கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்!

கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்!


சயனாவரம் என்ற கிராமத்தில் மாடசாமி என்பவன் வசித்துவந்தான். அவனது மனைவி மேகலா. மாடசாமி ஓர் அப்பாவி. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவான். சூது வாது தெரியாதவன். தாய் சொல்லை தட்டாதவன். அவனுடைய தாயான மகாதேவி மருமகள் மேகலாவை படாத பாடு படுத்துவாள்.
     உட்கார்ந்தால் குற்றம், நிமிர்ந்தால் குற்றம், படுத்தால் குற்றம் என்று குற்றம் கண்டுபிடித்து பெயர்வாங்கும் புலவர்கள் வகையைச் சேர்ந்தவள் மகாதேவி. மேகலாவோ இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் குடும்ப வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ஆனாலும் மகாதேவிக்கு ஏனோ மேகலாவை பிடிக்கவில்லை. சதா திட்டிக்கொண்டே இருப்பாள்.
    சமையலுக்குக் கூட காய்கறிகளை எண்ணித்தருவாள். சமையல் முடிந்ததும் எண்ணிப் பார்ப்பாள். உருளைக்கிழங்கு, வாழைக்காய், பூண்டு என்று அனைத்திற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பாள். அதற்கு குறைந்தால் மருமகளை பாடித் தீர்த்துவிடுவாள். இத்தனைக்கும் வக்கணையாக சமைப்பது மருமகள். அதை தானும் தன் மகனும் மட்டுமே தின்றுவிட்டு வெறும் பழைய சோறை மருமகளுக்குப் போடுவாள் மகாதேவி. புளி, மிளகாய் எல்லாம் சாப்பிட்டால் உடம்பு சோம்பேறியாகிவிடும். இதை சாப்பிடு போதும்! என்று சொல்லிவிடுவாள் மகாதேவி.
    மனைவியின் கஷ்டம் மாடசாமிக்குப் புரிந்தாலும் தாயை எதிர்த்து எதுவும் செய்யமுடியாமல் இருந்தான். ஒருநாள் மனைவியை அழைத்து, “ நீ உன் தாய் வீட்டிற்கு சென்று விடு! இங்கு ஏன் கஷ்டப்படுகிறாய்?” என்று சொன்னான். ஆனால் மேகலாவோ அதை மறுத்துவிட்டாள்.  “எல்லாம் நான் செய்த வினையின் பயன்! தாய் வீட்டீற்கு சென்று அவர்களை துயரம் அடையச் செய்யேன்! என் துயரம் என்னோடு போகட்டும்!” என்றாள் மேகலா.
    ஒரு நாள் மகாதேவி, எட்டுப் பிஞ்சு கத்தரிக்காய்களை கொண்டுவந்து மருமகளிடம் கொடுத்து அதை எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வைக்கச் சொன்னாள்.
    மேகலா இந்த வகை குழம்பு செய்வதில் தேர்ந்தவள். அவற்றை நன்கு கூறிட்டு அவற்றில் தேவையான எள்ளுப்பொடியை திணித்து நிறைய எண்ணெயிட்டுவெங்காயத்தை வதக்கி அதன் பின் இந்த கத்தரிக்காய்களை இட்டு வதக்கி அவை வெந்த பின் மிளகாய் புளி அரைத்து உப்பு சேர்த்து சிறிது தீயிட்டு நன்றாக வற்றியபின் இறக்கி வைத்து அதனுள் மீண்டும் சிறிது எள்ளுப்பொடி தூவி மூடிவைத்தாள்.
   இத்தனை நாள் சபலப்படாத மேகலாவுக்கு இன்று செய்த சமையலின் ருசி நாவில் நீர் ஊறியது. எள்ளுப்பொடியின் மணமும் எண்ணெய் கத்தரிக்காய் வாசமும் அவள் மனதை வென்றன. ஒன்றை எடுத்து தின்று பார்க்கலாம் என்றாலும் மாமியார் என்ன சொல்வாளோ? என்ற பயம்! ஆனால் நாக்கோ ருசி கேட்டது. ஆவலில் ஒரு கத்திரிக்காயை எடுத்து அதில் ஒரு கீற்றை பிரித்து வாயில் போட்டாள். மிக்க சுவையாக இருந்தது. அடுத்த துண்டை வாயில் போடும் முன் மாமியார் வந்துவிட்டாள்.
