ஒரு மாட்டினால் ஜீவனம்! பாப்பா மலர்!

ஒரு மாட்டினால் ஜீவனம்! பாப்பா மலர்!


சத்தியவேடு என்ற ஊரிலே ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் வாழ்ந்துவந்தார். பல தரும காரியங்களிலும் ஈடுபட்டாலும் அவருக்கு பெயர் சொல்ல ஒரு புத்திரன் இல்லை. பல வழிபாடுகள், வேண்டுதல்களுக்குப் பின்னர் அவர் மனைவி கருவுற்று ஒரு புத்திரனை பெற்றெடுத்தாள்.
   அப்படி தவமிருந்த பெற்ற பிள்ளை அதனால் அது பிறந்தவுடனேயே செல்வந்தர் ஊரில் உள்ள ஏழைகளுக்கும் அந்தணர்களுக்கும் விருந்து அளித்து தானங்கள் செய்தார். அந்த தானத்தை பெற ஒரு ஞானி ஒருவரும் அந்த வீட்டிற்கு வந்தார். அப்போது ஞானியின் கண்களுக்கு பிரம்ம தேவன் அவ்வீட்டினுள் நுழைவது தென்பட்டது.
    “பிரம்ம தேவரே! எங்கு இப்படி அவசரமாக செல்கிறீர்?” ஞானி கேட்டார்.
  யார் கண்ணுக்கும் தெரியாத நம்மை ஒருவன் பார்க்கிறான் என்றால் அவன் ஞானியாக இருக்க வேண்டும் என்று ஊகித்த பிரம்மதேவன், “பிறக்கின்ற குழந்தையின் தலையெழுத்தை எழுதச்செல்கிறேன்! என்னை தடை செய்யாதீர்!” என்று சொல்லிச்சென்றார்.
  பிரம்மன் திரும்பியதும், “அந்த குழந்தையின் தலையிலே என்னை எழுதினீர்?” என்றுகேட்டார் ஞானி.
   “ அது தேவ ரகசியம்”
  “தேவ ரகசியம் என்றால் நீர் என் கண் முன்னே தென்பட்டது எப்படி? அந்த ரகசியத்தை எனக்கு சொல்லும்! நான் யாரிடமும் சொல்லமாட்டேன்!” என்றார் ஞானி.
    “ஞானியே! பிறக்கின்ற இந்த குழந்தைக்கு ஒரு மாட்டினால் ஜீவனம் என்று எழுதியிருக்கிறேன்!”
   “ என்ன! கோட்டீஸ்வரனின் குழந்தைக்கு ஒரு மாட்டினால் தான் ஜீவனமா? ஆச்சர்யமாக இருக்கிறதே! இது அதிசயம்தான்!” என்று வியந்தார் ஞானி.
   பின்னர் அங்கிருந்து ஞானி கிளம்பிவிட்டார். இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஊர் வழியே அந்த ஞானி வரும்படி ஆயிற்று. அப்போது அவருக்கு அந்த கோடீஸ்வரனின் ஞாபகம் வந்தது. பிரம்ம தேவரின் எழுத்து என்ன ஆனது என்று பார்க்கலாம்! என்று  அந்த குழந்தையைத் தேடிச் சென்றார்.
   அவர் பல இடங்களில் தேடியும் கோடீஸ்வரனின் வீட்டை காணமுடியவில்லை. இறுதியில் ஒரு கூரைக் குடிசையில் அந்த கோடீஸ்வரனின் பிள்ளையைப் பார்த்தார். அவன் ஞானியை வணங்கினான். ஞானியோ அவனை நலம்விசாரித்தார்.   “குழந்தாய்! நீ பிறக்கும்போது நான் உன் தந்தையிடம் யாசகம் கேட்டு வந்தேன்! அப்போது இந்த ஊரில் அவர்தான் செல்வந்தர்! ஆனால் இன்று நீ இந்த கூரையின் கீழ் இருக்கிறாய்?” என்ன நடந்தது? என்று வினவினார்.
   உண்மைதான் சுவாமி! என் தந்தை கோடீஸ்வரர்! அவருடைய ஒரே புதல்வன் நான். என் பெயர் தனக்கோடி. என் தந்தை மறைந்ததும் அவருடைய செல்வங்களை கொண்டு பல தொழில்கள் செய்தேன். அனைத்திலும் நட்டம் ஏற்பட்டு செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டேன். இந்த குடிசை வீடும் ஒரு கிழட்டு மாடும் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. அடுத்த வீட்டுக்காரனிடம் ஒரு வண்டி இருக்கிறது. பகலில் இந்த