வாலு போயி கத்தி வந்துச்சு! டும்!டும்!டும்! பாப்பாமலர்!
வாலு போயி கத்தி வந்துச்சு!
டும்!டும்!டும்! பாப்பாமலர்!
ரொம்ப நாளைக்கு முன்னாலே ஒரு
காக்காவும் நரியும் ஃப்ரெண்டா இருந்துச்சுங்க. அதுங்க எங்க போனாலும் ஒண்ணா போவும்
வரும். இப்படி ப்ரெண்டா இருந்த நரியும் காக்காவும் சேர்ந்து ஒரு வெள்ளரிக்கா
தோட்டம் போடலாம்னு முடிவு பண்ணிச்சுங்க.
ரெண்டுமா சேர்ந்து ஒரு இடத்தை தேர்வு செஞ்சு
நரி உழுது காக்கா வெள்ளரிவிதை கொண்டு வந்து போட்டு தோட்டம் அமைச்சுதுங்க! அந்த
சமயத்துல மழையும் நல்லா பெய்ஞ்சி தோட்டத்துல போட்ட செடிகள் நல்லா வளந்து காயா
காச்சுதாம்.
இப்ப நரிக்கு ஆசை நிறைய சேர்ந்து போச்சு.
இவ்வளவு காயும் சமமா எதுக்கு பங்கிடனும்? அப்படின்னுட்டு காக்கா இல்லாத நேரமா
பாத்து தோட்டத்துக்குள்ளே போய் வெள்ளரிக்காய்ங்களை திருட்டுத் தனமா பறிச்சு
தின்னுட்டு இருந்தது.
தினமும் இப்படி காய்ங்க காணாம போகவே
காக்காவுக்கு ஒண்ணும் புரியலை. ‘யாரு இந்தமாதிரி திருடறது?’ன்னு
கண்டுபிடிக்கணும்னு தோட்டத்தை சுத்தியும் தோட்டத்துக்குள்ளேயும் அங்கங்கே கருவேல
முள்ளுங்களை போட்டு வச்சுதாம்.இது நரிக்கு தெரியாது. வழக்கம் போல திருடித்தின்ன
நரி தோட்டத்துக்கு போச்சு.
நரியை நீங்க பாத்திருக்கீங்களா? கிராமத்துல
இருக்கிறவங்க வயக்காட்டு பக்கம் எப்பவாவது பார்த்திருக்கலாம். டவுன்ல இருக்கிறவங்க
ஜு வுல பாத்திருக்கலாம். இல்லே உங்க பாடபுஸ்தகத்திலே பார்த்திருக்கலாம். அதனோடவாலு
நீளமா புசுபுசுன்னு இருக்கும். தரையில படறமாதிரி இருக்கும். அந்த வாலை
இழுத்துக்கிட்டு அது தோட்டத்துக்குள்ள நுழையறப்ப தோட்டத்துல இருந்த கருவேல முள்ளு
வாலுல குத்திக்கிச்சு!
‘சுளீர்’னு முள்ளு குத்தின வுடனே நரி ஊளையிட
ஆரம்பிச்சுது! அப்ப அங்க காக்கா வந்து நரியை பார்த்து அதிர்ச்சியாயிருச்சு. அட!
நண்பா! நீயா இப்படி? சொந்த தோட்டத்துலேயே திருடறியே இது நல்லா இருக்கா? அப்படின்னு
காக்கா கேட்கவும், நரி அவமானத்தால தலை குனிஞ்சி நின்னது.
திருடனுக்கு தேள் கொட்டனாப்பல ஆயிருச்சு அதுக்கு! இனி இங்க இருந்தா
மானக்கேடுன்னு தலை குனிஞ்சி என்னை மன்னிச்சுரு நண்பா அப்படின்னு சொல்லிட்டு
ஓடிருச்சு!
வாலுல குத்தின முள்ளை அதாலே எடுக்க முடியலை!
முள்ளை யாராவது எடுக்க சொல்லலாம்னா எப்படி குத்துச்சு கேப்பாங்க! அப்ப தன்னோட
திருட்டுத் தனத்தை சொல்லனுமே எனவே மானத்துக்கு பயந்து அப்படியே விட்டுருச்சு! அந்த
முள்ளு அப்படியே தங்கி சீழ் கோத்துக்கிச்சு. நரியாலே வலி தாங்க முடியலை!