       “அடியேய்! என்ன காரியம் செய்தாய்? எட்டுக் கத்தரிக்காயில் ஒரு கத்திரிக்காயை மூளியாக்கிவிட்டாயே! அடியேய் கத்திரிக்காய் மூளி! உன் நாக்குக்கு இந்த சுவை கேட்கிறதா? என் உத்தரவு இல்லாமல் நீ எப்படி ஒரு பிஞ்சை சாப்பிடலாம்! இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை!”  என்று வானுக்கும் பூமிக்குமாய் குதித்தாள்.
   “அடேய் மாடசாமி! இவள் நம் வீட்டிற்கு ஆகாதவள்! இவளைக் கொண்டுபோய்  மயானத்தில் உயிரோடு கொளுத்திவிடு!” என்று கட்டளையிட்டாள்.
    தாய்ச் சொல்லை மீறாத அந்த தனயனும் மனைவியை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்று  மயானத்தில் நிறுத்திவிட்டான். தீ மூட்ட விறகு தேடி சென்றான். அந்த சமயத்தில் அந்த பக்கமாக ஒரு வழிப்போக்கர் வந்தார். என்ன இது மயானத்தில் மூட்டை கிடக்கிறதே என்று அதை பிரித்தார். உள்ளே இருக்கும் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் “யாரம்மா! நீ! ஏன் இந்த மூட்டையில் கட்டி வைத்தார்கள்?” என்று வினவினார்.
   மேகலா தன்னுடைய கதை முழுவதையும் கூறினாள். அவர்   “வா மகளே! நாம் இந்த நாட்டு அரசனிடம் சென்று முறையிடலாம்! உன் மாமியாருக்கும் கணவனுக்கும் தண்டனை பெற்றுத் தரலாம்!” என்றார்.
   மேகலாவோ,  “வேண்டாம் ஐயா! என் மாமியார் கொடுமை செய்தாலும் என் கணவர் ஒரு அப்பாவி! இருவரையும் தண்டித்துவிட்டால் நான் எங்கு போவது? என் விதி இப்படி இருந்தால் அப்படியே இருக்கட்டும்” என்றாள்.
    “சரி மகளே! இந்த சாக்கில் வேறு உதவாத துணிமணிகள் வைக்கோல்களைபோட்டு கட்டி வைத்து விடுகிறேன்! நீ வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்!” என்று சொல்லி மேகலாவை விடுவித்தார் அந்த வழிப்போக்கர்.
   மேகலா உயிர் வாழும் ஆசையின்றி அந்த மயானத்தின் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தாள். அந்த காட்டிற்குள் ஒரு காளி கோயில் இருந்தது. அந்த காளியிடம் சென்று தன் மனக்குறைகளை முறையிட்டாள். பின் அங்கிருந்த தூணில் மோதி உயிர் விடத் துணிந்தாள். அப்போது காளி தேவி காட்சி கொடுத்து,  “பெண்ணே! வருந்தாதே! இந்த கோவிலில் நீ நினைத்த எல்லாம் வரும். என்னை வழிபட்டுக் கொண்டு சுகமாய் இரு!” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.
     அதன் பின் மேகலா நினைத்த பொருட்கள் அந்த கோயிலுக்கு வந்தன. அதைக்கொண்டு காளியை வழிபட்டபடி ஆண்டுகளை கழித்து வந்தாள். மூன்று ஆண்டுகள் இப்படி ஓடிவிட்டன. ஒருநாள் ஓர் அழகிய பட்டாடையை வேண்டினாள். அது கிடைத்ததும் காளிதேவிக்கு சார்த்தி வழிபட்டாள். மறுநாள் அதை அவள் அணிந்து கொண்டாள். அப்போது, அவளுக்கு இது போன்ற பட்டாடையை மாமியாருக்குத் தந்தால் நன்றாக இருக்குமே! என்று எண்ணினாள்.
   அவள் மனதை அறிந்த காளி தேவி பிரத்யட்சமாகி, பெண்ணே! உனக்கு இன்னும் குடும்ப பாசம் போகவில்லை! இங்குள்ளவற்றில் தேவையான ஆடை அணிகலன்களை எடுத்துக் கொண்டு சென்று சிலகாலம் கணவனுடன் வாழ்ந்துவிட்டு வா! நான் உன்னுடன் இருப்பேன்! பயமில்லாமல் செல்! என்றாள்.
   மேகலாவிற்கு காளி கோயிலை விட்டு பிரியவும் மனமில்லை! அதே சமயம் புருஷனின் நினைவும் வரவே, காளிதேவிதான் உடனிருப்பதாக சொன்னாலே என்று ஆடைகள் அணிகலன்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தாள்.
   இப்போதைய நிலையில் மகாதேவிக்கு மருமகளை அடையாளமே தெரியவில்லை! “ யாரம்மா நீ! எதற்கு இங்கு வருகிறாய்?” என்று கேட்டாள்.

