யுத்தபூமி!

  யுத்த பூமி!


காலையில் கண்விழிக்கும் போதே சின்னவனுக்கு  காய்ச்சல் நெருப்பாய் சுட்டது. பெரியவன் உடலெல்லாம் அரிப்பதாக கூறினான். அந்த சின்ன சிமெண்ட் ஷீட் போட்டு தடுக்கப்பட்ட அந்த வீட்டில் வெக்கை அனலாய் வீட்ட சுழன்று கொண்டிருந்த மின்விசிறி வெக்கையை அதிகப்படுத்திக்கொண்டு இருந்தது.

   வேலைக்குச்சென்ற புருஷன் இன்னும் திரும்பவில்லை.

தேன்மொழிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! காலை மணி 7 ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி தானும் அந்த கார்மெண்ட் கம்பெனிக்கு சென்றுவிட வேண்டும். சின்னவனுக்கு ஜுரமாக இருப்பதால் ஸ்கூலுக்கு லீவ் போட்டு ஆஸ்பத்திரி கூட்டிச்செல்ல வேண்டும்.

    தூரத்து உருக்காலையில் இருந்து வெளிப்பட்ட புகை மண்டலம் நாசியைத் துளைத்து இருமலை வரவழைத்தது. அப்படி என்னத்தை போட்டுக் கொளுத்துவானுங்களோ! ஒரே புகை! நாத்தம்! என்னிக்கு இந்த கம்பெனி ஊருக்குள்ளே வந்ததோ அன்னிக்கே ஊருக்கு கிரகம் பிடிச்சுப் போச்சு! புலம்பிக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள் தேன்மொழி.

     அரைமணி நேரத்தில் பம்பரமாய் சுழன்று குளித்து டிபன் செய்து பெரிய பையனை எழுப்பினாள்.  “அம்மா! நானும் இஸ்கோலுக்கு லீவ் போட்டுடறேனே! எனக்கு உடம்பெல்லாம் எரியுது! என்றான் முதுகை சொறிந்துகொண்டே பெரியவன் தினேஷ். ” போய் முதல்ல குளிடா! அப்புறம் பார்க்கலாம்! உடம்பு பூரா அழுக்கு! பள்ளிக்கோடம் உட்டதும் நேரா போய் தெருப்பிள்ளைகளோட மண்ணுல விளையாட வேண்டியது! அப்புறம் சொறி வராம என்ன வரும்?” என்று மகனை குளிக்க அனுப்பி விட்டு சின்னவனுக்கு பால் கலந்து கொடுத்தாள். ஜுர வேகத்தில் அவனால் அதை சாப்பிடக்கூட முடியவில்லை!

   வாசலில் நிழலாடியது! பக்கத்துவீட்டு தமிழக்கா வந்து நின்று, ”ஏண்டி தேனு! இன்னுமா கிளம்பலை! ” என்றாள்.

   ”இல்லைக்கா! புள்ளைக்கு ஜுரம் அனலாக் கொதிக்குது! நைட் ஷிப்ட் வேலைக்கு போனவரு இன்னும் வரலை! எப்படி விட்டுட்டு வரதுன்னு யோசனையா இருக்கு! இன்னிக்கு லீவ் சொல்லிடலாமான்னு பார்க்கிறேன்!”

     ”இஷ்டத்துக்கு லீவ் எடுக்க நாம என்னடி கவர்மெண்டு உத்தியோகமா பார்க்கிறோம்? இன்னிக்கு நிந்தா நாளைக்கு வேலை போயிரும்! அப்புறம் அந்த காண்ட்ராக்ட் காரன் கிட்டே கெஞ்சி கூத்தாடி திரும்பவும் வேலை வாங்கிறதுக்குள்ளே நம்ம உசுரே போயிரும்! சின்ன புள்ளைக்கு துணையா பெரிய புள்ளை இருக்கட்டும்! நீ சீக்கிரம் கிளம்பற வழியைப்பாரு!”

     தமிழக்கா சொல்லுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது! நினைத்தவுடன் லீவ் எடுக்க முடியாது. ஆனது ஆகட்டும்! என்று அவசர அவசரமாக செய்துவைத்த உப்புமாவை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு சேலையை மாற்றிக்கொண்டு கிளம்புகையில் புருஷன் சிகாமணி எதிரில் வந்தான்.

     ”சின்னவன் கார்த்திக்கு ஜுரமாய் கொதிக்குது! முடிஞ்சா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க! எனக்கு வேலைக்கு நேராமாச்சு!”  என்றவள் கணவனின் பதிலுக்கு கூட காத்திராமல் வந்த பஸ்ஸில் ஏறி கையாட்டினாள்.

