வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!

வளர்ச்சி தரும் அட்சய திருதியை வழிபாடு!

ஒவ்வொரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் என்று அவை சொல்லப்படுகின்றது. அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான நாள் சுக்லபட்சம். பவுர்ணமி கழித்து அமாவாசை வரை கிருஷ்ணபட்சம்.
    வைகாச மாத சுக்லபட்ச திருதியை திதி அட்சய திருதியை என்று வழங்கப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் செயல்கள், தானங்கள் குறையாது வளரும் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. குசேலர் இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை தரிசித்து வளம் பெற்றார் என்பது புராணம்.
  க்ஷயம் என்றால் குறைவு என்று பொருள். புற்றுநோயைக் கூட க்ஷய ரோகம் என்று சொல்வார்கள். புற்றானது நமது செல்களை அழித்து ஆயுளை அழிக்கிறது குறைக்கிறது. அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள்.
 அக்ஷய திருதியை அன்று நகைகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை.  அக்ஷய திருதியை அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், தானங்கள், ஹோமங்கள், ஜபங்கள் குறைவில்லாது இருந்து நம்மை காக்கும் என்று பொருள்.
   நம்முடைய முன்னோர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் செய்யவேண்டும். இதில் அவர்கள் மகிழ்வடைந்து நம் குடும்பம் செழிக்க குறையில்லாது வாழ அருள்புரிவார்கள்.
   அட்சய திருதியை அன்று ஒரு செப்பு சொம்பில் சுத்தமான நீரை நிரப்பி அதில் ஏலக்காய்,லவங்கம், பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்கள் சேர்த்து ஏழை ஒருவருக்கு தானம் செய்ய வேண்டும். இந்த நீர் நிரம்பிய பாத்திரம் பிரம்மா, விஷ்ணு, சிவன் சொருபமானது. அவர்கள் அருளால் நமது விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
   அட்சய திருதியை நாளில் இப்படி தண்ணீரை தானமாக செய்தல் நன்மை பயக்க கூடியது. தண்ணீர் பந்தல் அமைத்து  சுத்தமான குடிநீர்,  மோர் போன்றவற்றை தானம் செய்யலாம். குறைந்தது ஒரு பத்து பேருக்காவது தண்ணீர் தானம் அளிப்பது சிறப்பாகும். முன்னோர்கள் திருப்தி அடைவார்கள்.
 இன்றைய தினம் ஸ்ரீ லஷ்மி குபேரவழிபாடு சிறப்புடையது ஆகும்.
நகைகளை வாங்க வேண்டும் என்பது அவசியம் அல்ல! திருமகள் வீற்றிருக்கும் உப்பு சிறிதளவு வாங்கி வைக்கலாம்.

விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட, அச்சமயம் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஸ்ரீ ராகவேந்திரரை அரசர் வேண்ட, நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், அவர்களை அழைத்துக் கொண்டு, அந்நாட்டின் நெல் களஞ்சியத்திற்குச் சென்று, அங்கிருந்த சிறிதளவு நெல் குவியல் மீது அட்சயம் என்று எழுதி, அதை அங்கு இருந்த மக்களுக்கு தன் திருகரத்தால் தானம் செய்ய, அங்கு ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஐந்து பேருக்குக் கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணிநேரத்திலேயே அடைமழை பெய்து வறட்சி நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் ஓர் அட்சய திருதியை நாளில்தான்.

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும். வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும். ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ணபரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில்தான். இன்றைய தினத்தில் கிருஷ்ணபரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சம் பெறும் காலம் சித்திரை மாதம். அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை நாள்தான் அட்சய திருதியை எனப்படுகிறது. அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியனுடன் சேரும் சந்திரன், மூன்றாவது நாளில் அதாவது திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும்போது அங்கும் உச்சம் பெறுகிறார். இங்கு சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் இணைந்து பலம் பெறும் அமைப்பு, திருதியை நாளில்தான் நடக்கிறது. தங்கத்தின் காரகன் குரு என்றாலும் அது ஆபரணமாக மாறும்போது சுக்கிரனைக் குறிக்கும்.

ஒரு விஷயத்தை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். ஆபரணம் என்று சொல்லும்போது தங்கத்தைத்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. முந்தைய காலத்தில் வெண்கலம்கூட விலை அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பொதுமக்கள் தங்கம் வாங்க முயற்சி மேற்கொள்கிறார்கள். இந்த நாளில் தானம் செய்து, தனவளங்களையும் பெறலாம் என்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை.

 27 நட்சத்திரக் காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்

அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கிருத்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம். 
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
மிருகசீரிஷம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம். 
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம். 
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலாம். 
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம். 
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். 
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம். 
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம். 
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம். 
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம். 
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம். 
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது. 
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

அட்சய திருதியை என்பது தங்கம் வாங்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை! அன்றைய நாளில்  இறைவழிபாடு செய்து தானங்கள், தர்ப்பணங்கள், ஹோமங்கள் முதலியன செய்து வளர்ச்சியை பெறுவோம்! வளமாய் வாழ்வோம்!

(ஆன்மீக நூல்களில் இருந்து தொகுத்து எழுதியது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



  

Comments

  1. நல்ல தகவல்கள். எலும்புருக்கி நோயைத்தான் க்ஷயரோகம் என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  2. நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நல்ல அருமையான தொகுப்பு
    அறியாதன பல அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள்..... மக்களை திசை திருப்பி தங்கம் நோக்கிச் செலுத்தி விட்டார்கள்....

    ReplyDelete
  7. நல்ல தகவல் ... இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த சாக்கில் ஏதாவது வாங்கலாம்

    ReplyDelete
  8. நல்ல அருமையான தகவல்கள். உடனே வர முடியலை. இன்று தான் நேரம் கிடைத்தது. நல்லதொரு தொகுப்பு!

    ReplyDelete
  9. நல்ல அருமையான தகவல்கள். அறியாதவையும் கூட...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2