வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!
வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!
அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன. அதில் பறவைகளும் அணில்களும் கூட்டமாய் வசித்து வந்தன. தென்னை மரத்தில் இருந்து விழும் பூக்களையும் சிறு பூச்சிகளையும் தின்று வளர்ந்து வந்தது அணில்கள். அதில் ஒரு குட்டி அணில் ஒன்றும் வசித்து வந்தது. அது யார் சொல்வதையும் கேட்காது. தானாக முடிவெடுத்து திரியும். மரத்திற்கு மரம் தாவும். அந்த அணில் அப்படி தாவி தாவி வெகு தொலைவிற்கு ஒருநாள் வந்துவிட்டது.
அப்போது வானம் இருட்டியது. மேகங்கள் கூடின. சில்லென்ற காற்று வீசியது. அந்த காற்று அப்படியே பேய்க் காற்றாக மாறியது. கருத்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இடிச்சத்தம் கேட்டது. வானில் மின்னல் பளிச்சிட்டன. இதையெல்லாம் பார்த்ததும் பாவம் மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குட்டி அணிலுக்கு பயம் வந்துவிட்டது.
அந்த அணில் இதுவரை மழை, இடி, மின்னலை பார்த்ததே இல்லை! ஏதோ விபரீதம் என்று அது நினைக்கும்போதே காற்று மிக பலமாக வீசவும் அந்த தென்னை மரத்தில் இருந்து உலர்ந்த தேங்காய் ஒன்று டமால் என கீழே விழுந்தது. அதே சமயம் பலத்த தூறல் விழவும் அணிலு மிகவும் பயந்துவிட்டது. தேங்காய் விழுந்ததை அது வானம் இடிந்து விழுகிறது என்று நினைத்துக் கொண்டது. கூரை இடிந்துவிட்டதால் ஒழுகுகிறது என்று மழைபெய்வதை நினைத்துக் கொண்டு அப்படியே பதறி வேகமாக ஓடியது.
பொழுது இருட்டிவிட்டது. மழை,மின்னல் எல்லாம் சேர்ந்து அது மிகவும் பயந்து போய் மூச்சிறைக்க தன் இருப்பிடம் நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கே ஒரு ஓணான் ஒன்று வந்தது. “என்ன அணிலாரே! ஏன் வேகமாக ஓடி வருகிறீர்கள்? என்ன விசயம்?” என்று கேட்டது.
“ஓணான் அண்ணா! பேசுவதற்கு நேரமில்லை! வானம் இடிந்துவிழுவதை என் கண்ணால் பார்த்தேன்! வானம் விழுவதற்கு பெரிதாய் சத்தம் கேட்டு வானில் விரிசல் விழுவதையும் பார்த்தேன். சற்றைக்கெல்லாம் வானம் இடிந்து விழ ஆரம்பித்துவிட்டது. இனி நாம் பிழைத்தால் போதும் என்று ஓடி வருகிறேன்! நீயும் ஓடு! அப்போதுதான் பிழைக்கமுடியும்” என்றது.
“அப்படியா! வானம் இடிந்து விழுகிறதா? ஐயையோ! என்ன செய்வேன்! நானும் உன்னுடன் ஓடிவருகிறேன்!” என்று ஓணானும் அணிலுடன் கலந்து கொண்டது.
இரண்டும் தலைதெறிக்க ஓடியதை ஒரு முயல் பார்த்தது. ‘அணில் தம்பியாரே! ஓணான் அண்ணா! எங்கே ஓடுகிறீர்கள் இப்படி?” என்று கேட்டது.
“நீயும் ஓடிவா! வானம் இடிந்துவிழுகிறது! சீக்கிரம் ஓடி தப்பிப் பிழைப்போம்! இல்லையென்றால் அவ்வளவுதான்!”என்றது அணில்.
“என்னது வானம் இடிந்துவிழுகிறதா? இதை பார்த்தீர்களா?”
“ஆமாம்” என்று தலையை ஆட்டியது ஓணான்.
“இந்த உலகத்துக்கே கூறை வானம்தானே! அது இடிந்து விழுந்தால் என்ன ஆவது? நம்மை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்”. என்றபடி அவர்களுடன் ஓட ஆரம்பித்தது முயல்.
“நீ சொல்வது சரிதான்! இந்த காட்டின் மையத்தில் ஒரு காளி கோவில் இருக்கிறது அல்லவா? அங்கே போய் முறையிடுவோம்! வேகமாக போகவேண்டும்! வானம் முழுவதுமாய் இடிந்து விழுவதற்குள் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்” என்றது அணில்.