அந்த வலியோடவே அப்படியே பக்கத்து
கிராமத்துக்கு போச்சு! அங்க ஒரு நாவிதர் இருந்தார். அவர் முகச்சவரம் முடி
திருத்துபவர். அதோட மருத்துவமும் செய்வாரு. அவர்கிட்ட போயி “அய்யா நாவிதரே! என்னோட
வாலுல முள்ளு ஒண்ணு குத்தி சீழ் பிடிச்சுருச்சு! கொஞ்சம் எடுத்து விடறீங்களா”ன்னு
கேட்டுச்சு.
அவரும் இரக்கப்பட்டு சம்மதிச்சாரு. தங்கிட்ட
இருந்த கத்தியாலே முள்ளு குத்தியிருந்த இடத்திலே லேசா கீறி எடுக்கப்பார்த்தாரு.
கத்தியை அப்பத்தான் சானை பிடிச்சு வச்சிருந்தாரு. நல்லா கூர்மையா இருக்கவும்
நரியோட வாலு சீழ் பிடிச்சி அழுகி இருக்கவும் கத்தியை வச்சதுமே வாலு துண்டா அறுந்து
போயிருச்சு.
நரிக்கு கோபமான கோபம்! “ ஐயா நாவிதரே!
என்னோட வால்தான் எனக்கு அழகு! அதையே துண்டு பண்ணிட்டீரே! என்னோட வாலை மறுபடியும்
ஒட்டவைங்க!”ன்னு கேட்டுச்சு. அது முடியாத காரியம்னு நாவிதர் சொல்ல நரி சொல்லுச்சு,
ஒண்ணு வாலை ஒட்ட வை! இல்லே உன் கத்தியைக் கொடு! அப்படின்னு கேட்டுச்சு.
அறுந்த வாலை ஒட்ட வைக்க முடியாது அதனால
கத்திபோனா வேற கத்தி வாங்கிக்கலாம்னு அந்த நாவிதர், ”நரியே என்னால வாலை ஒட்ட வைக்க
முடியாது அதுக்கு பதிலா கத்தியை கொடுக்கிறேன்! எடுத்துக்கோ!”னு கத்தியை
கொடுத்தாரு.
மொட்ட வாலோட நரி கத்தியை வாங்கிட்டு அப்படியே
நடந்து வந்துச்சு வழியில ஒரு ஆளு பனை மரம் ஏறி பனம்பழம் பறிச்சு
சாப்பிட்டுக்கிட்டு இருந்தானாம். நரி அவன்
கிட்ட வந்து ஏம்பா இந்த கத்தியாலே பழத்தை அரிஞ்சி சாப்பிடுன்னு கொடுத்தது.
அவன் அந்த கத்தியாலே பனம்பழத்தை அரியும்போது
கத்தி உடைஞ்சு போச்சு! அவ்வளவுதான் நரி மரியாதையா கத்தியை கொடு இல்லே பனம்பழம்
கொடுன்னு கேக்க ஆரம்பிச்சுருச்சு!
அவனும் பனம்பழம் ஒண்ணை கொடுத்து
அனுப்பிட்டானாம். இப்ப நரி பனம்பழத்தோட
அங்கிருந்து கிளம்பிச்சு.
வழியிலே ஒரு எண்ணெய் வியாபாரி எண்ணெய்
வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தானாம். அவன நரி பாத்துச்சு. “இப்படி அலைஞ்சு திரிஞ்சு
வியாபாரம் பண்றீங்களே! இந்தாங்க பனம்பழம்! இதை சாப்பிட்டு தெம்பா வியாபாரம்
பண்ணுங்க!ன்னு சொல்லுச்சு.
வியாபாரிக்கு பனம்பழம்னா உசுரு! அதனால
சந்தோஷமா வாங்கி தின்னுட்டாரு! இப்ப நரி பழைய பல்லவியை ஆரம்பிச்சுது! வியாபாரியே!
என்னோட பனம்பழத்தை முழுசா தின்னிட்டியே! என் பனம்பழத்தை கொடு இல்லேன்னா எண்ணெயை
கொடுன்னு கேட்டுது.
அவரும் பழத்துக்கு பதிலா ஒரு பாட்டில்ல
எண்ணெய் ஊத்தி கொடுத்தாரு. அதை எடுத்துக்கிட்டு வந்த நரி ஒரு கிராமத்துல
நுழைஞ்சுது. அங்க ஒரு பாட்டி தோசை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட போயி
நரி, ”பாட்டி பாட்டி! நீ எண்ணெய் ஊத்தி தோசை சுடறியா இல்லே தண்ணி ஊத்தி
சுடறியான்னு கேட்டுச்சு!”
“நரியே! நானோ பரம ஏழை! நான் எண்ணெய்க்கு எங்கே
போவேன்? தண்ணி ஊத்திதான் சுடறேன்னு சொன்னாங்க பாட்டி.
