கர்ண பரம்பரை! நாவல் விமர்சனம்!
கர்ண பரம்பரை! நாவல் விமர்சனம்!
காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய ஆறாவது நாவல்
என்று அவரே முன்னுரையில் குறிப்பிடுகின்றார். காலச்சக்கரம் அவரது முதல் நாவல் என்றும்
அறிய முடிகின்றது. ஆறு நாவல்களுமே விறுவிறுப்பாக வாசகர்களை படிக்கத் தூண்டும் வகையில்
எழுதியிருப்பதில் நூலாசிரியர் வெற்றி கண்டுள்ளார்.
இவருடைய சங்கதாரா நாவல் படித்து வியந்து போனேன்.
வித்தியாசமான கற்பனைத் திறன். யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தில் ஆதித்திய கரிகாலன் மரணத்தின்
புதிரை விடுவித்து இருப்பார். அந்த சுவாரஸ்யம் இவரது பிற நாவல்களையும் வாசிக்கத்தூண்டியது.
இருப்பினும் வாய்ப்பு என்ற ஒன்று வாய்க்கவேண்டும் அல்லவா?
இந்த புத்தக கண்காட்சியில் நண்பர் வெற்றிவேலின்
வானவல்லி நாவலுக்கு என்னுடைய பட்ஜெட்டில் பெரும்பகுதி சென்றுவிடவே மற்ற நூல்கள் வாங்குவது
கொஞ்சம் குறைந்தது. சாண்டில்யனின் கடல்புறா வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த போதிலும்
வானதியில் நரசிம்மா அவர்களின் கர்ணபரம்பரை மற்றும் பஞ்ச நாராயணக் கோட்டம் நாவல்களைக்
கண்டதும் கடல்புறாவை பறக்கவிட்டு இந்த இரண்டு நாவல்களை வாங்கிவிட்டேன். மீதமிருக்கும்
பணத்தில் இன்னும் சில நூல்கள் வாங்குவதோடு நமக்கு பிடித்த எழுத்தாளரின் இன்னொரு சுவாரஸ்யமான
நாவலை வாசிக்கும் ஆசையும் தான் அதற்கு காரணம். அந்த ஆசையை பூர்த்தி செய்துவிட்டார்
நாவலாசிரியர் நரசிம்மா.
கர்ண பரம்பரை
நாவலின் கதைக் களம் மூலிகை வைத்தியம். அபூர்வ மூலிகைகள். அவற்றின் பயன்கள். அதன் ரகசியம்
காது வழியாக மட்டுமே சீடர்களுக்கு உபதேசிக்கப் படும். அப்படி ஓர் அபூர்வ கரணி எனப்படும்
மூலிகை ரகசியம் நல்லம வைத்தியரிடம் உபதேசிக்கப்படுகையில் ரகசியம் நவீனவழியில் திருடப்படுகிறது.
நல்லமரும் கொல்லப்படுகின்றார். நல்லமரின் குரு துளசி ஐயா வேறு வழியின்றி நல்லமரின்
கண் தெரியாத மனைவி வனதாயி வசம் அந்த அபூர்வ கரணி ரகசியத்தை சொல்கிறார். ஏற்கனவே களவு
போன ரகசியத்தை மீட்கும் பெரும் பொறுப்பும் வனதாயியிடம் வந்து சேர்கின்றது.
வனதாயியின் மகன் நம்பிராஜன். சென்னையின் பெரும்
பிரபலமான நளபவன் ஓட்டலின் நிர்வாகி. அதுமட்டுமல்ல நளபவன் அதிபர் சிவக்கொழுந்தின் மருமகன்.
நளபவன் சாம்பார் என்றால் அப்படி ஓர் ருசி! அதனாலேயே அந்த சாம்பார் ரகசியத்தை திருட
ஒரு கும்பல் முனைகின்றது.
