தித்திக்கும் தமிழ்! பகுதி 30
தித்திக்கும் தமிழ்! பகுதி 30
கோரைக்கால் ஆழ்வான்
கொடை!
புலவர்களை போற்றி
தகுந்த பொன் அளித்து போற்றும் புரவலர்களும் இருக்கிறார்கள். இன்று வா! நாளை வா! சென்றுவா
என்று அலைகழிக்கும் கருமிகளும் உலகத்தில் உண்டு.
இன்றைக்கு மட்டுமல்ல! அன்றைக்கும் புலவர்கள் வறுமையில்
வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்தார்கள். இப்படி இழுத்தடிக்கும் செல்வந்தர்களிடமோ மன்னர்களிடமோ யாரும் செல்வதில்லை!
சென்று அவமானப்பட நேர்கையில் அவர்களை போற்றுவதற்கு பதில் தூற்றிப் பாடி விடுவார்கள்.
ஒளவையாரும் இதில் விதிவிலக்கல்ல! அந்த நாளில் கோரைக்கால் என்ற ஊரில் ஒரு பெரும் செல்வந்தன்
இருந்தான். செல்வம் ஏகமாய் குவிந்திருந்தும் ஈயாக் கருமி. இது அறியாத ஒளவையார் அந்த
செல்வந்தனை புகழ்ந்து பாடி பரிசில் பெற நினைத்து அவனிடத்துச் சென்றார்.
ஆழ்வானும் ஒளவையாரை வரவேற்று அவர் புகழ்ந்த பாடல்களை
கேட்டு ரசித்தான். உங்கள் பாடல்கள் என் உள்ளத்தை கொள்ளையடித்துவிட்டது. நாளை வாருங்கள்
உங்களுக்கு ஒரு யானை தருகிறேன் என்று சொல்லி அனுப்பினான்.
ஒளவையாரும் யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும்
ஆயிரம் பொன்! அதைத்தருவதாக சொல்லியிருக்கிறாரே! நாளை வருவோம் என்று சென்று மறுநாள்
செல்வந்தனிடம் வந்தார். அப்போது நண்பர்களிடம்
பேசிக்கொண்டிருந்த ஆழ்வான். ஒளைவையே பல வேலைப்பளுக்கள்! அதில் தங்களுக்கு என்ன பரிசில்
தருகிறேன் என்று சொன்னதையே மறந்துவிட்டேன்! என்ன தருவதாகச்சொன்னேன்? என்று வினவினான்.
யானை! என்று ஒளைவை சொன்னதும் என்னது யானையா? ஆழ்வாரே
தவறு செய்துவிட்டீர்கள். யானை மன்னர்கள் மட்டுமே பரிசளிக்க கூடியது. நீங்கள் பரிசளித்தால் சேர,சோழ., பாண்டியர்கள் உங்கள் மீது கோபப்பட்டு
சண்டைக்கு வந்துவிடுவார்கள்! அதுமட்டுமல்ல உங்களிடம் நிறைய செல்வம் இருப்பதாக நினைத்து
அதை கவரவும் பார்ப்பார்கள்! என்றான் உடனிருந்த ஆழ்வானுக்கேற்ற நண்பன்.
அப்போது என்ன கொடுக்கலாம்?
குதிரை ஒன்றை கொடுத்துவிடலாம்!
சரி ஒளைவையே நாளை
வாருங்கள் குதிரை கொடுத்துவிடலாம்!
மறுநாள் ஒளவை சென்ற
போது சேவகனை கூப்பிட்டு ஒளவைக்கு வாங்கி வைத்துள்ள குதிரையை தோட்டத்தில் கட்டி வைத்துள்ளேன்.
அவிழ்த்து வா! என்றான்.
சென்ற சேவகன் நெடு
நேரம் கழித்து திரும்பி வந்து, குதிரை மிகவும்
முரட்டு குதிரையாக இருக்கிறது! கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓடிவிட்டது! இவ்வளவு நேரம்
முயன்றும் பிடித்துவரமுடியவில்லை என்றான்.
