தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!
தித்திக்கும் தமிழ்! பகுதி
26 குருடனான திருமால்!
தித்திக்கும் தமிழில் இலக்கியசுவை
நிரம்பும் சிலபாடல்களை ரசித்து வந்தோம். இடையில் இப்பகுதி நின்றுவிட்டது. தமிழ்சுவைக்கு
ரசிகர்கள் ஒரு சிலரே! அவர்களும் வாசிக்க வராமல் போகவே ஓர் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தியிருந்தேன்.
இன்று பதிவு ஏதும் தேறவில்லை! என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் தமிழ் கை கொடுத்தது.
நின்ற பகுதி தொடர்கிறது.
எல்லோரும் திருமாலை அழகன் என்று புகழ்வார்கள்!
இங்கே சொக்கநாத புலவரோ திருமாலை குருடன் என்கின்றார். எப்படி?
முன்பொரு சமயம் பிரம்மாவிற்கும்
விஷ்ணுவிற்கும் யார் பெரியவன் என்ற சண்டை வந்தது. சிவனிடம் வந்து தீர்ப்பு கேட்டார்கள்.
என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து சொல்பவர்களே பெரியவன் என்று சொல்லி தீ மலையாக
உருவெடுத்தார். பெருமாள் வராகம்( பன்றி ) உருவெடுத்து பூமியை குடைந்து சென்றார். பிரம்மா
அன்ன பட்சியாக உருவெடுத்து முடியை காணப்பறந்து சென்றார். எவ்வளவு தூரம் சென்றும் இருவராலும்
சிவனது அடி, முடியை காண முடியவில்லை! திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மா
தான் முடியை தரிசித்ததாக கூற சிவனது முடியில் இருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாக்கினார்.
பொய் சொன்னதால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரம்மாவிற்கு பூவுலகில் ஆலயங்கள் இல்லாமல்
போகட்டும் என்று சபித்தார். தாழம்பூவை தன்னுடைய பூஜைக்கு உகந்தது இல்லை என்று தள்ளி
வைத்தார். இந்த காட்சியைத்தான் புலவர் பாடலாக எழுதுகின்றார்.
தெள்ளு தமிழில் இதை பாடலாக்கி பெருமாளை குருடனாக்கி
வார்த்தை விளையாட்டில் வீடு கட்டுகிறார் சொக்க
நாதப் புலவர்.
இதோ பாடல்!
காப்பிட்ட பிள்ளைக் கறிக்கிச்சைப் பட்டுவை யைக்கரைமேல்
மாப்பிட்டு வந்த மயிலேச னேமலை யானநின்னை
கூப்பிட்டு நின்று குனிந்தொரு கோலக்கொம் பால்தடவிப்
பூப்பட்ட கண்னிச் சயமாக்கினான் மைப்புயல் வண்ணணே.
காப்பினை கையில் அணிந்த சிறுத்தொண்டர்
என்ற சிவனடியாரின் பிள்ளைக் கறிக்கு ஆசைப்பட்டவனே! வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை
அடைக்க கரைபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாவினால் செய்த பிட்டை விரும்பியவனே மயிலையில்
குடிகொண்டுள்ள ஈசனே!
நீ நெருப்பு மலையாக நின்றபோது உன் திருவடியைக் காண
விரும்பிய கரிய மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால் அழைத்தபடியே நின்று குனிந்து தன்
பன்றிக் கொம்பால் தடவி தனக்கு பூப் பட்ட கண் உள்ளது என்று நிரூபித்து விட்டான்.
ஈசனின் திருவடியைக் காண பன்றிக்கொம்பால் பூமியை தடவினான்.
இதையே புலவர் பூவிழுந்த கண் உள்ளவன் ஆதலால் திருவடி தெரியாமல் விழுந்து தடவி தான் குருடன்
என்று பெருமாள் உறுதிபடுத்திவிட்டதாக நகைச்சுவை ததும்ப கூறுகின்றார்.
பூப்பட்ட கண்கள் = குருடான கண்கள்.
இன்னொரு அர்த்தத்தில் திருமால்
தன்னுடைய தாமரைபோன்ற கண்ணினால் ஈசனின் திருவடியை தடவினான் என்று பொருள் படும்.
பூப்பட்ட கண்கள் = தாமரை போன்ற
கண்களை உடையவன் = அங்கயற்கண்ணன் என்று திருமாலுக்கு பெயருண்டு.
புலவரின் வார்த்தை விளையாட்டு
ரசிக்க வைக்கிறது அல்லவா?
என்னுடைய நண்பர் வெங்கட் என்பவரை
தேடி அவர் அம்மா வந்தார். வெங்கட்டை எங்கேயெல்லாமோ தேடுறேன்! இங்க இருக்கானா என்றார்.
வெங்கிட்டை அங்கிட்டு இங்கிட்டல்லாம் தேடுனா எப்படி? எங்கிட்டோ கடனை வாங்கிட்டு கூட்டாளிகளோடு
பங்கிட்டு திண்டுபிட்டு கடன்காரன்கிட்ட அகப்பட்டுகிடாம இருக்க எங்கிட்ட பணம் கேட்டு தொங்கிட்டு நின்னுகிட்டு இருக்கான்!
என்றேன். இது எப்படி இருக்கு?
மீண்டுமொரு சந்தர்ப்பத்தில்
சந்திப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அழகிய பாடலுடன் விளக்கம் நன்று நண்பரே
ReplyDeleteநல்லதோர் விளக்கம். ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteஇலக்கியச்சுவையுடன் ஆரம்பித்து, நகைச்சுவையுடன் நிறைவான பதிவு.
ReplyDeleteசொக்கநாத புலவர் பாடல் விளக்கம் அருமை, நண்பர் வெங்கட் தேடலுக்கு தங்கள் பதில் அருமை அருமை,,,
ReplyDeleteஅழகான விளக்கம் சகோதரரே...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteதொடருங்கள்
தொடருகிறோம்