நோஞ்சான் மாட்டைக் கண்டால் எவனும் வண்டியில் ஏறமாட்டான். அதனால் இரவில் பக்கத்து வீட்டுக்காரனிடம் வண்டியை வாடகைக்கு வாங்கி வண்டி ஓட்டுவேன். இரவெல்லாம் உழைத்தால் பத்து ரூபாய் கிடைக்கும். ஐந்து ரூபாய் வாடகை போய்விடும். மீதி ஐந்து ரூபாயில் பாதி மாட்டு உணவிற்கும் பாதி எங்கள் உணவிற்கும் பயன்படுகிறது. இப்படித்தான் கால்வயிறு கஞ்சி குடித்து கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றோம் என்று கண்ணீர் வடித்தான்.
   “ குழந்தாய்! உன் தந்தையின் செல்வச் செழிப்பை நான் அறிவேன்! அவர் மகனான நீ கஷ்டப்படுவது வருத்தமாக இருக்கிறது! நான் சொல்வதைக் கேள்! இந்த மாட்டை விற்றுவிடு! நீ சுகப்படுவாய்!” என்றார் ஞானி.
   “இதென்ன யாராவது தன் கையாலேயே தன் கண்ணை குத்திக் கொள்வார்களா? இந்த மாட்டினால்தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம்! இதையும் விற்றுவிட்டால் அப்புறம் பிழைப்புக்கு வழி? நாங்கள் மூவரும் பட்டினியால் சாவதா?” என்றான் தனக்கோடி.
   “ குழந்தாய்! நான் உனக்கு நன்மையே சொல்வேன்! தயங்காதே! மாட்டை விற்றுவிடு! என்றார் ஞானி.
   அவரது சொல்லை மீற முடியாத தனக்கோடி அந்த மாட்டை விற்றான். அது நோஞ்சான் மாடு என்பதால் இருநூறு ரூபாய்க்குத்தான் விற்றது. ஞானி அந்த பணத்துக்கு பொருட்கள் வாங்கி விருந்து சமைத்து ஏழைகளுக்குப் போடச்சொன்னார்.
   “சுவாமி நானே ஏழை! இதில் ஏழைகளுக்கு விருந்து போட்டுவிட்டால் நாளை என்ன செய்வது?”
  “ அதை பிறகு சொல்கிறேன்! சொல்வதைச்செய்!”
தனக்கோடியும் ஞானியின் சொல்படி அன்ன தானம் செய்தான். அன்றிரவு தூக்கம் வராமல் தவித்தான். சிறுநீர் கழிக்க தோட்டத்திற்கு சென்றான்.  ஒரு மாட்டினால் ஜீவனம் என்பதால் பிரம்ம தேவர் அங்கே ஒரு மாட்டைக் கொண்டு வந்து கட்டி வைத்து இருந்தார்.அங்கு அவன் தோட்டத்தில் நல்ல உயர்ந்த ஜாதி காளைமாடு இருந்தது. அவனால் நம்பவே முடியவில்லை! உடனே ஓடிவந்து ஞானியிடம் சொன்னான். அவரோ இது உன்னுடைய மாடுதான். போய் தூங்கு என்றார். அவனுக்கு தூக்கமே வரவில்லை! ஒரு வண்டி செய்து கொண்டு ஓட்டினால் நல்ல வருமானம் வரும் என் காலம் கழிந்து போகும் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.
   அதிகாலையில் ஞானி அவனிடம் இந்த மாட்டை சந்தையில் கொண்டு சென்று விற்றுவிடு என்றார்.
  தனக்கோடிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் ஞானியின் சொல்லை மறுக்க வில்லை! அன்று ஆயிரம் ரூபாய் வந்தது. அதை மீண்டும் அன்னதானம் செய்யச் சொன்னார் ஞானி. அவ்வாறே செய்தான் தனக்கோடி.
   மாட்டினால் ஜீவனம் என்று எழுதி விட்டதால் அன்றும் பிரம்ம தேவர் அவன் தோட்டத்தில் ஒரு மாட்டை கட்டிவைத்தார்.
   இதையும் விற்றுவிடு என்றார் ஞானி.
 “ஏன் சுவாமி?”
   “இதை விற்றால் நாளை மறுபடியும் ஒரு மாடு வரும்!”
  “விற்காவிட்டால்?”
   “வராது!”
இவ்வாறு தினம் ஒரு மாடு வீதம் முப்பது நாட்களில் முப்பது மாடுகள் வந்தன. அனைத்தையும் விற்று அன்ன தானம் செய்து ஏழைகளுக்கு துணிமணிகள் கொடுத்து மகிழ்வித்தான்.

