மசால் தோசை 38 ரூபாய்! டேஸ்ட் ரொம்ப சூப்பர்!


   எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களின் எழுத்துக்களை விகடன் மற்றும் வெகுஜன ஏடுகளில் படித்து இருந்தாலும்  இணையத்தில் அவர் எழுதுவது எனக்கு தெரியாமல் இருந்தது. சென்ற வருடத்தில் மணிமாறன் அவர்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது நிசப்தம் தளம் பற்றி சொல்லியிருந்தார். அதன் பின்னர் அந்த தளத்தினை தொடர ஆரம்பித்தேன்.

      அதற்கு முன்னரே  அவரது சிறுகதை தொகுப்பான லிண்ட்ஸே டேவன் போர்ட் w/o மாரியப்பன் பற்றி வலையில் பரவலாக பேச்சு இருந்தது. சென்ற வருட புத்தகக் கண்காட்சியில் (2013) இந்த நூல் வாங்கலாம் என்று நினைத்தும் அப்போதைய பற்றாக்குறை நிதியினால் வாங்கவில்லை.
    
    வா. மணிகண்டன் கதைகள் கவிதைகள் படித்திருந்த எனக்கு நிசப்தம் தளத்தில் எழுதும் பத்தி எழுத்துக்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தன. நானும் அதே போல சுவாரஸ்யமாக எழுத வேண்டும் என்ற உணர்வையும் தந்தன. நிசப்தத்தில் இந்த புத்தக வெளியீடு பற்றி சொல்லி இருந்த போதே புத்தகம் வாங்க நினைத்திருந்தேன். புத்தக சந்தையில் வாங்கியும் விட்டேன். முதலில் இது சிறுகதைத் தொகுப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் வாங்கி படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது. நிசப்தத்தில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பது. அதனால் என்ன? சிறுகதைகளை விட சுவாரஸ்யமாக சென்றது நூல்.

      படித்து முடித்ததே தெரியாமல் ஒரு ஒன்றரை மணி நேர வாசிப்பில் 128 பக்கங்களை வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் நம்மை அந்த சம்பவம் நடந்த இடத்திற்கே அழைத்துச்சென்று காட்டுகிறது. அன்றாட வாழ்க்கையில் காணும் சாமான்யர்களையும் அலுவலக  சூழல்களையும் அவரது இளமைக்கால நினைவுகளையும் அவர் சுவாரஸ்யமாக பகிர்வது அழகு.

       நட்சத்திரங்கள் சரியாத வானம் என்ற முதல் கட்டுரையில் விபத்தில்  அடிபட்ட ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு வடகிழக்கு மாநிலப் பெண் எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி மருத்துவமனையில் பசி தாகம் கூட இல்லாமல் கண்முழித்து காத்திருப்பதை விவரிக்கையில் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்று உணர முடிகிறது.

 சல்மான்கான் என்ற குழந்தை தொழிலாளி அவனது கனவுகள் திடீரென அவன் காணாமல் போவது. அவனது தந்தை வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அவன் அம்மா தூக்கு மாட்டிக் கொண்டது என்று  சொல்லி மனதை கனக்க வைக்கிறார். தினமும் பாஸ்ட் புட் கடையில் எத்தனையோ சிறுவர்களை பார்ப்போம் அவர்களின் வாழ்க்கையின் பின்புலம்  அறிய இந்த ஒரு கட்டுரையே போதுமானது.

 மரங்களை காதலிக்கும் ஒரு மனிதர், சின்னவயதில் பள்ளியில் உதைபட்டு நடத்திய நாடகம் பஸ்ஸில் கூட வரும் பயணி மகள் தூக்கில் தொங்கி விட்டாள் என்று சொன்னது, தாத்தாவின் ஈரமனசு, குழந்தை கடத்தல், ஹீரோவாக தோன்றியவர் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவது என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பரிமாணத்தில்  நமக்கு ஏதோ ஒரு செய்தியை சொல்கையில் நம் பக்கத்து வீட்டில் நடைபெற்றதை போன்றே உணர்கின்றோம்.

  பூனைப்பூட்டான் செடியினால் வாத்தியாருக்கு தண்டணை கொடுத்தது, சாலையில் அடிப்பட்டு விழுந்த மூதாட்டியின் பரிதாபம், கல் ஒட்ட வந்த முஸ்லீம்கள் அவர்களின் கஷ்டங்கள் போலீஸ்காரர்களின் இரும்பு குணம், நிமான்ஸ் மருத்துவமனையில் ஒரு குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது, பாப்பாத்திக் கிழவி, வெங்கிடு அண்ணன் எல்லா மனிதர்களும் மனதில் நிற்கிறார்கள்.

