சிங்கத்தை வென்ற நரி! பாப்பா மலர்!

சிங்கத்தை வென்ற நரி! பாப்பா மலர்!


ரொம்ப நாளுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல ஒரு பெரிய காடு இருந்துச்சு! அந்த காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு. சிங்கம் காட்டுக்கே ராஜாவாச்சே! அதனால அந்த காட்டையே வளைச்சு போட்டு அங்க இருந்த ஒரு பிராணிகளையும் விடாம குஞ்சு குளுவான் எல்லாத்தையும் அடிச்சி சாப்பிட ஆரம்பிச்சிருச்சி. இப்படி அடிக்கிற மிருகங்களையும் பாதி தின்னும் பாதி தின்னாம விட்டுரும்.
    சிங்கம் இப்படி அசிங்கமா நடந்துகிட்டதால காட்டுல மிருகங்களே குறைஞ்சுப் போச்சு! காடே எலும்புக் கூடுகளா இருந்துச்சு. இருக்கிற கொஞ்ச நஞ்ச மிருகங்களும் எப்ப சிங்கத்துகிட்ட மாட்டிக்க போறோமோன்னு பயந்து பக்கத்து காடுகளுக்கு ஓடிப்போக ஆரம்பிச்சுதுங்க!
   சிங்கம் வசிச்ச காட்டுல ஒரு நரியும் இருந்துச்சு! அது ஒரு மாற்றுத்திறனாளி நரி. ஒரு காலு உடைஞ்சி போய் இருந்துச்சு! இந்த மாதிரி ஊனமுற்றவர்களை நொண்டின்னு சொல்லி கூப்பிடறது தப்பு! மாற்றுத்திறனாளியான இந்த நரி இரை தேட ரொம்பவே சிரமப்பட்டுச்சு! இதனால பல இடங்களுக்கு அலைஞ்சு இரை தேட முடியலை! சிங்கத்தோட அட்டகாசத்தாலே காட்டுல மிருகங்களும் இல்லாம போயிருச்சு. இதுக்கு ஒரு தீர்வு காணனும்னு நரி யோசனை பண்ணிச்சு!
    ஒருநாள் நரி கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சிக்கிட்டு சிங்கத்தை பார்க்கப் போனது. நரியை பார்த்த சிங்கம் சும்மா இருக்குமா? கண்ணு எதிர்ல ஒரு மிருகம் தானா வந்து மாட்டுச்சுன்னு அதை அடிக்க பாய்ஞ்சுது. நரி கொஞ்சம் போக்கு காட்டி ஓடிச்சு! துரத்தின சிங்கத்துக்கு மூச்சு இறைச்சுது! பாவம் அதுக்கும் வயசாயிருச்சில்ல!
    இப்ப நரி பதவிசா அப்படியே அரசியல்வாதி போல கூழைக் கும்பிடு போட்டுக்கிட்டு  “சிங்க ராஜா! சிங்கராஜா! என்னை கொல்லாதீங்க!உங்க நல்லதுக்கு நான் ஒண்ணு சொல்லறேன்னு சொல்லுச்சு!”
   சிங்கமும், ”அடேய்! குள்ள நரிப்பயலே!, ஏமாத்த நினைக்காதே! என்ன விஷயம்? சட்டுன்னு சொல்லு!”ன்னுச்சு!
     “சிங்க ராஜா! உங்களை ஏமாத்த முடியுமா? நீங்க இந்த காட்டுக்கே ராஜா! உங்களை பகைச்சுட்டு வாழத்தான் முடியுமா? நான் உங்க நன்மைக்கு ஒரு திட்டத்தோட வந்துருக்கேன்!” அப்படின்னுச்சு நரி.
     “அப்படி என்ன பொல்லாத திட்டம்?” கோபமாக கேட்டது சிங்கம்.
