“விதி நீட்சி”
(மொழிபெயர்ப்புக்
கதை) ஆங்கிலத்தில் எழுதியவர் ஏ.ஜி. கார்டினர்.
தமிழில் எனது
மோசமான மொழிபெயர்ப்புக்கு மன்னிக்கவும்.
அது ஒரு
கடுமையான குளிர்கால இரவு. இங்கிலாந்தில் இதுபோன்ற குளிர்கால இரவுகள் சகஜம். அந்த
பேருந்து காற்றைக் கத்திப்போல கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அது ஒரு
மாடிப்பேருந்து. அதன் கீழ் தளத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஜன்னல்
மூடியிருந்தாலும் ஆங்காங்கே திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக குளிர் என்னை ஊடுருவிக்
கொண்டிருந்தது. அணிந்திருந்த குல்லா கையுறையை மீறிய அந்த குளிர் இரவில் பேருந்து
ஓர் நிறுத்தத்தில் நின்றது. இரண்டு பெண்களும் ஓர் ஆணும் ஏறி காலியாக இருந்த
இருக்கைகளில் அமர்ந்தனர்.
இரண்டு பெண்களில் இளையவள் கம்பளி ஆடை உடுத்தி
இருந்தாள். அவள் கைகளில் பெக்கினிஸ் வகை நாய்க்குட்டி ஒன்று புசுபுசுவென்று சப்பை
மூக்குடன் சின்னஞ்சிறு பாதங்களுடன் அமர்ந்திருந்தது. படிக்கட்டுக்கு பின்
இருக்கையில் அவள் அமர்ந்து இருந்தாள்.
வண்டியின் கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்
கொண்டே வந்தார். அந்த கம்பளி ஆடைப் பெண்ணைக் கோபத்துடன் நோக்கினார். அத்துடன் அவள்
கையில் இருந்த நாய்க்குட்டியை எரித்துவிடுவது
போல பார்த்தார். நான் வம்பு ஆரம்பம் ஆவதை உணர்ந்தேன்.
பொதுவாக இங்கு வளர்ப்புபிராணிகளுடன்
பேருந்தில் ஏறுபவர் மேல்தளத்திற்கு சென்றுவிடவேண்டும். கீழ்தளத்தில் வளர்ப்பு
பிராணிகளுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் கண்டக்டர் முறைத்தார். அந்த கண்டக்டர்
இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்துக்கிடந்தான் போல. பொதுவாகவே பயணிகளுக்கு
நடத்துனருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். எந்த ஒரு நடத்துனரும் பயணியை
கனிவாக நடத்தியது கிடையாது. தன் சீட்டில் அமர்ந்தவாறே டிக்கெட் கொடுப்பார்.
வாங்காத பயணிகளை அர்ச்சிப்பார். சில்லறை சரியாகக் கொடுக்க மாட்டார்.இதெல்லாம்
வாடிக்கையான ஒன்று. இது இங்கு மட்டும்
அல்ல உலகம் முழுவதுமே இப்படித்தான் இயங்குகின்றதோ என்னவோ?
அந்த கண்டக்டர் கோபமாக, நாய்களுக்கு கீழ்
தளத்தில் அனுமதி இல்லை என்று தெரியாதா? இந்த பிராணியைத் தூக்கிக்கொண்டு மேலே செல்!
என்று உத்தரவிட்டான். சட்டம் அதுதான். விதியும் அதுதான்.
ஆனால் அந்தப் பெண் மறுத்தாள். “நான் கண்டிப்பாக மேலே போக மாட்டேன். கடுமையான
பனி பெய்கிறது! குளிர் என்னை வாட்டிவிடும். நீ வேண்டுமானால் என் பெயரையும்
முகவரியையும் வாங்கிக் கொள். உன் மேலதிகாரியிடம் புகார் செய்துகொள்!”
அந்தப் பெண்ணின் இந்த சவாலான பதில் கண்டக்டரின்
ஈகோவைத் தட்டி எழுப்பிவிட்டது.
“ எனக்கு உன்பெயர் முகவரி தேவையில்லை! நீ இந்த
பேருந்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமானால் மேல் அடுக்கிற்கு செல்ல வேண்டும்! இது
என் ஆணை!” என்றான் கண்டிப்புடன்.
“ பனி என்னைக் கொன்றுவிடும்!” “கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள்!” அந்தப் பெண்
இப்போது சற்று இறங்கி வந்தாள்.
“உண்மைதான்! கடுமையான பனிபெய்கின்றது!” பக்கத்து
இருக்கை பெண்மணி சொன்னார்.
