நன்றி இல்லா மனிதன்! பாப்பா மலர்!
அரசன் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்கு சென்றான். பெரும் படைகளுடன் சென்ற போதும் அவன் வழி தவறி தனியாக காட்டிற்குள் சிக்கிக் கொண்டான். பொழுதோ சாய்ந்து கொண்டு இருந்தது. காட்டிற்குள் வெகுதூரம் சென்று விட்ட அவன் வழி தெரியாது தவித்தான்.
காட்டிற்குள் இங்கும் அங்கும் சுற்றி சுற்றி வந்தானே தவிர வழி அகப்பட்ட மாதிரி இல்லை! இதற்குள் இருட்டிப்போய் விட்டது. சரி! இனி பிரயோசனம் இல்லை! இராப் பொழுதை காட்டிற்குள் தான் கழிக்க வேண்டும் போல! என்று அவன் முடிவு செய்து அங்கிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டான். தூங்கி விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்று கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு இருந்தான் அந்த அரசன்.
அப்போது கரடி ஒன்றை சிங்கம் விரட்டிக் கொண்டு வந்தது. அந்த கரடி மன்னன் இருந்த மரத்தில் ஏறியது. கரடியை கண்டு மன்னன் பயந்தான். மன்னன் பயத்தால் நடுங்குவதை கண்ட கரடி நண்பா! பயப்படாதே! என்னால் உனக்கு எந்த துன்பமும் வராது. என் மடியில் படுத்து உறங்கு. பிறகு நான் உன் மடியில் படுத்து தூங்குகிறேன்! இருவருக்கும் சிங்கத்தால் தான் ஆபத்து! நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம் என்றது.
பயம் நீங்கிய அரசன் நன்றி கரடியே என்று சொல்லி கரடியின் மடியில் தலைவைத்து படுத்து உறங்க ஆரம்பித்தான். அப்போது கீழே இருந்த சிங்கம் குரல் கொடுத்தது.
கரடியே! நீயும் நானும் காட்டு விலங்கினம்! நமக்கு பொது எதிரி மனிதன்! தூங்கிக் கொண்டிருக்கும் அவனை கீழே தள்ளிவிடு நான் அவனை தின்று விட்டு செல்கிறேன்! உன்னை விட்டுவிடுகிறேன் என்றது.
தீயவனே! இந்த மனிதன் என் நண்பன்! நண்பனை கொன்ற பாவம் எனக்கு வேண்டாம்! என் நண்பனை நான் ஏமாற்ற மாட்டேன்! என்றது கரடி!
பசியோடு சிங்கம் காத்திருக்க பாதி இரவு கழிந்தது! இப்போது கரடி தூங்க மனிதன் விழித்து இருந்தான். சிங்கம் மனிதனிடம் பேசியது. மனிதனே! நம் இருவருக்கும் பொதுவான எதிரி இந்த கரடி! அதைக் கீழே தள்ளிவிடு! நான் தின்றுவிட்டு சென்று விடுகிறென்! உனக்கு எந்த ஆபத்தும் வராது என்றது.
மன்னன் நன்றி மறந்து சிறிதும் சிந்திக்காமல் கரடியை பிடித்துக் கீழே தள்ளினான். தள்ளிய வேகத்தில் கீழே சென்ற கரடி சுதாரித்து விழித்துக் கொண்டு அடுத்த கணம் மரக்கிளை ஒன்றை பற்றி மேலே வந்து விட்டது.
மன்னன் இப்போது நடுநடுங்கினான்! சிங்கத்தின் பேச்சைக் கேட்டு இப்படி நன்றி மறந்து கரடியை கீழே தள்ளிவிட்டோமே! அது தன்னை சும்மா விடாது என்று பயந்தான்.
சிங்கமோ! தனக்கு உணவு கிடைக்கவில்லை! கரடி மனிதனை கொன்று தின்றுவிடும்! இனி நமக்கென்ன வேலை என்று சென்றுவிட்டது.
கரடி அருகே வர, உயிர் பிழைக்க இனி வாய்ப்பே இல்லை! நன்றி கெட்ட செயலுக்கு நமக்குநல்ல தண்டணை கிடைக்கப்போகிறது என்று எண்ணினான் மன்னன்.
கரடி மனிதன் அருகில் வந்தது! நண்பனே! நான் உன்னைப் போல மனிதன் அல்ல! தவறு செய்தாலும் நண்பனை கொன்ற பாவத்திற்கு ஆளாக மாட்டேன்! பொழுது விடிந்ததும் நீ உன் வழியில் செல்! நான் என் வழியில் செல்கிறேன்! உன்னைக் கொல்ல மாட்டேன் பயப்படாதே! என்றது.
எவ்வளவு கேவலமாகி விட்டேன்! விலங்கிற்கு இருக்கும் நன்றி கூட என்னிடம் இல்லையே! என்ற வெட்கினான் மன்னன்! இனி அவன் உயிர் வாழ்ந்தும் என்ன பயன்?
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்!
(செவிவழிக்கதை)
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமை அருமை! மனிதன் என்றுமே சுயநலவாதிதான்....
ReplyDeleteமனிதன் சரியான சுயநலவாதி......
ReplyDeleteநன்றி கெட்ட மனிதர்கள் என்பதற்கு இந்த கதை சரியான உதாரணம். அருமை.
ReplyDelete