அமிர்த சஞ்சீவினி! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!
உஜ்ஜைனி தேசத்தை விக்கிரமாதித்தன் சிறப்புற ஆட்சி செய்து வந்த சமயம் அந்நாட்டில் வசுமித்திரர் என்னும் சூரசேனர் புரோகிதராக இருந்தார். அவர் நல்ல அழகு வாய்ந்தவர். அரசனிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மேலும் மற்றவர்களுக்கு உதவும் பரோபகராகியாகவும், எல்லோராலும் போற்றப்படுபவராகவும் இருந்தார். அவரிடம் செல்வத்திற்கும் பஞ்சமில்லை! செல்வந்தராகவே அவர் வாழ்ந்தார். இத்தனை இருந்தும் அவர் மனம் ஒருசமயம் கவலையில் ஆழ்ந்தது.
“ஒரு மனிதன் சேமித்து வைத்துள்ள பாவங்களை கங்கையில் நீராடி போக்கடிப்பதைத் தவிர வேறு ஏதும் வழியில்லை! நூறு யாகங்கள் செய்தும் அடைய முடியாத பலனை நற்குணமுள்ள ஒருவன் கங்கையின் நீரில் நியமத்துடன் ஸ்நானம் செய்வதனால் அடைவான். எனவே ஒருமுறை கங்கைக்கு சென்று நீராடி விட்டு வரவேண்டும்” என்று அவர் ஆசைப்பட்டார்.
அரசனிடம் அனுமதி பெற்று வசுமித்திரர் கங்கை யாத்திரை சென்று கங்கையில் நீராடி காசி விசுவநாதரை தரிசித்துவிட்டு பிரயாகை வந்து அங்கு நீராடினார். கயைக்குச்சென்று பித்ருக்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவை செய்து முடித்துக்கொண்டு மீண்டும் உஜ்ஜைனிக்கு திரும்பினார்.
வரும் வழியில் ஒரு நகரத்தை அடைந்தார் வசுமித்திரர். அந்த நகரத்தில் சாபத்தால் உருமாறிய தேவலோக கன்னிகை ஒருத்தி வீரலஷ்மியாக அந்த நகரத்தின் அரண்மனை கன்னிமாடத்தில் இருந்து வந்தாள். அரசபுத்திரியாக பிறந்தும் அவளுக்குத் திருமணம் ஆகவில்லை. அவள் சுயம்வரத்தில் எவருக்கும் மணமாலை சூடவில்லை. எவரையும் மணக்க விருப்பம் இல்லாமல் கன்னிகையாகவே இருந்து வந்தாள்.
அந்த நகரத்திலே லஷ்மி நாரயணருக்கு பெரிய கோயில் ஒன்று எழுப்பி இருந்தனர். அதன் கோபுரவாசலில் கொப்பரை ஒன்றில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது. அதனருகில் இருந்த அறிவிப்பாளர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களிடம் பின்வருமாறு கூறினார்கள்.
“ எவனொருவன் இந்த கொப்பரையில் கொதிக்கும் எண்ணெயில் தீரமாக குதித்து எழுந்திருக்கின்றானோ அவனை தேவ கன்னிகையான மன்மத ஸஞ்சீவனி என்னும் இந்த நாட்டு இளவரசி மாலையிட்டு மணிமகுடம் அளிப்பாள்!”
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வசுமித்திரர் அந்த அமிர்த ஸஞ்சீவனியின் பால் மையல் கொண்டார். ஆனால் அழகும் அறிவும் நிரம்பப் பெற்றிருந்தாலும் தீரம் அவரிடம் குறைந்து காணப்பட்டது. கொதிக்கும் எண்ணெயில் குதித்து மீள முடியுமா? பெருமூச்சு ஒன்று அவரிடம் வெளிப்பட்டது. பின்னர் உஜ்ஜைனிக்குத் திரும்பினார்.
உஜ்ஜைனியில் வந்து சேர்ந்ததும் மன்னன் விக்கிரமாதித்தனை சந்தித்தார். தன்னுடைய பயண விவரங்களை விவரித்தார். மன்னனும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது வசுமித்திரர், விக்கிரமாதித்தனிடம் வழியில் தான் கண்ட மன்மத சஞ்சீவனியை பற்றியும் எண்ணெய் கொப்பரையில் குதித்து எழுந்தால் அவளை மணக்க முடியும் மணிமகுடம் அடைய முடியும் என்பதையும் ஏக்கத்துடன் கூறினார்.
இது ஒருவராலும் முடியாத காரியம் ஆயிற்றே! அதனால்தான் அந்த அரச குமாரிக்கு இன்னும் திருமணம் கை கூட வில்லை! என்றும் சொன்னார். முயற்சித்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை! வாருங்கள் இப்போதே அந்த நகருக்குப் புறப்படுவோம்! என்று விக்கிரமன் புரோகிதருடன் அந்த தேசத்திற்கு புறப்பட்டான்.
