பிள்ளை பிறந்தான்!

பிள்ளை பிறந்தான்!

கடந்த திங்களன்று இரவு சீக்கிரத்தில் உறக்கம் பிடிக்கவில்லை! அம்மா செய்து கொடுத்த தோசை வேறு தாகத்தை கிளப்பிக் கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணியான மனைவி அறையில் கட்டிலில் படுத்திருக்க நான் ஹாலில் படுத்து இருந்தேன். மனைவியுடன் போதனா படுத்து இருந்தாள். வெளியே சென்றிருந்த தந்தை பத்தரை மணிக்கு திரும்பினார். வழக்கமாக 9 மணிக்கெல்லாம் அல்லது அதிகபட்சமாக பத்து மணிக்குள் உறங்கும் எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
    அப்படியே கண் மூடிக் கிடந்தேன். பதினொன்றரை மணி அளவில் அப்படியே குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல் இருந்தது. அப்படியும் வரவில்லை. வெளியே சென்று வந்து சிறிது தண்ணீர் அருந்திவிட்டு படுத்தேன். அப்புறம் எப்படி தூங்கினேன் என்று தெரியாது.
    மணி ஒன்றரை இருக்கும். என் மனைவி அறையில் இருந்து வந்து தட்டி எழுப்பினாள். கையை கலைஞர் விரிப்பது போல விரித்து ஆட்டி சொல்லவும் தூக்க கலக்கத்தில் இருந்த எனக்கு ஏதோ பாம்பு உள்ளே புகுந்துவிட்டது என்று தோன்றியது. என்ன பாம்பா? எங்கே? என்றேன்.
    இல்லை! அடிவயிறு வலிக்கிறது! பாத்ரும் போய் வருகிறேன்! போதனாவைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்றாள். அதற்குள் போதனா விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவளை சமாதானப் படுத்த முடியவில்லை. இதற்குள் மனைவி திரும்பி வந்து அவள் அழுகையை நிறுத்திவிட்டு, என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு முறை லேசா இடுப்பு வலி வந்துருச்சு! இன்னும் கொஞ்சம் பார்க்கலாமா? என்றாள்.
      குழந்தை பிறந்துவிடும் என்று தோன்றியது. உடனே கார் வரச்சொல்லி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வது என முடிவு செய்தோம். கார் வைத்துள்ள நண்பருக்கு போன் செய்தால் நாட் ரீச்சபிள்! அடுத்து வேறு நண்பருக்கு போன் செய்து அவர் மூலம் வேறொரு நண்பர் கார் எடுத்து வந்துவிட்டார். பக்கத்து வீட்டில் இருந்த அம்மாவின் தோழி உடன் வர மனைவியை காரில் ஏற்றி அனுப்பி பின் வண்டியில் தொடர்ந்தேன்.
    நள்ளிரவு கடந்து இரண்டு மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கதவை தட்டினோம். டியுட்டி நர்ஸும் ஆயாவும் கதவைத் திறந்து மனைவியையும் உடன் வந்த பெண்மணியை மட்டும் உள்ளே அழைத்துக் கொண்டு என்னை வெளியே நிற்கும்படி சொன்னார்கள்.
   ஒரு இருபது நிமிடம் கடந்தது. உடன் வந்த பெண்மணி வெளியே வந்தார். கண்டிப்பாக காலைக்குள் குழந்தை பிறந்துவிடும். காரை திருப்பி அனுப்பி விடு! என்றார். காரை அனுப்பிவிட்டு அந்த சுகாதார நிலையத்தில் வெளியே இருந்த பெஞ்சில் கொசுக்கடியில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு நொடியும் ஒருவித பதற்றத்துடன் கடந்தது.
    பஞ்செட்டி சாலையில் அந்த இரவில் சுமையுந்துகள் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஊரின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு பயணித்த அந்த சுமையுந்துகளில் இருந்து அந்த இரவில் எப்.எம் ரேடியோ பாடல்கள் ஒலித்ததை துல்லியமாக கேட்க முடிந்தது. சில ஓட்டுனர்கள் யாருடனோ செல் பேசியதையும் கேட்க முடிந்தது. சுகாதார நிலையத்தின் அருகே இருந்த சம்பங்கி தோட்டத்தில் அந்த விடிகாலையில் தலையில் விளக்கோடு பூ பறித்துக் கொண்டிருந்தார் ஒருவர் அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனில் இருந்து அந்தக் கால மோகன் பாடல்கள், சிவாஜி பாடல்கள் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