     சிகாமணி இரவு முழுதும் விழித்து வேலைப்பார்த்துவந்த களைப்பில் இருந்தான். வீட்டுக்கு வந்து குளித்து தூக்கம் போடலாம் என்று நினைத்தவனுக்கு பிள்ளையின் காய்ச்சல் கொஞ்சம் எரிச்சல்தந்தது. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் நீண்ட க்யுவில் காத்திருக்க வேண்டுமே என்று யோசித்தான். தனியாருக்கு கொடுக்க அவன் வருமானம் பத்தாதே! சரி பிள்ளைக்காக இன்றைய தூக்கத்தை இழக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து வீட்டுக்கு சென்று குளித்து மனைவி செய்து வைத்திருந்த சமையலை சாப்பிட்டு பிள்ளைகள் இரண்டையும் கிளப்பி கதவைப்பூட்டி கொண்டு அரசு மருத்துவ மனைக்குச் செல்ல பேருந்தில் ஏறினான். 
  
     நகரமே ஒரே போர்க்களமாய் இருந்தது. சாலையை மறித்து ஒரு பெரிய கூட்டமே நின்றிருந்தது. பஸ்கள் லாரிகள் கார்கள் என்று நீண்ட வரிசையில் நின்றது. சாலை மறியல் போராட்டம்!

   ”சே! நினைச்சா போராட்டம்! மக்களோட அவஸ்தை! இவனுங்களுக்கு தெரியறதே இல்லை!” என்று உரக்கவே முணுமுணுத்தான்.

      பக்கத்தில் இருந்தவர் இவனை உற்றுப்பார்த்தார்.” பின்னே என்ன சார்! தினமும் ஒரு கும்பல் இப்படி கொடிபிடிச்சுட்டு கிளம்பிடுது! மக்களோட கஷ்டம் தெரியுதா? இதோ புள்ளைக்கு ஜுரம் ஆஸ்பத்திரிக்கு போகணும். அரை மணி நேரமா இங்கேயே நிக்க வேண்டியிருக்கு! ஒரு இஞ்ச் கூட வண்டிங்க நகரவே இல்லை! இவங்க போராடி நம்ம உசுரை எடுக்கிறாங்க.” என்றான்.

        “உங்க உசுரை காப்பாத்தத்தான் தம்பி போராடுறாங்க!”
   ”என்ன சொல்றீங்க பெரியவரே! உசுரை காப்பாத்த போராடுறாங்களா?”

   ”உங்க ஊருலே உருக்காலை ஒண்ணு இருக்கு இல்லே!” “ ஆமாம்! நானும் அதுலேதான் வேலை செய்யறேன்!”

      ”என்ன வேலை செய்யறே?”
 “லேபர் ஒர்க்தான்!”

”போதுமான பாதுகாப்பு சாதனங்கள் கொடுத்திருக்காங்களா? ”
  ”எதுக்கு?”

”நீங்க உருக்கி எடுக்கிறபோது வெளியாகிற வாயு என்ன தெரியுமா? அது சுவாசிக்க ஏற்றதா தெரியுமா?”

   ”இதோ உன் பிள்ளை ஜுரத்துலே  படுத்துக்கிடக்கிறான்னா அதுக்கு மூல காரணம் என்னன்னு தெரியுமா?”

   ”ஜுரம் வர்றதுக்கு என்ன மூல காரணம் இருக்கபோது ஐயா?”
 ” இருக்கு! சொல்றேன் கேட்டுக்க!”

 “உங்க கம்பெனி உருக்கி எடுக்கும் போது வெளியேறுகிற வாயு நச்சு வாயு! அதை தொடர்ந்து சுவாசிச்சிகிட்டு வந்தா புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கு. உங்க கம்பெனி கழிவுகளை பூமியிலே கொட்டறீங்க! அந்த நச்சு கழிவுகள் பூமியிலே கலந்து நிலத்தடி நீரை மாசு படுத்துது. ஏற்கனவே நிறைய ஆழ்துளை கிணறு போட்டு தொழிற்சாலைக்கு தண்ணியை எடுத்துகிட்டாங்க. அதுலே கடல் மட்டம் உயர்ந்து நல்ல தண்ணி இல்லாம உப்பு தண்ணியா மாறிக்கிடக்கு!”

     ”தொழிற்சாலைகள் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகுதுன்னு மட்டும் பார்க்க கூடாது! அதனால என்ன நன்மை தீமைகள் இருக்குன்னு அலசி பார்த்து முடிவெடுக்கணும். இயற்கையை பாதிக்கிற எந்த தொழிலும் உலகத்துக்கு நன்மை தராது.”

     ”ஆனா! அந்த கம்பெனியிலே ஆயிரக்கணக்கான பேரு வேலை செய்யறோமே! எங்க வருமானத்துக்கு வழி?”

    ”இந்த கம்பெனி இல்லாத போது உங்க வருமானத்துக்கு என்ன பண்ணீங்க?”

  ”வயல் வேலைக்கு கூலி வேலைக்கு போனோம்! ஆனா அது நிரந்தரமா இல்லையே?”

     ”நிரந்தரமா வேலை கிடைக்குதுன்னு உடம்புலே கொஞ்சம் கொஞ்சமா விஷத்தை ஏத்திக்கறேன்னு சொல்றது எந்த விதத்துலே நியாயம்?”

   ” பசுமைக்காடா இருந்த பூமிகள்ல தொழிற்சாலைகள்னு ரசாயணங்களை கலந்து இப்ப மக்களை நோய்கள் என்ற யுத்த பூமியிலே போராட விட்டுட்டாங்க!”

