நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!
நான்கு உபதேசங்கள்!
பீர்பால் கதை! பாப்பாமலர்!
அக்பரின் அரசவையில்
திறமையான அறிஞராகவும் மதியூகியாகவும் இருந்தவர் பீர்பால். ஒரு சமயம் அவர் மன்னர் அக்பரை
விட்டு பிரிந்து டில்லியை விட்டு வெகுதொலைவு
கிளம்பினார்.
டில்லிக்கு கிழக்கே
இருந்த அந்த ஊரில் அவர் வசித்து வருகையில்
ஒரு நாள் அங்கே ஒருவன் வந்தான். ‘உபதேசம் வேணுமா உபதேசம்! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக்
காசுகள்!’ என்று அவன் கூவிக்கொண்டு இருந்தான்.
பீர்பாலுக்கு அவன்
செய்கை வித்தியாசமாக இருந்தது. இதென்ன உபதேசத்தை விலைக்கு விற்கிறான். அப்படி அவன்
என்னதான் சொல்லுகிறான் பார்ப்போம்! என்று அவனிடம் சென்று உபதேசத்தைப் பற்றி வினவினார்
பீர்பால்.
அந்த மனிதன், “ என்னிடம் நான்கு அருமையான உபதேசங்கள்
உள்ளன! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக் காசுகள் நான்கும் வேண்டுமானால் நானூறு வெள்ளிக் காசுகள்”
என்றான்.
அவன் அப்படி என்னத்தான் உபதேசிக்கிறான் என்று பார்ப்போமே
என்று பீர்பால் தன்னிடமிருந்து ஒரு நூறு வெள்ளிக்
காசுகளை கொடுத்து ஒரு உபதேசத்தை சொல்! என்றார்.
“ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும்
அதனை சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!” இதுதான் முதல் உபதேசம் என்றார் அந்த மனிதர்.
பீர்பாலுக்கு அந்த
உபதேசம் பிடித்து போகவே தன் பையில் இருந்து மேலும் ஒரு நூறு காசுகளை கொடுத்து இன்னொரு உபதேசம் சொல்ல சொன்னார்.
“எவரிடமாவது தாங்கள் குறை குற்றம் கண்டால் அதனை மற்றவர்க்கு
வெளிப்படுத்தக் கூடாது!” இதுதான் இரண்டாவது உபதேசம்.
இரண்டுமே பயனுள்ள
உபதேசமாக இருக்கிறதே மூன்றாவதையும் கேட்டுவிடுவோம் என்று மேலும் ஒரு நூறு வெள்ளிக்
காசுகளை தந்து மூன்றாவது உபதேசத்தை உபதேசியுங்கள் என்றார் பீர்பால்.
அந்த மனிதர் சொன்ன மூன்றாவது உபதேசம் இதுதான்!
“ தங்களை யாராவது விருந்துக்கு அழைத்தால் மறுப்பேதும் கூறாது கையில் எந்த வேலையிருந்தாலும்
பின்பு வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று உடனே விருந்துக்கு சென்றுவிட வேண்டும்.”
இன்னும் ஒரே உபதேசம் அதையும் கேட்டுவிடுவோம் என்று
தன்னிடமிருந்து இன்னுமொரு நூறு வெள்ளிக்காசுகளை தந்து நான்காவது உபதேசத்தையும் சொல்லுங்கள் என்றார் பீர்பால்.
“யாரிடமும் அடிமையாக வேலை செய்யாதே!” இதுதான் நான்காவது
உபதேசம் என்று சொல்லிவிட்டு அந்த மனிதர் அகன்று விட்டார். நானூறு வெள்ளிக்காசுகள் கொடுத்து
நான்கு அருமையான உபதேசங்களை பெற்றோம் என்ற மகிழ்வுடன் பீர்பால் நினைத்துக் கொண்டிருக்கும்
போதே அந்த வழியாக குதிரை மீது ஒரு சிற்றரசன் வந்து கொண்டிருந்தார்.
அவர் பீர்பாலை பார்த்தவுடன் குதிரையை விட்டு கீழிறங்கி,
‘ஐயா! தாங்கள் பீர்பால் அல்லவா? என்னை தெரிகிறதா? என்று வினவினார்.
