கீர்த்தி சேனையின் கதை! பாப்பாமலர்!
கீர்த்தி சேனையின்
கதை! பாப்பாமலர்!
முன்னொரு காலத்தில்
பாடலி புத்திரம் என்ற ஊரில் பெரிய செல்வந்தன் வசித்து வந்தான். அவனுக்கு கீர்த்தி சேனை
என்ற அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அறிவும் அழகும் நிரம்பப் பெற்ற அவளை மகத நாட்டு
வாலிபனான தேவசேனனுக்கு மணமுடித்து வைத்தான்.
கீர்த்தி சேனையும் தேவ சேனனும் ஒருவர் மீது ஒருவர்
அளவிலா அன்பு வைத்து இருந்தனர். ஆனால் தேவசேனனின் தாய்க்கு இந்த மருமகளை பிடிக்கவில்லை.
தன் மகனை பிரித்து கூட்டிச்சென்று விடுவாளோ என்று அவள் பயந்தாள். தேவசேனன் எதிரில்
மருமகளிடம் பாசம் காட்டும் அவள் அவன் மறைந்ததும் அதிகமாக கொடுமை செய்வாள். கீர்த்திசேனையோ
இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணவனிடம் சொல்லவும் இல்லை.
மாமியாரின் இம்சைகளையும் கொடுமைகளையும் பொறுத்துக்
கொண்டாள். மாமியார் கொடுமையை கணவனிடம் கூறி அவனது தாய்ப்பாசத்தை குலைக்க அவள் விரும்பவில்லை.
இது மாமியாருக்கு வசதியாக போய் இன்னும் பல கொடுமைகள் செய்தாள் மாமியார்.
வணிகனான தேவசேனன் வியாபாரவிஷயமாக வெளியூர் செல்ல
நேர்ந்தது. அன்னிய தேசமான வல்லாபிக்கு செல்ல இருப்பதாகவும் தான் வரும் வரை கீர்த்திசேனையை
பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படியும் தாயிடம் கூறினான். திரும்பி வர அதிக நாளாகும்
என்றும் கணவன் கூறியதும் கீர்த்தி சேனை பயந்து போனாள். கணவன் இல்லாத நேரத்தில் மாமியார்
தன்னை என்ன செய்வாளோ? என்று திகிலடைந்தாள்.
தேவசேனன் தாயிடமும் மனைவியிடமும் விடைபெற்று கிளம்பியதுதான்
தாமதம் கீர்த்தி சேனையின் மாமியார் அவளை ஒரு
இருட்டறையில் அடைத்து பூட்டி வைத்தாள். தினமும் ஒருவேளை உணவு மட்டும் ஜன்னல் வழியாக
போட்டு வந்தாள். இப்படி அடைத்து வைத்தால் பட்டினி கிடந்து இறந்து போவாள் தன் மகனிடம்
உன்னை நினைத்து பிரிவுத்துயரில் இறந்துவிட்டாள் என்று சொல்லிவிடலாம் என்று திட்டமிட்டாள்
அந்த கொடுமைக்காரி.
கீர்த்தி சேனை செல்வந்த வீட்டு பெண். ஆனாலும் மாமியாரின்
கொடுமைகளை எதிர்க்க துணிவில்லாமல் இருட்டறையில் துன்பப்பட்டாள். ஒருநாள் அவள் இருட்டறையில்
அழுதுகொண்டு இருக்கையில் தரையில் சிறு பள்ளம் தென்பட்டது. அதை தோண்டியபோது ஒரு சுரங்கவழி
சென்றது. அவ்வழியே சென்றாள் கீர்த்தி சேனை. அந்த சுரங்கத்தில் நிறைய காசுகளும் நகைகளும்
இருந்தன. அவற்றில் தனக்கு தேவையான அளவு எடுத்துக் கொண்ட கீர்த்தி சேனை சுரங்கம் வழியாக
தப்பி வெளியே வந்தாள். பின்னர் தன் பிறந்த வீட்டுக்கு செல்லவிரும்பாமல் கணவன் சென்ற
வல்லாபி தேசத்திற்கு பயணப்பட்டாள்.
பெண் தனியே சென்றால் ஆபத்து நேரும் என்று ஆணுடை
தரித்து தன் கணவனை தேடிப் புறப்பட்டாள். வழியே ஒரு வியாபாரி தனது சரக்குகளுடன் வல்லாபி
நகருக்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடன் சென்று கலந்துகொண்டாள் கீர்த்திசேனை. நீண்ட
நாள் பயணத்திற்கு பிறகு வல்லாபி நகர எல்லையை அடைகையில் காடு ஒன்று குறுக்கிட்டது.
