தக்காளியால் தவித்த கதை!





நேற்று வீடுதிரும்பல் மோகன் குமார் ஒரு நல்ல ஆசிரியையைப் பற்றி பதிவிட்டு இருந்தார். இப்படி பல நல்ல ஆசிரியர்கள் பல மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். சிலர் விதிவிலக்காக ஏதோ கடமைக்கு பணியாற்றி சென்று விடுகின்றனர். நான் படித்த போதும் இப்படி சில நல்லாசிரியர்களும் சில கடமைக்கு பணியாற்றுபவர்களும் இருந்தனர். இது ஒரு டீச்சரிடம் நான் மாட்டிக்கொண்டு தவித்த கதை!

     அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆசான பூதூரில் இருந்து   வயல் வரப்புகளில் நடந்து பெரும்பேடு வரவேண்டும். அங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி இருந்தது. அது அப்போதுதான் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக மாறியிருந்தது. நடுநிலைப்பள்ளியில் இருந்த சிலர் அப்படியே உயர்நிலைப்பள்ளியிலும் பணியாற்றினார்கள். சிலர் புதிய ஆசிரியர்களாக வந்தனர். ஆனால் நானே அந்த பள்ளிக்கு புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை ஆசானபூதூர் ஆரம்ப பள்ளியில் படித்து விட்டு ஆறாம் வகுப்பிற்கு பெரும்பேடு வந்தவன் நான்.
   எப்படியோ ஆறாம் வகுப்பை முடித்து ஏழாம் வகுப்பினுள் நுழைந்தேன். அதுவரை ஆறாம் வகுப்பு வரை அறிவியல் ஆசிரியராக இருந்தவர் மாறி ஒரு புது ஆசிரியை பள்ளிக்கு வந்தார். அவர் பெயர் இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை. ஆறாம் வகுப்புவரை அறிவியல் ஆசிரியராக இருந்தவர் ஒரு ஆண். ரொம்ப ஜாலிப் பேர்வழி! அறிவியல் பாடத்தை என்னை எழுப்பி படிக்கச் சொல்வார். எனக்கு அப்போது “இன்றியமையாத” என்ற சொல் வாயில்  நுழையாது “இன்றிமாத” என்று  படிப்பேன். நிறுத்தச் சொல்லி பலமுறை திருப்பி சொல்ல வைப்பார்.
      அந்த பள்ளியின் அருகிலேயே ஒரு ஏரியும் அதன் கால்வாயும் ஓடிக் கொண்டிருக்கும். ஆகாயத்தாமரைகள் அந்த கால்வாயில் மண்டிக் கிடக்கும். இந்த ஆசிரியர் ஆகாயத்தாமரைகள் பற்றி பாடம் எடுக்கும் போது அங்கேயே கூட்டிச் சென்று அந்த செடிகளை கையில் எடுத்து விரிவாக விளக்குவார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் அவர்.
  அவர் அந்த ஊரிலேயே தங்கி இருந்தார். திடீரென அவரைப் பற்றி ஒரு வதந்தி பரவியது. அவர் தங்கி இருந்த வீட்டில் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று  சக மாணவர்கள் சொன்னார்கள். ரகசியம் பேசிக் கொண்டார்கள். அந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்ததும் அவர் மாறி விட்டார். அதற்கு காரணம் அவர் தங்கி யிருந்த வீட்டு பெண்ணை காதலித்தது தான். எனவே வீட்டு சொந்தக்காரர் அவரை அடித்து விட்டார் அதனால் மாற்றல் வாங்கி சென்று விட்டார் என்று பேசிக் கொண்டார்கள். ஆனாலும் அவர் ஒரு நல்லாசிரியராகத்தான் வகுப்பில் நடந்து கொண்டார். அவர் மாறிச் சென்றது எனக்கு வருத்தமாகவே இருந்தது.
   சரி எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டது. இப்போது இந்த அறிவியல் ஆசிரியை கதைக்கு வருவோம். இவர் வந்து பாடம் எடுக்கும் முறையே எனக்கு மட்டுமல்ல வகுப்பில் உள்ள ஒருவருக்கும் பிடிக்காமல் போனது. பழைய ஆசிரியர் போல இவர் மாணவர்களை எழுப்பி படிக்க சொல்லவில்லை தானே படித்து தானே விளக்கம் சொல்லிக் கொண்டு விரைவாக பாடங்களை முடித்து விடுவார். அதற்கான கேள்வி பதிலை குறித்தும் தர மாட்டார். நீங்களே தேடி கண்டுபிடித்து படியுங்கள் என்பார். இது ஒரு நல்ல முறை என்று இப்போது உறைத்தாலும் சிறிய வயதில் அது பெரிய குறையாக இருந்தது எங்களுக்கு.
