சுஷ்மாவின் மனிதாபிமானமும் ஓட்டைக்காசும்! கதம்பசோறு பகுதி 61

கதம்பசோறு பகுதி 61

ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆகிவிட்டது இந்த பகுதி எழுதி, இதற்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்வுகள், வலைதளத்தில் தொடர்ந்து எழுதுவதில் எனக்கும் சில சிக்கல்கள், இதையெல்லாம் மீறி எழுத வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து இயங்க வைக்கிறது. இதோ இந்த மாதத்தின் முதல் கதம்ப சோறு.

சுஷ்மாவின் மனிதாபிமானம்!

  லலித்மோடி! ஐ.பி.எல் மோசடிகளில் சிக்கியவர். இவருக்கு மனிதாபிமான அடிப்படையில் போர்ச்சுகல் செல்ல உதவி செய்துள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா. மோடியின் மனைவிக்கு உடல்நலக் குறைவாம். உடனே மனிதாபிமானத்துடன் அனுப்பி வைத்தாராம்! இந்த மனிதாபிமானம் மற்றவர்களுக்கு எல்லாம் எங்கே போனது. தவறு இழைத்தவர்கள் எல்லோருக்கும் இப்படி மனிதாபிமானம் பார்த்தால் அப்புறம் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று புதியதாக ஆராய வேண்டியதுதான். ஒரு குற்றவாளிக்கு உதவி விட்டு மனிதாபிமான அடிப்படைதான் என்று சொல்லி சுலபமாகத் தப்பித்துவிட பார்க்கிறார் சுஷ்மா. இதெல்லாம் சும்மாத்தான் செய்திருப்பார் என்று நம்பத்தோன்றவில்லை. இதைத் தட்டிக்கேட்க வலுவில்லாத எதிர்கட்சிகள் அதுவும் ஊழலில் ஊறிய கட்சிகள் இருப்பதுதான் நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு.

 ஆம் ஆத்மி- மத்திய அரசு மோதல்!

      ஆம்-ஆத்மி கட்சிக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போரில் ஏறக்குறைய மத்திய அரசு வென்றுவிட்ட நிலையில் உள்ளது.ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை உருவாக்கி அதை ஒன்றுமில்லாமல் செய்துவிட துடிக்கின்றது பா.ஜ.க. டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்பதைவிட நம்மை மீறி எப்படி இந்த கட்சி ஆட்சியைபிடித்துவிட்டது? அதை என்ன செய்யப்போகிறேன் பார்! என்ற கோபமே இந்த மோதலில் பெரிதாகத் தெரிகின்றது. இதனால் எந்த திட்டங்களும் நிறைவேறாமல் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்து வெளியேறும் நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியை கொண்டுவர பா.ஜ.க முயல்கின்றது. ஆம்-ஆத்மியிலும் நிறைய உட்கட்சி பூசல்கள். ஊழலுக்கு எதிரான இயக்கமான அதிலேயே ஏகப்பட்ட ஊழல் புகார்கள். பாவம் கெஜ்ரிவால். அவர் கட்சியைக் காப்பாற்றுவாரா? இல்லை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வாரா? ஒன்றும் செய்ய முடியாமல் அறிக்கை போர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஹெல்மெட் கட்டாயம்!

   ஜூலை ஒன்னாம் தேதிமுதல் தமிழகத்தில் இருசக்கர ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயமாக்க படவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தகவலை தமிழக அரசு வெளியிட்டு கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வாகன ஓட்டிகளை வலியுறுத்தவேண்டும். மீறுபவர்களின் லைசென்ஸ் பறிமுதல் செய்யவேண்டும் என்றுஅறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவு வந்து ஒருவாரகாலம் ஆகியும் அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஹெல்மெட் இல்லா பயணம் ஆபத்தானதுதான். அதே சமயம் ஹெல்மெட் முழு பாதுகாப்பு என்றும் சொல்லமுடியாது.  ஹெல்மெட் விஷயத்தில் இவ்வளவு தீவிரம் காட்டும் உயர்நீதிமன்றம் மது விஷயத்திலும் தீவிரம் காட்டினால் நன்றாக இருக்கும். ஹெல்மெட் போடாமல் சென்று உயிரிழப்பவரைவிட குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பவர்கள் அதிகம். இன்று குடியால் உயிர் இழப்பவர்கள் அதிகம். இதுவும் தீங்கான ஒன்றுதானே! இந்தவிஷயத்திலும் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிடுமா தெரியவில்லை! அதே சமயத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிச்சிறுவன் ஒருவர் ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு லட்டு கொடுத்து வாழ்த்து சொன்ன சம்பவம் நெகிழ்ச்சி அளித்த ஒன்று.

நடிகர்சங்க மோதல்!