    “மாமி! நான் தான் உங்கள் மருமகள்!”
   “ அடியேய்! கத்தரிக்காய் மூளியா நீ! இத்தனை  அழகாய் எப்படி மாறினாய்! இவ்வளவு நகைகளும் பட்டாடைகளும் உனக்கு ஏது?”
   இப்போது மேகலாவுடனே இருந்த காளி பேசினாள். “ அத்தே! உங்கள் மகன் என்னை தீயிட்டதும் நான் வானுலகம் போய் மாமாவை சந்தித்தேன்! அவருடைய ஆதரவில் இத்தனை நாள் இருந்தேன். அவர் உங்கள் நினைவாகவே உள்ளார். அவர்தான் உங்களைப் பார்த்து இதையெல்லாம் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்” என்றாள்.
   “ அப்படியா மருமகளே! அவர் பாசக்காரர்தான்! நான் படுத்திய கொடுமையில் தூக்குப் போட்டு செத்துப் போனார்! இப்போது வசதியாக இருக்கிறார் போல! அதனால்தான் நான் செய்த கொடுமைகளை மறந்து இத்தனை பொருள்களை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.!”
    “இதென்ன பொருள் அத்தே! வானுலகில் அவர் மாளிகையில் இருப்பதை கணக்கிட்டால் இதெல்லாம் சின்னதாகி விடும்!  நீங்கள் அங்கு வரமாட்டீர்களே! என்று அவர் வருந்துகிறார்!”
   “ அப்படியா! நான் ஏன் வராமல் போகிறேன்! இங்குதான் வசதியில்லாமல் வேலை செய்ய வக்கில்லாமல் இருந்தார்! தூற்றிக் கொண்டிருந்தேன்! அங்கே பெரும் பணக்காரராக இருந்தால் அதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டாமா!  மகனே மாடசாமி! என்னை உடனே மயானத்தில் வைத்து கொளுத்து! நான் உன் அப்பாவிடம் போக வேண்டும். அங்குள்ள சொத்துக்களை பார்த்து அனுபவிக்க வேண்டும்!” என்றாள்.

   மாடசாமியும் தாயை அவள் சொன்னபடியே தீயிட்டு கொளுத்திவிட்டான்.
பின்னர் வீடு திரும்பிய அவன் மேகலா! அம்மா அப்பாவிடம் போய் சேர்ந்திருப்பார்களா? எப்போது திரும்புவார்கள்? என்று அப்பாவியாக கேட்டான்.
   உங்கப்பா அம்மாவைப் பிரிந்து இத்தனை நாள் ஏக்கமாய் இருந்தார்! இனி அவர் அவர்களை அனுப்புவாரோ மாட்டாரோ யாருக்குத் தெரியும்? அவர்கள் அங்கேயே சுகமாய் இருக்கட்டும்! நாம் இங்கே சந்தோஷமாக இருப்போம்! என்றாள் மேகலா.
   அதுவும் சரிதான்! என்றான் மாடசாமி.

மதியால் மாமியாரை வீழ்த்திய மேகலா அதன் பின் மகிழ்ச்சியோடு மாடசாமியோடு குடும்பம் நடத்தினாள்.

 (செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

   

Comments

  1. நல்லதொரு கதை சார்,,, பேராசை பெரு நஸ்டம் உட்பட‌ சிறுவர்களுக்கான பல நீதியுடன்...

    ReplyDelete
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது

    ReplyDelete
  3. வழக்கம்போல அருமையாக சிந்திக்க வைத்தது நண்பரே...

    ReplyDelete
  4. செவிவழிக் கதையை ஏட்டில் ஏற்றி இருக்கிறீர்கள்...
    அருமையான கதை...
    பகிர்விற்கு நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
  5. அருமையான கதை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  6. நல்ல கதை. ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete
  7. கதையினூடே கருத்தை சிறப்பாகப் பதியும் தங்களின் நடை பாராட்டத்தக்கது. நன்றி.அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2