அணில், ஓணான், முயல் மூன்றும் ஓடிவருவதை கண்டு வழிமறித்தது ஓர் குரங்கு. “எங்கே கூட்டமாய் ஓடி வருகிறீர்கள்?” என்றது.
“குரங்கு அண்ணா! வானம் இடிந்து விழுகிறது! உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறோம்! நீங்களும் இங்கேயே நிற்காதீர்கள்! ஓடிவாருங்கள்!” என்றது முயல்.
“என்னது வானம் இடிந்து விழுகிறதா? நீ பார்த்தாயா?”
“நான் பார்க்க வில்லை! அணில் தம்பி தான் பார்த்தான். அவன் தான் எங்களை எச்சரிக்கை செய்து கூட்டிவந்தான்.”
“இது உண்மையா?”
இப்போதும் “ஆமாம்” என்பது போல தலையாட்டியது ஓணான்.
“அப்படியானால் இந்த மரங்களில் தாவி விளையாட முடியாதா? ஐயோ? இந்த மரங்களில் சுவையான பழங்கள் இருக்குமே? இதையெல்லாம் தின்ன முடியாதா?” என்று வருந்தியது குரங்கு.
“பழத்தை பார்த்தால் உயிர் அவ்வளவுதான்! வா! ஓடுவோம்!”
குரங்கும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது. அப்போது வழியில் மயில் ஒன்று சிறகை விரித்து நடனம் ஆடிக்கொண்டு இருந்தது.
“ஏ மயிலே! வானம் இடிந்து விழுந்துகொண்டு இருக்கிறது! உனக்கு நடனம் ஒரு கேடா? ஓடு! உயிரைக் காப்பாற்றிக் கொள்!” என்றது குரங்கு.
“என்னது வானம் இடிகிறதா?” பயத்தில் சிறகுகளை மூடிக்கொண்டது மயில்! அது கத்தியபோது இன்னும் பயங்கரமாக இருந்தது.
அவர்களுடம் மயிலும் ஓட்டம் பிடித்தது. இப்படி இவை நான்கும் ஓடி வருவதை ஓர் குதிரை பார்த்தது. “ எங்கே ஓடுகிறீர்கள்! நில்லுங்கள் நானும் வருகிறேன்!” என்றது.
“நிற்பதற்கு நேரம் இல்லை! ஓடிவா! வானம் இடிந்து விழுந்து கொண்டு இருக்கிறது!” கத்தியபடி ஓடின விலங்குகள்.
என்னது வானம் இடிந்து விழுகிறதா? ஐயோ! என்ன செய்வேன்? என்று குதிரையும் அவர்களுடன் ஓடியது. அப்போது ஓர் கழுதை ஒன்று எதிர்பட்டது. “ஏய் கழுதையாரே! ஓடு உயிர்பிழைத்துக் கொள்! வானம் இடிந்துவிழுந்து கொண்டிருக்கிறது!” என்று சொல்லியபடி ஓடியது குதிரை. கழுதை அவர்களுடன் சேர்ந்து கொண்டது.
இதற்குள் காடே பரபரப்பாகிவிட்டது. வானம் இடிந்துவிழுகிறது என்ற தகவல் எப்படியோ பரவிவிட்டது. சிங்கராஜா அரசவையை கூட்டிவிட்டார். அமைச்சர் நரியார் “என்ன விசயம்? எதற்கு இந்த பதட்டம்?” என்று கூடி இருந்த விலங்குகளை பார்த்துக் கேட்டார்.
“மகாமந்திரி நரியாரே! வானம் இடிந்து விழுகிறதாம்! அதனால் பயந்து போய் இருக்கிறோம்! விலங்குகள் தம்மை காத்துக் கொள்ள ஓடிக்கொண்டே இருக்கின்றன. எங்கு ஓடினாலும் வானம்தான் கூறை! நாம் எப்படி பிழைப்பது? நீங்கள்தான் உபாயம் கூறவேண்டும்!” என்றன.
இதைக்கேட்டதும் நரியார் ‘கலகல’வென்று சிரித்தார்.
“மந்திரியாரே! நாங்கள் உயிர்பயத்தில் இருக்கிறோம்! நீங்கள் என்னடாவென்றால் சிரிக்கிறீர்களே?” என்று கோபப்பட்டன விலங்குகள்.
“வானமாவது இடிந்து விழுவதாவது? எந்த முட்டாள் இதை உங்களிடம் கூறியது?” என்று மேலும் சிரிக்க ஆரம்பித்தார் நரியார்.
“அப்படியானால் வானம் இடிந்து விழாதா?”
“ அதற்கு வாய்ப்பே இல்லை! ஆமாம் இதைக் கூறி உங்களை பயமுறுத்தியது யார்?”
