இந்திக்காரன் எடுத்த வாந்தி!

சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப் பார்க்க சென்னை பயணம்.

   முன்பெல்லாம் எங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு செல்ல அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்கள் பிடிக்கும். மாலை டிராபிக் நெரிசல் என்றால் கூட ஒன்றேகால் மணிநேரத்தில் சென்னையை அடைந்துவிடலாம். இது நான் சென்னைக்கு பேருந்து ஏறும் இடத்தில் இருந்து பாரிமுனை சென்றடைய ஆகும் நேரமாகும்.

   ஆனால் இப்போதெல்லாம் இரண்டரை மணிமுதல் மூன்று மணிநேரம்வரை சென்னை செல்ல நேரம்செலவிட வேண்டியதாகின்றது. சென்னை மாநகரமும் முன்பைவிட நெரிசல் அதிகமாகி சாலைகள் குறுகிப்போய் கிடக்கின்றது.

   முன் தினமே அடையாறு மலர் மருத்துவமனைக்கு சென்று வந்திருந்த என் தந்தை சொன்னார் 50 ரூபாய் டிக்கெட் தான் பெஸ்ட் என்று. காலையில் கிளம்ப முடியவில்லை! பதினோறு மணி அளவில் கிளம்பி வண்டியை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு பெரியபாளையம் கூட்டுரோட்டில் மெக்கானிக்கையே டிராப் செய்ய சொல்லி இறங்கியபோது மணி 11.45. மாநகர பேருந்துகள் ஏதும் உடனே வரவில்லை! வந்த தனியார் பேருந்தில் ஏறி செங்குன்றம் வந்தபோது 12 ஐ கடந்திருந்தது மணி. புறப்பட்டுக் கொண்டிருந்த 242 என்ற மாநகரப்பேருந்தில் ஏறியது பெருந்தவறு ஆகிப்போய்விட்டது. முன் இருக்கைகள் நிரம்பி விட்டதால் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். வண்டி நிரம்பியிருக்க அதில் யாரும் அமரவில்லையே ஏன் என்று அப்புறம்தான் தெரிந்தது. டயர்மீது அமைந்த இருக்கை அது.

       மாநகரப்பேருந்து தனக்கே உரிய லட்சணங்களுடன் இருந்தது. ஓவராக சத்தம் போட்டு வண்டியின் அத்தனை அங்கங்களும் ஆடியதோடு என்னையும் ஆட்டுவித்தது. மனைவி போட்டுக் கொடுத்த ஹார்லிக்ஸ் வெளியே வந்துவிடும் போலத்தோன்றியது. 50 ரூபாய் டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டேன். எனக்கு பின் இருக்கையில் இரண்டு வாலிபர்கள் பான் மசாலாவை வாய் நிறைய வைத்திருந்தனர். அவர்கள் செண்ட்ரலை  செஹ்ண்ட்ரல்.. என்று சொல்லும்போதே கண்டக்டர் மீது பன்னீர் தெளித்தனர். வடமாநில இளைஞர்கள் அவர்கள். வாய் நிறைய பாக்குப் போட்டுட்டு எங்க போறன்னு கேட்டா சொல்ல முடியாத அளவுக்கு இருக்கீங்க?  செண்ட்ரலா! இந்தா டிக்கெட்! நமக்குன்னு வந்துவாய்க்குது பாருங்க! என்று புலம்பினார் கண்டக்டர்.

      இன்னும் கொஞ்சம் நகர்ந்து செல்கையில் ஆதித்தனார் நிறுத்தத்தில் இன்னொரு வட இந்தியர் தன் மனைவி இரண்டு குழந்தைகளுடன் ஏறினார். அவர்கள் ஊருக்குச் செல்கிறார் போல லக்கேஜ் நிறைய இருந்தது. பெண்கள் இருக்கையில்  மனைவியையும் குழந்தைகளையும் அமர்த்திவிட்டு லக்கேஜ் வைக்க இடம் தேடினார். கண்டக்டர் டிரைவர் இருக்கை அருகே இருந்த ஒருநபர் இருக்கையில் அவரை அமர்த்தி அங்கே லக்கேஜ்களை வைக்கச் சொன்னார். 
டிக்கெட்டும் கொடுத்து முடித்தார். இதற்கிடையில் அவர் மனைவியிடம் அமர்ந்திருந்த பையன் அவரிடம் சென்று அமர்ந்தான்.