காட்டை கடக்க பொழுதாகும் என்பதால் அங்கேயே கூடாரம்
அடித்து தங்கினர் வியாபாரிகள். அப்போது கொள்ளைக் கூட்டம் ஒன்று வியாபாரியையும் அவனது
துணைவர்களையும் தாக்கியது. கீர்த்தி சேனை மரம் ஒன்றில் ஏறி பதுங்கிக் கொண்டாள். கொள்ளைக்
கூட்டம் வியாபாரியையும் அவனது கூட்டத்தையும் கொன்று போட்டுவிட்டு அவர்களது பொருட்களை
அபகரித்துச்சென்று விட்டது.
கீர்த்திசேனை மரத்தின் மீதிருந்து இறங்கும்போது
அங்கு பசியோடு ஒரு ராட்சஸியும் அவளது மகளும் வந்தனர். “அம்மா! ரொம்ப பசிக்குதும்மா!
என்று குட்டி ராட்சஸி கேட்டது. அப்போது பெரிய ராட்சஸி சொன்னாள். நாம் வாசிதத்தன் என்ற
மன்னனுடைய நாட்டிற்கு செல்வோம். அவன் கொள்ளைக் கூட்டத்தை அடக்க காட்டிற்கு வந்த போது
அவனது காதில் பூரான் ஒன்று புகுந்துவிட்டது. அது நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு அவை
அவனது தலையில் தங்கி விட்டது. நோய்வாய்ப்படும் அவன் விரைவில் இறந்துவிடுவான். அவனை
நாம் பசிதீர உண்ணலாம் என்றது.
“ அரசனின் நோயை யாராலும் தீர்க்க முடியாதா? நிறைய
வைத்தியர்கள் இருப்பார்களே!” என்றது குட்டி ராட்சஸி.
”அரசனுக்கு என்ன நோய் என்பது தெரிந்தால்தானே வைத்தியம்
செய்வதற்கு முடியும். அரசன் காதில் பூரான் புகுந்தது யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்தாலும்
அதை எடுக்கும் ரகசியம் எனக்கே தெரியும்” என்றது ராட்சசி.
” அது என்ன ரகசியம்? எனக்கும் சொல்லேன்! ”என்றது
குட்டி ராட்சஸி.
பூரானை வெளியே எடுக்கும் வைத்திய ரகசியத்தை சொல்லிய
ராட்சஸி ”இதை எந்த வைத்தியன் செய்ய போகிறான்? மன்னன் இறப்பதும் நாம் அவனைத் தின்பதும்
உறுதி”! என்றது.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திசேனை
ராட்சஸிகள் அகன்றதும் மரத்தில் இருந்து இறங்கி
வாசிதத்தன் அரசாளும் நாட்டிற்குச் சென்றாள்.
அங்கு நாடே துக்கத்தில் இருந்தது. மன்னன் தீராத
நோயால் அவதிப்படுவதாகும் அதை தீர்க்க யாருக்கும் வழி தெரியவில்லை என்றும் மன்னன் மரணப்
படுக்கையில் உள்ளான் என்றும் மக்கள் பேசிக்கொண்டனர். கீர்த்திசேனை அரண்மனை வாயிலுக்குச்
சென்று காவலர்களிடம் மன்னனின் நோயை தான் தீர்ப்பதாகக் கூறினாள்.
காவலர் அவளை மன்னன் முன் நிறுத்தினர். அப்போது
இராத்திரி நேரம் மன்னன் மண்டைவலியால் துடிப்பதை பார்த்து இரக்கப்பட்ட அவள் மன்னன் தலையில்
நிறைய தயிரை கொட்டி தேய்த்துவிடும்படி சொல்லியதுடன் நாளை காலையில் தான் வைத்தியம் செய்வதாகக்
கூறினாள்.
அவள் சொன்னபடி தயிரைக் கொட்டித் தேய்த்ததும் மன்னனின்
மண்டைக்குடைசல் குறையவும் அவனுக்கு கீர்த்திசேனையின் மீது நம்பிக்கை வந்தது. மறுநாள்
நல்ல உச்சிப் பொழுதில் மன்னனை வெயிலில் நிற்கச் சொல்லி ஒரு சிறு தகரக் குழாய் ஒன்றை
எடுத்து மன்னன் காதில் புகுத்தி அதன் மறு முனையை நீர் நிறைந்த பாத்திரத்தில் வைத்தாள்.
