தித்திக்கும் தமிழ்! பகுதி 10 துந்துமி போட்ட புதிர்!

தித்திக்கும் தமிழ்! பகுதி 10


பழம் தமிழ்ப் புலவர்கள் மட்டுமின்றி அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் நபர்களும் கூட அன்று புலமை மிக்கவராக இருந்தார்கள். அவர்களின் தமிழ் அறிவு வியக்க வைக்கும். இன்று தாய்மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகின்றோம். அன்றோ புலவர்களின் வீட்டு உடைமைகள் கூட கவிபாடின. உதாரணமாக கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்  கூட கவிபாடும் என்ற ஓர் சொலவடை உண்டு. அந்த அளவிற்கு கம்பனிடத்தில்  சொல்வளமும் மொழிவளமும் இருந்தது. அவரிடம் பணிபுரிவோரிடமும் இருந்தது.
  குறிப்பாக அன்றைய காலத்தில் பெண்கள் மிகுந்த அறிவாளிகளாக புலமை மிக்கவர்களாக இருந்தனர். இதை சங்ககாலப் பாடல்களில் அறிய முடிகின்றது. இன்றைக்கு ஒர் பிரதமர் தன் பதவியின் மதிப்பை உணராமல் பெண்களை தாழ்த்திப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றார். ஆனால்  அன்றைய அரசர்களும் அறிஞர்களும் பெண்களை மிகவும் உயர்வாக நடத்தி உள்ளனர்.
   அரச சபையில் அவர்களுக்கு பங்களித்து கவுரவித்து உள்ளனர். இன்றும் பெண்கள் பல்வேறு வகையில் திறமையானவர்களாக இருந்தாலும் அவர்களை தாழ்த்திப்பேசும் தாழ்த்தி நடத்தும் போக்கு தொடர்வது வேதனையான ஒன்று.
 கம்பருடைய வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் துந்துமிதுரி துரிதி என்பவர். அப்பணிப்பெண் கவிபாடுவதில் வல்லவராக இருந்தார். கம்பரிடத்தில் தன் ஆற்றலை காட்டவந்த ‘சோமாசி’ என்ற புலவனுக்கு இந்த பெண் ஒரு சவால் கொடுத்தார். அதைத்தான் இங்கு பார்க்க போகிறோம்.
  விடுகதைகள் அந்தக் காலத்தில் இருந்தே போடப்படுகின்றன. கவிதையில் விடுகதை பாடுவது என்பது ஓர் அரிய கலை! இந்த கலையை ரசிக்காதோர் எவரும் இலர். இப்படி விடுகதைப் புனைவதில் தமிழக நாட்டுப்புற மங்கையர்கள் வல்லவர்கள். இதை நம் தமிழ் சினிமாக்களில் கூட பயன்படுத்திக் கொண்டு உள்ளனர். அருணாசலம் என்ற படத்தில் அப்படி ஓர் விடுகதை பாடல் வருவதை எல்லோரும் ரசித்திருக்க வாய்ப்புண்டு.
   அதே மாதிரி இந்தப்பெண்மணி சோமாசிப் புலவருக்கு ஓர் விடுகதை போடுகிறார். விடை புலவருக்குத் தெரியவில்லை! உங்களுக்குத் தெரிகின்றதா பாருங்கள்.

வட்டமதி போலிருக்கும்; வன்னிக் கொடிதாவும்;
கொட்டுவார் கையினின்று கூத்தாடும்;- சுட்டால்
அரகரா என்னுமே, அம்பலசோ மாசி
ஒருநாள்விட் டேன் ஈது உரை.

பாட்டின் விளக்கம் இதுதான்:
      ‘அம்பல சோமாசி என்ற புலவனே! வட்டமான திங்களைப் போலிருக்கும்; நெருப்பின் உச்சியைத் தாவிச்செல்லும்; அதை தட்டுபவரின் கைகள்ல் கூத்தாடும்; தீயில் இட்டுச் சுட்டால் ‘அரகரா’ என்று சொல்லி அணிவதற்கு உரியதாகும். நீ இதனை இன்னது என்று சொல்வாயாக! அதற்கு உனக்கு ஒருநாள் அவகாசம் தருகின்றேன்.

அம்பல சோமாசிக்கு விடை தெரியாமல் வெட்கி தோல்வியை ஒப்புக்கொண்டார். உங்களுக்கு விடை தெரிகின்றதா? வரட்டி தான் விடை.
நம் மங்கையரின் மதிநுட்பம் புரிகின்றதா?
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒர் அழகிய பாடலோடு சந்திப்போம்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அன்புள்ள சகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (15.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 15ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/15.html

    ReplyDelete
  2. அருமையான புதிர்... விளக்கமும் அருமை...

    ReplyDelete
  3. யதார்த்த வாழ்வின் நிகழ்வை கவிதையாக நம்மவர் பகிர்ந்து, அத்துடன் நம் பண்பாட்டையும் காண்பித்துள்ளனரே. அவர்களுடைய ரசனையும் பாராட்டத்தக்கதே.

    ReplyDelete
  4. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  5. தித்திக்கும் இது போன்ற பகிர்வுகளை தொடருங்கள். தொடர்கிறோம்.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    இந்த பதிவின் வழி அறியாத விடயங்களை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான புதிரும் அதற்கான சிறப்பான விளக்கமும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்.

    இப்பாடல் கம்பரின் பணியாளரின் பெயர் முதலியன நான் அறியாதன.


    அறியாதனவற்றை அறியும் போது என் மனதில் தோன்றும் மெய்யின்பம் தங்களின் இந்தப் பதிவு காணத் தோன்றியது.

    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2