கூட வந்த பெண்ணும் கூறினாள். “ உனக்கு சளியும்
கடுமையான இருமலும் இருக்கின்றது!”
“உன்னை
வெளியேற்றுவது பைத்தியக்காரத்தனமானது! உடன் வந்த ஆண் கூறினான்.
இத்தனை பேரும்
அந்த பெண்மணிக்கு ஆதரவாக இருப்பது கண்டக்டருக்கு எரிச்சலைக் கிளப்பி இருக்க
வேண்டும். அவன் விசிலை ஊதினான். பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. கண்டக்டர் இப்போது
கூறினான்.
“ இந்த பெண் மேல் தளத்திற்கு செல்லும் வரை இந்த
பஸ் கிளம்பாது!”
இதைச் சொல்லிவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி
நின்று கொண்டான். டிரைவருடன் பேச ஆரம்பித்துவிட்டான். இத்தனை பயணிகளைப் பற்றிய
நினைவு அவனிடம் சிறிதும் இல்லை. அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். அவன்
பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்துக் கொண்டான்.
பயணிகள்
இப்போது முணுமுணுக்கத் தொடங்கினர். “வெட்கக்கேடு!
போலீஸைக் கூப்பிடுங்கள்! உன்னைப்பற்றி புகார் செய்யப் போகிறோம்”
“எங்கள் கட்டணங்களை திருப்பிக்கொடு!”
இப்படி
ஆளுக்கு ஆள் பேசினார்கள். அந்த பெண்மணிக்கு ஆதரவாகவே குரல்கள் எழுந்தன.
“ எங்களுக்கு டிஸ்டர்பா இருந்தாத்தானே உனக்கு
சங்கடம்! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்! வண்டியை எடுக்கச் சொல்!”
“இராத்திரி பொழுது! இவ்வளவு கடுமையாக
நடந்துகொள்ள வேண்டாம்!”
அவன் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை!
இப்போது ஓர் பயணி ஆவேசத்துடன் கண்டக்டரை நோக்கி உன் நம்பர் என்ன? என்றார்.
அவனும்
தன் அடையாள அட்டையை கோபமுடன் நீட்டினான். இந்தா! இதுதான் என் அடையாள அட்டை
வேண்டுமானால் மேலதிகாரியிடம் புகார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த பஸ்ஸின்
விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு பயணம் செய்கின்றீர்கள். உங்கள் கட்டணம் திருப்பித்
தர முடியாதது! என்றான் கெத்தாக.
இருள் கவிழ்ந்த அந்த பனிப்பொழுது! அருகில் வீடு
உள்ள இரண்டு மூன்று பயணிகள் முணுமுணுத்தபடி இறங்கி இருளில் மறைந்தனர். கண்டக்டர்
எதையும் லட்சியம் செய்யாமல் டிரைவரிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
அந்த பக்கம் செல்லும் கடைசிப் பேருந்து
அவ்வழியே வந்து நின்றது. பயணிகள் கூச்சலிட்டனர். ஏம்பா! லாஸ்ட் பஸ்ஸும்
வந்துருச்சு! அதிலேயாவது மாற்றிவிடு. அதற்கும் கண்டக்டர் அசைந்து கொடுக்கவில்லை.
சிலர் கோபத்துடன் வண்டியின் பெல்லை அடித்து
கிளம்புப்பா! என்றனர்.
டிரைவர் கோபத்துடன் “நீங்க யாரு என்னை கிளம்ப சொல்ல! கண்டக்டர்
சொல்லட்டும் வண்டியை எடுக்கிறேன்! யாருப்பா அது பெல் அடிச்சது! நீ என்ன கண்டக்டரா?
உன் பேரைச் சொல்லு!” என்று கேட்க, அந்த பயணி பம்மினார். டிரைவர் தன் இருக்கையில்
அமர்ந்து சோம்பல் முறித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது.
அந்தவழியாக ரோந்து வந்த போலீஸ்காரர்கள் இருவர்
நின்று கொண்டிருக்கும் பேருந்தை கவனித்துவிட்டு வந்து விசாரித்தார்கள். கண்டக்டர்
அவர்களிடம் நடந்ததைச் சொல்ல “ நீ உன் கடமையை ஒழுங்காத்தான் செய்யறே! என்று
பாராட்டிவிட்டு அந்த பெண்மணியிடம் உன் பெயரையும் முகவரியையும் தா! என்றார்கள்.
அட்ரஸ் வாங்கிட்டு கிளப்பிட்டு போய்யா!