“அப்படியா இந்தாங்க இந்த எண்ணெயிலே தோசை
சுட்டுக்கங்கன்னு சொல்லுச்சு நரி. பாட்டி எண்ணெயை வாங்கி தோசை சுட்டு முடிக்கிற
வரை சும்மா இருந்த நரி அப்புறமா தன் வேலையை காட்டுச்சு. பாட்டி! என்னோட எண்ணையை
கொடு இல்லேன்னா உன்னோட தோசையைக் கொடுன்னு கேட்டுச்சு!
பாட்டியாலே மீள முடியலை! இந்த நரிக்கிட்ட
ஏமாந்துவிட்டோமேன்னு எல்லா தோசையும் கொடுத்துட்டாங்க! அதை எடுத்துக்கிட்டு போச்சு
நரி. வழியிலே ஒருத்தர் கொட்டு மேளம்
அடிச்சுக்கிட்டு இருந்தாரு. அவருகிட்ட போச்சு நரி. அய்யா ரொம்ப பசியா இருக்கீங்களே
இந்த தோசையை சாப்பிட்டு மேளத்தை அடிங்கன்னு சொல்லுச்சு.
அவரும் தோசைங்களை வாங்கி சாப்பிட்டாரு. அவரு
சாப்பிட்டு முடிச்சதும் நரி வழக்கம் போலவே ஏம்பா! என் தோசைங்களை கொடு! இல்லேன்னா
மேளத்தை கொடுன்னு கேட்டுது.
அவராலே தோசைங்களை எப்படி கொடுக்க முடியும்?
கொட்டு மேளத்தை கழட்டி கொடுத்தாரு. அதை வாங்கிட்டு அப்படியே ஒரு மலை உச்சுக்கு
வந்து கொட்ட தட்டிப் பார்த்தது. டும் டும்னு சத்தம் வரவும் சந்தோஷம் அதிகம்
ஆயிருச்சு.
மலை உச்சியிலே உக்காந்து டும் டும்டும்னு
தட்டிக்கிட்டே அது பாட ஆரம்பிச்சுது
வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்
கத்திப்போச்சு பனம்பழம் வந்தது டும் டும் டும்
பனம்பழம் போச்சு எண்ணெய்
வந்தது டும் டும் டும்
எண்ணெய் போச்சு தோசை வந்தது டும் டும் டும்
தோசை போச்சு கொட்டு வந்தது டும் டும் டும்
இப்படி சந்தோசமா கொட்டை மாத்தி மாத்தி
அடிச்சுது.
கொஞ்சம் பலமா அடிக்கவும்
கொட்டு கிழிஞ்சி போச்சு! அதோட நரியோட கதையும் முடிஞ்சி போச்சு!
(செவிவழிக்கதை தழுவி
எழுதியது)
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வணக்கம் சகோதரர்
ReplyDeleteவிடுமுறை நாட்களுக்கு விருந்து அளிப்பது போல் பதிவு. மாணவர்களுக்கு செல்லலாம். மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சகோதரர்
நண்பரே அருமை வலைச்சரத்துலயும் முரசொலி அடிக்குது கேட்குதா ?
ReplyDeleteநல்ல கதை தளிர். இதையே சுருக்கமா .. " ஒரு ஊரில் ஒரு நரி ... அதோட கதை சரி..." என்பார்கள்.
ReplyDeleteநல்ல கதை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிவுபூர்வமான கதை அருமையாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கள் சிறு வயதில் இந்தக் கதை கேட்டதுண்டு. இப்போது மறுபடியும் வாசித்து மகிழ்ந்தோம்...சிறியவயது நினைவுகள்.....
ReplyDeleteபள்ளி நாட்களில் கேட்டது, மறுபடியும் உங்கள் பதிவு மூலம். இதுபோன்ற நீதிக்கதைகளை மாணவர்கள் படிக்கவேண்டியது அவசியம்.
ReplyDeleteஅருமை நண்பரே
ReplyDeleteவெவ்வேறு விதமாக கேட்டிருந்தாலும் சுவையான கதை. பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை
ReplyDeleteம்....இந்தக் கதையை என் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுக்கணும்.
ReplyDeleteகதை அருமை.
ReplyDeleteசிறு வயதில் இந்தக் கதை கேட்டதுண்டு. இப்போது மறுபடியும் வாசித்து மகிழ்ந்தோம்...
ReplyDeleteThat was lovely! I have heard a different version of this with a monkey as the central character. Very well written.
ReplyDelete