      ”தினம் தினம் நோய்களோட ஆரோக்கிய குறைவோட இந்த மக்கள் போராடிகிட்டே இருக்க வேண்டியதா போயிருச்சு! இதுலே போராடி தோல்வியைத்தான் சந்திச்சுட்டு இருக்க வேண்டியதா போயிருச்சு!”

   ”நீங்க சொல்றது சரிதான் ஐயா! இந்த கம்பெனி வரதுக்கு முன்னே ஊர் நல்லாத்தான் இருந்தது. கம்பெனி வரவும் வயக்காடெல்லாம் மாறிப்போச்சு வெள்ளாமை குன்னிப்போச்சு!  ஊரே நோய்க்காடா மாறிக்கிட்டு இருக்கு!”

      ”உண்மையை புரிஞ்சிட்டா சரி! அரசியல்வாதிகள் தங்களோட வருமானத்துக்காகவும் அரசியலுக்காகவும் இப்படி ஒதுக்குப்புற பகுதிகள்ல ஆலைகளை தொடங்க அனுமதி கொடுத்து இத்தனை பேருக்கு வேலை வாய்ப்புன்னு விளம்பரம் பண்ணிப்பாங்க! இதையே ஒரு நகர்ப்புறத்துலே பண்ண சொல்லுங்க பார்க்கலாம்! இல்லே ஒரு முதலமைச்சரையோ வேண்டாம் ஒரு எம்.எல் ஏ வை வந்து இந்த குடியிருப்பு பகுதியிலே வந்து தங்க சொல்லுங்க பார்க்கலாம்! வரமாட்டாங்க!”

       ”போலிஸ் தடியடியில்  மறியல் களைய பேருந்து நகர்ந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு தீயணைப்பு வாகனம் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது.  தீ பிடிக்கிற இடத்துக்கு வரச்சொன்னா எல்லாம் முடிஞ்ச பின்னே வந்து நிப்பானுங்க!  இங்கே போராடறவனுங்களை விரட்ட வந்துட்டானுங்க!” என்றார் பெரியவர்.

     பேருந்து மெல்ல வேகம் எடுத்தது. அரசு மருத்துவமனையில் பையனுக்கு மருந்து வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான். மாலையில் வீடு திரும்பிய  தேன்மொழி ”என்னங்க இன்னும் வேலைக்கு கிளம்பலையா?” என்றாள்.

     ” இல்லே இனிமே அந்த கம்பெனிக்கு போகமாட்டேன்!”

  ” ஏங்க? உங்களுக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சா என்ன?”

  ”இப்பத்தான் சரியாகி இருக்கு! பல பேரு வாழ்க்கையை நாசமாக்கிற ஒரு கம்பெனியில் வேலை செஞ்சு வர காசு நமக்கு வேண்டாம். அது பலபேரோட சாபம். ”

     ”நீங்க ஒருத்தர் நின்னுட்டா அந்த கம்பெனி நின்னு போயிருமா?”
”போகாதுதான்! ஆனா ஒவ்வொருத்தரும் தன்னை பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தா போதுமா? பொதுமக்களையும் நினைச்சு பார்க்கணும். முதல்ல மாற்றம் நம்ம வீட்டிலிருந்து தொடங்கட்டும்! நாளைக்கு அந்த கம்பெனிக்கு போகப்போறேன்! ஆனா வேலைக்கு இல்லே!  கம்பெனியை மூடுன்னு சொல்லி போராட மக்களோட மக்களா நிக்கப் போறேன்.”

என் சக தொழிலாளிகள் கிட்டே பேசப்போறேன்!  என் மனசு மாறினா மாதிரி அவங்களும் மாறி போராட்டத்தில் கலந்துகிட்டா இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மாற்றம் வரும்! அது நம்ம வருங்கால சந்ததிகளுக்கு பயன்படும். தீர்மானமாய் சொன்ன கணவனை பெருமையாக பார்த்தாள் தேன்மொழி.

      தூரத்தில் கம்பெனியில் இருந்து வெளியேறும் புகை இருளை அதிகமாக்கி காட்ட கீழ்வானத்தில் மெல்ல நிலவு உதிக்க ஆரம்பித்தது.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இன்றைய சூழ்நிலைகேற்ற கதை... மன்னிக்கவும்... உண்மையான நிகழ்வு...

    ReplyDelete
  2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கதை அருமை

    ReplyDelete
  3. பல ஊர்களில் இது போன்று தொழிற்சாலைகளால் பொதுமக்கள் அன்றாடம் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்பு எப்படிப்பட்டது என்பதை கண்முன்னே நிறுத்துகிறது இந்தக்கதை.

    ReplyDelete
  4. சுரேஷ் நல்ல கதை. வாழ்த்துகள்..

    கீதா

    ReplyDelete
  5. நிதர்சனம்...மிக எதார்த்தமா கோர்வையா சொல்லிருகீங்க...

    இதில் நம் பங்கு என்ன என்பதே கேள்வி குறி..

    ReplyDelete
  6. காலத்திற்கேற்ற கதை
    அருமை

    ReplyDelete
  7. அழகான அவசியமான கதை.
    அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2