    நடிகர் சங்க மோதல் வலுத்துள்ள நிலையில் குமரிமுத்துவை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக விஷால் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டு குமரிமுத்துவை சங்கத்தைவிட்டு விலக்கினர். இது செல்லாது என்று கோர்ட் அறிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என்று விஷால் கூறியுள்ளார். எத்தனையோ நலிவடைந்த நடிகர்கள் நடிகைகள் உள்ளனர். இந்த சங்கம் அவர்களுக்கு உருப்படியாக என்ன செய்தது என்று தெரியவில்லை. சங்கத்திற்கென கட்டிடம் கட்டிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா என்றும் தெரியாது. உருப்படியாக எதையும் செய்யாமல் யார் பதவிக்கு வருவது என்பது போன்ற தோற்றத்தில் இந்த சண்டை நடக்கின்றது. இதை மீடியாக்களும் பெரிதாக வெளியிட்டு வருகின்றன. இதனால் எல்லாம் எந்த நடிகருக்கோ அல்லது மக்களுக்கு பெரிதாக எந்த உபயோகமும் கிடையாது.

கிச்சன் கார்னர்:

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் 1/4கிலோ, புளி, எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு. தேவைக்கு பெங்களூர் தக்காளி 2, கடுகு கறிவேப்பிலை- தாளிக்க உரித்த சின்ன வெங்காயம் 15
அரைக்க: தேங்காய் ½ மூடி துறுவியது, காய்ந்த மிளகாய்-5 சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் ½ டீஸ்பூன் மல்லித்தூள் 2 டீஸ்பூன்.
செய்முறை: கத்தரிக்காயை காம்பை நீக்கி நீளவாக்கில் நான்காக முக்கால் காய்வரை நறுக்கிக் கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை 2 கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து ஆறியதும் இரண்டு பெங்களூர் தக்காளி சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய்விட்டு கத்தரிக்காயை நன்கு வதக்கி எடுக்கவும். கடுகு கறிவேப்பிலை தாளித்து அத்துடன் சின்ன வெங்காயத்தை வதக்கவும். பிறகு புளிக்கரைசல்,கத்தரிக்காய், அரைத்த விழுது  கலந்து சிறிது கெட்டியாகும்வரை கொதிக்கவிடவும். தேவைப்படுவோர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்து சாப்பிடுகையில் சுவை அள்ளும்.
  எழுதியவர்: எஸ். கலைவாணி கோவை.

டிப்ஸ்!டிப்ஸ்!டிப்ஸ்!

வெளியூர் செல்லும் பொழுது தோசை ஊத்தப்பம் போன்றவை எடுத்து செல்வதாக இருந்தால் இலேசாக தண்ணீரைத் தடவி பிறகு பேக் செய்தால் வறண்டுபோகாமல் மிருதுவாக இருக்கும்.

வெண்டைக்காயை வதக்கும்போது உடைந்துவிடாமல் இருக்க இரண்டு துளிகள் எலுமிச்சம் சாறு விட்டால் வெண்டைக்காய் துண்டுகள் உடைந்துவிடாமல் இருக்கும்.

மழைக்காலத்தில் ஜன்னல்கதவுகள் சட்டத்தோடு ஒட்டி உறவாடி திறக்க மறுக்கும். கோலமாவை உப்புத்தூளுடன் ஜன்னல் விளிம்புகளில் தூவினால் சட்டம் ஜன்னலுடன் உறவாட மறுத்து பிரிந்துவிடும்.

பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத சமயத்தில் மூடி வைக்கக் கூடாது.

தீராத முதுகுவலிக்கு திராட்சை சிறந்த நிவாரணி ஆகும். தினமும் ஒரு கப் திராட்சைப்பழம் சாப்பிட்டுவந்தால் முதுகு நரம்புகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை வெகுவாக குறைக்கும்
.
ப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ப்ளாஸ்கில் ஊற்றி அரைமணிநேரம் ஊறவிடவும். பிறகு வேறு நீரில் கழுவினால் ப்ளாஸ்க் பளிச்சிடும்.

பதிவர் அறிமுகம்:

  எஸ்.பி. செந்தில் குமார். வலைத்தளம்: கூட்டாஞ்சோறு

எஸ்.பி செந்தில்குமார் என்ற பெயரை நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்து இருக்கலாம். செய்தியாளரான இவர் கடல் பயணங்கள் சுரேஷ்குமார் அவர்களின் நண்பர். கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் தான் பத்திரிக்கைகளில் எழுதியதை பகிர்ந்து கொள்கின்றார். அனைத்தும் அருமையான கட்டுரைகள். தகவல்கள்.  ஏவி.எம் ஸ்டிடியோ குறித்து இவர் எழுதிய கட்டுரை வியக்க வைக்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை ஏன் குறிவைக்கிறது என்று அலசி ஆராய்ந்துள்ளார் ஓர் பதிவில் தன்னுடைய முதல் பதிவு என்று இவர் சொல்வது முத்தான பதிவு. இவரின் தளம் சென்று வாசிக்க வேண்டியது ஊக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பதிவரின் கடமையும் கூட சிறந்த தளம் சென்று சிறப்பிப்போம்! இதோ இவரின் நூறாவது பதிவு படித்துப்பாருங்கள்!  கூட்டாஞ்சோறு

இவர்களைத்தெரிந்துகொள்வோம்!
பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்.

தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும்.
விரிவான தகவல்களுக்கு சொடுக்குக:  பிழையின்றி தமிழ் எழுத

படிச்சதில் பிடிச்சது:

அவன் ஒரு ஏழை. தன்னோட மிக குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்திவந்தான். ஆனால் நல்ல உழைப்பாளி.ஒருநாள் தெருவில் பழங்காலக் காசு ஒன்னு அவனுக்கு கிடைச்சது. அந்த காசின் நடுவில் ஓட்டை  இருந்தது.. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம்னு ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் அதிர்ஷ்டம் என்னைத் தேடிவரும். நானும் பணக்காரன் ஆகிவிடுவேன்னு அவன் நினைச்சான்.
  அந்தக் காசை பத்திரமா தன் கோட்டுப்பையில் போட்டுக்கிட்டான். அன்னைக்கு அவனுக்கு மத்த நாளைவிட அதிக வருமானம் கிடைச்சது. எல்லாம் காசு கிடைச்ச நேரம்னு நினைச்சான். அன்னையிலிருந்து அவன் தினமும் கோட்டுப்பையில் இருக்கும் காசை தொட்டுப்பார்த்துக்குவான். ஆனா காசை வெளியே எடுக்க மாட்டான்.

 சிலவருஷங்கள்ல அவனுக்கு பணம், பதவின்னு அனைத்தும் வந்து சேர்ந்துருச்சு. பலவருஷங்கள் ஆகிப்போச்சு. ஒருநாள் அவன் தன் மனைவிகிட்ட அந்த காசை பார்க்கணும் போல இருக்குதுன்னு சொல்லிட்டு கோட்டுப்பையில் கைவிட்டு காசை எடுத்தான். அவனுக்கு அதிர்ச்சி! காரணம் அந்த காசில் ஓட்டை இல்லை. 
 என்ன ஆயிற்று! என்று குழப்பத்துடன் முழிச்சவன் மனைவிகிட்டே கேட்டான். அதுக்கு மனைவி “ என்னை மன்னிச்சிருங்க! உங்கள் கோட்டு தூசியா இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்து தெறிச்சு ஓடிருச்சு எவ்வளவோ தேடியும் கிடைக்கலை! நான் தான் வேறக் காசைப் போட்டு வச்சேன்னு சொல்லி முடிச்சா.

 இது எப்போ நடந்தது? என்றான் புருஷன். அந்தக் காசு கிடைச்ச மறுநாளேன்னு சொன்னா மனைவி. அவன் அமைதியா சிந்திச்சான்
உண்மையில் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தது அந்த காசு இல்லை. நம்முடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் தான்னு உடனே புரிஞ்சிகிட்டான். உடனே முன்னைவிட உற்சாகத்துடன் உழைக்க ஆரம்பித்தான்.

(பாக்யாவில் படிச்சது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. கதம்பம் மணக்கிறது நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்கள் கதம்ப மாலை அருமை. பதிவருக்கு வாழ்த்துக்கள்.தங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. மணமான சுவையான,சூடான கதம்பச் சாதம்!

    ReplyDelete
  4. கதம்ப மாலையில் அனைத்து செய்திகளும் நான் அறிந்தனவே. இருப்பினும் தங்களது பதிவில் படித்தபோது இன்னும் மணந்தது.

    ReplyDelete
  5. கதம்ப மாலை அருமை. அதில் என்னையும் அறிமுகம் செய்து வைத்து எனக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள். மிக்க நன்றி அய்யா! தங்களின் பாராட்டுக்கும் பகிர்வுக்கும் நன்றி! தொடர்கிறேன்!

    ReplyDelete
  6. எனது நண்பரையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி... அனைத்தும் அருமை...

    ReplyDelete
  7. கதம்ப ஊறுகாய் சுவை தந்தது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. கதம்பம்
    இனிமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  9. கதம்பம் வெகு சிறப்பு. அறிமுகப்பதிவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான கதம்பம்.

    சுஸ்மா இப்படித்தான் இலங்கையின் உச்ச யுத்தக்காலப்பகுதியிலும் மனிதாபிமான சேவை செய்திருந்தா கடந்தகால வரலாறு! எப்போதும் பெரியகட்சி சிறிய கட்சியை வளரவிட்டதில்லை ஆம் ஆத்மிக்கும் இதுதான்!

    ReplyDelete
  11. சென்ற பதிவில்தான் சொன்னேன்.

    இது உண்மைக் கதம்பம் தான்.

    அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2