நல்ல சொல் பேசு! பாப்பா மலர்!
நல்ல சொல் பேசு!
பாப்பா மலர்!
முன்னொரு காலத்தில் ஒரு ஊருல ஒரு புருஷனும் பொஞ்சாதியும்
இருந்தாங்க! அவங்க ரொம்ப பொறாமை புடிச்சவங்க! அடுத்தவங்க வாழ்ந்தா பிடிக்கவே பிடிக்காது.
அப்படியே வெம்பி சாவாங்க. அவங்க வீட்டுக்கு பக்கத்துல இன்னொரு புருஷனும் பொஞ்சாதியும்
இருந்தாங்க. இவங்க ரொம்பவும் நல்லவங்க. மத்தவங்களுக்கு ஒன்னுன்னா உடனே ஓடிப்போய் உதவி
செய்வாங்க. கஷ்டமான நிலையிலும் அடுத்தவங்க கஷ்டத்தை போக்கடிக்க முயற்சி பண்ணுவாங்க.
ஒரு நாள் அந்த நல்ல புருஷன் காட்டுக்கு விறகு வெட்ட
கிளம்பினான். ரொம்ப நேரம் காட்டுக்குள் அலைஞ்சு பட்டுப் போன காய்ந்து போன மரங்களை வெட்டி
எடுத்துட்டு கிளம்பறப்போ “ஐயோ என்னை காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்”னு ஒரு பொண்ணோட
குரலு வந்துச்சு.
இவன் ஓடிப் போய் பார்த்தப்ப ஒரு சிறுத்தை ஒரு பெண்ணை
துரத்திக்கிட்டு இருந்துச்சு. இவன் துணிச்சலா
தன் கிட்டே இருந்த கோடரியாலே சிறுத்தை மேல ஒரு போடு போட்டான். அவ்வளவுதான் சிறுத்தை
ஒரு அலறலோட செத்து விழுந்தது. அப்போ அந்த பொண்ணு
ஒரு அழகிய தேவதையா உருமாறிச்சு.
நண்பா! நான் வேண்டும் என்றே இவ்வாறு செய்தேன்!
இப்படி செய்கையில் யாரும் என்னை காப்பாற்றாமல் தன்னுயிர்தான் பெரிது என்று ஓடி விடுவார்கள்.
நீயோ இரக்க சுபாவம் மிக்கவன். என்னை காப்பாற்ற துணிந்தாய். உனக்கு நான் உதவ விரும்பறேன்.
உன் கிட்ட மூணு கோலிகளை தர்றேன். அவை சாதாரண கோலிகள் கிடையாது. அவற்றை வைத்து நீ என்ன நினைக்கிறாயோ அதை வரவழைத்துக் கொள்ளலாம். இந்தா இவைகளை வைத்து பிழைத்துக் கொள்! என்று சொல்லி மறைஞ்சு
போயிருச்சு தேவதை.
அந்த நல்லவன் ரொம்ப ஆச்சர்யப்பட்டு வீட்டுக்கு
வந்து தன் மனைவிகிட்டே நடந்ததை எல்லாம் சொன்னான்.
இரண்டு பேரும் சந்தோஷப்பட்டு நல்லா ஆலோசிச்சு ஒரு கோலியை உடைத்து “ எங்களுக்கு போதும் என்னும் அளவிற்கு பொன்
வேண்டும் என்றார்கள். அதே மாதிரி அவர்கள் விரும்பிய அளவிற்கு பொன் கிடைத்தது. இன்னொரு
கோலியை உடைத்து கூரைவீடு மாளிகையா மாறனும் என்றார்கள். குடிசை வீடு பெரிய மாளிகையா
எழுந்து நின்னுது. மூன்றாவது கோலியை உடைத்து இந்த மாளிகை நிறைய மாளிகைக்கு தேவையான
பொருள்கள் நிறைய வேண்டும் என்றார்கள். அப்படியே பொருட்கள் நிரம்பிருச்சு.