   ஓரிடத்தில் அமர முடியாமல் அந்த சுகாதார நிலையத்தின் வெளியே சுற்றிக் கொண்டிருந்ததில் கால் வலித்தது. தூங்காமையால் கண்கள் எரிந்தது. அப்படியே சென்று லேபர் வார்டு வாசலுக்கு நேரே நின்றேன். உள்ளே என் மனைவி ஆ… அம்மா… என்று அலறுவது கேட்டது. கடவுளை எல்லாம் வேண்டிக்கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். சரியாக மணி 3. 23 உள்ளே குழந்தை வீறிடும் அழுகை கேட்டது. மனம் லேசாகியது. ஆண்பிள்ளை பிறந்திருக்கான் என்று நர்ஸ் சொல்வது கேட்டது. மனதில் நிம்மதி சூழ்ந்தது.
       அப்படியே நின்று இறைவனுக்கு மனதார நன்றி கூறினேன். ஓர் ஐந்து நிமிடம் கழித்து மனைவியுடன் சென்ற பெண்மணி வந்து பையன் பிறந்திருக்கான். நான் சொல்லலை இந்த தடவை பையன் தான்னு! என்று மகிழ்ச்சியோடு கூறினார். பின்னர் ஓர் அரை மணி நேரம் கழித்து என்னை பிள்ளையை பார்க்க அழைத்தனர். சென்று பார்த்தேன். ஒரு தொட்டில் மாதிரியான அமைப்பில் கிடத்தி மேலே வெளிச்சம் படும் படி படுக்க வைத்திருந்தனர். மனைவி இன்னும் லேபர் வார்டிலேயே இருந்தார். குழந்தைக்கு சுவாசம் செய்ய ஏதோ ஆக்சிஜன் மாதிரி பொருத்தினார்கள்.
    சிறிது நேரத்தில் அகற்றிவிட்டார்கள். அரை மணி கழித்து மனைவியை லேபர் வார்டில் இருந்து அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தார்கள் குழந்தையையும் அருகில் விட்டார்கள். மனைவியை நலம் விசாரித்தேன். நர்ஸ் அருகில் வந்து பையனா பொறந்திருக்கான்! ஆயா என்ன கேக்கறாங்களோ கொடுத்திருங்க! என்றார். தலையசைத்தேன்.
   இதற்கிடையில் தந்தைக்கு போன் செய்து தெரிவித்தேன். பின்னர் உடன் வந்த பெண்மணி நான் காலையில் வீட்டுக்கு போக வேண்டும் போய் உங்க அம்மாவை கூட்டி வா! என்றார். வீட்டுக்கு வந்தேன் மன நிறைவோடு.
    முதல் குழந்தை பெண்ணாகத்தான் பிறக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே பிறந்தது. இரண்டாவது அனைவரும் பிள்ளை என்று சொன்னார்கள் பெண்ணாகவே பிறந்தது. வருத்தம் ஏதும் இல்லை. கருத்தடை செய்து விடலாம் என்ற போது வீட்டில் அம்மாவுக்கு வருத்தம். முதலில் கருத்தடைக்கு ஒத்துக் கொண்டவர்கள் அப்புறம் இன்னும் ஒரு முறை பார்க்கலாமே என்றார்கள். அதற்காகவே கருத்தடை செய்யாமல் இருந்தேன். வயதும் கூடிப்போனதால் இன்னும் தள்ளிப்போட முடியவில்லை! போதனாவிற்கு ஒன்றே முக்கால் வயதில் இந்த தம்பிப்பாப்பாவை பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலை.  போதனாவிற்கு தாயைப் பிரிய மனமில்லை.
  இந்த குழந்தை உருவானதில் இருந்தே சில கசப்புக்கள் இருந்தாலும் இறுதியில் சுபமாய் முடிந்ததில் ஓர் மனநிறைவு. பிரசவம் என்பதே மறு பிறவி என்ற நிலையில் என் மனைவியை மூன்றாவது முறையாக பிரசவத்திற்கு அனுப்பும் படி ஆனதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்று மூன்றாவது முறை கருத்தரிக்க செய்தது ஆணாதிக்கத்தை காட்டுவதாக அமைந்தாலும் பெற்றோர்களின் விருப்பம் நிறைவேறியதில் ஓர் மகிழ்ச்சி.
     இந்த மூன்று பிரசவங்களையும் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் பெண்களின் மேல் ஓர் மரியாதை தானாகவே எழுந்துள்ளது. உண்மையில் பெண்கள் கடவுள்கள்தான்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