இப்போது அரசனின் காதில் காற்று புகாமல் புழுக்கம் ஏற்படவே காதில் இருந்த பூரான்கள்
வெளியெ வந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பூராண்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்து நீரில்
விழுந்து மடிந்தன.
அரசனுக்கு ஆச்சர்யம் இத்தனை பூராண்கள் எப்படி தன்
மண்டையில் புகுந்தது என்று. அனைவரும் வியப்புடன் பார்க்க அரசனது தலைவலி தீர்ந்து போனது.
கீர்த்தி சேனைக்கு பரிசு கொடுக்க விரும்புவதாக மன்னன் கூறினான். தான் ஒரு விரதம் இருப்பதாக
கூறிய கீர்த்திசேனை பரிசை பிறகு வாங்கிக் கொள்வதாகக் கூறி கிளம்பிசென்றாள்.
வல்லாபி நகருக்கு அவள் சென்று அங்கு கணவனை சந்தித்து
நடந்ததை கூறினாள். இதுவரை ஏன் இந்த கொடுமைகளை கூறவில்லை என்று தேவசேனன் கடிந்து கொண்டான்.
இருவரும் கிளம்பி வாசதத்தன் அரண்மனைக்கு வந்து பரிசுகளை பெற்றுக்கொண்டு பாடலிபுத்திரம்
வந்தடைந்தனர்.
காணமல் போன மருமகள் கணவனுடன் வந்ததை பார்த்து திடுக்கிட்டாள்
மாமியார். தேவசேனனும் தாயின் நடத்தையை கடிந்துகொண்டான். பூதம் தந்தவாழ்வா இது? நானும்
போய் ரகசியத்தை கேட்டு நிறைய பணம் சம்பாதித்து வருகிறேன் என்று அவளது மாமியார் புறப்பட்டு
வல்லாபி நகர காட்டுக்கு வந்தாள்.
ரகசியம் வெளிப்பட்டுவிட்டது உணவு கிடைக்கவில்லை
என்று ஆத்திரத்தில் இருந்தன பூதங்கள். நம் ரகசியத்தை யாரோ கேட்டு மன்னனை காப்பாற்றிவிட்டார்கள்
நமக்கு உணவு கிடைக்காமல் போய்விட்டது!
”ஆமாம்! அவர்கள் நம் பசியைக் கிளறிவிட்டார்கள்!
அவர்களை சும்மாவிடக்கூடாது!”
”யார் நம் ரகசியத்தை கேட்டார்களோ அவர்களை கண்டுபிடித்து
சாப்பிடப் போகிறேன்!”
பூதங்கள் இப்படி பேசிக்கொண்டதும் மரத்தின் மீது
அமர்ந்திருந்த மாமியார் அவசரப்பட்டு, ராட்சஸிகளே! திருடுபோன ரகசியத்தை பற்றி இப்போது
என்ன பேச்சு! புதிய ரகசியத்தை பேசுங்கள்! அப்போதுதான் நானும் பரிசு வாங்க முடியும்!
என்று சொன்னாள்.
ராட்சஸிகள் கோபத்துடன் அவளைப் பார்த்தன. நீதான்
ரகசியத்தை திருடியவளா? எங்களுக்கு ரொம்ப பசியாக இருக்கிறது! உன்னை சாப்பிட்டுவிட்டு
அப்புறம் ரகசியம் சொல்கிறேன்! என்று அவள்மீது பாய்ந்தனர்.
”ஐயோ! என்னை விட்டுவிடுங்கள்! நான் ரகசியம் திருடவில்லை!
என் மருமகள்தான்…”
”அந்த மருமகளை நீதான் அனுப்பி இருப்பாய்!” என்று
சொல்லிவிட்டு மாமியாரை சுவைக்க ஆரம்பித்தன ராட்சஸிகள்.
கெடுவான் கேடு
நினைப்பான்.
(செவிவழிக்கதை
தழுவி எழுதியது)
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமையானகதை
ReplyDeleteசிந்திக்க வைக்கும் சிறந்த கதை
ReplyDeleteநல்ல கதை சகோதரரே வாழ்த்துக்கள்...
ReplyDeleteதாய் மனசும் வாசித்து விட்டேன்...
நல்ல சிந்திக்க வைக்கும் கதை!
ReplyDeleteithu pOntra fantasy kathaigal nalla neethiyudan sollappadum pothu kuzhandaigalin manathil elithil pathiyum. arumai suresh
ReplyDelete