வேண்டாத மருமகள்!
கர்ப்பிணி பெண் நித்யாவை வேலை வாங்கிக் கொண்டு
ஹாயாக சோபாவில் படுத்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். “ வாடி கற்பகம்! பார்த்து
எத்தனை நாளாச்சு? இப்பத்தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?” என்று வரவேற்கவும் செய்தாள்.
“ என்ன பண்றது பாக்கியம்? உனக்கு ஒண்ணுக்கு ரெண்டு
மருமகள்க! எனக்கு அப்படியா? இன்னும் பசங்களுக்கு கல்யாணம் ஆகலை! புருசனுக்கும் பசங்களுக்கும்
பார்த்து பார்த்து செய்யவே நேரம் சரியா இருக்கு! இதுல எங்க வெளியே வர முடியுது சொல்லு!”
என்று அலுத்துக் கொண்டாள் கற்பகம்.
“அதுவும் சரிதான்! ஆனா என்னத்தான் சொல்லு! மருமகளுங்க
எவ்வளோ வேலை செய்தாலும் நாம செஞ்ச திருப்தி நமக்கு வர்றதே இல்லை! ஆனா நம்மளாலே இப்ப
செய்ய முடியறதும் இல்லே! சிவனேன்னு இருக்க வேண்டியதா போயிருச்சு!”
“ அதச்சொல்லு! உனக்கு உன் வேலையிலேயே திருப்தி
வராது! இதுல உன் மருமக செய்யறது பிடிக்கவா போவுது!”
“ சரிசரி! என்ன திடீர்னு இந்த பக்கம்?”
“ஏன் நான்
வரக் கூடாதா?”
”வராதவ வந்து இருக்கியே!
அதுவும் பை நிறைய பழம் பூ ஸ்வீட்டெல்லாம் வாங்கிகிட்டு அதான் ஆச்சர்யமா இருக்கு!”
”நீதான் போன்ல சொன்னியே உன் மருமக உண்டாகியிருக்கான்னு!
அதான் பார்த்து விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்! கர்ப்பிணி பொண்ணை சும்மா பார்க்க
வர முடியுமா? அதான் பழம் ஸ்வீட்ஸ்!”
“ நமக்குள்ளே எதுக்குதி இந்த சம்பிரதாயமெல்லாம்…!”
இருக்கட்டும் இருக்கட்டும்!
நீ மறுத்தாலும் எனக்குன்னு ஒரு இது இருக்கில்ல!”
”சரி என்னடி நான் வந்து இவ்ளோ நேரம் ஆகுது உன்
மருமக கிச்சனை விட்டு வெளியே வரவே இல்லை?”
”உள்ளே பருப்புத் துவையல் அம்மியிலே அரைச்சிக்கிட்டு
இருக்கா! ஏம்மா நித்யா! இங்க வந்துட்டு போம்மா!” பாக்யம் குரல் கொடுக்க நெற்றி வியர்வையை
துடைத்துக் கொண்டு வந்த நித்யா! வாங்க ஆண்ட்டி!
வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? என்று விசாரித்தாள்.
”எல்லோரும் நல்லா இருக்காங்க! நீ விஷேசமா இருக்கேன்னு
கேள்விப் பட்டேன்! அதான் உடனே பார்க்க வந்துட்டேன். செக்கப்புக்கு எல்லாம் ரெகுலரா
போறே இல்லையா?”
“போயிட்டிருக்கென் ஆண்ட்டி! உள்ளே அடுப்புலே பருப்பு
வைச்சிருக்கேன்! இதோ வந்துடறேன்! என்று சென்றவள்
அப்புறம் திரும்பவில்லை!
அன்று ஒரு முழுநாள் கவனித்தேன் எந்த ஒரு துரும்பையும்
அசைக்கவில்லை பாக்யம்! எல்லாம் நித்யாவே செய்து கொண்டிருந்தாள் வீட்டில் மிக்சி இருக்கையில்
அம்மியில் துவையல் அரைக்க சொல்லி இருக்கிறாள். ஏன் இப்படி? நித்யா வேண்டாத மருமகளா?
ஏழை வீட்டு பெண் என்பதால் இப்படி செய்கின்றாளோ? இதே பாக்கியத்தின் மூத்த மருமகள் மூழ்காமல்
இருந்த போது அவளை கையில் வைத்து தாங்கினாள் இந்த பாக்கியம். அவளை ஒரு வேலை செய்ய விடவில்லை.
இவளே பார்த்து பார்த்து எல்லாம் செய்தாள். இப்போது என்னடாவென்றால் தலைகீழாய் மாறிப்
போய்விட்டிருந்தாள்.
பாக்கியத்தின் இந்த திடீர் மாற்றம் எனக்கு கோபத்தை
வரவைத்தது மாலையில் கிளம்பும் போது உடன் பேருந்து நிறுத்தம் வரை வருவதாக பாக்கியமும்
உடன் வர என் கோபத்தை கொட்டினேன்.
“ ஏன் பாக்கியம் இப்படி மாறிட்டே?”
“ வயசானா கொஞ்சம் உடம்பு இளைக்கத்தான் செய்யும்?
அதைக்கூட என்னைக் கேட்டுகிட்டு இருக்கே?”
”ச்சே!
உனக்கு எப்பவும் விளையாட்டுதான்! நான் அதை கேக்கலை! உன் நடத்தை ஏன் மாறிப்போச்சுன்னு
கேக்கறேன்!”
“ அப்படி என்ன என் நடத்தை மாறிப்போச்சு?”
