சுட்டி கணேஷ்! (பகுதி 1) பாப்பா மலர்!
சுட்டி கணேஷ்! (பகுதி 1) பாப்பா மலர்!
தாளபுரி என்றொரு நாடு! அதை
மன்னர் ஆதித்யவர்மா ஆண்டு வந்தார். அந்த நாட்டைச்சுற்றி ஒரு ஏரி அமைந்து இருந்தது.
ஏரியின் நடுவில் அமைந்த கோட்டையில் ராஜாவின் அரண்மனை இருந்தது. அந்த ஏரியின் நீர்
சுவையாக இருக்கும். தெள்ளத்தெளிவாக பளிங்கு போல் ஓடிக்கொண்டிருக்கும் நீரின்
சுவையே அலாதி. அந்த நீரை மக்கள் குடிநீராகவும் பயன்படுத்தினார்கள். அந்த ஏரியின்
நீரை பாசனத்திற்கு பயன் படுத்தி விவசாயமும் செய்து வந்தார்கள்.
அந்த ஏரிக்கு நீர் அந்த நாட்டில்
இருந்த ஓர் மலையில் இருந்த வற்றாத அருவி மூலம் வந்தது. அந்த அருவியை சுற்றியிருந்த
மூலிகை மரங்கள் அந்த ஏரியின் நீரை சுவை கூட்டின.
தாளபுரியின் ராஜ வீதியின் கடைசியில் ஒரு சிறுவன் வசித்து
வந்தான். அவன் பெயர் கணேஷ். ரொம்பவும் சுட்டியான சிறுவன் வயசு பத்துதான்
இருக்கும். மிகுந்த பலசாலி மட்டுமல்ல புத்திசாலியும் கூட. அவனோட செல்லப் பிராணி மூஷிக்! என்ன முழிக்கிறீங்க? அது ஒரு
சுண்டெலிதான். அவனோட இன்னும் ரெண்டு கேர்ள் பிரண்ட்ஸ் சித்தி,
புத்தி. அது மட்டும் இல்லாமா அவனோட குட்டி
தம்பி ஷண்ணு! இவங்க எல்லாம் எப்பவும் ஒண்ணா சேர்ந்து அங்கிருக்கிற
மாந்தோப்புல விளையாடுவாங்க!
அந்த ஊரிலே ஒரு குட்டி பயில்வான்
இருந்தாரு. அவரு பேரு கஜா! இவருக்கு வயசு அதிகம் இல்லை பன்னிரண்டுதான்! ஆனா ஆளு
கொழுக் மொழுக்குன்னு பயில்வான் மாதிரி இருப்பாரு. இவர்கூட எப்பவும் ரெண்டு வாலுங்க
சுத்திட்டு திரியும். அவங்க பேரு நீலு- வாலு. இவங்களுக்கு கணேஷை வெறுப்பேத்தி
அவன்கிட்ட அடிவாங்கிறதே வேலை!.
சித்தி- புத்தியோட அம்மா கொழுக்கட்டை நல்லா
செய்வாங்க! கணேஷுக்கு அந்த கொழுக்கட்டைன்னா ரொம்ப உசிரு! அது ஒண்ணு சாப்பிட்டான்னா
அவனுக்கு யானை பலம் வந்துரும்னா பாத்துக்கங்களேன்! அதனால சித்தியும் புத்தியும்
கொழுக்கட்டைகளை நிறைய கொண்டுவந்து கணேஷ்கிட்ட கொடுத்துக்கிட்டே இருப்பாங்க.
தாளப்பூர் நாட்டுக்கு பக்கத்து நாடு மேளப்பூர்.
இந்த நாட்டு ராஜா தந்திரவர்மா. இவருக்கு தாளப்பூர் மேல ஒரு கண்ணு. அந்த நாட்டோட
வளம் அவர் கண்ணை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அதனால அந்த நாட்டை தன் நாட்டோட
இணைச்சிக்கணும்னு அவருக்கு ஆசை. ஆனா அவர்கிட்ட படைபலம் இல்லே! எப்ப எதிரியோட பலம்
குறையும்னு காத்துக்கிட்டு இருந்தாரு.
ராஜா ஆதித்யவர்மா மேல மக்களுக்கு அதிருப்தி
ஏற்படுத்திட்டா நாம இடையில புகுந்து மக்களை தன் பக்கம் திருப்பி அந்த நாட்டோட
ராஜாவா ஆயிடலாம்னு திட்டம் போட்டாரு.
அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது
அவருக்கு ஒரு சூனியக்காரியோட நினைப்பு வந்தது. அவபேரு சூர்ப்பனகா! அவளோட உதவியால
தாளப்பூரை அடைஞ்சிடலாம்னு அவளைத் தேடிப்போய் பார்த்தாரு.
சூர்ப்பனகா இருந்தது தாளப்பூருக்கும்
மேளப்பூருக்கும் இடையில இருக்கிற ஒரு வனத்திலே. அங்கே போய் அவளை சந்திச்சாரு
தந்திர வர்மா.
"சூர்ப்பனாகா! நான் தந்திர வர்மா
வந்திருக்கேன்! உன்னோட உதவியைத் தேடி! நீ தான் எனக்கு உதவி என் ஆசையை பூர்த்தி
செய்யனும்னு சூர்ப்பனகா காலில் விழுந்தாரு."