     வண்டி புழலைக் கூட நெருங்கவில்லை! அந்த வட இந்திய வாலிபரின் மகன் வாந்தி எடுத்துவிட்டான். அந்த வாலிபரின் பேண்ட் மட்டுமின்றி அந்த இருக்கை முழுக்க பாழ்!  உடனே  டிரைவருக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்துவிட்டது. “ஏய்! இதெல்லாம் யார் கழுவறது? துடைடா! என்று ஏக வசனத்தில் பேச அந்த வட இந்தியர், மவுனித்தார். டிரைவருக்கு கோபம் அதிகரித்துவிட்டது. இப்படி பஸ்ல வாந்தி எடுத்தா எப்படி? அடுத்தவங்க வர வேண்டாம். குழந்தைக்கு கண்டதை ஏன் வாங்கி கொடுத்து கூட்டி வர்றீங்க!  மரியாதையா வாஷ் பண்ணு!  லக்கேஜ் பேக்ல ஏதாவது துண்டு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணு என்றார்.

      அந்த வட இந்தியர் முழித்தார்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அந்த இளைஞரின் மனைவியும் எதுவும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர்.  ஏய் சும்மா இருக்கே! உன் வீடா இருந்தா இப்படியே விட்டுருவியா? ஏதாவது பேப்பர் போட்டு துடைடா! மீண்டும் கத்தினார் டிரைவர். உன்னை செண்ட்ரல்ல இறங்க விடமாட்டேன்! வண்டியை சுத்தம் பண்ணிட்டுதான் போகனும்.  உன் சட்டைப் பையில் கர்சீப் இருக்குது இல்லே அதுல துடை! சொல்லிக் கொண்டே போனார்.

     அந்த வட இந்தியருக்கு பாதி புரிந்தும் புரியாத நிலை! இதற்குள் இந்தி தெரிந்த ஒருவர் நியுஸ்பேப்பர் போட்டு துடை! என்று அவருக்கு இந்தியில் சொன்னார். அந்த வாலிபனோ பேப்பர் இருந்தா கொடுங்கள் துடைத்துவிடுகின்றேன்! என்று சொல்ல இவர் மொழிபெயர்த்தார். பேப்பர் கொடுத்தா துடைச்சிடறேன்னு சொல்றான்.

   உடனே கண்டக்டர் கேலியாக சொன்னார். ஏம்பா டிரைவர்! தினத்தந்தி, தினமலர் ஏதாவது வாங்கிக் கொடு! தம்பி துடைச்சிருவாரு! வர்றப்ப அப்பாவியாதான் வர்றானுங்க! சென்னை தண்ணி குடிச்சதும் கொழுப்பு அதிகமாயிருது! என்றார்.

    இடையில் ஒரு டிராபிக்கில் பஸ் மாட்ட இந்தி வாலிபரை கீழே இறங்கி மண் கொண்டுவந்து வாந்தி மீது கொட்ட சொன்னார்கள். அவரும் செய்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நான் உட்பட அனைவருமே அமைதியாகத் தான் இருந்தோம். பின்னர் யோசித்தபோதுதான் தவறு உரைத்தது.

   பஸ்ஸில் ஒவ்வாமையினால் சிலருக்கு வாந்தி வருவது சகஜம்தான். நம்மவர்கள் இதே போல வாந்தி எடுத்தால் கண்டக்டரும் டிரைவரும் இதே போல ஏசுவார்களா? ஏசினால்தான் சும்மா இருப்பார்களா? மொழி தெரியாதவன் பிழைக்கவந்தவன் என்பதால் இத்தனை கேவலமாக நடத்துவதா?

