லவ் டிராஜடி!
லவ் டிராஜடி! வழக்கம் போல இந்த கோடை விடுமுறைக்கும் சொந்த ஊர் போகவேண்டும் என்று சொன்ன போது உமா முறைத்தாள்.” அது என்ன ஊர்? சுத்த பட்டிக்காடு! இன்னிக்கு உலகம் முழுக்க எத்தனையோ வசதிகள் வந்துருச்சு! ஏன் உங்க பட்டிக்காட்டை சுத்தி இருக்கிற ஊரெல்லாம் எவ்வளோ முன்னேறிடுச்சு! ஆனா உங்க ஊர் மட்டும்? அதிகம் எதுவும் வேணாம்? ஒரு ட்ரான்ஸ்போர்ட் வசதியிருக்கா? ஒரு நெட் வொர்க் கவரேஜ் இருக்கா? என்னால அந்த ஊரிலெ ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுப்பா!” என்று மூச்சுவிடாமல் பாடி முடித்தாள். ”சரிசரி! நீ வேணா சென்னையிலே உங்க மாமா வீட்டுல பசங்களோட தங்கிக்க அங்கே இருந்து ஒரு அம்பது கிலோ மீட்டர்தானே எங்க ஊர் நான் போய் ஒரு ரெண்டுநாள் இருந்துட்டு வந்துடறேன்!” என்று சொன்ன போது பெங்களூர் குளிரிலும் அவள் முறைத்தது சுட்டது. “போனவருஷமே இதான் லாஸ்ட்னு சொன்னேன்! சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதே…!” “என்னதான் இருந்தாலும் ஊர்ப்பாசம் விட்டுப் போவுதா? நீ உங்க அம்மா வீட்டுக்கு போறதை நான் அப்ஜெக்ட் பண்ணியிருக்கேனா?” ...