தினமணி கவிதை மணியில் வெளிவந்த என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை. சென்றவாரம் வெளியூர் சென்றதால் எழுதவில்லை! இந்தவாரம் வழக்கம் போல கவிதை இடம்பெற்றதில் மகிழ்ச்சி! தினமணி குழுமத்தினர். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!. 



காந்திக்கு ஒரு கடிதம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 07th October 2017 03:50 PM  |   அ+அ அ-   |  
அன்புள்ள காந்திக்கு ஆசையில் ஓர் கடிதம்!
பண்புள்ள இந்தியா உருவாகும் என்ற
நம்பிக்கையில் சுதந்திரத்தை மீட்டீர்!
நீவீர் சுடப்பட்டு இறக்கும்போது
அந்நம்பிக்கை மோசம் போனது!
அஹிம்சையை போதித்த உமக்கு
ஹிம்சையான ஓர் மரணம்!

அப்போதே துளிர்த்துவிட்டது இந்தியாவில்
அசத்தியமும் வன்முறையும் இலஞ்சமும்!
மெய் வருந்தி நீங்கள் பெற்ற சுதந்திரங்கள்
பொய்யே உருவான மனிதர்களால்
மீண்டும் அடிமையாக்கப்பட்டு மடிந்தது!

அஞ்சல் தலைகளிலும் ரூபாய் நோட்டுக்களிலும்
பாடப்புத்தகத்திலும் தேசப்பிதாவாக நீர்!
அக்டோபர் இரண்டு மட்டும் இரண்டு நிமிடம்
உன்னை நினைப்பர் போனால் போகிறதென்று!
மதுவிற்கு எதிராய் இன்று மாதர்கள் கூடி
மாபெரும் போர் நடத்த வேண்டியிருக்கிறது!

ஏழைகள் மேலும் ஏழைகளாகவே இருக்க!
பேழைகளில் பெரும் செல்வம் சேர்த்துக்கொள்கின்றனர்
மாநிலம் ஆள்வோர்!

மக்கள் நலமெல்லாம் மறந்து போய்
தன்னலம் ஒன்றே குறிக்கோளாய்
கொண்டு கோலோச்சும் ஆட்சியாளர்கள்
மறக்காமல் உன்னை ஒவ்வொருவருடமும்
மாலையிட்டு ஆராதிக்கிறார்கள்!

மகிழ்ச்சி பொங்க மீண்டும் பிறந்துவிடாதே!
சூழ்ச்சிகளுக்கு நீயும் பலியாவாய்!
காந்தி தேசம் இப்போது காவி தேசமாகி வருகிறது!
உன் மீதும் வர்ணம் பூசிவிடுவார்கள்!
உத்தமரே! சத்தியம் மெல்ல இறக்கும் தருவாயில்;
சாட்சியாக சிலையாக பார்த்துக்கொண்டிரும்!

பாரதம்! சுதந்திர பாரதம்! உன் கனா எல்லாம்
இப்போது வினாவாகி வீணாகிப்போகிறது!
உன் ஆயுதம் அஹிம்சை இப்போது முனை
மழுங்கிக்கிடக்கிறது! கூர் தீட்டவும்
போரெடுக்கவும் யாரும் இல்லை!

உன் உயிரை எடுத்தவர்கள் உன் கொள்கைகளையும்
உன் உடலோடு புதைத்துவிட்டார்கள்!
மீட்டெடுக்க வா! மீட்டெடுக்க வா!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2