீ! நான் பக்கத்து ஊருக்கு போவணும் துணைக்கு வர்றியா?ன்னு கேட்டாரு.
அவனும் சாப்பாடு போட்டா வாரேன்னு சொன்னான். சரிப்பா!
உனக்கு சாப்பாடு போட்டு கூலியும் தரேன்! என்னோட
துணைக்கு வா!ன்னு கூட்டிக்கிட்டாரு. அவன் சுத்த மூடன். ஆள் உசந்த அளவுக்கு அறிவு உசராத
ஆளு! நல்ல சாப்பாட்டு ராமன். அவனைக்கூட்டிக்கிட்டு செட்டியாரு நடந்தாரு.
வழியிலே ஓரு
கடையில இட்டிலி வித்துக்கிட்டிருந்தாங்க! துணைக்கு வந்தவன் பசிக்குதுன்னு சொன்னான்.
செட்டியாரு ஓர் எட்டணா காசை கொடுத்து சாப்பிட்டுவான்னு சொல்லி அனுப்புனாரு. அவன் ரெண்டனாவுக்கு
வயிறு புடைக்க இட்டிலி சாப்பிட்டு மீதி ஆறணாவை கொண்டுவந்து செட்டியார் கிட்டே கொடுத்தான்.
செட்டியாருக்கு என்ன தோணிச்சோ தெரியலை! நீயே வச்சுக்கன்னு
சொல்லிட்டாரு. மூடனுக்கு ரொம்ப சந்தோஷம் அதை மடியிலே கட்டிக்கிட்டான். ரெண்டுபேரும்
நடந்தார்கள். வழியிலே பெரிய காடு வந்தது. காட்டை பார்த்ததும் மூடனுக்கு பயமா போயிருச்சு!
செட்டியாரே! உன்னோட நா வரலை! நீ வாங்கி கொடுத்த
இட்டிலியைக்கூட கக்கிடறேன்! இந்தா நீ கொடுத்த ஆறணா! ஆளை விடு! அப்படின்னுட்டு மூடன்
ஓடப் பார்த்தான்.
செட்டியாருக்கு தர்ம சங்கடமா போயிருச்சு! அடடா!
இந்த முட்டாளைப்போய் துணைக்கு கூட்டி வந்தோமே! என்று வருந்தி, இளைஞனே! உனக்கு ஒன்றும்
நேராது! நான் துணைக்கு இருக்கிறேன்! பயப்படாதே என்று சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு
காட்டுக்குள் நுழைந்தார்.
கொஞ்ச தூரம் போனதும் யாரோ நடமாடும் சத்தம் கேட்கவே,
செட்டியார் அங்கே இருந்த ஓர் புதருக்குள்ளே பதுங்கினார். மூடனையும் பதுங்கச் சொன்னார்.
அங்கே திருடர்கள் கூட்டம் ஒன்றுசென்று கொண்டிருந்தது. பதுங்கிய மூடன் நேரம் ஆகவும்
உறங்கிப் போய் உருண்டு போய் பாதையில் விழுந்தான்.
கும்மிருட்டு! திருடர்கள் கருப்புத் துணி கட்டிக்கிட்டு
ஈட்டியும் வாளும் எடுத்துட்டு அவ்வழியே வந்தார்கள் அவங்க மொத்தம் முப்பத்திரண்டு பேர்கள்.
புதரிலே மறைஞ்சிருந்த செட்டியாருக்கு குலை நடுங்கிச்சு! ஆஹா! இவங்க கிட்ட மாட்டினா
அதோகதிதான்னு நினைச்சாரு.
வழியில் உறங்கிக் கிடந்த மூடனை ஏதோ மரத்துண்டு என்று
அந்த திருடனுங்க தாண்டி தாண்டி போனாங்க! கடைசியா வந்த ஒரு திருடன், இதென்ன மரத்துண்டு
வழியிலே கிடக்குது என்று காலால் உருட்டினான். அவன் கூட வந்தவனோ, டேய், அது பணந்துண்டு!
காலாலே உதைக்காதே! காலில் சிறாய் குத்திக்கொள்ளப் போகிறது! என்றான்.
இதைக்கேட்ட மூடனுக்கு ஆத்திரமாய் வந்தது, உடனே துள்ளி
எழுந்து, ஆறடி மனுசன் படுத்து கிடந்தா உருட்டி தள்ளிட்டு பனந்துண்டுன்னு சொல்றீங்களே!
எந்த பணந்துண்டு மடியிலேவாவது ஆறணா துட்டு இருக்குமா?ன்னு கத்தினான்.
திருடர் தலைவனுக்கு கோபமாய் வர மூடனின் கன்னத்தில்
ஒன்று வைத்தான். மூடனோ, என்னை அடி! பொருத்துக்கிறேன்! ஆனா பனந்துண்டுன்னு சொல்லாதே!
ஏன்னா பனந்துண்டு மடியிலே ஆறனா இருக்காது! அப்படின்னு சத்தம் போட்டான்.
அடடா! இவன் ஆறணா, ஆறணான்னு திருப்பித் திருப்பிச்
சொல்றானே! இருக்குதா பாப்போம்னு அவன் மடியில் துழாவி ஆறணாவைப் பிடுங்கிக் கொண்டான்.
அது ஒரணாக்காசுகளா! ரெண்டணாக் காசுகளான்னு இருட்டில் துழாவிப் பார்த்தான்.
மூடனுக்கு கோவம் வந்துருச்சு! என்னய்யா! பணத்தை
தடவி தடவி பாக்கிறீங்க? செல்லுமா செல்லாதாதான்னு பாக்கிறீங்க? செல்லும் செல்லாததற்கு
செடி மறைவில் இருக்கும் செட்டியாரைப் போய் கேளும்யா! என்றான்.
அவ்வளவுதான்! செட்டியாரை சூழ்ந்துகொண்டனர் திருடர்கள்.
மூடனை துணைக்கு கொண்டுவந்தது செட்டியாருக்கு வினையாகிவிட்டது. ஊரார் வயிற்றெரிச்சலை
வட்டியாக வாங்கிக் கொட்டிக் கொண்டார் இல்லையா! இப்ப வட்டியும் முதலுமா ஐம்பதாயிரம்
பொன்னை இழந்து விதியேன்னு வீடு வந்து சேர்ந்தார்.
(செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமை! அசத்தல்! அதிகமா ஆசைப்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும் நன்றி!!
ReplyDeleteஅன்பூடன் கருர்பூபகீதன்!!!
செவிவழிக் கதை என்றாலும் நீங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை நண்பரே!
ReplyDeleteநல்ல படிப்பினையை கொடுத்தது கதை பேராசை பெரு நஷ்டம்
ReplyDeleteஇக்கதையை முன்னர் நான் கேட்டுள்ளேன். இருந்தாலும் தங்களின் பாணியில் படிக்க இன்னும் நன்று. நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநண்பரே நன்றி
ரொம்ப நாள் முன்னர் பாட்டி சொல்லிக் கேட்டது ..
ReplyDeleteநன்றிகள்
ha...........ha...........ha...........
ReplyDeleteகதை அசத்தலா இருக்கு.
ReplyDeleteஅருமையான கதை,
ReplyDeleteஇந்தக் கதை கேட்டதுண்டு. ஆனால் நினைவில் நீங்கள் இங்கு சொன்னதை வாசித்ததும் நநினைவுக்கு வந்தது...நீங்கள் சொன்ன விதம் அருமை...சுரேஷ்!
ReplyDelete