நளபவன் குடும்பத்தில்
அடுக்கடுக்காக திடீர் மரணங்கள் ஏற்படுகின்றது. மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ஒவ்வொருவராய்
இறக்கின்றனர். அதே சமயம் அபூர்வ கரணி மூலிகை ரகசியத்தை திருடியவனை கண்டறிய கண் தெரியாத
மூதாட்டியான வனதாயி முனைகின்றாள். அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்பே திருடியவன்
சிக்காமல் தடயங்களை அழித்து விடுகின்றான். வயதான வனதாயிக்கு உதவியாக நாமகிரி என்னும்
பெண்மணியும் திலக் என்ற இளைஞனும் இருந்தாலும்
வனதாயியின் புத்திக் கூர்மையும் செயல் திறனும் வியக்க வைக்கிறது. டீவி குழு ஒன்றும்
அபூர்வ கரணி மூலிகையை தேடி பயணிக்கிறது. இறுதிவரை அபூர்வ கரணி
மூலிகை ரகசியத்தை அறிந்தவனை பிடிப்பதில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் திடுக்கிடும் திருப்பங்கள்
என்று அசத்துகின்றார் ஆசிரியர்.
நளபவனுக்கும் மூலிகை வைத்தியர் நல்லமர்- வனதாயி
அம்மாளுக்கும் உள்ள உறவு. நளபவன் எப்படி பிரபலமானது.
அதற்கு காரணமான உள்ளடி வேலைகள் நம்பிக்கைத் துரோகம் என விரிந்து போன கதையில் குற்றவாளியை
நாம் அறிந்து கொள்கையில் முதல் அத்தியாயம் முதல் உடன் வரும் இவனா அவன்? என்று வியந்து
போய் நிற்கிறோம்.
விஞ்ஞான உலகில் மூலிகை மருந்துகளின் சிறப்புக்களை
முதல் அத்தியாயத்தில் கூறியுள்ள ஆசிரியர். அபூர்வமான மூலிகை ஆபத்தானவர்கள் கரங்களில்
சிக்கினால் அழிவுக்கு வழி வகுக்கும் என்றும் சொல்லுவதோடு ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
என்ற பழமொழியையும் நியாயப்படுத்தி உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்று
நளபவன் குடும்பம் வாயிலாக நினைவு படுத்துகின்றார்.
விஜய சௌந்தரி, தனபாக்கியம், பஞ்சாட்சரம், ருஷ்யேந்திரி, பைரவன், மதுரைவீரன் பெண்டாட்டி, சூர்யகாந்தம்,மதுரம், பூங்குன்றம், சந்திரசேகர், செந்தில், தொன்னைக்காதுசித்தர் என்று ஏராளமான பாத்திரங்கள். அவை ஒவ்வொன்றும் கதையில் இயல்பாய் இணைவது ஆசிரியரின் திறமையை உணர்த்துகிறது.
முழுமூச்சில் படிக்க
தூண்டக் கூடிய சுவாரஸ்மான நாவலாக இருப்பினும் என்னுள் எழுந்த கேள்வி இது!
அபூர்வ கரணி மூலிகை ரகசியம் கர்ணபரம்பரையாக சீடர்களுக்கு காது வழியாகச் சொல்லப்படுகிறது. அதைக் கற்றவர் தன்னுடைய
நம்பிக்கையான சீடருக்கு காதுவழியே உபதேசம் செய்கிறார். அவர் தன்னுடைய சீடருக்கு உபதேசம்
செய்கிறார். அப்படி செய்யும் போது மற்ற சீடர்களுக்கோ வைத்தியர்களுக்கோ அவ்வாறு உபதேசம்
செய்யப்படுகிறது என்று பரப்பப் படுவது ஏன்? காதோடு காது வைத்த மாதிரி ரகசியமாக அல்லவா
உபதேசிக்கப் படவேண்டும்.