நேரமாச்சு! என்றார்கள். ஆனால் கண்டக்டர் நான் விதி மீற மாட்டேன்! இந்த பெண் மேல்
தளம் சென்றால்தான் வண்டியை எடுப்பேன் என்றான். சரி நீ உன் வேலையைப்பார்! நாங்கள்
எங்கள் வேலையை பார்க்கிறோம்! அவர்கள் சொல்லிவிட்டு அடுத்த கேஸை பார்க்க
சென்றுவிட்டார்கள்.
கார் விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த
பெக்கினிஸ் நாயின் கண்களை மூடிமூடித் திறந்தது. கண்டக்டர் பஸ்ஸினுள் குறுக்கும்
நெடுக்குமாக நடந்தான். பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவராக இறங்கி நடக்கத்தொடங்கினர். பாதி
இருக்கைகள் காலியாகி இருந்தது.
இப்போது கண்டக்டரிடம் நம்பர் கேட்ட இளைஞன்
தணிந்த குரலில் கேட்டான், “ அப்படியானால் நாங்கள் இரவு முழுக்க இங்கேயேதான் இருக்க
வேண்டுமா?”
“ அது அந்த பெண்மணியின் முடிவில்தான்
இருக்கிறது!” என்றான் கண்டக்டர்.
ஏறக்குறைய ஒரு மணிநேர டிராமா முடிவுக்கு
வந்தது. முடிவில் அந்தப் பெண் நான் மேலே செல்கின்றேன். என்று படிகளில் ஏறினாள்.
தான் வென்றுவிட்ட மகிழ்ச்சியில் கண்டக்டர் விசில் ஊத பஸ் கிளம்பியது.
சிறிது தூரம்
சென்றிருக்கும். மீண்டும் பஸ் நின்றது. “இப்போ என்ன ஆச்சு?”
நீண்ட நேரம் பனிக்குளிரில் நின்றிருந்ததில்
எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுவிட்டதாக டிரைவர் சொன்னர். கண்டக்டரும் அவரும் சேர்ந்து
அதை சரி செய்து கொண்டிருந்தனர். குளிர் மிக அதிகமாக இருந்தது.
இப்போது மேலே சென்ற பெண் சத்தம் போடாமல் கீழ்தளத்திற்கு வந்து கடைசி சீட்டில் அமர்ந்து
கொண்டாள். உடல் முழுவதும் போர்த்தி இருந்தாள். பனி அவளை பாதித்துஇருந்தது. எஞ்சின் பழுது நீக்கப்பட்டு பஸ் கிளம்பியது.
சில
நிமிடத்தில் மங்கிய விளக்கொளியிலும் நாயின் பளபளக்கும் கண்களை கண்டக்டர்
பார்த்துவிட்டான். விசிலை ஊதினான்.
டிரைவர் எரிச்சலுடன் வண்டியை நிறுத்தி, என்ன
ஆச்சு? என்றான்.
கண்டக்டர்
அந்த பெண்ணைச் சுட்டினான்.
மீண்டும்
விவாதம் தொடங்கியது.
“ ஏம்மா
சொன்னா கேக்க மாட்டியா? மேலே போம்மா!” டிரைவர் கோபமாக சொல்ல
பனிக்காற்று மிகவும் அதிகமாக இருக்கிறது என்னால்
மேலே அமரமுடியவில்லை! கொஞ்சம் அனுமதி தாருங்கள்!” என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.
“அப்படியானால் வண்டியில் இருந்து இறங்கிக் கொள்!
இல்லை உன் வளர்ப்பு பிராணியை இறக்கிவிடு!” கண்டக்டரின் பதில் எல்லோருக்கும்
எரிச்சலைத் தந்தது.
ஒரு நீண்ட
விவாதத்திற்கு பின் அந்த பெண் மீண்டும் தன் பிராணியுடன் மேல் தளத்திற்கு சென்றாள்.
பஸ்
கிளம்பியது. அவள் நிறுத்தம் வந்தபோது அவள் இறங்குகையில் பனியால் மிகவும்
பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது.
கடைசி
நிறுத்தம் வந்தது. நான் மட்டுமே எஞ்சி இருந்தேன். கடைசி பயணியான என்னிடம்
கண்டக்டர் வந்து நின்றான். அவனிடம் வெற்றிக் களை தாண்டவம் ஆடியது. ஏறக்குறைய
இரண்டு மணி நேர தாமதம் பற்றி அவன் உணரவில்லை.
என்னிடம்
பெருமிதமாக தான் தன் கடமையைச் செய்ததாகக் கூறினான்.
நான்
புன்னகைத்தேன்!