“ உன் மூத்த மருமக உண்டாகி இருந்தப்ப கையில வச்சு
தாங்கினே! இப்ப இளைய மருமக உண்டாகி இருக்கா! அவளையும் அப்படி தாங்காமா இப்படி வேலை வாங்கி கொடுமை படுத்தறியே! இவ ஏழை வீட்டுப்
பொண்ணுண்னுதானே இப்படி பண்றே? யாரும் கேள்வி கேக்க முடியாதுன்னு நீ பண்ணாலும் நான்
கேப்பேன்! மனசாட்சிப்படி நடந்துக்கோ பாக்யம். அவளும் உன் பொண்ணு மாதிரிதான்!”
“ என் பொண்ணா நினைச்சுதான் இவ்ளோ வேலை வாங்கறேன்!”
“ என்னடி சொல்றே?”
” என் மூத்த மருமக பணக்கார இடம் அதனாலே கைமேலே
வச்சு தாங்கினேன்னு சொன்னே இல்லே! நான் அப்படி பணத்துக்கு மதிப்பு கொடுக்கறவ இல்லை.
முத முதலா வீட்டுக்கு ஒரு வாரிசை பெத்துக் கொடுக்க போறான்னு அவளை ஒரு வேலையும் செய்ய
விடாம தாங்கு தாங்குன்னு தாங்கினேன்! அதுவே விபரீதமா போயிருச்சு! சுகப்பிரசவம் இல்லாம
சிசேரியன் ஆகி சில லட்சங்கள் செலவை இழுத்து விட்டுருச்சு! அவ பொறந்த வீடு வசதியானவங்க
சமாளிச்சிட்டாங்க! ஆனா…”
“ சின்னவ வீடு அப்படி இல்லே! நடுத்தரகுடும்பம்!
நாள் தள்ளறதே பெரும்பாடு! இவளையும் சொகுசா வேலை செய்ய விடாம தாங்கினா பழையபடி சிசேரியன்
அது இதுன்னா அவங்க தாங்குவாங்களா? அட போனா போவுதுன்னு நாமளே பிரசவ செலவை பாத்துக்கலாம்னாலும்
அவங்க தன்மானம் இடம் கொடுக்காது.! உண்டா இருக்கும் போது குனிஞ்சு நிமிஞ்சு வேலை செஞ்சா
பிரசவம் லேசா சுகப்பிரசவமா முடியும்னு டாக்டருங்க சொன்னாங்க! அதான் இவளை இப்படி வேலை
வாங்கிறேன்! அவ வீட்டுக்கு எட்டாம் மாசம் போயிட்டா அவங்க ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க!
இங்கேயும் இப்படியே விட்டா அப்புறம் அவளுக்கு மட்டும் இல்லே அவங்க குடும்பத்துக்கும்
கஷ்டமாயிரும்! அதான் வேலை வாங்கி அவ சுமையை கொறைக்கறேன்!”
கொடுமைக்கார மாமியாராகத் தெரிந்த பாக்கியம் இப்போது
எனக்கு பாசக்கார அம்மாவாகத் தெரிய பாக்கியம்!
உன்னை பத்தி தப்பா நினைச்சுட்டேன்! என்னை மன்னிச்சிரு! ஆனா உன் மருமக உன்னை தப்பா நினைப்பாளே!
என்றேன்.
”அவ தப்பா நினைக்க கூடாதுன்னு முன் கூட்டியே
இந்த விஷயத்தை சொல்லிட்டேன்! அவளே ஆர்வமா வேலை செய்யறா! அம்மியிலே துவையல் அரைக்கிறது
கூட அவ எடுத்த முடிவுதான்!” என்றாள் பாக்கியம்.
”அப்படிப் போடு!” எல்லாம் சேந்துதான் இந்த போடு
போடறீங்களே! இதப் புரிஞ்சுக்காம நான் எதேதோ கற்பனை பண்ணிக்கிட்டேன்! ஒரு ஆதங்கத்துல
ஏதோ கேட்டுட்டேன் தப்பா எடுத்துகாதடி!”
“ஒரு நல்ல சிநேகிதியா நடந்துகிட்டே இதுல என்ன தப்பு
இருக்கு! சந்தோஷமா வீட்டுக்கு போய்வா! என்றவளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டாள் கற்பகம்.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
உண்மைதான்! கர்ப்ப காலத்தில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும்னு தான் சொல்வாங்க, முன்னெல்லாம்.
ReplyDeleteயாருக்கும் முதலில் தவறாகத்தானே தோன்றும் .
ReplyDeleteசுரேஷ்,
ReplyDeleteநல்ல கருத்துரைக்கும் பதிவு.
வாழ்த்துக்கள்.
கோ
எதிர்பார்த்த முடிவு!
ReplyDeleteஇரண்டாவது பாராவிலேயே தெரிந்துவிட்டது முடிவு. நடுவில் சின்னதாக ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கலாம்.
ReplyDeleteஇருந்தாலும், பாராட்டுக்கள்!
நல்லதொரு கதை. இப்போ யாரும் அப்படி வேலை செய்வது கிடையாது. பலரும் சிசேரியன் தான்! :(
ReplyDeleteஅருமையான கதை,,, ஆனால் உண்மைதானே,,
ReplyDeleteமுடிவு தெரிந்துவிட்டது என்றாலும் நல்லதொரு கதை சுரேஷ். வாழ்த்துகள்.
ReplyDeleteகீதா: மேற்சொன்ன கருத்துடன்... கதையின் கருத்து நல்ல கருத்து. ஒரு சின்ன தகவல். வேலை செய்து ஆக்டிவாக இருந்தால் நார்மல் டெலிவரி ஆகும் என்பது சரிதான் என்றாலும்....வேலை செய்தாலும் பிரசவ வேளை வரை நல்ல ஆக்டிவாக இருந்தாலும் சிசேரியன் ஏற்பட வாய்ப்புண்டுதான்....இது தகவலுக்கு மட்டுமெ சுரேஷ்