அந்த நகருக்குள் புரோகிதருடன் நுழைந்த விக்கிரமாதித்தன் குளத்திலே இறங்கி நீராடி கோவிலுக்குள் சென்று லஷ்மி நாராயணரை தரிசித்தான். பின்னர் தன்னுடைய குலதெய்வத்தை வேண்டியபடி அங்கிருந்த எண்ணெய் கொப்பரைக்குள் குதித்து விட்டான்.
அரசன் தைரியமாக எண்ணெய் கொப்பரைக்குள் குதிப்பதை பார்த்த மக்கள் கண்ணீர் விட்டனர். கொதிக்கும் எண்ணெய் அவன் உடலை கருக்கி விட்டது. கூடியிருந்த மக்கள் கூக்குரலிட்டு அழுதனர்.
அப்போது அங்கு இளவரசி மன்மத சஞ்சீவனி ஓடோடி வந்தாள். அவள் கையில் இருந்த கிண்ணத்தில் அமிர்தம் இருந்தது. அதை விக்கிரமனின் உடல் முழுவதும் பூசி விட்டாள். இப்போது விக்கிரமாதித்தன் உயிர் பெற்று எழுந்தான். அவன் உடல் முன்னைவிட பல மடங்கு ஒளி பொருந்தியதாக காணப்பட்டது.
மன்மத சஞ்சீவனி அரசனின் கழுத்தில் மாலையிட முயன்றாள்.
“ அரசே! என் எண்ணத்தை ஈடேற்ற இதுவரை யாரும் வரவில்லை! தாங்கள் மிகவும் துணிவுடன் என் விருப்பத்தை நிறைவேற்றினீர்கள்! நான் தங்களின் அடிமை! என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்!”என்றாள்.
அப்போது உஜ்ஜைனி வேந்தன் அவளைத் தடுத்து, “நான் சொல்வதை முதலில் கேள்! நீ என் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவளானால் என் விருப்பத்தை நிறைவேற்று! இதோ இங்கே நிற்கும் இந்த வசுமித்திரன் உன் மேல் மிகுந்த ஆசையுடன் உள்ளான். எனக்குப் பதில் அவரை மணந்து கொள்! இதுவே என் விருப்பம்!” என்றான்.
“அரசே! உங்கள் விருப்பம் அதுவானால் அப்படியே ஆகட்டும்! நான் வசுமித்திரரை மணந்து கொள்கின்றேன்!” என்ற இளவரசி வசுமித்திரருக்கு மாலையிட்டாள்.
விக்கிரமாதித்தன் அவர்களை வாழ்த்தி வசுமித்திரருக்கு அந்த நாட்டின் மணிமகுடம் சூட்டி முடிசூட்டு விழா நடத்தி வைத்துவிட்டு தன் நகரம் திரும்பினான்.
தன்னுடைய புரோகிதரின் விருப்பத்தை அவர் சொல்லாமலே அறிந்து அவருக்காக உயிரையும் துச்சமாக மதித்து எண்ணெய் கொப்பரையில் குதித்து அவர் விரும்பிய பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்த விக்கிரமாதித்தன் போன்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு நம் பாரதம் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வரலாற்றுக்கதைகளை பதிவது மிகச்சிறப்பு...
ReplyDeleteவிக்ரமாதித்தனின் கதை.. அருமை...
வணக்கம்
ReplyDeleteஐயா.
இரசனை மிக்க கதை அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரலாற்றுக் கதையை சுவை குன்றாமல் அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள விதம் நன்று. கதையைப் படிக்கும்போது நாங்களும் குழந்தைகளாகிவிடுகிறோம்.
ReplyDelete"ஆண்டவன் நின்று கேட்பான்" என்ற கட்டுரை (ஹிந்து தமிழ்)-ல் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறதே. அதை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா…….. ஆன்மிகத் தொழிளாளிகளுக்கு எதிரான சதி இது. இப்படி பொத்தம் பொதுவாக ஒரு கட்டுரையை எழுதி எளியவர்களை கேவலப்படுத்த நினைக்கிறது. அன்புள்ளம் கொண்ட உங்களைப் போன்றோர் இந்த மாதிரி அவதூறுகளுக்கு எதிராய் குரல் கொடுக்க வேண்டுமென இரஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteஎங்கிலாவது ஒருவர் இருவர் இப்படி இருக்கலாம் அதற்காக ஒட்டு மொத்த அர்ச்சகர் இனத்தையே குறி வைப்பது கொடுமை அல்லவா? சிறப்பு அனுமதி போன்றவற்றை அவர்களா டிக்கெட் போட்டு அமலாக்கினர்.
சாம்பசிவம்.
அருமையான கதை. மன்னன் மக்களின் சேவகன் ஒரு காலத்தில்.
ReplyDelete