பிரம்ம தேவர் ஞானியின் முன் தோன்றினார். ஐயா! ஞானியாரே! உன்னால் எனக்குத் தொல்லை! தினமும் ஒரு மாட்டை நான் தேட வேண்டியிருக்கிறது! என்றார்.
  அது உன் கவலை!
 “வேண்டாம் ஐயா! நீர் உன் வழிச் செல்லும்! அவன் தலைவிதிப்படி நடக்கட்டும்!”
   அவன் தலைவிதி ஒரு மாட்டினால் ஜீவனம் என்றால் எப்படியாவது ஜீவிக்கட்டும்! மாட்டை விற்று ஜீவித்தால் என்ன? மாட்டினால் பிழைப்பு நடத்தி ஜீவித்தால் உனக்கென்ன கஷ்டம்! அதை நான் தடை செய்யவில்லையே!
   பிரம்ம தேவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஐயா! ஞானியாரே! நான் தோற்றேன்! என்னால் தினமும் ஒரு மாட்டை தேடிப்பிடித்து அவன் கொல்லையில் விட முடியாது. ஏதாவது வரம் கேளும்! என்னை விடும் என்றார்.
    “அப்படியானால் இவன் பழைய படி செல்வந்தனாக மாற அருள் புரியுங்கள்!”
   “இவன் போன பிறவியில் பல பாவங்கள் செய்துள்ளானே?”
  “ஆனால் இந்த பிறவியில் அன்ன தானங்கள் செய்து அந்த பாவங்களை போக்கி விட்டானே!”
   பிரம்ம தேவர் தலை அசைத்தார். உண்மைதான்! விதியைக் கூட உன் மதியால் வென்றுவிட்டீர் ஞானியாரே! ஒரு மாட்டினால் ஜீவனம் செய்து கொண்டிருக்கும் தனக்கோடி மறுபடியும் செல்வந்தனாவான். அவன் கொல்லையில் இருக்கும் மாடு தங்கமாகும். அதை விற்று மறுபடியும் செல்வந்தனாகி வளமுடன் வாழ்வான். விதியும் பொய்க்காது மதியும் வென்றது. என்று சொல்லி மறைந்தார் பிரம்மா.
   பிரம்மா சொன்னபடி தங்க மாடு கொல்லையில் தோன்றியது. மறுநாள் ஞானி அதை விற்று பணத்தைக் கொண்டு தொழில் தொடங்கி அதில் வரும் பணத்தில் சிறிது தானமும் செய்து வாழ்ந்துவரும்படி தனக்கோடிக்கு ஆசிர்வாதம் செய்துவிட்டு  விடைபெற்றார்.
   தனக்கோடியும் அவ்வாறே அதை விற்று தொழில் தொடங்கி வளமுடன் வாழ்ந்து வந்தான்.


 (செவி வழிக்கதை)

Comments

 1. கதை நல்ல சுவாரசியமாய் போனது நண்பரே.....

  ReplyDelete
 2. நல்லா இருக்கு சார் கதை...

  ReplyDelete
 3. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
 4. இதுவரை கேள்விப் படாத கதை. அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 5. சுவாரசியமான கதை....

  நிஜத்திலும் இப்படி தங்க மாடு கிடைத்தால் நன்றாகத் தான் இருக்கும்!

  ReplyDelete
 6. சிறந்த பகிர்வு
  இனிதே தொடருங்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2