   “ கோபிச்சுக்காதீங்க ராஜா! நீங்க இப்படி தினமும் கண்ணு மண்ணு தெரியாம காட்டுல இருக்கிற விலங்குகளை எல்லாம் அடிச்சு போட்டுக்கிட்டே இருக்கீங்க! இதனால காட்டுல விலங்குகளே கொறைஞ்சு போயிருச்சு! இருக்கிற விலங்குகளும் பயந்து போய் வேற காட்டுக்கு போயிரலாம்னு பேசிக்குதுங்க! அப்புறம் உங்களுக்கு சாப்பாடு கிடைக்குமா? இந்த காட்டுல சுதந்திரமா வேட்டை ஆடற மாதிரி இன்னொரு ராஜாவோட காட்டுல நீங்க வேட்டை ஆட முடியுமா? யோசியுங்க!”
    “அப்ப என்னை என்னதான் பண்ண சொல்றே! வேட்டையாடமா பட்டினி கிடக்க சொல்றியா?” சிங்கம் கொஞ்சம் கோபம் தணிஞ்சாலும் பதட்டமா கேட்டது.
   “அதுதான் இல்லை ராஜா! நான் உங்களுக்காக மிருகங்க கூட்டம் இருக்கிற இடமா பார்த்து அடையாளம் வைச்சுட்டு வரேன்! அந்த கூட்டத்துல புகுந்து ஏதாவது மிருகத்தை அடிச்சு சாப்பிடுங்க! கடைசியிலே கொஞ்சூண்டு இந்த ஏழைக்கு ஏதாவது மிச்சம் வச்சிங்கன்னா நன்றியொட அதை நான் சாப்பிட்டுப்பேன்! உங்களுக்கு மிருகங்களை தேடி அலையற வேலை மிச்சம்!” அப்படின்னு நரி சொல்லவும்  சிங்கத்து ரொம்பவும் மகிழ்ச்சியாயிருச்சு! இந்த திட்டத்துக்கு ஒத்துக்கிச்சு.
   நரி தினமும் ஒரு மிருககூட்டத்தை அடையாளம் வைக்கும்! சிங்கம் அலையாம அந்த கூட்டத்துல புகுந்து தனக்குத் தேவையான மிருகத்தைஅடிச்சு தின்னுட்டு கொஞ்சம் மிச்சம் வைக்கும். அதை நரி தின்னுக்கும்.
  நரியின் இந்த செயல் மத்த மிருகங்களுக்கு பிடிக்கவே இல்லை! ஏன் நரிக்கூட்டத்துக்கு கூட பிடிக்கலை! ஏன் இப்படி துரோகம் செய்யறே! என்று அவை நரியிடம் கேட்டன.
  “எல்லாம் ஒரு சாண் வயித்துக்குத்தான்! என்னால ஓடியாடி வேட்டையாட முடியலை! ராஜாவோட கூட்டு சேர்ந்து என் வயித்தை நிரப்பிக்கிறேன்!” என்றது நரி.
     இப்படியே கொஞ்ச காலம் போச்சு! ஒருநாள் நரிக்கு உடம்புக்கு முடியலை! ஒரே ஜுரம்! தலைவலி வேறு! படுக்கையை விட்டு எழுந்திருக்கலை! கண்ணை மூடி படுத்து இருந்துச்சு! அப்ப சிங்க ராஜாவோட வேலைக்காரன் கிளி வந்து இன்னிக்கு ராஜாவுக்கு உணவை ஏற்பாடு பண்ணிட்டியா? அப்படின்னு கேட்டுச்சு.
   நரி சொல்லுச்சு! “இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை!ராஜாவையே போய் உணவு தேடிக்க சொல்லு! நான் நாளைக்கு வழக்கம் போல ஏற்பாடு பண்றேன்!”
   இதை கிளி ராஜாவிடம் போய் சொல்ல, எகிறி குதித்த சிங்கம்! “எங்கே அந்த நரி! போய் உடனே கூட்டி வா!” என்றது
    நரி பவ்யமாக வந்து தன் நிலையை சொன்னபோதும் சிங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை! அடேய்! நரியே! இன்னைக்கு நீ உணவை ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் உன்னையே உணவாக்கிக் கொள்ளுவேன்! என்னால் ஓடியாட எல்லாம் முடியாது என்று உனக்குத் தெரியாதா? ஓடு! இன்னும் ஒருமணி நேரத்தில் எனக்கு உணவு இருக்குமிடத்தை அடையாளம் காட்ட வேண்டும்! என்று மிரட்டியது.
