நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6
தாய்ப்பால்!
குழந்தைக்கு தாய்ப்பால்
தாம்மா நல்லது. அதை நிறுத்தாதே! அப்பதான் குழந்தை வளப்பமா நோய் எதிர்ப்பு சக்தியோடு
இருக்கும். அழகு குறைஞ்சிரும்னு தாய்ப்பால் தராம ஒதுக்கி வச்சுடாதே கண்ணு. என்று தன்
பெண்ணுக்கு அட்வைஸ் செய்த மீனாட்சி தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றை பிடித்து
இழுத்து தள்ளிக் கட்டினாள்.
நோட்டா!
மறக்காம ஓட்டுப் போடுங்க!
அது ஜனநாயக உரிமை! யாரையும் பிடிக்கலைன்னா கூட நோட்டாவுல ஓட்டு போடுங்க! ஆனா வாக்கு
போடாம மட்டும் இருந்திராதீங்க. உங்க ஒரு ஓட்டு கூட ஓர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
என்று புரட்சி வசனம் பேசிய நடிகர் மறந்துவிட்டார் ஓட்டு போட!
பிடிப்பு:
வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு
வேணுங்க! எது மேலேயும் பற்று இல்லேன்னா அது சன்னியாசி வாழ்க்கை! ஒரு குடும்பஸ்தனுக்கு
இது கூடாதுங்க! புள்ளைங்க மேல பாசத்தை வைங்க! இல்லை பொண்டாட்டி மேல அன்பு காட்டுங்க
அப்பதான் வாழ்க்கை இனிக்கும். இப்படி பேசிய சொற்பொழிவாளரின் கார் அதிவேகத்தில் செல்ல
ஏம்ப்பா! என்ன ஆச்சு? பிடிப்பே இல்லைங்க! என்னது?
ப்ரேக் பிடிக்கலைங்க என்றார் ஓட்டுனர்
தாகம்!
அந்த பெட்டிக்கடையில் கூட்டம்
நிறைந்திருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் இருந்து
பெப்சியும் மாஸாவும் போவண்டாவும் காலியாகிக் கொண்டிருந்தது. ஐயா! ஒரு கோக் கொடுங்க!
வாலிபன் கேட்க, ஒரு நிமிசம் தம்பி! என்றவர்
கடையைவிட்டு வெளியே வந்து பின்னாலிருந்த வீட்டினுள் நுழைந்து பானையில் இருந்து
ஒரு சொம்பு நீர் அருந்தினார்.
வி.சி.டி!
பத்துவருடங்கள் அசிஸ்டெண்டாக
இருந்து முதல் படம் கிடைத்து இயக்கி அதை வெளியிட்டுவிட்டு வீட்டுக்கு போன் செய்தார்
அந்த இயக்குனர். “ அப்பா! படம் பார்த்தீங்களா? எப்படி இருக்கு? வி.சி.டி பிரிண்டே சரியில்லைடா!
ஒரே மங்கலா தெரியுது? உன் கிட்டே இருந்தா நல்லதா ஒண்ணு அனுப்பி வைடா! என்ற போது அதிர்ந்தான்.
பிக்ஸிங்!
இந்த போட்டியில் அந்த
அணி ஜெயித்தே ஆக வேண்டிய சூழல்! ஆட்டம் நல்லவிதமாய் இல்லை. முக்கிய விக்கெட்டுக்களை
இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது அணி. அப்போதுதான் அந்த புதிய பேட்ஸ்மேன் அசத்தலாக
ஆடினான். கூட இருந்தவன் ஒத்துழைக்க நிமிர்ந்தது அணி. கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவை
என்ற போது பதட்டத்தில் பந்துவீச்சாளர் புல்டாஸ் போட சிக்சராக மாற்றினான் வெற்றி வெற்றி! பார்த்துக்கொண்டிருந்த ரசிகன் துள்ளிக் குதித்தபோதும்
மூலையில் ஓர் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை “பிக்ஸ் பண்ணியிருப்பாங்களோ?”
வீடு!
