அப்பாவின் நண்பர்!
அப்பாவின் நண்பர்!
காலை பதினோரு மணி
வேளை! அலுவலகத்தில் முக்கியமான ஃபைலை பார்த்துக் கொண்டு இருக்கையில், பியூன் பரமசிவம்
நுழைந்து ”சார் உங்களை பார்க்க பெரியவர் ஒருவர் வந்திருக்கார். எவ்வளோ சொன்னாலும் போக
மாட்டேங்கிறார்! உங்களை பார்த்து பேசனுமாம்!” என்றதும்,
” யாராய் இருக்கும்!” கேபினை விட்டு எழுந்து கண்ணாடி
ஜன்னல் வழியே வெளியே நோக்கினேன். மெலிந்த தேகம் சுருக்கம் விழுந்த முகம். நரைத்த முடி
கலைந்திருக்க அணிந்திருந்த வெள்ளைச்சட்டையும் வேட்டியும் ஆங்காங்கே அழுக்கு படிந்திருக்க
வரவேற்பரை நாற்காலியில் முனையில் பட்டும் படாமல் அமர்ந்து அந்த அலுவலகத்திற்கே வித்தியாசமானவராக
தெரிந்தார் அருணாசலம்.
”ச்சே! இவரா? இவர் எப்படி இங்கே வந்தாரு? அங்க
இங்கன்னு வந்து கடைசியிலே ஆபீஸ் வரைக்கும் வந்துட்டாரா? மனசினுள் பொறுமிக்கொண்டு ஏன்யா?
நான் இங்கதான் இருக்கேன்னு சொல்லித் தொலைச்சிட்டியா? ”என்றேன்.
ப்யூன் தலையைச் சொறிந்தபடி” ஆமாங்கய்யா!” என்றபோது
எனக்குள் கோபம் பலமடங்கு கூடியது.
“வழியிலே
போற யார் வந்து கேட்டாலும் இப்படி கூப்பிட்டு ரிசப்ஷன்ல உக்கார வைச்சிருவியா? அந்தாளை
நான் பார்க்க விரும்பலை! நான் ரொம்ப பிஸியா இருக்கிறதா சொல்லிடு மீட்டீங்க்ல இருக்கிறதாவும்
இப்ப கூப்பிட முடியாதுன்னு போய் சொல்லு போ!”
பியூன் சென்று அவரிடம் கூறுவதை ஜன்னல் வழியே பார்த்தேன்.
அவர் முகம் ஏமாற்றத்திற்கு உள்ளானது. நான் மகிழ்ந்தேன். ”வேணும்! வேணும்! நல்லா ஏமாறு!
ஒரு இடம் பாக்கிவிடாம இப்படி வசூல் வேட்டைக்கு வந்தா… பெரிய மனுஷன் தானே! கொஞ்சமாவது
புத்தி வேணாம்?” மனதிற்குள் பொறுமிக்கொண்டே
வேலையில் ஆழ்ந்தேன்.
வேலையில் கவனம் செல்லவில்லை. மனம் முழுவதும் அந்த
பெரியவர் அருணாசலம் நிரம்பி இருந்தார். அவர் இன்று நேற்றல்ல முப்பது ஆண்டு பழக்கம்.
நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அப்பாவின் நண்பர். அப்போது
நாங்கள் ஏழ்மைக் குடும்பம். புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அதில் பெரிய
வருமானம் இல்லை. அந்த ஊரும் பெரிய ஊர் இல்லை. வெளியே சென்று பிழைக்கவும் அப்பாவுக்கு
விருப்பம் இல்லை. அப்போது புரோகிதத்துக்கு போன போதுதான் இவர் அப்பாவிற்கு பழக்கமானார்.
அப்பாவுக்கு ஜோதிடமும் தெரியும் என்பதால் அடிக்கடி ஜாதகம், ஜோசியம் என்று வீட்டுக்கு
வருவார்.
வீட்டில் அரிசி இருக்காது. நானும் இன்னும் இரண்டு
தங்கைகளும் காலையில் டிபன் சாப்பிடாமல் பள்ளி சென்றிருப்போம். மதிய சாப்பாட்டிற்கு
வந்து காத்திருக்கும் சமயம் இவர் வந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பார். அப்போது அவர்
கையில் பழங்களோ பிஸ்கெட் பாக்கெட்டோ இருக்கும். நாங்கள் வந்ததும் எங்களிடம் அதைக் கொடுப்பார்.