"தந்திரவர்மா! உன்னோட ஆசை எது?ன்னு எனக்குத்
தெரியும். தாளப்பூர் மேல நீ ஆசைப்படறே! ஆனா அது சுலபத்துல கிடைக்காது.
அதனாலத்தானே உன்னைத் தேடி வந்திருக்கேன்!"
"தாளப்பூர் மக்கள் இப்ப வளமையா
இருக்காங்கன்னா அதுக்கு காரணம் அந்த நாட்டை சுத்தி ஓடுற அந்த ஏரிதான். அந்த
தண்ணிதான் அவங்க வளமைக்கு காரணம். அந்த ஏரியில தண்ணி வறண்டுச்சுன்னா அவங்க தாளம்
தப்பிடும்! ஹாஹாஹா!" சூனியக்காரியின் சிரிப்பில் அந்தக் காடே அதிர்ந்தது!
"இது நடந்தா எனக்கும் மகிழ்ச்சிதான்! ஆனா
அந்த ஏரிதான் வற்றாத ஏரியாச்சே! எப்படி வத்தும்? எப்படி தாளம் தப்பும்?" தந்திரவர்மா கேட்டான்.
"அந்த ஏரிக்கு தண்ணியை கொடுக்கிறது அந்த
ஊருலே இருக்கிற மலையில இருந்து கொட்டுற அருவியாலேதான்! அந்த அருவி கொட்டுறதை
நிறுத்திட்டா..."
"நல்ல யோசனைதான்! ஆனா அருவியிலே தடுப்பணை
கட்டறது எப்படி?"
"அதை என் மந்திரக் கட்டால் கண்ணுக்குத்
தெரியாதபடி கட்டித் தரேன்! படிப்படியா தண்ணி குறைந்து போய் ஏரியே வத்திப் போயிரும்
அப்புறம் மக்கள் போராட ஆரம்பிச்சிருவாங்க! அப்ப நீ போய் தண்ணி தருவதா சொல்லு!
மக்கள் உன் மேல பாசம் காட்டுவாங்க! தக்க சமயம் பாத்து ஆட்சியை கவிழ்த்து நீ
ராஜாவாயிடு!"
"ஹாஹாஹா! நல்ல யோசனை! "
"ஆனா இந்த திட்டம் நிறைவேறினா
நீ என்ன தருவே?"
"உனக்கு என்ன வேண்டும்? கோடி
கோடியா பொன் வேண்டுமா? நிலம் வேண்டுமா? உன் மந்திர சக்திக்கு பலியிட ஆடுமாடு
நரன்கள் வேண்டுமா? எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன்!"
"இதெல்லாம் வேண்டாம்! தாளப்பூரை நீ
பிடித்ததும் அந்த நாட்டில் இருக்கும் சுட்டி கணேஷை என்னிடம் ஒப்படைத்துவிட
வேண்டும்."
"போயும் போயும் ஒரு சிறுவனையா கேட்கிறாய்?"
"அவன்
சாதாரணச் சிறுவன் இல்லை! அவனிடம் எனக்கு ஒரு பழைய கணக்கு பாக்கி இருக்கிறது!"
"என்ன கணக்கு அது?"
சூனியக்காரி சொல்ல
ஆரம்பித்தாள்.
தொடரும் (1)
டிஸ்கி} சோட்டா பீம் மாதிரி ஒரு கதை சொல்லு என்று கேட்ட என் பெண்ணுக்கு சொன்ன கதையை கொஞ்சம் மாற்றி இங்கே தொடராக எழுத உள்ளேன். இந்த தொடரை படித்து ரசிக்கும் குழந்தைகள்இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் கற்பனையில் ஓவியமாக வரைந்து thalir.ssb@gmail.com க்கு அனுப்பலாம். குழந்தைகளின் ஓவியங்கள் அவர்களின் பெயர்களோடு தொடரில் பதிவாகும். எந்த குழந்தையின் ஓவியத்தினையும் நிராகரிக்கும் எண்ணம் இல்லாததால் எல்லா ஓவியங்களும் பதிவாகும். மேலும் அவர்களுக்கு என்னால் இயன்ற ஒரு சிறு பரிசும் அனுப்பி வைக்கப்படும். ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகள் தங்கள் முழு முகவரியினையும் அலைபேசி எண்ணையும் பகிர்ந்தால் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும். வாசகர்கள் இந்த முயற்சியினை ஊக்கப்படுத்தி தங்கள் குழந்தைகளின் ஓவியங்களை அனுப்பி ஆதரவளித்தால் மகிழ்வேன்! மிக்க நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ரஸித்தேன்.
ReplyDeleteரஸித்தேன்.
ReplyDeleteநல்ல ரசனையோடு சென்றது...
ReplyDeleteரசித்தோம். குழந்தைகளின் எழுத்துத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தாங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. நன்றி.
ReplyDeleteஹை ரசித்தோம்.....நல்ல விஷயம் நண்பரே! சே நாங்கள் குழந்தைகளாக இல்லாமல் போய்விட்டோமே என்று சிறிது வருத்தம்...ஹஹஹ்
ReplyDelete