புத்திசாலி மனைவி! பாப்பா மலர்!

புத்திசாலி மனைவி!   பாப்பா மலர்!


   முன்னொரு காலத்தில் பாடலி புரம் என்ற நாட்டில் மதனசோமன் கிருதிசோமன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். தங்கள் பூர்வீக சொத்தை சமமாக பகிர்ந்து கொண்டு அதை வைத்து சாப்பிட்டு வந்தார்கள் அவர்கள். குந்தித் தின்றால் குன்றும் குறையும் என்பார்கள் அல்லவா? கிருதிசோமன் அந்த சொத்தை விருத்தி செய்து இன்னும் நிலபுலன்களை வாங்கி விவசாயம் செய்து வியாபாரம் செய்து பணக்காரனாக மாறிவிட்டான். ஆனால் மதனசோமன் பெரிய செலவாளி. இருந்த சொத்தை விற்று தின்றுவிட்டான். புதிதாக சொத்தும் சேர்க்கவில்லை. எந்த தொழிலையும் செய்யவில்லை. நாளடைவில் அவன் சொத்து குறைந்து காணாமல் போய் ஓட்டாண்டியாக மாறிவிட்டான்.
   தன்னுடைய சகோதரன் பணக்காரனாக வாழ்கிறான். அந்த இடத்தில் நாம் தரித்திரனாக வாழ்கிறோமே என்று வருந்திய மதனசோமன், மனைவியிடம், ”பெண்ணே! நாம் இந்த ஊரில் இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நானும் என் சகோதரனும் பூர்வீக சொத்தை சமமாக பங்கிட்டு கொண்டோம். ஆனால் என் ஊதாரித் தனத்தால் சொத்துக்களை இழந்துவிட்டேன். சகோதரனோ பெரும் பணக்காரனாக வாழ்கிறான். அவன் எதிரில் பிச்சைக்காரனாய் வாழ மனம் ஒப்பவில்லை! நாம் எங்காவது தூர தேசம் சென்றுவிடுவோம்!” என்று கூறினான்.
      “ எல்லாம் சரிதான்! ஆனால் எங்காவது போக வேண்டும் என்றால் சிறிதளவாவது பணம் வேண்டுமே! அதுகூட நம்மிடம் இல்லையே! உங்கள் தம்பியிடம் போய் கொஞ்சம் பணம் வாங்கி வாருங்கள் அதைக் கொண்டு நாம் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம்!” என்றாள் அவன் மனைவி.
  மதனசோமன் தன் தம்பி கிருதிசோமனிடம் வந்து தன் நிலையைக் கூறி சிறிது பணம் கொடுத்து உதவுமாறு கேட்டான். அப்போது கிருதிசோமனின் மனைவி அவனை தடுத்தாள். “ இப்படி இவர்களுக்கு நாம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தால் நாமும் ஏழையாகிவிட வேண்டியதுதான்! ஊரில் இருக்கும் ஏழைகள் எல்லாம் நம் வீட்டில் பிச்சையெடுக்க வந்துவிடுவார்கள்!  அதனால் பணம் தராதீர்கள்!” என்றாள்.
   மதனசோமன் மனம் வெதும்பிப் போனான். தம்பி மனைவியின் சொற்கள் அவன் மனதை குத்தின. எனவே ஒன்றும் பேசாமல் அங்கிருந்து திரும்பிவந்துவிட்டான். வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்ததை கூறி பணம் இல்லாவிட்டால் என்ன? நாம் கால்நடையாகவே வேறு தேசத்திற்கு கிளம்பலாம். வழியில் அன்ன சத்திரங்களில் பசியாறிக் கொள்ளலாம். என்று சொல்லி மனைவியைக் கிளப்பினான்.
  இருவரும் கால்நடையாகவே  நடந்து சென்றனர். அந்த காலத்தில் வழிப்போக்கர்கள் பசியாற அன்ன சத்திரங்கள் உண்டு. அவற்றில் இலவசமாக உணவு போடுவார்கள். அதுமாதிரி இலவச அன்ன சத்திரங்கள் அவர்கள் இருவரின் பசி ஆற்றின. சில சமயம் பட்டினி கிடந்தார்கள். வழியில் கிடைக்கும் காய் கனிகளை உண்டார்கள். இப்படி இவர்கள் கால்நடையாக நடக்கையில் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது.
  காட்டுப்பாதையை கடக்கையில் அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு மதன சோமனை விழுங்கிவிட்டது. அவன் மனைவியால் பாம்பிடம் இருந்து கணவனை காப்பாற்ற முடியவில்லை. அவள் கதறி அழுது தன்னையும் விழுங்கிவிடுமாறு பாம்பிடம் கூறினாள்.
  மதனசோமன் மனைவியின் புலம்பல் பாம்பிற்கு வருத்தத்தை தந்தது. பெண்ணே! இன்று இவன் எனக்கு உணவாக வேண்டும் என்பது விதி! அதை மாற்ற முடியுமா? உன் வழி செல்! வீணாக அழுது புலம்பாதே! என்று ஆறுதல் கூறியது.
