இந்த கதை உங்களுக்குத் தெரியுமா?
இந்த கதை உங்களுக்குத்
தெரியுமா?
அவருக்கு சுமார் எழுபது
வயதிருக்கும். எங்கள் ஊரில் மாடுமேய்த்துக் கொண்டிருந்தார். ஓர் ஐந்தாறு டில்லி
எருமைகள். அதை பராமரிப்பதில் கவனம். கொஞ்சம் தாமதமான திருமணம் போலும் அவருக்கு.
ஒரு பெண் மற்றும் ஒரு பிள்ளை திருமணவயதில் இருந்தனர் அவருக்கு. இப்போது மாடுகளை விற்றுவிட்டு மகனுடன் சென்னை புறநகரில் வசிக்கிறார். பிள்ளைக்குத் திருமணம் நிச்சயம்
செய்துவிட்டு திருமண நாள் குறிக்க என்
தந்தையிடம் வந்திருந்தார்.
அவர் வந்த சமயம் தந்தை ஊரில் இல்லை! நான்
மற்றும் தந்தையின் நண்பர் ஒருவர் கோயில் கோபுரவாசலில் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தோம். தந்தையின் நண்பர் மணி கிண்டல் பேர்வழி!
“வாங்கினா கொடுக்காத கோத்திர காரரே! என்ன
விஷயமா வந்தீங்க?” என்று ஆரம்பித்தார்.
பிள்ளைக்கு திருமணத்தை சீக்கிரம் முடிக்க
வேண்டியதுதானே! என்று மணி கேட்க முடிக்கத்தான் வந்திருக்கேன்! என்று அவர் சொல்ல
எதையோ ஒண்ணு பொண்ணு பையனுக்கு பிடிச்சிருந்தா போதும்! சட்டுபுட்டுன்னு முடிச்சிரு!
உனக்கும் வயசாகுதில்ல! என்றார் மணி.
உண்மைதான்! கோடி கோடியா வைச்சிருந்தாலும்
பெரிய ராஜாவா இருந்தாலும் பொண்ணுக்கு பிடிக்கலைன்னா பிரயோசனம் இல்லே என்றவர் இந்த
கதையை ஆரம்பித்தார். இந்த கதையின் நாயகி பெயர் அவர் சொன்னார் நான் மறந்துவிட்டேன்.
கதையிலே இதுதான் முக்கியம்! ஆனாலும் நான் கோட்டை விட்டுவிட்டேன் அதுக்காக
மன்னிச்சுக்கங்க!
துரியோதனன் அந்த காலத்துல பெரிய அரசன். அவன்
கீழே எண்பத்தாறு தேச அரசர்கள் இருந்தாங்க!
அப்ப ஒரு சுயம்வரத்துல கலந்துக்கிறான். கூடவே கர்ணனும் போறான். சுயம் வரம்
நடத்திறது துரியோதனனுக்கு கீழ இருக்கிற ஒரு அரசன். அந்த சுயவரத்துல பல தேச
மன்னர்களும் கலந்துக்கிறாங்க!
வரிசையா ஒவ்வொருத்தரும் உட்கார்ந்திருக்க
சுயவரத்தில இளவரசி ஒவ்வொருத்தரையா நிராகரிச்சு கடந்து வரா! அப்ப துரியோதனன் பேரரசன்
86 தேசத்துக்கும் அதிபதி! அவன் இந்த இளவரசிமேல ஆசைப்பட்டு நமக்கு மாலையிடுவான்னு
எதிர்பார்த்து ஆவலா அவளை பார்க்கிறான்.
ஆனா அவளோ அவனையும் கடந்து வரா! அப்ப
துரியோதனன் பக்கத்துல இருக்கிற கர்ணனுக்கு கோபம் வந்துருது! சட்டுன்னு இளவரசி கையை
பிடிச்சு இழுத்து தன்னோட ரதத்துல ஏற்றி புறப்படுறான் துரியோதனனும் கிளம்பறான்.
துரத்தி வர வீரர்களை துவம்சம் செய்து அஸ்தினாபுரத்திற்கு வந்திடறான்.