வர வர சிட்டிக்குள்ள மக்கள்
தொகை அதிகமாயிருச்சு! எங்க பாரு ஒரே கூட்டம்! குடியிருக்க ஒரு வீடு கிடைக்குதா? இல்லே கிடைச்சாலும் அங்கே நிம்மதியிருக்குதா? ஒரே
இரைச்சல்! ராத்திரி பன்னிரண்டு மணியானா கூட தூங்காம ஒரே சத்தம்! கூச்சல்! சரி புறநகர்ல
பாக்கலாம்னா அங்கேயும் நிரம்பி வழியுது கூட்டம்! கொஞ்சம் கூட சரியில்லை! அட நீ வேற இப்பல்லாம் ஒரு மரம் இருக்குதா? காத்தாட
அப்படியே உக்காந்து பேச! அதுக்கு கூட வழியில்லாம போயிருச்சு! இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.
பேஸ்ட்!
கடுமையான பல் வலி! இத்தனைக்கும்
நான் உபயோகிக்கும் பேஸ்ட் பல் டாக்டர்கள் பரிந்துரைக்கும் ப்ராண்ட்தான். உப்பும் இருக்கும்
கரியும் இருக்கும். ரெண்டு வேளை ப்ரஷ் செய்கிறேன். ஆனாலும்… ஒரே வலி…! காத்திருக்கையில்தான்
கவனித்தேன். விளம்பரத்தில் தோன்றும் அந்த பெண்மணி அவரும் வாயை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
முரண்!
வந்துட்டானுங்கப்பா!
ஓட்டு கேட்டு! அஞ்சு வருசத்துக்கு ஒரு தரம் தவறாம வருவானுங்க அப்புறம் எட்டிக்கூட பார்க்க
மாட்டானுங்க! நம்ம பொழப்பை பாக்காம இவனுங்களுக்கு ஓட்டு போட்டு என்ன ஆவ போவுது? இப்படி
பேசிக்கொண்டிருந்த கிராமத்தான்கள்தான் முதல் ஆளாய் வாக்குச் சாவடியில் நின்று கொண்டிருந்தனர்.
ரிசல்ட்!
இன்னைக்கு ரிசல்ட் வரப்
போவுது! கடவுளே நல்ல பர்சண்டேஜ் கிடைக்கணும். அப்பத்தான் ஸ்கூல்ல தலைநிமிர்ந்து போவ
முடியும். ஸ்கூல்ல நம்ம பையன் டாப் மார்க் எடுத்தான்னா நமக்கு தனி கவுரவம் கிடைக்கும்.
இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் தெரிஞ்சிரும். ஒரு வருஷ உழைப்பு! வீணா போயிடக் கூடாது
கடவுளே! நல்ல பர்சண்டேஜும் ஸ்கூல் டாப்பரும் கிடைச்சா பிள்ளையாரப்பா உனக்கு சிதறு தேங்காய்
உடைக்கிறேன்! படபடப்பாய் வேண்டிக்கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.
அனைத்தும் அருமையான குட்டிக்கதைகள் இரண்டாவது கதை நோட்டா அதை படிக்கும் பொழுது எனக்கு நடிகர் சூர்யா நினைவு வரவேயில்லை நண்பரே....
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteநல்ல முயற்சி..
ReplyDeleteஅருமை அனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்...குறிப்பாக 'தாகம்' மிகப் பிடித்தது சகோ ..வாழ்த்துகள்
ReplyDeleteஅனைத்துமே அருமை. தாய்ப்பால் உச்சம்.
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteஅனைத்தும் அருமை ... நொடிக்கு நொடி ரசித்தேன்
ReplyDeleteஜனரஞ்சகமான கதைகள்...!!!!
ReplyDeleteஅனைத்தும் அருமை நண்பரே!
ReplyDeleteசிறந்த தொகுப்பு
ReplyDeleteஅனைத்தும் அருமை
தாய்ப்பால் மனதை சுட்டது நண்பரே
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தோம்....அதிலும் தாய்ப்பால், ஃபிக்சிங்க், விசிடி, வீடு மிக அருமை...பாராட்டுகள் சுரேஷ்
ReplyDeleteவீடு கதையும் பேஸ்ட் கதையும் நன்றாக இருந்தன. மற்றவையும் அருமை!
ReplyDelete