உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!
உலகக் கோப்பையில் இந்தியாவின்
எழுச்சி!
யாரும் நினைத்துக் கூட
பார்த்திருக்க மாட்டார்கள் உலகக் கோப்பையில் இந்தியாவின் இத்தகைய ஆட்டத்தை!
தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தி இருக்கிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி
இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை
கொடுத்து இருக்கிறது.
ஆரம்பகாலத்தில் அதாவது 1987ல் இருந்து 2003
வரை கிரிக்கெட் வெறியனாக இருந்த என்னை கிரிக்கெட் சூதாட்டங்களும் ஐ.பி.எல்
அரசியல்களும் கிரிக்கெட்டின் உள் அரசியல்களும் கொஞ்சம் கசப்படையச் செய்து
கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்தன.
2011ல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை
போட்டிகளைக் கூட காலிறுதியில் இருந்துதான் பார்த்தேன்! மற்றவற்றை செய்தித்தாளில்
படித்து முடிவு தெரிந்து கொண்டதோடு சரி. அந்த வருடம்தான் வலைப்பூ தொடங்கி
இருந்தேன். அப்போது இதைப்பற்றி எதுவும் எழுதவும் இல்லை.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏன் கடந்த ஆண்டு
இறுதி முதலே இந்திய அணியின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! தொடர்ச்சியான
தோல்விகள். அணியில் பிளவு! கேப்டன் பதவி குறித்த சர்ச்சைகள். அணி வீரர்களின்
காயங்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள். இதில் கோப்பை வெல்லக் கூடிய அணியில் இரண்டாவது
அணியாக இந்திய அணியை ஒரு நாளிதழ் கணித்தபோது எனக்கு வியப்புதான் மேலோங்கியது. அட
காலிறுதியை தாண்டினாலே அதிகம் என்று நினைத்து இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் கூட
முதலில் பார்க்க வில்லை! பிழைப்பை கவனிக்கப் போய்விட்டேன்.
ஆனால் பெண்ணின் மீது காதல் கொண்டவனையும்
கிரிக்கெட் மீது காதல் கொண்டவனையும் திருத்த முடியாது என்று நிரூபணம் ஆகிவிட்டது.
இரண்டு பேருமே பைத்தியங்கள். ஒருவனை பைத்தியமாக்குவது பெண் என்றால் மற்றவனை
பைத்தியம் ஆக்குவது கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் இப்படி எத்தனையோ முறை ஆசை
காட்டி மோசம் செய்திருக்கிறது. 2003 உலகக் கோப்பை அதற்கு சரியான உதாரணம். அப்படி
இந்த முறை நிகழக்கூடாது என்பதே கோடானுகோடி இந்தியர்களின் விருப்பமாக இருக்கக்
கூடும்.
எல்லோரும் இந்திய அணியின் பந்துவீச்சைத்தான்
பலவீனமானது என்று சொல்லுவார்கள். மட்டையாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று
சொல்லுவார்கள். இருமுறை இரட்டைச்சதம் கண்ட ரோகித் சர்மா, கோஹ்லி, ரஹானே, ரெய்னா,
தவான், தோனி என மட்டை வலு அதிகம் என்றே எல்லோரும் கணிப்பார்கள். இதில் ஒருவர்
நிலைத்து நின்று ஆடிவிட்டாலே போதும் என்பார்கள். அதே சமயம் பந்து வீச்சில் யாரும்
சொல்லிக்கொள்ளும்படி இல்லை. வேகப்பந்தும் சரி, சுழல்பந்தும் சரி யாரும்
குறிப்பிட்டுச் சொல்லும்படி வீசவில்லை என்றார்கள்.
இந்த கூற்றை இந்த இரண்டு போட்டிகள் மாற்றி
அமைத்துவிட்டது. பாகிஸ்தானைக் கூட விட்டு விடுங்கள். அது ஒரு செத்தபாம்பு
என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் ஆம்லா, டிவில்லியர்ஸ்,
டுபிளசிஸ், டுமினி, மில்லர் என்ற உலகத்தரம் கொண்ட ஆகச்சிறந்த மட்டையாளர்கள்
உள்ளனர். அதே சமயம், மோர்கல், ஸ்டெயின், பிளண்டர் என்ற உலகத்தரம் கொண்ட ஆகச்சிறந்த
பவுலர்கள் உள்ளனர். இவர்களை எதிர்கொண்டு ஒரு போட்டியை வெல்வது என்பது கடினமான ஒன்று.
ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்துக்கு
ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் உலகின் ஆகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு
ஓட்டங்கள் சேகரிப்பது அதுவும் முன்னுறை கடப்பது என்பது பெரிய விஷயம். இதை இந்த
முறை சாதித்துக் காட்டியது இந்தியா. ஷிகர் தவான் தம்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை
இந்த ஒரு போட்டியில் விளையாடி பதில் சொல்லிவிட்டார். இறுதிகட்டத்தில் ரஹானேயின்
இன்னிங்க்ஸ் இந்தியா முன்னூறு ரன்களை கடக்க பெரிதும் உதவியது.
பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் இன்று கனல்
பறந்தது இந்தியாவிடம். டிவில்லியர்ஸை அவுட்டாக்கிய அந்த மோகித் சர்மாவின்
த்ரொவாகட்டும் உமேஷ் யாதவின் த்ரோவில் அவுட்டாக்கிய டுமினியின் அவுட்டாகட்டும்
கண்ணைவிட்டு அகலவில்லை. இதற்கு முன் கவர் திசையில் ஒரு பீல்டிங் ரஹானே அருமையாக
பந்தை பாய்ந்து தடுத்தார் அதுவும் சிறப்பான ஒன்று.
அது மட்டும் இல்லாமல் உமேஷ், மோகித், ஷமி,
அஸ்வின், ஜடேஜா அனைவருமே சிறப்பாக பவுல் செய்தார்கள். ஆகச்சிறந்த தென்னாப்பிரிக்க
அணியை ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்கு 130 ரன்கள் என்ற வலுவான நிலையில்
இருந்த அணியை 177 ரன்களில் சுருட்டியது 47 ரன்களுக்குள் மீதமுள்ள விக்கெட்டுக்களை
கைப்பற்றியது இந்த கூட்டணி என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
முதல் ஓவரில் பத்து ரன்கள் கொடுத்தாலும்
இரண்டாவது கட்ட பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளிய அஸ்வின்
தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை பந்துவீச்சில் பொடியாக்கிவிட்டார்.
இந்த இரண்டு போட்டிகளையும் முதல் பகுதி
அதாவது இந்தியாவின் பேட்டிங்கை நான் பார்க்கவில்லை! சம்பாதிக்க போய்விட்டேன்.
இந்திய வீரர்களுக்கு கோடிக்கணக்கான சம்பளம் வென்றால் பரிசுகள் கிடைக்கும்
பார்க்கும் நமக்கு என்ன கிடைக்க போகிறது வெறும் மகிழ்ச்சிதானே! அதை தியாகம்
செய்தால் கொஞ்சம் குடும்பத்திற்கு பணம் ஈட்டலாமே என்ற எண்ணம் தான் காரணம்.
மாலையில் ஓய்வு கிடைக்கையில் போட்டியை
பார்த்தேன். இந்தியாவின் எழுச்சி மிக்க ஆட்டம் மீண்டும் என்னை கிரிக்கெட்டை
காதலிக்க வைத்துவிட்டது. இந்த ஆட்டம் தொடருமானால் கோப்பை கைக்கெட்டும் தூரம்தான்!
வாய்க்கு எட்டுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமையாகன நடையில் விமர்சித்து இருக்கிறீர்கள் சுரேஷ் வாழ்த்துகள்
ReplyDeleteஆட்டக்களத்தில் இருப்பதுபோல் உள்ளது. அருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே
ReplyDeleteவெற்றி கிட்டட்டும்
ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல...
ReplyDeleteஇந்த அளவுக்கு நன்றாக ஆடுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. பிழைப்பை கவனிக்கச் சென்றதற்காக பெருமை படுங்கள், கிரிக்கெட் சோறு போடாது!!
ReplyDeleteCool write up.. Now our men in blue has fancied their chances of getting the world cup.. :)
ReplyDelete