ஏற்கனவே அக்பரிடம் படைத்தலைவராக இருந்து இப்போது
சிற்றரசனாக இருக்கும் அவனை அறிந்த பீர்பால் சமயோசிதமாக “ தாங்கள் இந்த நாட்டின் மன்னர்
அல்லவா?” என்று கேட்டார்.
பீர்பாலின் மதிநுட்பத்தை
அறிந்த அந்த சிற்றரசன், ஐயா! தாங்கள் என் அவையில் முக்கிய பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று கேட்டுக்கொண்டான். பீர்பாலும் ஒப்புக்கொண்டு அவருடன் அரசவைக்கு சென்றார்.
சிலநாட்கள் சென்றது. ஒரு நாள் பீர்பால் அரண்மணை
அந்தப்புரத்திற்கு செல்லவேண்டியதாக இருந்தது. அங்கு செல்கையில் அந்தப்புரத்து பணிப்பெண்ணும்
காவல் அதிகாரி ஒருவரும் மோசமாக மது அருந்தி சுயநினைவின்றி ஆடை விலகி படுத்துக் கிடந்தனர்.
பீர்பால் தன்னுடைய மேல் சால்வையை அவர்கள் மீது போர்த்திவிட்டு
வந்துவிட்டார். மயக்கம் தெளிந்து எழுந்த காவல் அதிகாரி பீர்பாலின் சால்வை தம்மீது போர்த்தப்
பட்டு இருப்பதை அறிந்து பீர்பால் தம்மீது குற்றம் சுமத்தி மன்னரிடம் சொல்லிவிடுவாரோ
என்று பயந்தான். அதற்கு முன் தாமே முந்திக் கொள்ள வேண்டும் என்று அந்த பெண்ணிடம் அரசரிடம்
சென்று முறையிட சொன்னான்.
அந்தப் பெண் அரசவைக்கு சென்று, மன்னர் அவர்களே!
பீர்பால் அந்தப்புரத்தில் நுழைந்து என்னை மானபங்கப் படுத்திவிட்டு சென்றார் இதோ பாருங்கள்
அவரது சால்வை! என்று கூறி அழுதாள்.
சால்வையை சாட்சியாக வைத்து பணிப்பெண் சொன்ன குற்றச்சாட்டு
மன்னருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. கொஞ்சமும் யோசனை செய்யாமல் பீர்பாலை அழைத்து
ஒரு கடிதம் எழுதி இந்த ரகசிய கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்த்துவிடுங்கள் என்று கூறி
அனுப்பினார்.
மன்னர் கொடுத்த அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு
சேனாதிபதியை பார்க்க பீர்பால் சென்று கொண்டிருக்கையில் வழியில் ஒரு நண்பர் பீர்பாலை
அழைத்தார். “நண்பரே பீர்பால்! தாங்கள் தயவு செய்து இன்று எனது வீட்டில் விருந்துண்ணவேண்டும்!
விருந்துண்டு என்னை சிறப்பித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்!”என்று அழைத்தார்.
“ நண்பரே! மிக முக்கியமான அரசாங்க வேலையாக சென்று
கொண்டிருக்கிறேனே! இந்த கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்க்க வேண்டியுள்ளது! என்றார் பீர்பால்.
அந்த சமயம் அங்கே அந்தப்புரத்தில் அலங்கோலமாக இருந்த
காவல் அதிகாரி வந்தார். அவர் பீர்பாலிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில்,
பீர்பால் அவர்களே! நானே இந்த கடிதத்தை சேனாதிபதியிடம் சேர்ப்பித்து விடுகிறேன்! நீர்
விருந்து உண்ணச் செல்லுங்கள் என்று சொல்லி கடிதத்தை எடுத்து சென்றார்.
காவல் அதிகாரி கடிதத்துடன் சேனாதிபதியிடம் சென்றார்.
