பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!

பூதத்தை வென்ற புத்திசாலி! பாப்பா மலர்!



ரொம்ப நாளுக்கு முன்னால ஒரு ஊர்ல ஒரு புருஷன் பொஞ்சாதி வாழ்ந்து வந்தாங்க. அவங்களுக்கு அஞ்சு பசங்க. அதுல ரெண்டு ஆம்பளை பசங்க. மீதி மூணும் பொண்ணுங்க. இப்ப மாதிரி அப்ப குடும்ப நலத்திட்டம் எதுவும் கிடையாது. அதனால பெரிய குடும்பமா ஆயிருச்சு அவங்க குடும்பம். போதாக் குறைக்கு விருந்தினர்கள் வேற. அந்த புருஷன் காரன் ராப்பகலா உழைச்சும் ஒண்ணும் மீறலை! கட்டுப்படியாகலை.

   புருஷன் காரன் பேரு சுப்பையா. அவன் அந்த ஊர் ராஜாகிட்ட போய் தன் கஷ்டத்தை முறையிட்டான். ராஜாவும் இரக்கப்பட்டு அந்த ஊர் மலைக் குன்றுகிட்ட இருந்த தரிசு நிலத்தை தானமா கொடுத்தாரு. அந்த நிலம் கிடைச்சதும் அதை சுத்தப்படுத்த சுப்பையா முயற்சி பண்ணான்.

  அந்த நிலத்துல ஒரு பெரிய அரசமரம்  அடர்ந்து வளர்ந்து கிடந்தது. அந்த மரத்தை வெட்டினாத்தான் சாகுபடி பண்ண முடியும்னு அதை வெட்டினான் சுப்பையா. அந்த மரத்துல வருஷக் கணக்குல ஒரு பூதம் வாழ்ந்து வந்துச்சு. இது வரைக்கும் அதை யாரும் தொந்தரவு பண்ணதே இல்லை.

  சுப்பையா மரத்தை வெட்டவும், அதுக்கு கோவம் வந்துருச்சு. என்னோட இடத்துல வந்து நான் வசிக்கிற மரத்தையே வெட்டறியா? உன்னை என்ன செய்யறேன் பாரு!ன்னு பூதாகரமான உருவத்தை எடுத்துக்கிட்டு பல்லை  ‘நறநற’வென கடித்தபடி உன்னை விழுங்கிடறேன் பாருன்னு கத்திச்சு.
 
   சுப்பையாவுக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு! அடங்கொப்புறானே! இதென்னடா கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையா இங்க மரம் வெட்டப்போயி இப்படி பூதம் கிளம்பிருச்சே! அப்படின்னு பயந்து போயிட்டான். ஒரு வழியா மனசை திடப்படுத்திக்கிட்டு,  குலசாமியை மனசுல நினைச்சுக்கிட்டு, ஏய்! பூதமே! நான் பூதங்களையெல்லாம் அடக்கின பூதம்! இதுவரைக்கு பஞ்ச பூதங்களை அடக்கி இருக்கிறேன்! என்கிட்ட வாலாட்டாதே! ஓடிப்போ! அப்படின்னு சத்தம் போட்டான்.

   மண், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களை தன்னுள்ளே அடக்கியிருப்பதைத்தான் அப்படி சொன்னான் சுப்பையா. முட்டாள் பூதமோ! பயந்து ஓடிப்போய்விட்டது. பூதம் சென்றதும் அந்த நிலத்தை பாடுபட்டு மேடுபள்ளம் எல்லாம் நிரவி சமப்படுத்தி உழுது பயிரிட்டான் சுப்பையா. அதில் கேழ்வரகை விதைத்தான். அதுவும் நல்லா விளைஞ்சது.   கதிர் முற்றி வருகையில்  அங்கே திரும்பவும் பூதம் வந்துச்சு.

   ஏய், மானுட பதரே! என்னை துரத்தி அடிச்சாய் அல்லவா? உன்னை என்ன செய்யறேன் பாரு! அப்படின்னு பெரும் மழையை தன் மந்திர சக்தியால வரவழைச்சுது. அடிஅடின்னு அடிச்ச மழையில கேழ்வரகு பயிரெல்லாம் நீர்ல முழுகிடுச்சு. நிலம் குளமா மாறிப்போயிருச்சு! அதைப் பார்த்து சுப்பையா கண்ணிலும் குளம் குளமா நீர் வந்துட்டே இருந்துச்சு!


