சாலி வாகனனும் விக்கிரமாதித்தனும்! பாப்பாமலர்!
முன்னொரு காலத்தில் புரந்தரபுரி என்றொரு நகரம் இருந்தது. அங்கே மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன் மகன்களை அழைத்து,
“ மைந்தர்களே! என்னுடைய மரணத்திற்கு பின் உங்களுக்குள் சச்சரவு வரக்கூடாது. என்னுடைய சொத்துக்களை நீங்கள் பாகம் பிரித்துக் கொள்ள ஏதுவாக நான்கு பாகங்களாக பிரித்து என்னுடைய கட்டிலின் கீழே நான்கு அடி ஆழத்தில் நான்கு கால்களின் அடியில் புதைத்து வைத்து உள்ளேன். பெரியவனிலிருந்து சிறியவன் வரை முறைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.
சிலநாட்களில் வியாபாரி இறந்துவிட்டார். அவர் சொல்லியபடி கட்டிலின் அடியில் தோண்டியபோது நான்கு கால்களின் அடியிலும் நான்கு செப்புக் குடங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அந்த குடங்களில் பொன்னோ நகையோ வைர வைடூரியங்களோ எதுவும் இல்லை. முதல் குடத்தில் மண்ணும் இரண்டாவதில் வைக்கோலும் மூன்றாவதில் எலும்புத்துண்டுகளும் நான்காவதில் கரியும் இருந்தன.
இதை வைத்துக் கொண்டு எப்படி பாகம் பிரிப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே பஞ்சாயத்தார் வசம் சென்று பிரித்துத் தரும்படி கூறினர். அவர்களுக்கும் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று புரியவில்லை! எனவே விக்கிரமாதித்த மன்னனிடம் அனுப்பினர்.
விக்கிரமாதித்தனுக்கும் அவனது சபையில் இருந்தோருக்கும் கூட இந்த வழக்கின் தீர்ப்பை சொல்ல முடியவில்லை! கரி, மண், வைக்கோல், எலும்புத்துண்டுகள் இதை எப்படி பாகம் பிரிப்பது என்று அறிஞர்களும் கைவிரித்துவிட நான்கு சகோதரர்களும் மிகவும் விசனத்துடன் ஊர் திரும்பினர்.
அவர்கள் திரும்பி வரும் வழியில் பிரதிஷ்டானம் என்ற ஊரில் தங்கினார்கள். அங்கே ஏழை மண்பாண்டத்தொழிலாளி ஒருவனுடைய வீட்டில் சாலிவாகனன் என்பவன் இருந்தான். அவன் சிறந்த அறிவாளி. அவனிடம் தங்கள் வழக்கைக் கூறினர் நால்வரும்.
அவன், உங்கள் தந்தை செலவந்தர் மட்டுமல்ல! அறிவாளியும் கூட, அதனால்தான் இவ்வாறு பிரித்து வைத்துவிட்டு போய் உள்ளார். தன்னுடைய சொத்துக்களை உங்கள் நால்வருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
வயதில் மூத்தவன் மண் நிறைந்த குடத்தையும், இரண்டாமவன் வைக்கோல் இருந்த குடத்தையும், மூன்றாமன் எலும்புதுண்டுகள் இருந்த குடத்தையும், கடைசிநபர் கரித்துண்டுகள் நிறைந்த குடத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பொருள் என்ன வென்றால், மண் என்பது நிலத்தையும், வைக்கோல் என்பது தானியத்தையும், எலும்புத்துண்டுகள் கால்நடைகளையும், கரி என்பது தங்கள் வெள்ளி வைரங்களையும் குறிக்கிறது.
இதன்படி மூத்தமகன் நிலத்தையும் இரண்டாமவன் அவர் சேமித்த தானியங்களையும் மூன்றாமவன் கால்நடைகளையும் நான்காமவன் நகை ஆபரணங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னான். சாலிவாகனனது தீர்ப்பால் மகிழ்ந்த நால்வரும் அவனிடம் விடைபெற்று அவன் சொன்னபடி பங்கீடு செய்து கொண்டார்கள்.
இந்த விஷயம் விக்கிரமாதித்த மன்னனை சென்றடைந்தது. அவன் அறிவாளியான சாலிவாகனனை சந்திக்க விரும்பி பிரதிஷ்டான நகரத்திற்கு சேவகன் ஒருவனை அனுப்பி சாலிவாகனனை அழைத்துவரச் சொன்னான். ஆனால் சாலிவாகனன் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டான். விக்கிரமாதித்தன் பேரரசனாக இருந்தாலும் அவனும் மனிதன் தானே! அவனை பார்க்க நான் போகமாட்டேன். அவனுக்கு காரியம் ஆகவேண்டுமானால் இங்கு வரட்டும்! நான் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டான் சாலி வாகனன்.
தன்னுடைய அழைப்பை சாலிவாகனன் நிராகரித்தமையால் கோபம் கொண்ட விக்கிரமாதித்தன் பிரதிஷ்டான நகரம் மீது படையெடுத்துச் சென்று கோட்டை வாயிலில் நின்று மீண்டும் சாலிவாகனனுக்கு எச்சரிக்கை அனுப்பினான். ஆனாலும் சாலிவாகனன் தானும் படையுடன் சந்திப்பதாக சொல்லி மண்ணினால் சேனைகளை பொம்மைகளாக உருவாக்கினான். தன்னுடைய அதிசய சக்தியால் அவைகளுக்கு உயிர் கொடுத்தான்.