  “ நீ என் கணவனை விழுங்கி என்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டாய்! எனக்கு ஒரே துணை என் கணவர். அவர் இல்லாமல் நான் எங்கே போவது? என் வாழ்க்கையே போனது இனி வாழ்ந்து என்ன பயன்? என்னையும் கொன்றுவிடு!” என்றாள் மதனசோமன் மனைவி.
  ” வருந்தாதே! பெண்ணே! உன் கணவன் இன்று எனக்கு உணவு என்று ஏற்கனவே எழுதப்பட்ட விதி! இல்லையேல் நீங்கள் ஏன் இவ்விடம் வருகிறீர்கள்? பெரும் செல்வந்தனான உன் கணவன் எல்லாவற்றையும் இழந்து உன்னையும் நிர்கதியில் விட்டு செல்வான் என்பது விதி. உங்கள் ஊழ்வினை! அதை வெல்ல முடியாது. உன் ஜீவனத்திற்கு நான் ஒரு உபாயம் சொல்கிறேன். என் வயிற்றில் தங்கத்தால் ஆன பாத்திரம் ஒன்று உள்ளது. அதை கக்கிவிடுகிறேன். அதைக் கொண்டு நீ பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்!” என்றது பாம்பு.
  சொன்னது போல தங்க பாத்திரத்தையும் உமிழ்ந்தது. அதை எடுத்துக் கொண்ட மதனசோமன் மனைவி, ”எல்லாம் சரி! தங்கப் பாத்திரத்தில் பிச்சை எடுத்தால் யாராகிலும் பிச்சை போடுவார்களா?  எல்லோரும் துரத்தி அடிப்பார்கள்! யாருக்கும் என் மீது இரக்கம் வராது! பிச்சை போட மாட்டார்கள்!” என்றாள்.
  பாம்பு அவளிடம் இரக்கம் கொண்டது. ”பெண்ணே! உனக்கு பிச்சை போட மறுப்பவர்கள் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறும்!  இது என்னுடைய சாபம்! அதனால் நீ தயங்காமல் பிச்சை எடு!” என்று சொன்னது.
மதனசோமனின் மனைவி மகிழ்ந்தாள். ”நீ சொல்லுவது உண்மையா! நடக்குமா?” என்றாள்.
   “கண்டிப்பாக நடக்கும்! அதில் சந்தேகம் வேண்டாம்!” என்றது பாம்பு
உடனே மதனசோமனின் மனைவி பிச்சை பாத்திரத்தை கையில் ஏந்தி பாம்பிடம்  கேட்டாள். “ இப்போது நீ விழுங்கிய என் கணவரை எனக்கு பிச்சையாக கொடு!” என்றாள்.
   பாம்பு அதிர்ந்து போனது. அவளின் புத்திசாலித் தனத்தை கண்டு வியந்து போய், புத்திசாலிப் பெண்ணே! உன் சாமர்த்தியத்தால் இன்று நீ விதியையும் வென்றாய்! என்று சொல்லி அவளது கணவனை உமிழ்ந்தது.. மதனசோமன் உயிருடன் வந்ததும் அந்த பாம்பும் ஒரு கந்தர்வனாய் மாறியது.
   நான் ஒரு கந்தர்வன் ஒரு ரிஷியின் சாபத்தால் பாம்பாக மாறிக்கிடந்தேன். ஒரு புத்திசாலிப்பெண்ணின் கணவனை விழுங்கும் போது அந்த பெண்ணினால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று முனிவர் கூறினார். உன்னால் இன்று எனக்கு விமோசனம் கிடைத்தது. நீங்கள் வேண்டும் பொன்னும் பொருளும் நான் அளிக்கிறேன்! ஊர் திரும்பி சுகமாய் வாழுங்கள்! என்று கூறி பொன்னும் பொருளும் தந்து மறைந்தான்.
  அதன் பின் மதனசோமனும் அவன் மனைவியும் அந்த பொன் பொருளைக் கொண்டு வியாபாரம் செய்து பல ஆண்டுகள் மகிழ்வாக வாழ்ந்தனர்.
(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. புத்திசாலியான பெண்தான்

  ReplyDelete
 2. அருமையான கதை சுரேஷ்!

  ReplyDelete
 3. நல்ல கதை... வாழ்த்துக்கள் சகோதரரே...

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
 5. புத்திசாலி...... நன்றாக இருக்கட்டும்!

  ReplyDelete
 6. இவ்வளவு புத்திசாலியான பெண் ஏன் தன் கணவனை வெட்டிச் செலவு செய்ய அனுமதித்தாள்? இந்தக் கதையில் அது தேவையில்லாத பகுதி என்று தோன்றுகிறது. ஊர் விட்டு ஊருக்கு வியாபார நிமித்தம் செல்லும்போது என்று இருந்திருக்கலாமோ!

  ReplyDelete
 7. நல்ல கதை சொல்லி நீங்கள். இன்னும் விருத்தி செய்து கொள்ளுங்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2