பீர்பால் விருந்தில் கலந்துகொண்டார். சேனாதிபதி கடிதத்தை படித்தார். உடனே தன் வாளால் காவல் அதிகாரியின் தலையை வெட்டி ஓர் தட்டில் வைத்து பீர்பாலிடம் சென்று கொடுத்தார்.
பீர்பாலுக்கு நிலைமை புரிந்தது. மூன்றாவது உபதேசம்
தம்மை காத்தது என்று அறிந்தார். அந்த தலையுடன் அரசவைக்குச் சென்றார்.
பீர்பால்! தாங்கள் எப்படி? தங்களை கொல்லச்சொல்லி
அல்லவா கடிதம் எழுதினேன் வியந்தார் அரசர்.
”அரசன் தவறு செய்தாலும் ஆண்டவன் தவறு செய்வதில்லை
மன்னர் அவர்களே! பணிப்பெண்ணை மானபங்க படுத்தியவன் இந்த காவல் அதிகாரிதான். தம்மை காத்துக்கொள்ள
என் மீது பழி போட்டான். ஆனாலும் அந்தப் பழியில் அவனே சிக்கி மாண்டான்.” பீர்பால் நடந்ததை
கூறவும் அரசன் வெட்கி தலை குனிந்தான்.
“ பீர்பால் அவர்களே! என்னை மன்னியுங்கள்! இந்த
தவறை பெரிது படுத்தாமல் தொடர்ந்து என் அரசவையில் அங்கம் வகித்து என்னை சிறப்பியுங்கள்!”
என்று கேட்டுக்கொண்டான்.
காசுகொடுத்த பெற்ற உபதேசமே இன்று என்னைக் காத்தது!
இனி எவரிடமும் அடிமை வேலை செய்ய மாட்டேன்! நான் அக்பரின் அவைக்கு செல்ல போகிறேன்! அங்குதான்
எனக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று சொன்ன பீர்பால் மீண்டும் டில்லிக்கு வந்தடைந்தார்.
நீண்டநாள் பீர்பாலை காணாதிருந்த அக்பரும் பீர்பாலை
கண்டதும் மகிழ்ந்து அரவணைத்துக் கொண்டார்.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமையான கதை நண்பரே
ReplyDeleteநன்றி
அருமையான அனைவருக்குமான கதை ...https://ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteகதையை ரசித்தேன் நண்பரே..
ReplyDelete//காவல் அதிகாரி கடிதத்துடன் சேனாதிபதியிடம் சென்றார். பீர்பால் விருந்தில் கலந்துகொண்டார். சேனாதிபதி கடிதத்தை படித்தார். உடனே தன் வாளால் சேனாதிபதியின் தலையை வெட்டி ஓர் தட்டில் வைத்து பீர்பாலிடம் சென்று கொடுத்தார்.//
ReplyDeleteசேனாதிபதி காவல் அதிகாரியின் தலையைத் தானே வெட்டினார்.... தன்னைத் தானே வெட்டியதாக எழுதி இருக்கிறதே..... சரி பாருங்கள்.
சிறப்பான கதை சுரேஷ். பாராட்டுகள்.
படித்த கதைதான். இருந்தாலும் உங்களின் எழுத்துமூலமாக படிக்கும்போது இன்னும் நெருக்கமானது. நன்றி.
ReplyDeleteநல்ல சுவாரஸ்யம்.
ReplyDeleteவிநாயகர் அகவலில் வரும் "உவட்டா உபதேசம் உவந்தெனக்கு அருளி" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன,
ReplyDeleteஅருமை. நன்றி
விநாயகர் அகவலில் வரும் "உவட்டா உபதேசம் உவந்தெனக்கு அருளி" என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன,
ReplyDeleteஅருமை. நன்றி
400 வெள்ளி இன்னைக்கு நான் சம்பாதித்து விட்டேன், நன்றி!!
ReplyDeleteஅருமையான கதை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே...
மிகவும் ரசித்தோம் கதையை. நல்ல அறிவுரைகள் 400 வெள்ளிக் காசுகள் கொடுக்காமலேயே கிடைத்தன...
ReplyDeleteநல்ல கதை. பீர்பல் கதைகள் எப்போவுமே சுவாரசியம் தான்.
ReplyDelete