     இப்படி ஒரு நாள் பாடம் எடுக்கையில் தான் நான் அவரிடம் வசமாக சிக்கிக் கொண்டேன். அன்று காய்கறி தோட்டங்கள் பற்றிய ஒரு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென உங்க வீட்டுல யார் யார்  வீட்டுல காய்கறி தோட்டம் வைச்சிருக்கீங்க? என்ன என்ன காய்கறியெல்லாம் பயிரிடரீங்க? நீங்கள்லாம் கிராமம்ங்கிறதால நிறைய இடம் இருக்குமே என்று கேட்க ஆளாளுக்கு ஏதேதோ சொல்ல என் பக்கத்தில் இருந்த நண்பன் டீச்சர் இவங்க வீட்டுல  தக்காளித்தோட்டம் இருக்கு என்று  மூட்டிக் கொடுத்து விட்டான்.
   அப்படியா வெரிகுட்!  நிறைய செடிங்க இருக்கா? நிறைய விளையுதா? என்று கேட்க
நானும் பெருமையாக ஆமாம் டீச்சர் நிறைய இருக்கு! நிறைய காய்க்கும் என்று சொல்லிவிட  அப்படீன்னா நீ நாளைக்கு வரும்போது எனக்கு தக்காளி கொண்டு வர்றீயா? என்று கேட்க நான் பேந்த பேந்த விழித்தேன்.
   என்னடா விழிக்கறே?
அதெல்லாம் கொண்டு வருவான்  டீச்சர்! நீங்க கவலையே படாதீங்க! என்றான் பக்கத்து நண்பன் சூழ்நிலை புரியாமல்!
  உண்மையில் என் வீட்டில் இரண்டு தக்காளி செடிகள் தான் இருந்தது. அதில் காய்க்கும் ஒன்றிரண்டு காய்களையும் எனது பாட்டி பறித்து அவ்வப்போது சமைத்து விடுவார். இதென்னடா வம்பா போச்சே! நான் தக்காளிக்கு எங்கே போவேன் என்று யோசித்து கொண்டிருக்கையிலேயே அடுத்த பீரியட் மணி எடுக்க சுரேஷ்! நாளைக்கு மறக்காம தக்காளி கொண்டு வந்து விடு என்று சொல்ல நான் பலியாடாய் தலையாட்டினேன்.
    வீட்டுக்கு சென்றேன்  செடியில் பார்த்தேன்! ஒன்றிரண்டு காய்களே இருந்தன. செம்பழமாக இருந்த அவைகளை பறித்தேன். பாட்டி திட்டினார். எதுக்குடா காயை பறிக்கறே? டீச்சர் கேட்டதாக சொன்னேன்.  மொத்தத்தில் கால் கிலோ கூட தேறவில்லை! பாட்டி வீட்டு சமையலுக்கு வைத்திருந்த இரண்டு தக்காளியையும் ஆட்டையை போட்டு ஒரு கவரில் போட்டு எடுத்து சென்று மறுநாள் டீச்சரிடம் கொடுத்தேன்.
  வாங்கி பிரித்தவர் முகம் சுளித்தார்! இதென்னடா எல்லாம் காயா இருக்கு! அதுவும் இவ்வளவு கம்மியா கொண்டு வந்திருக்கே? ஒரு கால் கிலோ கூட தேறாது போலிருக்கே! நிறைய எடுத்து வருவேன்னு பார்த்தேன் என்று எறிந்து விழுந்தார்.
  டீச்சர்! எல்லாம் அறுவடை பண்ணிட்டாங்க! திரும்பவும் காய்க்கட்டும் கொண்டு வந்து தறேன்! என்றேன். கிழிச்சே போ! பெருசா தக்காளி தோட்டம் அது இதுன்னு சொன்னே! இப்ப ரெண்டு தக்காளியை கொண்டு வந்து நீட்டறே சரி சரி போய் உக்காரு!  என்றார்
   அதற்கப்புறம் அவர் அடிக்கடி அந்த சம்பவத்தை சொல்லிக் காட்டி கொண்டே இருந்தார். அவர் மீது எனக்கு ஒரு வெறுப்பு ஏற்படும் படி ஆகி விட்டது. அடுத்த வருடம் அந்த பள்ளியில் இருந்து நான் விலகும் சமயம்! (பாதியில் விலகினேன்) தலைமை ஆசிரியர் நல்லா படிக்கிற பையன் நீ! எதுக்கு இந்த ஸ்கூலை விட்டு போறே? உனக்கு இங்க என்ன குறை? டீச்சர்ஸ் யாராவது ஏதாவது சொன்னாங்களா? என்று கேட்டபோது இந்த டீச்சரை போட்டுக் கொடுக்கலாமா என்று கூட தோன்றியது.
  ஆனாலும் எதுவும் வாய் திறக்க வில்லை!
என்ன பண்ணுவது எனக்கு அமைந்த டீச்சர் இப்படி? ஆனால் அந்த பள்ளியை விட்டு நான் பஞ்செட்டி பள்ளிக்கு வந்த போது அங்கிருந்த அறிவியல் ஆசிரியை நான் மறக்க முடியாது. அருமையாக பாடம் நடத்தி  பெருமை கொள்ள வைத்தார்.  இப்படி சிலர் இருக்கையில் அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது ஆசிரியர்களை பற்றி வரும் செய்திகளை பார்க்கும் போது அவர்களே மேல் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
டிஸ்கி} படத்தில் உள்ள டீச்சர்களுக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை! டீச்சர் என்று கொடுத்து கூகுள் இமேஜில் தேடிய போது கிடைத்தவை இவை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments


  1. என்ன செய்வது நண்பரே
    எவ்விடத்திலும் சிலர் இப்படியும் அப்படியுமாகத்தான் இருப்பார்கள்

    ReplyDelete
  2. சுரேஷ் தக்காளியால் தவித்த அனுபவத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் இடத்தில் மழை அனுபவம் எப்படி? பதிவிடுங்களேன்.

    ReplyDelete
  3. மனிதர்கள் பலவிதம் மழையால் தங்களுக்கு ஏதும் பிரட்சினை இல்லையே நண்பரே...

    ReplyDelete
  4. இப்படியும் அப்படியும் தான் இருக்கிறார்கள் ஆசிரியர்கள்..சிலர் தெய்வமாக நினைத்துச் செய்கிறார்கள், சிலர் ஊதியத்திற்குச் செய்கிறார்கள்.

    ReplyDelete
  5. நல்லவர்களும் உண்டு இப்படியும் சிலர் உண்டு.....

    நீங்கள் தற்போது நலமா?

    ReplyDelete
  6. தளிர்,

    எனக்கு இதுபோன்ற சொந்த தோட்ட அனுபவம் இல்லை என்றாலும், தோட்டம் வைத்திருந்த என் நண்பரோடு விளையாட்டு வகுப்பு நேரத்தில் தோட்டத்திற்கு சென்று வெண்டை,தக்காளி , கத்தரி, சிறு கீரை, பச்சை மிளகாய்களை பறித்துக்கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்த அனுபவம் உண்டு.

    ஆனால் அந்த ஆசிரியர் கடையில் வாங்கும் விலையைவிட அதிகமான காசு கொடுத்து அதை நண்பரின் பெற்றோரிடம் கொடுக்க சொல்லுவார், அவருக்கு தேவை புதிய-சுத்தமான காய்கறிகள் என்பதால்.

    நல்ல நினைவலை.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  7. அடடா நம்ம பாடசாலை வாழ்க்கையிலும் நிறைய நடந்திருக்கே எல்லாத்தையும் தூசு தட்டி எழுப்பிட்டீங்க பாஸ் மிக அருமை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சில நேரங்களில் சில மனிதர்கள்!

    ReplyDelete
  9. எல்லாத்தொழில்களிலும் இப்படியும் அப்படியும்தான்.

    ReplyDelete
  10. ஆசிரியத் தொழிலைப் புனிதமாக நினைத்து எடுப்பவர்களுக்கிடையில் இப்படியும் சிலர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் மிகவும் குறைவுதான். (நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் எல்லோரும் நல்லாசிரியர்கள் அல்ல...)

    ReplyDelete
  11. மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்துவிட்டால் என்ன ஆவது?

    ReplyDelete
  12. ஹூம், அல்பம் போல அந்த ஆசிரியர்! :(

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!