அணில் தம்பிதான் இதை முதலில் கூறியது. “எங்கே அவனை அழைத்து வாருங்கள்!”
சில மணி நேரத்தில் அணில் அரசவைக்கு அழைத்துவரப்பட்டது. நரியார் விசாரணை செய்தார்.
“அணிலாரே! வானம் இடிந்து விழுந்ததை நீர் பார்த்தீரா?”
“ஆமாம் மந்திரியாரே? நான் கண்ணால் பார்த்தேன்!”
“சரி அப்போது என்ன நிகழ்ந்தது? நீர் எங்கே இருந்தீர்?”
நான் காட்டில் தென் திசையில் விளையாடிக்கொண்டு இருந்தேன். திடிரென இருட்டாகிவிட்டது. காற்று பலமாக வீசியது. வானில் பெரும் சத்தம் கேட்டது. விரிசல் விட்டது. அப்புறம் கூறை பிய்ந்து ‘டமால்’ என விழுந்தது. நான் ஓடிவந்து விட்டேன்.
“வா! அந்த இடத்தை போய் பார்ப்போம்! அங்கு வானத்தின் சிதறல்கள் இருந்தால் நீ கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.”
அணில் அந்த தென்னை மரத்தடிக்கு அழைத்துச் சென்றது. அங்கே வானம் இடிந்தமைக்கான அறிகுறிகள் ஒன்றும் தென்படவில்லை.
பொழுது விடிந்து மழை விட்டிருந்தது. ஆங்காங்கே தென்னங்காய்கள் சிதறி இருந்தன. இங்கே! இங்கே! தான் வானம் இடிந்து விழுந்தது என்று அணில் சொல்லவும் மீண்டும் ஒரு தேங்காய் கீழே விழவும் சரியாக இருந்தது.
“தொப்” என்று சத்தம் விழ அதோ அதோ விழுகிறது பாருங்கள்! நான் சொல்லவில்லை! வாருங்கள் ஓடுவோம்” அலறியது அணில்.
“ ஏய் முட்டாள் அணிலே! விழுந்தது ஒரு தேங்காய்! இதைப்பார்த்துதான் வானம் இடிந்து விழுந்துவிட்டது என்று களேபரம் பண்ணிவிட்டாயா?”
“ அப்படியானால் வானம் இடியவில்லையா?”
“ஏய் முட்டாள் அணிலே! இதற்குத்தான் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்! பள்ளிக்கூடத்திற்கு போகச்சொன்னால் ஏமாற்றிவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தாய் அல்லவா? இடி மழையை பார்த்து பயந்துபோய் தேங்காய் விழுந்ததை வானம் இடிந்துவிட்டது என்று உளறிக் கொட்டி இருக்கிறாய்? உன்னால் எத்தனைப் பேருக்கு கஷ்டம்! இனியாவது ஒழுங்காக பள்ளிக்குப் போய் படி!” என்று அணிலை கடிந்து கொண்டது நரி.
பின்னர் விலங்குகளை பார்த்து, “அணில்தான் அறியாமல் எதையோ சொன்னது என்றால் நீங்களும் நம்பி இப்படி பதைபதைக்கலாமா? வீணாக பயப்படாதீர்! யார் எதைச்சொன்னாலும் அப்படியே நம்பி விடக்கூடாது. அதன் உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு ஆபத்தும் இல்லை என்று விளங்கிவிட்டது அல்லவா? போய் வேலையை பாருங்கள்” என்று சொல்லியது.
“ ஆமாம்! ஆமாம்! சின்ன பிள்ளை பேச்சை நம்பி ஏமாந்து பதறிப்போனோமே! இனி எதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கலைந்து போயின விலங்குகள்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல கதை நண்பரே
ReplyDeleteகுழந்தைகளுக்கு பொருத்தமான கதை. அருமை.
ReplyDeleteகுழந்தைகளுக்கான கதை... அருமை.
ReplyDeleteவானம் இடிந்து விழுகிறதா
ReplyDeleteசிறுசுகளைச் சிந்திக்க வைக்க
அருமையான பதிவு
தொடருங்கள்
மிக நல்ல கதை
ReplyDeleteஇயல்பாக வருகிறது உமக்கு தொடரவும்
நல்ல கதை.
ReplyDeleteதொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.
azhagana kathai suresh....kuzhandaigalukku etra kathai...vilangugal vazhi iyarkai vazhi neethi kathaigal varumpothu periyavargal aayinum rasanaiyaga irukkirathu....naamum kuzhandaigal aagividuvathalo.!!!
ReplyDeleteநல்ல குழந்தைக்கதை!
ReplyDelete