தித்திக்கும் தமிழ்! பகுதி 7. ஆளா ஆடையா?

தித்திக்கும் தமிழ்! பகுதி 7. ஆளா ஆடையா?

நம்ம ஊரில் எப்போதுமே ஆள்பாதி ஆடை பாதிதான். எவ்வளவுதான் படித்த மேதையானாலும் கந்தையை கட்டிக் கொண்டு இருந்தால் அவருக்கு மதிப்பு குறைவுதான். யாரும் சீந்த மாட்டார்கள். ஒன்றுமே தெரியாதவனாயினும் பகட்டாய் ஆடை அணிந்து கம்பீரமாய் சபைக்குள் நுழைந்தால் அவருக்கு கவனிப்பே தனிதான்.
   ஆளாளுக்கு வந்து உபசரிப்பார்கள். கூடவே குழுமி நிற்பார்கள். என்னவேண்டும் ஏது வேண்டும் என்று உபசரிப்பார்கள். அவர் சின்னதாக தும்மினால் கூட பதறிப்போவார்கள். அவர் சொல்லும்
மொக்கை நகைச்சுவைகளை ஆஹா ஓஹோ! என்று புகழ்வார்கள்.
    சபையில் அறிவை விட ஆடம்பரமான ஆடையும் பகட்டான பந்தாவும்தான் கவனிக்கப்படுகின்றன. நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும் எழுத்தாளன் இப்படி இருப்பான் ஓவியன் இப்படி இருப்பான் என்ற பிம்பங்கள் எழுந்து விடுகின்றன. அந்த பிம்பத்தை பிரதிபலிக்கும்போது வாசகன் மகிழ்வடைகிறான். பிம்பம் உடையும் போது சோர்ந்து போகிறான்.
     தமிழ்வாணன் கண்ணாடியும் தொப்பியும் அணிந்து இருந்தார். ராஜேந்திரகுமார் தொப்பியும் பிரபலமானது. எல்லாவற்றையும் விட எம்.ஜி.ஆரின் பனிக்குல்லா மிகவும் பிரபலம் ஆனது. இப்படி உருவத்திற்கு மதிப்பு கொடுக்கும் பாங்கும் உடைக்கு மதிப்பளிக்கும் பாங்கும் இன்று அதிகரித்துவிட்டது. இது இன்றுதான் உருவானது என்று சொல்ல முடியாது. என்றோ உருவாகிவிட்டது.
   ஒரு திருமண விருந்திற்கு அழுக்கான ஆடையுடன் வந்த முல்லா துரத்தப்பட்டார். வீடு திரும்பிய அவர் நல்ல புத்தம் புதிய ஆடைகளுடன் விருந்தினுள் நுழைந்தார். இப்போது தடபுடலான வரவேற்பு. பந்தியில் சென்று அமர்ந்த அவர் பறிமாறப்பட்ட உணவுகளை தன்னுடைய உடையில் பூசிக்கொண்டார்.
    எல்லோரும் வியந்து போய் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்றபோது இங்கு சற்று நேரம் முன்பு அழுக்கான உடையுடன் வந்து அவமானப்படுத்தப்பட்டேன். இப்போது புத்தாடையுடன் வந்து கவுரவிக்கப்பட்டேன். இதிலிருந்து உடைக்குத்தான் கவுரவம் என்று புரிந்து கொண்டேன். எனவே இந்த உணவை உடைக்கு ஊட்டுகிறேன் என்றார்.
    விருந்திற்கு அழைத்தவர்கள் தலைகுனிந்தனர். இது முல்லாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நடப்பதுதான்.
  ஏன் உலகையே ஆளும் பரமேஸ்வரனுக்கும் அதுதான் நடந்தது?
     எப்படி? இந்த பாடலை படியுங்கள் புரியும்.

  மேலாடை யின்றிச் சுவை புகுந்தால் இந்த மேதினியோர்
நூலாயிரம் படித்தாலும் எண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே
ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன் தனக்கே
            நையாண்டிப்புலவர்



மேலாடைக்கு தரும் மதிப்பை சுவைக்கு அதாவது அறிவிற்கு தர இந்த உலகில் உள்ளோர் மறுக்கின்றனர். நூல்கள் ஆயிரம் படித்தாலும் அவர் பகட்டாக இல்லாவிடின் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். அவரை ஒரு பொருட்டாக எண்ணவும் மாட்டார்கள். இந்த உலகை சூழும் பாற்கடல் கூட திருமாலானவர் அணிந்துள்ள ஆபரணங்களையும் பொன்னாடையும் கண்டு திருமகளை அவருக்கு கட்டி வைத்தது. வெறும் தோலாடையான மான் தோலையும் மரவுரியும் அணிந்த ஈசனுக்கு ஆலகால விஷத்தை அல்லவா தந்தது.


பாடலை பாடிய நையாண்டிப்புலவரின் நையாண்டி அருமையாக இருக்கிறது அல்லவா? ஆடைக்குத்தான் மதிப்பு அறிவிற்கு இல்லை என்பதை ஈசனையும் திருமாலையும் இணைத்து என்னே அழகாக பாடியுள்ளார்.

மீண்டும் படித்து ரசித்துப்படியுங்கள்! பாடல் அழகில் மயங்குவீர்கள்!


மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல கருத்தை சொல்லும் பதிவு. கதைகள் அருமை.

    ReplyDelete
  2. வணக்கம்
    சிறப்பானவிளக்கம் கண்டு சிந்தை குளிர்ந்தது... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. முல்லா கதையோடு விளக்கம் அருமை...

    ReplyDelete
  4. அருமையான கதை சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2