   வயக்காட்டுக்கு போன புருஷனை காணோம்னு அவன் பொஞ்சாதி வள்ளி, புருஷனை தேடி வயலுக்கு வந்தா! அங்க வயல் தண்ணியிலே மூழ்கி இருக்கறதையும் புருஷன் காரன் அழுதுகிட்டு இருக்கிறதையும் பார்த்த அவ புருஷனை தேத்தி என்ன நடந்துச்சுன்னு கேட்டா.
  பூதம் வந்து இந்த மாதிரி மழையை வரவழைச்சு பயிரை நாசம் பண்ணிருச்சு! இனி நான் என்ன செய்வேன்? அப்படின்னு அழுதான் சுப்பையா.
  
   இதுக்கெல்லாம் அழலாமா? புழுதியா இருந்தா புஞ்சைக்காடு! சேறா இருந்தா நஞ்சைக் காடு! பூதம் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கு. நிலத்தை நல்லா உழுதுடுங்க! இந்த கேழ்வரகு பயிரே உரமா ஆயிரும். நல்ல விதை நெல்லா வாங்கி விதைப்போம். அறுவடை செஞ்சா நல்ல லாபம் வரும். இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கணும் அவ்வளவுதான்! என்றாள் வள்ளி.

   சுப்பையாவும் மனசை தேத்திக்கிட்டு நிலத்தை உழுது நல்ல கிச்சடி சம்பா நாத்துக்களை வாங்கி வந்து நடவு நட்டான். பயிர் நல்லா ஓங்கி வளர்ந்தது. ஆள் உயரம் வளர்ந்து கதிர் முத்தி நின்னுது நாலரை மாசத்துல. இதை பார்த்ததும் சுப்பையாவுக்கு மகிழ்ச்சி! கேழ்வரகை விட இதுல நல்ல லாபம்னு சந்தோஷமா இருந்தான்.

  அறுவடைக்கு ஆட்களை கூட்டிக்கிட்டு மறுநாள் வயலுக்கு வந்தான். அந்த பூதம் திரும்பவும் அவன் முன்னாடி வந்து, “ அடேய் மானிடா! என்னை விரட்டுன உன்னை சும்மா விடமாட்டேன்! நீ எப்படி நெல்ல அறுத்துருவேன்னு பாக்கிறேன்! நீ அறுத்து போடற கட்டு ஒண்ணுக்கு ரெண்டுபடி நெல்லுதான் வரும்! இது என்னோட சாபம்னு சொல்லுச்சு!

  சுப்பையா தலையில கை வச்சிக்கிட்டு உக்காந்துட்டான். கட்டுக்கு ரெண்டுபடி விளைஞ்சா கூலிக்கு கூட கிட்டாதேன்னு அழுதுகிட்டு இருந்தான். அப்ப அவன் பொஞ்சாதி வள்ளி வந்தான். விசயத்தை கேட்டதும் இதானா விசயம்? எதையும் புத்தி இருந்தா ஜெயிக்கலாம். இப்ப பாருங்க! அப்படின்னு சொல்லிட்டு கூலி ஆட்களை நிலத்தில இறக்கினா.

   நெல்லுக்கதிரை அறுத்து ரெண்டு தாளுக்கு ஒரு கட்டா கட்டிப் போடுங்க. பூதம் இப்ப என்ன செய்யுதுன்னு பார்க்கலாம் என்றாள்.
இரு தாளுக்கு ஒரு கட்டு என்றபடியால் பூதம் சொன்ன மாதிரி ஒரு கட்டுக்கு ரெண்டுபடி நெல்லுங்கரது ஒவ்வொரு தாளுக்கு ஒரு படி நெல்லா குவிஞ்சது.

  பூதம் இதைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டது. நாம என்னா செய்தாலும் இவங்க அதை மாத்திடறாங்களே! இவங்களை நாம ஜெயிக்க முடியாதுன்னு அதுக்கு தோணிச்சு!

    சுப்பையா, வள்ளி இனி நான் உங்க ஜோலிக்கே வரமாட்டேன்! ஓடிப்போறேன் இந்த ஊரை விட்டேன்னு சொல்லிட்டு சிட்டா பறந்துருச்சு.

  அதுக்கப்புறம் சுப்பையாவும் அவன் குடும்பமும் ரொம்ப நாளைக்கு நிறைவா வாழ்ந்தாங்க!

(செவிவழிக்கதை)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. குழந்தைகள் நிச்சயம் விரும்பி ரசிப்பார்கள் நானும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. எந்த வயதிலும் கிது போன்ற கதைகள் சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  3. அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete
  5. வழக்கம்போல் தங்கள் பாணியில் அழகாகக் கதை கூறியுள்ளீர்கள். நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. வணக்கம்,
    செவி வழிக்கதையாயினும் கருத்து அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி தளீர்,

    ReplyDelete
  7. நல்லதொரு கதை வழக்கம் போல்...குழந்தைகளுக்கு ஏற்ற கதை....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2