துரியோதனன் கிட்ட இளவரசியை ஒப்படைத்து
கல்யாணம் செய்துகொள்ள சொல்றான். அவனோ, இவளை நான் விரும்பினது உண்மைதான்! ஆனா இவள்
என்னை விரும்பவில்லை! நீ எனக்காக இவளை கைது செய்து வந்தாலும் தொட்டு
தூக்கிவந்துவிட்டாய்! இவள் உனக்குத்தான் சொந்தம் என்று சொல்லி இவன் அங்க நாட்டு
மன்னன் இவளை மணந்து கொள் என்று அவளை கர்ணணுக்கு திருமணம் செய்து வைத்து
விடுகிறான்.
அவளுக்கு முதலில் இருந்தே கர்ணனின்
நடவடிக்கை பிடிக்கவில்லை! வேண்டா வெறுப்பாக கர்ணனை மணந்துகொள்கிறாள். மறுநாள்
எதற்கோ வீதியில் போகையில் யாரோ அதோ பார் கர்ணனின் மனைவி! என மற்றவனோ அந்த
தேரோட்டியின் பிள்ளையின் மனைவியா என்று கேட்க கூசிப் போகின்றாள்.
இளவரசியான அவள் தேரோட்டியின் மகனை
மணந்துகொண்டோமே என்று வருந்தி கர்ணணுடன் தாம்பத்தியம் நடத்த மறுக்கிறாள். இது
கிருஷ்ணருக்குத் தெரியவர அவர் ஒரு மாயக்கனியை தருகிறார். அது உண்ட மயக்கத்தில்
அவள் இருக்க கர்ணன் அவளோடு கலந்து ஒரு பிள்ளையும் பிறக்கிறது.
கர்ணனின் மனைவிக்கு இன்னமும் கோபம்
அதிகரிக்கிறது. கர்ணனின் முகம் காணவே மறுத்து தனியே சென்றுவிடுகிறார். மகாபாரதப்
போரில் போருக்கு போகும் முன் மனைவியிடம் அனுமதி பெற வரும்போது கூட சந்திக்க
மறுத்துவிடுகிறாராம். நீ தேரோட்டி மகன் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாய் நீ
போருக்குப் போனால் என்ன? இருந்தால் என்ன என்று மறுத்துவிடுகிறாராம்.
போரில் கர்ணன் இறக்கும் சமயம் வரும்
அவளிடம் தன் பிறப்பின் ரகசியத்தை கூறுகிறாராம் கர்ணன், என் தந்தை சூரியதேவன், தாய்
குந்தி, என்னை வளர்த்தவன் அதிரதன், அங்கதநாட்டை எனக்கு தந்த நண்பன் துரியோதனன்
என்று அவர் சொல்கையில் தன்னுடைய தவறுக்கு வருந்தினாராம் அந்த மனைவி.
இப்படிப்பட்ட வாழ்க்கை அமையக் கூடாது!
ஒற்றுமையான வாழ்க்கை அமைய வேண்டும் என்று சொன்னவர் பாஞ்சாலியைப் பற்றிய சுவையான
ஒரு கதையையும் சொன்னார். அதை பிறகு கூறுகிறேன்!
இந்த நபரை நான் சாதாரணமாகத்தான் நினைத்தேன்.
ஏதோ மாடுமேய்ப்பவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். மகாபாரத கதையை
சுவாரஸ்யமாக அவருக்கே உரியத் தமிழில் அவர் கூறியபோது லயித்து போனேன். ஒரு மணிநேரம்
போனதே தெரியவில்லை! நான் உங்களுக்கு சுருக்கமாகத்தான் கூறியுள்ளேன்! அவர் சொல்லுவதை
கேட்க இன்னும் சுவையாக இருந்தது. மீண்டும் அவர் வருகையில் இந்த இளவரசியின் பெயரை
கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆளைக் கண்டு எடைபோடக் கூடாது என்பது இவர்
விஷயத்தில் உண்மையாகிவிட்டது. ஒன்றுமே தெரியாதவர் போன்ற எளிமையான தோற்றம்! ஆனால்
நிறைய விஷயங்களை உள்ளே வைத்திருக்கிறார். இப்போது இவர் எங்கள் ஊரில் இல்லை!