மண் பொம்மைகளாக இருந்த வீரர்கள், ரதம், யானை, குதிரை உயிர்பெற்று எழுந்து படையெடுத்தன. சாலிவாகனன் தலைமையில் வந்த படையை எதிர்த்து விக்கிரமாதித்தன் படைகள் மோதின. இருபுறத்து சேனைகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் சாலிவாகனனது சேனைகள் நிர்மூலம் ஆயின.
சாலிவாகனன் தன் தந்தை ஆதி சேஷனை நினைத்து வழிபட்டு ஆயிரக்கணக்கான பாம்புகளை வரவழைத்தான். அவை விக்கிரமாதித்தனின் படைகளை கடித்து வைக்க அனைவரும் மாண்டு போயினர். விக்கிரமாதித்தன் மட்டும் உயிர் தப்பி தன்னுடைய நகரான உஜ்ஜைனி திரும்பினான்.
தன்னுடைய படை வீரர்களை உயிர்ப்பிக்க வாசுகியை குறித்து தவம் செய்தான். இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஒரு வருஷம் தவம் இயற்றியதன் பலனாய் வாசுகி அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
விக்கிரமனும் தன்னுடைய படை வீரர்கள் உயிர்பெற்றெழ வேண்டும் என்று கேட்டான். வாசுகி ஓர் அமுத கலசத்தைக் கொடுத்து இதனால் உன் வீரர்கள் உயிர் பிழைப்பார்கள் என்று சொன்னார். விக்கிரமன் அந்த கலசத்தை எடுத்துக் கொண்டு அவைக்குத் திரும்பினான்.
அப்போது அவைக்கு வந்த ஒருவன் விக்கிரமாதித்தனை வாழ்த்தினான். விக்கிரமாதித்தன் அவனை எங்கிருந்து வருகிறாய்? என்ன விஷயம்? என்று வினவினான். அவன் தான் பிரதிஷ்டான நகரில் இருந்து வருவதாகவும் தாங்கள் நான் எதுகேட்டாலும் இல்லை என்று சொல்லாது கொடுப்பதாக வாக்களித்தால் கேட்பதாகவும் தெரிவித்தான்.
“நீ எதைக் கேட்டாலும் அதை மறுக்காது தருகிறேன்! தயங்காமல் கேள்!” என்று வாக்களித்தான் விக்கிரமன்.
“அரசே! வாசுகியிடம் இருந்து தாங்கள் பெற்ற அமுத கலசத்தை எனக்குத் தாருங்கள் !”என்று கேட்டான் வந்தவன்.
அப்போதுதான் விக்கிரமனுக்கு சந்தேகம் எழுந்தது. நீ யாரால் அனுப்பப் பட்டு வருகிறாய்? என்று கேட்டான். நான் சாலிவாகனனால் அனுப்பப்பட்டு வருகிறேன்! என்றான் வந்தவன்.
“ முதலில் எதைக்கேட்டாலும் தருவதாக வாக்களித்துவிட்டேன்! இப்போது அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை! அதை நிறைவேற்றாவிட்டால் நான் வாக்குத் தவறியவன் ஆவேன்! அது எனக்கு அகௌரவம் ஆகும்! பாபத்தையும் தரும்!” என்று மனதிலே நினைத்தான் விக்கிரமன்.
இதற்குள் விக்கிரமன் தயங்குவதை தவறாக எடுத்துக் கொண்ட வந்தவன். மன்னா! தாங்கள் நேர்மையானவர்! நேர்மைதவறி நடந்து கொள்ளாதீர்கள் சூரியன் மேற்கே உதித்தாலும் தாமரை மலர் பாறையின் உச்சியில் பூத்தாலும் கூட நேர்மையான மனிதர்கள் தங்கள் வார்த்தையில் உறுதியாக இருப்பார்கள்! ஒப்புக்கொண்டதை நிறைவேற்றுங்கள்!” என்று கேட்டான்.
“ ஐயா! நீங்கள் உண்மையையே சொன்னீர்கள்! இந்த அமுதம் நிறைந்த குடத்தை எடுத்துச்செல்லுங்கள்! என்று சொல்லி குடத்தை வந்தவனிடம் தந்துவிட்டார் விக்கிரமாதித்தன்.
வந்தது தன் எதிரியின் ஆள் என்று தெரிந்தும், தன்னுடைய படை வீரர்களை உயிர்ப்பிக்கும் அமுத கலசத்தையும் எதிரிக்கு வாக்களித்த காரணத்தால் பரிசாக கொடுத்து அனுப்பிய விக்கிரமாதித்தனின் உயர்ந்த குணம் போற்றக் கூடியதன்றோ!
(விக்கிரமாதித்தன் கதை செவி வழியில் கேட்டதை தழுவி எழுதியது)
டிஸ்கி} சுட்டி கணேஷ் பதிவிற்கு போதிய வரவேற்பு இல்லை! ஓவியங்களும் யாரும் அனுப்பவில்லை! எனவே தற்காலிகமாக அந்தத் தொடரை நிறுத்தி வைத்துவிட்டு வழக்கம் போல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
மிகவும் ரசித்தோம் குழந்தைகள் போல! நன்றாக இருக்கின்றது சுரேஷ்!
ReplyDeleteகுழந்தைகள் கதை ஸூப்பர் சுரேஷ்
ReplyDeleteநல்ல கதை சகோ..
ReplyDeleteஅருமையான கதை நண்பரே
ReplyDeleteஇந்த கதையை நான் இதுவரை கேட்டதில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஆஹா!! இனிக்கு நிறைக்கும், மகிகுட்டிக்கும் கதை கிடைச்சாச்சு<<< நன்றி அண்ணா!
ReplyDeleteதங்களது கதைகள் எங்களை குழந்தைகளாக்கிவிடுகின்றன.
ReplyDeleteGood story
ReplyDelete