  அனுமந்தா என்ற மனிதரின் வித்தியாசமான குண நலன்கள். கட்டிட வேலை முடியும் தருவாயில் அவருக்கு மூவாயிரம் கொடுக்க அதை அவர் கடவுள் படம் வாங்கி கொடுத்து குடித்து சாவான் என்று எல்லோரும் சொன்னதை பொய்யாக்க அவருக்கு இவர் சாப்பாடு போட அவர் குவார்ட்டர் அடிக்க நூறு ரூபாய் கேட்க இவர் பையில் இருந்த சில்லறைகளை அப்படியே கொடுக்க அவர் உங்க பையனுக்கு மசால் தோசை வாங்கிக் கொடுங்க சார் என்று காசை திருப்பித்தருகிறார் அது முப்பத்தெட்டு ரூபாய் இந்த  கட்டுரை அப்படியே ஒரு கவிதையாக கண்முன்னே நிற்கிறது.

    இப்படி ஒவ்வொரு கட்டுரை பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.  கந்தப்ப ஆசாரியின் பேயோட்டு  பற்றிய கட்டுரை மிகவும் என்னை கவர்ந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன் புது மேனேஜரின் கண்டிப்பும் அவர் மேல் இவர்களின் வருத்தமும் திடீரென அவர் வேலையை விட்டு விலகுவதாக சொன்னதும் அதற்கு அவர் சொன்ன காரணமும் அந்த மேனேஜர் இதுவரை எதிரியாக பார்த்தவர்களுக்கு பாசமுள்ள ஓர் அப்பாவாக தெரிவது மனதை பிழிந்த ஓர் உண்மை சம்பவம்.

      இந்த புத்தகம் வாங்கி வந்திருக்கிறேன் என்று நண்பர்களிடம் சொன்னபோது நண்பர் சொன்னார். செமையா எழுதறாண்டா! என்று! அது உண்மை! வா. மணிகண்டன் எழுத்துக்கள் நம்மை கட்டிப்போடுவதோடு மட்டும் அல்லாமல் கொஞ்சம் மனிதத் தன்மைக்கு  மாற்றி அவசர உலகில் இயந்திரர்களாக இருக்கும் நம்மை மனிதர்களாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை.

    
    நூல் ஆரம்பிக்கையில் நன்றி என்று சொல்லி ஒரு 20 நபர்களின் பெயர் சொல்லப்பட்டுள்ளது நிசப்தம் வாசகர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதில் சுரேஷ் என்ற பெயரும் இருக்கிறது. அது நான் தானா என்று தெரியவில்லை!  முன்னுரை, அணிந்துரை எதுவும் இல்லை நல்ல நூலூக்கு அது தேவையும் இல்லை! அந்த சுரேஷ் நானாக இருப்பினும் இல்லாவிட்டாலும் எனக்கு ஓர் மகிழ்ச்சியை தந்தது. நூலை வாசித்து முடிக்கையில் மன நிறைவைத் தந்தது. 


   இந்த நூல் விற்றுக் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பட உள்ளதால் தாராளமாக வாங்கி ஆதரிக்கலாம். புத்தகமும் சுவாரஸ்யமாக இருப்பதால் வீண் செலவு செய்தோம் என்ற எண்ணமும் எழாது.


நூல்விலை 110 ரூபாய். பக்கங்கள் 128

கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர், சென்னை 78

வெளியிட்டோர்: யாவரும் பப்ளிசர்ஸ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. இந்தப் புத்தகத்தின் விற்பனை நோக்கம் பற்றி நானும் பேஸ்புக்கில் படித்து நெகிழ்ந்தேன். எங்கள் 'பாஸிட்டிவ் செய்திகள்' பகுதியிலும் பகிர்ந்திருந்தேன். உங்கள் விமர்சனத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 2. நானும் அவரின் வலைத்தளத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
  கட்டுரைகள் ஒவ்வொன்றையும் நன்கு விமர்சித்து இருக்கிறீர்கள் சகோ.
  அருமை

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பொறுமையாக படித்து சிறப்பாகத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல விமர்சனம். நூலைப் படிக்கும் ஆவலை தங்களது அலசல் எங்களுக்குத் தந்துவிட்டது. வாழ்த்துக்கள், தங்களுக்கும், நூலாசிரியருக்கும்.

  ReplyDelete
 5. அருமையான விமர்சனம் சுரேஷ்!
  நண்பர் ஸ்ரீராம் சொல்வதை வழி மொழிகின்றோம். அவர்களது தளத்திலும் வாசித்தோம். நாங்களும் அவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றோம். ..அவரின் தளத்தில் பின்னூட்டம் இடத் தெரியவில்லை.

  ReplyDelete
 6. அவர் தளத்தை விரும்பிப் படிப்பேன்..

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம் நண்பரே
  நூலினை வாங்கிப் படிக்கின்றேன்
  நன்றி

  ReplyDelete
 8. அவரது தளத்தில் பின்னூட்டம் இட முடியாது. கொஞ்ச நாள் கமெண்ட் பாக்ஸ் திறந்து வைத்திருந்தார். பின்னர் மூடி விட்டார்.தினமும் ஒன்று எழுதுகிறார். எப்படித் தான் எழுதுகிறாரோ தெரியவில்லை.சுவாரசியமான எழுத்து நடை அவருடையது. படித்து பாராட்டியமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!