”முதலியார்வாள்! எதுக்கு இதெல்லாம்? ”என்று அப்பா
வெளியே கேட்டாலும் உள் மனசு பசங்க பசியாற இதுவாச்சும் இன்னிக்கு உதவுச்சே! என்று நினைத்துக்
கொள்ளும். ”இருக்கட்டும் அய்யரே! சின்ன பசங்க சாப்பிடட்டும் நீங்க ஜாதகத்தை பார்த்து
சொல்லுங்க!” என்பார். காணிக்கையாக அப்போதே ஐம்பது அல்லது நூறுதான் வைப்பார். அது ஒருவார
செலவிற்கு எங்கள் வீட்டிற்கு வரும்.
ஒரு பொங்கல் சமயம்! கையில் காசில்லாமல் பொங்கலுக்கு
எதுவும் துணிமணி எடுக்காமல் பொங்கல் சாமான் கூட வாங்க முடியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் முதலியார் வந்தார். ” இந்தாங்க! ஆயிரம் ரூபா இருக்கு! பொங்கல் கொண்டாடுங்க!”
என்றார்.
”முதலியார்! இதை நான் எப்படி திருப்பறது?”
”நான் திருப்பச்சொல்லி
கேட்டேனா? பசங்க பொங்கலை கொண்டாடட்டும்! இப்படி ஊடு நல்ல நாளும் அதுவுமா அமங்கலமா இருக்க
கூடாது! ஆகவேண்டியதை பாருங்க!” என்றார்.
பல சமயம் அரிசி, தானியங்கள் பணம் என்று கொடுத்து
இருக்கிறார். அதை ஒருபோதும் திருப்பிக் கேட்டது இல்லை.
காலமாற்றம் அவரையும்
புரட்டி போட்டது. மகன்கள் சொத்தை பாகம் பிரித்து கேட்க பிரித்துக்கொடுத்துவிட்டார்.
தனக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளவில்லை அதுதான் அவர் செய்த தவறு. தன் செலவிற்கு
மகன்களிடம் கையேந்த வேண்டிய நிலைமை.
சொத்தை வாங்கிய மகன்கள் அவருக்கு ஒரு முறைகூட ஒழுங்காக
பணம் தருவது கிடையாது. மாதம் இவ்வளவு என்று சொத்து பிரிக்கையில் அவர் சொன்ன தொகையை
ஒத்துக் கொண்டவர்கள் பின்னர் சொல் தவறிவிட்டனர்.
ஒரு நாள் அவர் வந்து எங்கள் வீட்டில் சொல்லிப் புலம்பிக்
கொண்டு இருந்தார். சொல்றதுக்கென்ன ”ஐயரே! டீ செலவுக்கு கூட பத்து காசு கையில இல்லை!
கடையில நூறு ரூபாவுக்கு மேல கடன் சேந்து போச்சு! அவன் நீங்களா கொடுக்கிறீங்களா? மகன்
கிட்டே கேக்கட்டுமாங்கிறான் ஒரே அவமானமா போச்சு! ஒருவாரம் அவகாசம் கேட்டுட்டு டீ சாப்பிடாம
வந்துட்டேன்!” என்று அவர் சொன்னபோது கண்கள் கலங்கி இருந்தன.
அம்மா கொடுத்த காபியை சாப்பிட்டுவிட்டு அப்ப வரட்டுமா?
என்ற போது அப்பா அவர் கையில் ஒரு இருநூறு ரூபாயை திணித்தார். ”தப்பா எடுத்துகாதீங்க! நீங்க எவ்வளவோ செய்திருக்கீங்க!
நான் திருப்பி கொடுக்கலை! நீங்களும் கேக்கலை! எங்களாலே கொடுக்கவும் முடியாது. இதை நீங்க
கடனா வாங்கிக்கங்க! உங்களாலே எப்ப முடியுதோ அப்ப திருப்பிக் கொடுங்க! ஆனா ஒண்ணு இப்படி
நூறு இருநூறுன்னா எங்களாலே உதவ முடியும் ஆயிரம் ஐநூறுன்னு உதவ முடியாது.” அப்பா சொன்ன
போது அவர் கண்கள் குளமாயின.
”சீக்கிரமே திருப்பிக் கொடுத்துருவேன்!” என்று
வாங்கி சென்றார். அப்புறம் பத்து நாளைக்கு ஒரு முறை வருவார் அப்பாவும் கையில் இருப்பதை
கொடுத்து அனுப்புவார். சில வருடங்கள் இது தொடர்கதையானது. அப்புறம் ஒரு நாள் மொத்தமாக
ஒரு இரண்டாயிரம் திருப்பி எடுத்துவந்து கொடுத்தார் முதலியார்.
”பையனுங்க பணத்தை கொடுத்தானுங்க! நீங்க கொடுத்த
காசு கணக்கா எழுதி வச்சிருக்கேன். அதுல ஒரு பகுதியை திருப்பித் தரேன்! மிச்சத்தையும்
கூடிய சீக்கிரம் கொடுத்துடறேன்!”
”எதுக்கு நீங்க இப்படி கஷ்டப்படறீங்க? உங்க செலவுக்கு
வைச்சிகங்க! ”
”இருக்கு என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அது போதும்”
என்றார். அப்புறம் ஒரு ஆறுமாதம் வரவில்லை. மீண்டும் வந்தார். இப்போது அப்பா என்னைக்
கூப்பிட்டு ”அப்ப அவர் ரெண்டாயிரம் கொடுத்தார் இல்லையா? அது அப்படியேத்தானே இருக்கு
அதுல ஒரு இருநூறு எடுத்துவா!” என்றார்.
எடுத்துவந்து கொடுத்தேன் வாங்கிக்கொண்டார். இப்படி
சில நாள் கழிந்தது. இப்போது நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். என் குடும்பத்தில்
வறுமை கொஞ்சம் வடிந்தது. அப்பாவுக்கும் புரோகிதம் அதிகரித்து ஏழ்மை கொஞ்சம் மறைய ஆரம்பித்தது.
ஆறுமாதம் கழிந்து
ஒருநாள் முதலியார் என்னை கடைவீதியில் பார்த்தார். ”சௌக்கியமா? என்றார். தம்பி ஒரு நூறு ரூபா இருக்குமா? என்றார். உங்க வீட்டுக்குத்தான்
புறப்பட்டேன். அப்பா நம்பருக்கு போன் செய்தேன். அவர் இல்லையாம்! செலவுக்கு சுத்தமா
இல்லை! உன்கிட்டே கேக்க கூடாது… இருந்தாலும் என்னோட நிலைமை அப்படி ஆயிருச்சு!” என்று
குரல் உடைந்தார்.
சட்டென்று நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு,” இனிமே
அவ்ளோ தூரம் வர வேண்டாம் வாரம் ஒரு முறை இதே கிழமை இந்த கடைக்கு வருவேன். உங்களுக்கு
பணம் வேணும்னா இங்கேயே வந்து வாங்கிக்கங்க ”என்றேன்.
கண்கள் பனிக்க நன்றி தம்பி!ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
அப்புறம் இந்த கடையில் வாரம் நூறு ரூபாயை அவருக்குத் தந்து கொண்டிருந்தேன். ஒரு சமயம்
எரிச்சல் ஆகிவிட்டது. அந்தவாரம் நான் கடைக்கு போகவில்லை. கடை முதலாளியிடம் என் பேர்
சொல்லி நூறு ரூபாய் வாங்கிப் போய் இருக்கிறார். மறுவாரம் செல்கையில் முதலாளி சொல்ல
முதல்முதலாய் அவர் மீது கோபம் வந்தது.
” சே! சொத்து இருந்தும் இப்படி பிச்சைக் காரர் ஆகிவிட்டாரே!
பிழைக்கத் தெரியாத மனுஷன்! ஊருக்கெல்லாம் வியாக்கியானம் சொல்றவர் இப்படி தண்ணிப் பாணையிலே விழுந்துட்டாரே!” என்று
நினைத்துக் கொண்டேன்.
அப்பாவிடம் சொன்னபோது, ”ஒருகாலத்துல நமக்கு உதவினவரு
இப்ப நிலைமை சரியில்லை! உன்னால முடிஞ்சா உதவு. இல்லேனா என்கிட்ட அனுப்பிடு! ”என்றார்.
ரெண்டொருமுறை இல்லை என்று சொன்னபோது அவர் முகம்
காட்டிய ஏமாற்றம் என்னை என்னவோ செய்தது. தோராயமாக அவருக்கு கொடுத்த தொகையை கூட்டிப்
பார்த்த போது பெருந்தொகையாக இருந்தது. அவரிடம் வாங்கியதை வட்டியுடன் கொடுத்திருப்போம்
என்று தோன்றியது. இனி இவரிடம் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்து அந்த கடைக்கு போகிற
நாளை மாற்றி கடை முதலாளியிடமும் நான் சொல்லாமல் யாருக்கும் பணம் தரக் கூடாது என்று
சொல்லி விட்டேன்.
அப்படியும் ஒரு நாள் மடக்கிவிட்டார். அவர் கேட்கும்
முன்னரே நூறு ரூபாயை கையில் அழுத்திவிட்டு ”அவசரமா வேலை இருக்கு! வரேன்!” என்று கடந்துவிட்டேன்.
அதற்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன். நாலைந்து மாதங்களில் அவர் இன்னும் மெலிந்திருந்தார்.
இப்போது நானிருக்கும் நிலைமையில் வாரம் நூறு ரூபாய் அவருக்கு கொடுப்பதில் குறைந்துவிடப்
போவதில்லைதான். ஆனாலும் என்னவோ அவருக்கு ஏன் கொடுக்கவேண்டும் பிள்ளைகள் இல்லையா? சொத்து
இல்லையா? என்று கேட்டு திருப்தி பட்டுக்கொண்டேன்.
வெளியே பார்த்தேன். இன்னமும் அந்த மனிதர் அங்கேயேதான்
அமர்ந்திருந்தார். இன்றைக்கு பணம் வாங்காமல் விடமாட்டார் போலிருக்கே! நறுக்கென்று நாலு
வார்த்தை கேட்டுவிடுவோமா? வேண்டாம்! பெரிய மனுஷன்! மனசு சங்கடப்பட்டு தற்கொலை செய்துகொண்டால்
அந்த பழி நம்மீது விழும்! ஏன் இந்த பொல்லாப்பு? சந்திக்காமல் தவிர்த்து விடுவோம். மாலைவரை
கேபினை விட்டு வெளியே வரவில்லை. ஆறு மணி ஆனது எழுந்து வெளியே பார்த்தேன். அவரைக் காணவில்லை.
நிம்மதியுடன் அப்பாடா தப்பிச்சோம்! என்று வெளியே வந்தேன்.
அலுவலகத்தை விட்டு சாலையில் கால் வைத்ததும் அவர் பக்கத்து டீக்கடையில் இருந்து ஓடிவந்தார். “ தம்பி!
தம்பி! காலையில இருந்து உங்களைத்தான் பார்க்கணும்னு இருந்தேன்! பசி மயக்கம் ஒண்ணும்
முடியலை! அதான் ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்னு கடைக்கு போனேன்.”.
என்றவரை இடைமறித்து,
”என்ன டீக்கு பணம் வேணுமா?” என்றேன். அவர் முகம் மாறிப் போனது அடுத்த நொடி சகஜத்திற்கு
திரும்பி, ”இல்லே தம்பி காசு கொடுத்திட்டு சாப்பிட்டுட்டுதான் வரேன்! இந்தாங்க தம்பி!”
என்று ஒரு மஞ்சள் பையை நீட்டினார்.
”என்ன இது?” என்றேன்.
”பிரிச்சு பாருங்க
தம்பி” என்றார் உள்ளே ஐநூறு ரூபாய் கட்டுக்கள் இரண்டு இருந்தது.
அதிர்ந்து போய், “எதுக்கு இவ்ளோ பணம்?” என்றேன்.
”எல்லாம் உங்க பணம் தான் தம்பி! நீயும் உங்கப்பாவும்
எனக்கு கொடுத்த பணம் கணக்கெழுதி வச்சு இப்ப திருப்பிக் கொண்டாந்து கொடுக்கிறேன்!”
“நாங்க
கேக்கலையே!”
“நான் பிச்சைக்காரனா செத்தாலும் கடன்காரனா சாகமாட்டேன்
தம்பி! என் பிள்ளைக எனக்கு துரோகம் பண்ணப்ப
உங்கப்பா செஞ்ச உதவியை நன்றிகடனை என்னால தீர்க்க முடியாது! ஆனா ரொக்க கடனை தராம
போனா அந்த பாவம் என்னை சும்மா விடாது ”
“ஆனா…இவ்ளோ
பணம் ஏது?”
”பையனுங்களுக்கு கொடுத்தது போக என் பேருல கொஞ்சம்
நிலம் இருந்துச்சு! அதை பசங்களே பயிரிட்டு சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க! அதை விக்காம
வைச்சிருந்தேன். இப்ப வித்துட்டேன்! எல்லோரோட கடனையும் அடைச்சிட்டேன் கடைசியா உங்க
கடனையும் அடைச்சிட்டேன் மீதி பணத்தை என் கடைசி
காலத்தை கழிக்கவும் கர்ம காரியங்களுக்கும் பேங்க்ல போட்டிருக்கேன் வரட்டுமா தம்பி
! அப்பாவை கேட்டதா சொல்லு!” அவர் மெல்ல நடந்து மறைய நான் உறைந்து போய் நின்றேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
கண்ணீர் வர வைச்சது!
ReplyDeleteநெகிழ்ந்து விட்டேன் நண்பரே
ReplyDeleteமனதைத் தொட்ட கதை. இப்படியும் சில நல்லுள்ளங்கள்.....
ReplyDeleteகண் கலங்க வைத்துவிட்ட கதை...
ReplyDeleteஅருமை சகோதரரே...
மனம் நெகிழ்ந்து போய்விட்டது நண்பரே
ReplyDeleteஅவர் எங்கள் மனதிலும் ஆழமாகப் பதிந்துவிட்டார்.
ReplyDeleteகலங்க வைத்த கதை.
ReplyDeletemanathai kalangadithuvitta kathai suresh....
ReplyDelete