Comments

  1. ஆஹா வாழ்த்துக்கள் நண்பரே,,,, கொஞ்ச நாட்களாய் ஆளைக்காணோமே மெயில் அனுப்புவோம் என நினைத்தபோது மகிழ்ச்சியான செய்தியாய் பதிவு நாம் தூரத்தில் இருப்பதால் நானே கடைக்குபோய் சோக்லேட் வாங்கி கொண்டேன் ஊருக்கு வந்ததும் இரண்டாக சேர்த்து வாங்கி கொடுக்கவும், நானும் பிரசவத்தை குறித்து ஒரு பதிவு இடலாம் என இருக்கிறேன் மீண்டும் வாழ்த்துக்கள் திரு. தளிர் சுரேஸ். குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்தை தெரிவிக்கவும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்....சுரேஷ்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்ல செய்தியை ஸ்வீட் கொடுத்து பகிரனும் என்பார்கள் அதனால் மறக்காமல் அனுப்பிவைக்கவும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே ! ஒரு சில நாட்களாகத்
    தங்களின் வரவைக் காணாது மனம் என்னமோ போல் இருந்தது இப்போது
    அதன் காரணம் அறிந்துகொண்டதிலும் இரடிப்பான மகிழ்வு கொள்கின்றேன் .தங்களின் மனைவியாருக்கும் செல்லக் குழந்தைக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .நானும் அவர்களின் உடல் நலன் குறித்து விசாரித்தேன் என்று சொல்லுங்கள் .மிக்க மகிழ்ச்சி சகோதரா .

    ReplyDelete
  5. எல்லாம் சுகமே நடந்தது மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே
    தங்கள் எழுத்துக்களின் ஒவ்வொரு வரியிலும் மறைந்துள்ள,
    தங்களின் உணர்வினை உணர முடிகிறது
    மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. நேற்று என் பதிவில் ,நிஜப் பிரசவத்தை நேரில் பார்க்கும் தைரியம் உண்டா உங்களுக்கு என்று கேட்டதற்கு சுடச் சுட பதில் பதிவு !அருமை !

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சுரேஷ்...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சுரேஷ் நண்பரே! சில நாட்களாகவே தங்களைக் காண வில்லை! தங்களுக்கும் உடல் நலம் சரியாக இல்லை என்றும் சொல்லி இருந்தீர்கள். இப்போது எப்படி இருக்கின்றது? பிள்ளையும் தங்கள் மனைவியும் சுகமாய் இருக்கின்றனரோ? நல்ல செய்தி! வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் நண்பரே!
    பெண்களிடம் தனிச் சிறப்பு இருக்கிறதே

    ReplyDelete
  13. congratulation sir....

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ... வாழ்த்துக்கள் !!!!!! குட்டி சுரேஷ் பிறந்ததுக்கு.....

    ReplyDelete
  15. பையர் பிறந்ததுக்கு வாழ்த்துகள். இறை அருள் பூரணமாக இருக்கட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2