இந்த நாவலில் துளசி ஐயா நல்லமருக்கு அபூர்வகரணி
உபதேசிக்க போவது அவருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்தால் போதுமானது. அதை அவர்
தன் மகனுக்கும் மற்ற வைத்தியர்களுக்கும் சொல்லவேதான் குற்றவாளி இடை புகுந்து ரகசியத்தை
திருடி விடுகின்றான்.
கர்ணபரம்பரை ரகசியங்கள் வெளிப்படுகையில் இப்படி
வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிவித்து குரு உபதேசிக்க மாட்டார் என்பது சிற்றறிவுக்கு
ஏற்பட்ட ஒரு சந்தேகம். இதுவே இந்த நாவலின் லாஜிக் மிஸ்டேக்.
ஆனால் அப்படி பார்த்தால்
இந்த நாவலே உருவாகி இருக்காது.
விறுவிறுப்பான
துப்பறியும் நாவல் அத்துடன் அமானுஷ்யம், திகில், க்ரைம் என அனைத்தும் கலந்து தெளிக்கப்பட்ட
ஒரு காக்டெயில் நாவல் கர்ண பரம்பரை.
பைண்டிங் அட்டையுடன்
அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள 496 பக்கங்கள் கொண்ட நாவலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நாவலின் விலை ரூ 225.00.
கிடைக்குமிடம்:
வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை 17.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நானும் படித்து விட்டேன்.
ReplyDeleteம்ம்ம்ம்ம், ஶ்ரீராம் கிட்டே இருந்து புத்தகத்தைச் சுட்டுட்டு வந்து தான் படிக்கணும்! :) விமரிசனம் அருமையா இருக்கு!
ReplyDeleteஅவரின் முதல் நான்கு புத்தகங்களும் படித்து எனது பக்கத்தில் அவை பற்றி எழுதியும் இருக்கிறேன். கடைசி இரண்டு நாவல்களும் இன்னும் வாங்கவில்லை. தமிழகம் வரும்போது வாங்க நினைத்திருக்கிறேன்.
ReplyDeleteவிறுவிறுப்பு உங்கள் பதிவிலும்.
அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்
ReplyDeleteஎந்தப் படைப்பும் அது ஒரு சேதியை வாசகர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும். அப்பொழுது தான் கொடுத்த காசுக்கு வாசகனுக்கு அந்த வாசிப்பு கிஞ்சித்தானும் உபயோகாமான ஏதாவது ஒரு செய்தியை விட்டுச் சென்றதா என்று தெரியும். இது இந்தக் காலத்து கன்ஸ்யூமர் பார்வைகளில் ஒன்று.
ReplyDeleteஇந்த நாவலில் நீங்கள் அப்படி பெற்ற செய்தி என்ன என்று சொல்லாவிட்டாலும் சரளமான ஒரு நடையில் விறுவிறுவென்று விமரிசனம் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள். உங்கள் வாசிப்பு
ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.
அடுத்த தடவை இந்த மாதிரி ஏதாவது புத்தகத்திற்கு மதிப்புரை எழுதும் பொழுது அந்த நூலை வாசித்ததினால் என்ன பலன் அல்லது ஏதாவது வாழ்க்கைக்கு உபயோகமாக ஏதாவது புதுசாகத் தெரிந்து கொண்டீர்களா என்று குறிப்பிட்டு எழுதினால், இன்னொருவரும் அந்த நூலை வாங்கவோ வாசிக்கவோ பயனுள்ளதாக இருக்கும்.
அழகிய விமர்சனம் நன்று
ReplyDeleteஅருமையான விமரிசனம் சார்.
ReplyDeleteஅருமையான அறிமுகம்
ReplyDeleteதொடருங்கள்
நாவலைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே
திகில் கதை என்று தெரிகிறது. விறு விறு என்று போனால் கதை படிக்க ஆசையாக இருக்கும். நல்ல விமர்சனம்
ReplyDelete