     எத்தனையோ குடிகாரர்கள் குடித்துவிட்டு நாற்றமெடுக்க பஸ்ஸில் வாந்தி எடுத்து வைக்கிறார்கள். நான் கண்டிருக்கிறேன். இது ஓர் சிறுவன் எடுத்த வாந்தி. மற்றவர்களுக்குத் தொந்தரவுதான் ஆனால் இதை நாகரீகமாக சொல்லி துடைக்க சொல்லி இருக்கலாம். அருகில் டீக்கடை இருந்தால் நிறுத்தி தண்ணீர் வாங்கி கழுவி இருக்கச் சொல்லலாம் அதை விடுத்து இப்படி வசை பாடி மிரட்டி அவரை  பணிய வைத்தது  தவறாகவேத் தோன்றுகின்றது.
    இப்படி  கடமை வீரர்களாக இருக்கும் கண்டக்டர்கள் யாராவது டிக்கெட் வாங்கினார்களா என்று கண்டுகொள்வது கூட கிடையாது இருந்த இடத்தைவிட்டு நகர்ந்துவருவது கிடையாது. அன்று 50 ரூ டிக்கெட் வாங்கி பையில் வைத்துவிட்டேன். திரும்பி வரும் வரையில் ஒரு கண்டக்டர் கூட நீ டிக்கெட் எடுத்தாயா? என்று கேட்கவே இல்லை. இந்திக்காரன் எடுத்த வாந்தி என்பதால் இவர்களுக்கு இளப்பம் ஆகிவிட்டது போல!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. அந்த மனிதரை குற்றம் கூறி எந்த பயனும் இல்லை. வடக்கில் இம்மாதிரி வாந்தி எடுத்து வைப்பது சர்வ சாதாரணம். எடுத்தால் பேருந்தின் நடத்துனரோ, ஓட்டுனரோ கண்டு கொள்ளவே மாட்டார்கள். மற்ற பயணிகளும் அந்த இருக்கையை விட்டு அடுத்த இடங்களில் உட்கார்ந்து கொள்வார்கள். அதனாலேயே இங்கேயும் அப்படி நடந்து கொண்டிருக்கிறார் அவர்.

    நமது பேருந்துகளில் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேசும் பேச்சே கேட்க முடிவதில்லை! :(

    ReplyDelete
  2. பாவம்ங்க அவர்...

    மாமா ஆனதிற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வேதனையான நிகழ்வு. பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் மனிதாபிமானத்தைக் கடைபிடித்திருக்கவேண்டும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்,
    வளையல் காப்பிற்கு சென்றதாக சொன்னீர்கள்,
    பதிவும் அருமை.

    ReplyDelete
  5. பஸ் பயணத்தின்போது ஒரு ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு செல்வது நல்லது .ஆனால் குழந்தைகளுக்கு வாந்தி வருவதற்கு முன்னால் சொல்வதற்கு தெரியாது.
    பயண அனுபவத்தை சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் ஓட்டுனரும் நடத்துனரும். அவர்கள் மட்டும் இல்லை, பொது இடத்தில் இவ்வாறு நடந்தால் அங்கு யார் பொறுப்போ அவர்கள் அனைவரும்.

    உங்கள் தங்கைக்கும் உங்களுக்கும் மகிழ்வின் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  7. வேதனை தான்...

    ReplyDelete
  8. மாமா ஆனதற்கு நல்வாழ்த்துக்கள்

    வாந்தியும் வசவும் தவிர்க்கமுடியாதுதான்
    எனத் தான் படுகிறது.
    அவரவர்கள் நிலையில் யோசித்துப்பார்க்க
    அனுபவம் தங்களுக்குத் தந்த எரிச்சல்
    இப்போது எங்களுக்குள்ளும்....

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சுரேஷ்! "மாமா" வாழ்த்துகள்! எவ்வளவு மகிழ்வாக இருக்கும் இல்லையா!!

    அந்த நிகழ்வு மனித நேயம் அருகி வருவதை உணர்த்துகின்றது...வேதனை....

    ReplyDelete
  10. மாமா ஆனதற்கு வாழ்த்துக்கள்

    வேதனையானது தான்...

    ReplyDelete
  11. அதிதி தேவோ பவ!!
    புது மாமாவுக்கு வாழ்த்துக்ள்
    நான் அடையாறில்தான் இருக்கிறேன்

    ReplyDelete
  12. யாராய் இருந்தால் என்ன , மனிதாபிமானமே தேவை !

    ReplyDelete
  13. மாமா ஆனதுக்கு வாழ்த்துகள். பேருந்துப் பயணம் என்றால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். குழந்தையின் பெற்றோர் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும் இந்திக்காரங்கனு இல்லை; சிலர் யாராக இருந்தாலும் பேருந்தில் வாந்தி எடுத்தால் கண்டிக்கத் தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  14. ஒரு குழந்தை எடுத்த வாந்திக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ... பயணத்தின்போது குழந்தைகள் வாந்தி எடுப்பது இமாலய குற்றம் என்று எந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியவில்லை ...மனசாட்சியே இல்லாத முட்டாள்கள் ....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2