     தலையசைத்த நரி, சிங்கம் மேல் பெரிதும் கோபம் கொண்டது. இத்தனை நாள் விசுவாசமாக இருந்ததற்கு இதுதானா பலன்! இந்த சிங்கத்திற்கு போய் இத்தனை நாள் உழைத்தோமே! காட்டு விலங்குகளை காட்டிக் கொடுத்தோமே! இனியும் இப்படி நடக்கக் கூடாது. சிங்கத்தை ஒழித்துவிட வேண்டியதுதான் என்று சொல்லியபடி தன் கூட்டத்தை தேடியது.
     நரிக்கூட்டத்திற்கு இந்த மாற்றுத் திறனாளியான நரி நுழைய எல்லாம் விரட்டின. அப்போது நரி சொன்னது. நண்பர்களே என்னை மன்னித்துவிடுங்கள்! இத்தனை நாள் இப்படி துரோகியாக வாழ்ந்துவிட்டேன்!  அந்த சிங்கம் இன்று என்னையே கொல்ல முடிவெடுத்தபின்னர்தான் என் தவறு உரைத்தது. நான் அந்த சிங்கத்தினை இங்கு அழைத்து வருகிறேன்! நீங்கள் மறைந்திருந்து கூட்டமாய் தாக்குங்கள்! வயதான அதனால் உங்கள் தாக்குதலை சமாளிக்க முடியாது. தோற்று இறந்து போகும். இதனால் நம் கூட்டம் மட்டுமன்றி காடும் நிம்மதி அடையும் என்றது.
    நரிக்கூட்டமும் அதற்கு இசைந்தது.
   நரி போய் சிங்கத்தை நரிக் கூட்டம் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தது.
   நரிகள் அனைத்தும் மறைந்து இருக்க, எங்கே? எங்கே? என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்தது சிங்கம். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் நாலாபுறத்தில் இருந்தும் நரிகள் பாய்ந்து சிங்கத்தை குதறி எடுத்தன.
    இப்படிப் பட்ட ஒரு தாக்குதலை சிங்கம் எதிர்பார்க்கலை! ஐயோ அம்மா!ன்னு அது அலறினாலும் நரிங்க விடலை! எங்களையும் இப்படித்தானே கதற கதற நீ கொன்னே! பாய்ந்து பாய்ந்து கடித்தன.
    சிங்கம் நரிகளின் கடி தாளாது உயிரை விட்டுருச்சு!
  எல்லா நரிகளும் கூடி ஊளையிட்டன!  காட்டு மிருகங்கள் எல்லாம் கூடின! எல்லா மிருகங்களும் நரியையும் நரிக் கூட்டத்தையும் பாராட்டின.
   இப்ப அந்த காட்டுக்கு ராஜா யாரும் இல்ல! மிருகங்க எல்லாம் சந்தோஷமா வாழ்ந்தன.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ஏதோ கிழட்டு பெண் சிங்க கதை போல உள்குத்து இருக்கே... இப்பத்தான் ராஜா இருந்தும் இல்லையே தமிழ் நா(கா)ட்டுல..

    ReplyDelete
  2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
    அருமை நண்பரே

    ReplyDelete
  3. அருமையான கதை நண்பரே...
    சிறுவர் கதைகளை எல்லாம் தொகுக்கலாமே?

    ReplyDelete
  4. நல்ல கதை.....

    கில்லர்ஜி! - :)))) நல்ல doubt!

    ReplyDelete
  5. டெல்லியில் மத வாத சக்திகளுக்கு கிடைத்த அடியை பார்த்தீங்களா ? இது பத்தி ஒரு பத்தி ப்ளீஷ்

    பரமுசிவசாமி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2