கண்டக்டர்
சார்! நான் சொல்வதை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்! சட்டங்களும் விதிமுறைகளும்
மனிதர்களுக்கு அவசியமானவைதான்! ஒழுக்கம் தவறினால் கேடுதான்.ஆகவேதான் சட்டங்கள்
இயற்றப்படுகின்றன. விதிகள் வகுக்கப் படுகின்றன. ஆனால் அவற்றில் இரண்டுவகை உண்டு.
ஒன்று கட்டாயமாக கடைபிடிக்க வேண்டியது. மற்றவை விதிவிலக்குகள்.
உதாரணமாக நாம்
வலக்கையால்தான் உணவு சாப்பிட வேண்டும். இது விதி. வலக்கையில் அடிபட்டு இருந்தால்
இடக்கையால் ஸ்பூன் மூலம் சாப்பிடவில்லையா? இது விதிவிலக்கு. சாலைவிதிகளை மதிக்க
வேண்டும். விதியை விலக்கினால் விபத்து ஏற்படும். இதை கட்டாயமாக மதிக்க வேண்டும்.
அதே சமயம் நீங்கள் யூனிபார்ம் அணிய வேண்டும். விதி! அது திடீரென்று
கிழிந்துவிடுகின்றது. இப்போது நார்மல் உடையில் பணி செய்வது தவறில்லை! இதை புரிந்து
கொள்ள வேண்டும்.
சிலவிதிகளும்
சட்டங்களும் நம்மை வழிகாட்டத்தான் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த
விலங்குகள் பற்றிய விதியும்.
மனிதர்களின்
மனோபாவத்தை பொறுத்தது எழுதப்படாத விதிகள். இதை நாம் தளர்த்திக் கொள்ளலாம். உடன்
பயணிக்கும் பயணியின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை இது. இந்த விதிகள் அவர்களை
பாதிப்பதாக அமைந்துவிடக் கூடாது. நீ உன்னுடைய சட்டங்கள் விதிகளுடன் கொஞ்சம்
மனிதாபிமானத்தையும் நல்ல எண்ணத்தையும் கலந்து கொள்ள வேண்டும். உன் சுபாவத்தை
மாற்றிக் கொண்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
இன்று நீ விதியை கடைபிடிக்கிறேன் என்று சொல்லி
பயணிகளின் நேரத்தை வீணாக்கினாய்! இரண்டுமணி நேரம் தாமதம் மேலும் எத்தனை பேர்
வழியில் சிரமத்துடன் இறங்கினர். இந்த தருணத்தில் இதை நீ யோசித்தால் எது விதி
என்பது உனக்கு நன்றாக புரிந்திருக்கும். அடுத்த முறை உன்னை சந்திக்கையில்
மாற்றத்தை எதிர்பார்க்கிறேன் என்றேன் புன்னகையுடன்.
கண்டக்டர் தன் தவறை உணர்ந்திருப்பான் போல. நான்
பஸ்ஸை விட்டு இறங்கியதும் புன்னகையுடன் குட்நைட்! என்றான்.
(ஏ.ஜி
கார்டினர் எழுதிய இந்த கதை பழைய பதினொன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் படித்தது.
இதை நடத்திய எங்கள் ஆங்கில ஆசிரியர் அப்படியே கண்டக்டர்- பயணிகளை
நடித்துக்காட்டியது என் கண் முன்னே நிற்கிறது. அதை நினைவில் கொண்டு என்
கையெழுத்துபத்திரிக்கையில் எழுதி இருந்தேன். இப்போது அதில் சிறு மாற்றங்கள் செய்து
பதிவிடுகின்றேன். உங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!)
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
விதியும், விதிவிலக்கும்... நல்ல விளக்கம்...
ReplyDeleteமொழிபெயர்ப்பு நல்லா இருக்குங்க...
நன்றாகவே மொழி பெயர்த்திருக்கின்றீர்கள் சுரேஷ்! கதை அருமை! நாங்களும் வாசித்திருக்கின்றோம்....இறுதியில் வரும் விளக்கங்கல் விதிவிலக்கு அருமை...
ReplyDeleteபாராட்டுகள்!
மொழிபெயர்ப்பு அருமை. மனிதாபிமானம் இருந்தால் எந்த சட்டமும் சரிதான். வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteநல்ல விளக்கம் பாராட்டுகள் நண்பரே
ReplyDeleteஅருமையாக மொழிபெயர்ப்பு செய்துள்ளிர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
மறக்க முடியாத பாடம் ஸ்வாமிகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சட்டங்கள் மனிதர்களுக்காவே சட்டங்களுக்காக மனிதர்கள் அல்ல என்னும் பொருள்தரும் எழுத்து.
நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள் சகோ. வாழ்த்துக்கள்
ReplyDeleteமொழியாக்கம் அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி