தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!
தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்! தித்திக்கும் தமிழில் இலக்கியசுவை நிரம்பும் சிலபாடல்களை ரசித்து வந்தோம். இடையில் இப்பகுதி நின்றுவிட்டது. தமிழ்சுவைக்கு ரசிகர்கள் ஒரு சிலரே! அவர்களும் வாசிக்க வராமல் போகவே ஓர் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தியிருந்தேன். இன்று பதிவு ஏதும் தேறவில்லை! என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் தமிழ் கை கொடுத்தது. நின்ற பகுதி தொடர்கிறது. எல்லோரும் திருமாலை அழகன் என்று புகழ்வார்கள்! இங்கே சொக்கநாத புலவரோ திருமாலை குருடன் என்கின்றார். எப்படி? முன்பொரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவன் என்ற சண்டை வந்தது. சிவனிடம் வந்து தீர்ப்பு கேட்டார்கள். என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து சொல்பவர்களே பெரியவன் என்று சொல்லி தீ மலையாக உருவெடுத்தார். பெருமாள் வராகம்( பன்றி ) உருவெடுத்து பூமியை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன பட்சியாக உருவெடுத்து முடியை காணப்பறந்து சென்றார். எவ்வளவு தூரம் சென்றும் இருவராலும் சிவனது அடி, முடியை காண முடியவில்லை! திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மா தான் முடியை தரிசித்ததாக கூற சிவனது முடியி...