அந்த மாளிகையில் வசித்து கிடைத்த பொன்னை கொண்டு
நிறைய நிலம் வாங்கி விவசாயம் செய்து வசதியாக அவர்கள் வாழ ஆரம்பித்தார்கள். இதை பார்த்ததும்
பொறாமைக்காரனுக்கு பத்திக்கிட்டு வந்துச்சு! நம்மள மாதிரி இருந்தான்! தீடீர்னு இவனுக்கு
வந்த வாழ்வை பாத்தியா? எவ்வளோ பெரிய மாளிகை! நிலம் ? எப்படி வந்துச்சு? நீ போய் அவன்
பொஞ்சாதிகிட்டே கேட்டு தெரிஞ்சுகிட்டு வா! நாமும் வசதியா வாழலாம்னு தன் மனைவியை அனுப்பி
வைச்சான்.
அவன் பொஞ்சாதியும் பக்கத்து வீட்டுக்கு போயி இதமா
பேசி அவங்க வசதியான கதையை தெரிஞ்சுகிட்டு வந்து புருஷன் கிட்ட சொன்னாங்க. அப்படியா
சேதி? நானும் போயி அந்த தேவதைகிட்ட வரம் வாங்கியாரேன்னு பொறாமைக்காரனும் கிளம்பினான்.
காட்டுல விறகு வெட்டறப்போ அந்த தேவதையை பார்த்தான்.
அதுவும் காப்பாத்துங்கன்னு கத்திச்சு! இவனும் சிறுத்தையை தாக்கி தேவதைகிட்ட இருந்து
மூணு கோலிகளை பரிசா வாங்கிட்டு வீட்டுக்கு வந்தான்.
வீட்டுக்கு வந்ததும் பொஞ்சாதிகிட்டே கோலிகளை காண்பிச்சு
நிறைய நிலம் கேக்க போறேன்! என்றான். அவளோ எதுக்கு நிலம் கேக்கறீங்க நிறைய தங்கம் கேளுங்க!
என்றாள். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது.தங்கம்தான் வேணும்னு மனைவியும் நிலம்தான்
வேணும்னு புருசனும் அடிச்சிக்கிட்டாங்க. ஒரு கட்டத்தில் புருஷன் கோவத்துல ஒரு கோலியை
உடைச்சு நிறைய மயிரு வேணும்னு கேட்டான்.
உடனே வீடு முழுக்க மயிரு நிறைஞ்சிருச்சு. அவங்க
ரெண்டு பேரு உடம்பு முழுக்க சடை சடையா மயிரு வளர்ந்துகிட்டே இருந்துச்சு. அடடா! இப்படி ஆகிப்போச்சேன்னு அழுதாங்க சரிசரி இன்னொரு
கோலியை உடைச்சு மயிரெல்லாம் போகனும்னு சொல்லுவோம்னாங்க! அப்படியே செய்தாங்க. இப்ப அவங்க
வீட்டுல இருந்த மயிரு மட்டும் இல்லே தலையிலே இருந்த முடியும் சேர்ந்து காணாம போயிருச்சு. புருவம் கூட காணாம போயிருச்சு..
இப்படியே வெளியே தலைகாட்ட முடியாதே! என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க! கடைசியா இருந்த கோலியை
உடைச்சு முதலில் எங்களுக்கு இருந்தபடி முடியே போதும்னு சொன்னாங்க. இப்ப பழைய படி அவங்களுக்கு
முடி வந்துச்சு. ஆனா மூணு கோலியும் வீணாப் போயிருச்சு.
வரம் கிடைச்சாலும் அதை சரியா பயன்படுத்த தெரியாம
போனதால் இவங்களுக்கு கிடைச்ச வரம் வீணாப் போயிருச்சு. அதுக்குத்தான் நாம் ஆத்திரத்துல
கூட தவறான வார்த்தைகளை
விடக்கூடாது. யாகாவாராயினும் நாகாக்கன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு இல்லியா?
நல்லதையே பேசுவோம்! நலமாய் இருப்போம்!
(செவிவழிக்கதை)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
பேராசை பெரு நட்டமல்லவா
ReplyDeleteஅருமை நண்பரே
படிப்பினையைக் கொடுத்த கதை அருமை நண்பரே
ReplyDeleteபுத்தி புகட்டிய கதை. பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநல்லதொரு படிப்பினை உள்ள கதை!
ReplyDeleteஅருமையான நல்லொழுக்கக் கதை. பகிர்விற்கு நன்றி சுரேஷ்..
ReplyDelete