நல்ல வேளை! முரட்டு குதிரையை உங்களுக்குத் தந்து
அது உங்களை கீழே தள்ளி காயம் பட்டிருந்தால் நான் பெரும் பாவத்துக்கு ஆளாகியிருப்பேன்!
நாளை வந்துவிடுங்கள் நன்றாக பால் கறக்கும்
ஒரு எருமையைத் தந்துவிடுகிறேன்! என்றான் ஆழ்வான்.
ஒளவையும் விடாக்கண்டராக அடுத்தநாள் வந்தார். இதென்னடா
இந்த கிழவி இப்படி விடாமல் துரத்தி வருகின்றாள்
என்று புலம்பிய ஆழ்வான். எருமை எமனின் வாகனம்! அதனால் எருதை தந்துவிடலாம் என்று
எண்ணியுள்ளேன் நாளை வாருங்கள் என்றான்.
மறுநாளும் ஒளவை அவ்விடம் சென்றார். ஆழ்வான். எருதை
விட உங்களுக்கு நல்ல சேலை ஒன்றே சிறந்த பரிசாக இருக்கும் பெண்களுக்குச் சிறந்த பரிசு
சேலைதான். நாளை வாருங்கள் கண்டிப்பாக நல்லதொரு சேலையை பரிசாக வழங்குகிறேன் என்றான்
ஆழ்வான்.
ஒளவைக்கு பொறுமை எல்லை கடந்து போனது. ஆழ்வானின்
ஏமாற்று வித்தையை நினைத்து நகைத்தார். கோரைக்கால்
ஆழ்வானே! நாளை அந்த சீலையும் திரிந்து திரியாகி விடுமோ? என்று கேட்டார்.
ஒளவையின் ஏளனத்தை கேட்ட ஆழ்வான் தலைகுனிந்து நின்றான்.
ஒளவை பாடிய அந்தப்பாடல் இதோ!
“கரியாய்ப்
பரியாகி காரெருமை தானாய்
எருதாய்
முழுப்புடவை யாகித் திரிதிரியாய்த்
தேரைக்கால்
பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால்
ஆழ்வான் கொடை”
புலவர்களை போற்றாத
செல்வர்கள் இப்படி இகழ்ச்சியைத்தான் சம்பாதிக்க வேண்டும். அந்த இகழ்ச்சிப்பாக்களும்
சுவை நிறைந்து நம் தமிழின் அருமையை வியந்து ரசிக்க வைக்கிறது!
மீண்டும் அடுத்த
பகுதியில் ஓர் சுவையான பாடலுடன் சந்திப்போம்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அருமை நண்பரே இகழ்வதிலுகூட அழகுதான்.
ReplyDeleteமிக் மிக அருமை சுரேஷ்...நல்ல தமிழில் தூற்றினால் அதுவும் அழகாய் மாறிடுமோ!! செவிக்கு இனிமையாய்!!
ReplyDeleteகீதா
பதிவைப்படித்து முடித்ததும் பள்ளிக்கால நீதிநெறி வகுப்பில் அமர்ந்து வந்ததுபோல இருந்தது.
ReplyDeleteஎன்னே அழகு தமிழ்...!
ReplyDeleteதமிழ்ச்சுவையை ரசித்தேன்.அறம் பாடாமல் போனாரே....
ReplyDeleteஔவையார் இயற்றிய தனிப்பாடல் தொகுப்பில் 34 ஆம் பாடலாக இடம்பெறும் இந்த வெண்பா கோரைக்கால் என்னும் ஊரில் வாழ்ந்துவந்த வைணவ ஆழ்வான் ஒருவன் ஔவையாருக்கு இழைத்த அவமதிப்பைப் பற்றிச் சொல்கிறது. தங்கள் பதிவு மிக எளிய நடையில் இக்கதையை விளக்கியுள்ளது. நன்றி.
ReplyDelete