இதுபோன்றவர்களிடம் இருக்கும் பொக்கிஷங்களை ஆவணப்படுத்தினால் பிற்கால தலைமுறைக்கு
உதவும்.
இன்னமும் ஒன்று அந்த காலத்தில் அறப்பளிச்சுர
சதகம், குமரேச சதகம், நாராயண சதகம் போன்ற பாடல்கள் திண்ணைப் பள்ளிகளில் பாடமாக
இருந்தனவாம். அந்த பாடல்கள் உள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்று என் தந்தையின்
நண்பர் கூறினார். இவை எங்கு கிடைக்கும்? உங்கள் யாரிடமாவது இருந்தால் நகல் எடுத்து
அனுப்ப முடியுமா? அப்படிக்கிடைத்தால் அந்த நண்பரும் மகிழ்வார் நானும் மகிழ்வேன்.
உண்மைதான் நண்பரே ஆளைப்பார்த்து எடை போட்டு விடமுடியாது இப்படித்தான் என்னைக்கூட கடினமாக நினைப்பவர்கள் பிறகு சொல்வார்கள் அப்பாவி என்று.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
அறிவுக்கு விருந்தாகும் கதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதை அருமை ...
ReplyDeleteநிறய சிந்தனையை தந்த கதை..
நிறை குடம் தளும்பாது...
ReplyDeleteஅடுத்த சுவாரஸ்யமான கதையையும் வாசிக்க ஆவலுடன்...
உருவு கண்டெள்ளாமை வேண்டும் என்பது சரியாகத்தான் இருக்கிறது. சுவாரஸ்யம்.
ReplyDeleteஓளிவு மறைவு இல்லாத தாம்பதியம் ஒளி வீசும்.
ReplyDeleteஅருமை நண்பரே!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்!
Deleteஇன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!
நன்றாக எழுதியுள்ளீர்கள். உபத்திரவமில்லாத எளிய நடை. பொருள் எவ்வளவு தரமாக இருப்பினும் பாக்கிங் ரொம்ப முக்கியம். பத்திகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டிருப்பது, ஒடுகிற பஸ்ஸில் புத்தகம் படிப்பதை போல் இருக்கிறது. முழுப்பதிவவையும் ”போல்ட்” செய்வதைத் தவிர்க்கலாம், முறையான இடைவெளியில் பத்திகளை பிரித்து எழுதலாம்.
ReplyDeleteமுதல் முறை வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்! நன்றி! பத்திகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டிருப்பதாக சொல்கிறீர்கள்! என்னுடைய பிரவுசரில் நன்றாகவே தெரிகிறது. பத்திகள் பிரித்து தனித்தனியாகவே எழுதி உள்ளேன். இருப்பினும் தங்களுக்காக மீண்டும் ஒரு முறை சரி பார்க்கிறேன்! நன்றி!
Deletegoogle chrome-ஐ நான் யூஸ் செய்கிறேன். நீங்கள் சொன்னதற்காக எக்ஸ்ப்ளோரரில் பார்த்தேன் அதிலும் நெருக்கடியாய் தான் இருக்கிறது ப்ரதர். ஆம் ஆத்மி பதிவில் இடைவெளி சரி ஆனால் பார்மெட்டிங் கொஞ்சம் செய்யலாம்.
Deletegoogle chrome-ஐ நான் யூஸ் செய்கிறேன். நீங்கள் சொன்னதற்காக எக்ஸ்ப்ளோரரில் பார்த்தேன் அதிலும் நெருக்கடியாய் தான் இருக்கிறது ப்ரதர். ஆம் ஆத்மி பதிவில் இடைவெளி சரி ஆனால் பார்மெட்டிங் கொஞ்சம் செய்யலாம்.
Deleteநல்ல கதை. பார்க்கும் மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றையும் ரசிப்போம்....
ReplyDelete