குட்டி!
குட்டி!
அந்த விடிகாலை
வேளையில் அந்த வீட்டின் வாசலில் குடும்பமே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது. தாத்தா-
பாட்டி- அப்பா- அம்மா- அண்ணன் அண்ணி- மாமா-மாமி- குழந்தைகள் எல்லோரும் வாசலையே நோக்கிக்கொண்டிருந்தனர்.
அப்படி என்ன அதிசயம் அந்த வீட்டில் என்கிறீர்களா?
ஆம் அதிசயம்தான்! அந்த வீட்டின் கடைசிப்பையன் குட்டி
இன்று ஊர் திரும்புகிறான். அதுவும் கல்யாணம் பண்ணிக்கொண்டு புது மணப்பெண்ணை அழைத்து
வரப் போகிறான். அதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அதில்தான் அதிசயம்.
குட்டி அந்தவீட்டின் கடைக்குட்டி மட்டுமல்ல! ஊருக்கே
குட்டிதான். ஆம் குட்டையான உருவம் கொண்டவன். மனம்தான் வளர்ந்ததே தவிர உடல் வளரவில்லை.
நடிகர் கிங்காங் அளவிற்கு கூட வளரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்படி ஒரு
குள்ளம். முகத்தில் முதிர்ச்சி தெரிந்தாலும் உடலில் வளர்ச்சி இல்லை. அதனால் எல்லோருக்கும்
அவன் குட்டிதான்.
உடல் குட்டையானாலும் வீட்டில் எல்லா வேலைகளையும்
இழுத்துப் போட்டுச் செய்வான். ரேஷன் கடைக்கு போய் அரிசி சர்க்கரை வாங்குவதில் இருந்து
பிள்ளைகளை ஸ்கூலுக்கு கொண்டுவிடுவது, கரண்ட் பில் கட்டுவது. உழவுக்கு ஆட்களை கூட்டிவருவது
என்று எல்லாவற்றையும் தனி ஆளாய் பிரமாதமாய் செய்வான். பத்துவரை பள்ளிப்படிப்பு முடித்தவன்
அதற்கப்புறம் படிக்க விருப்பமில்லாமல் நின்று விட்டான். எல்லோரும் குள்ளன் என்று கேலி
செய்ததுதான் காரணம் என்று வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை!
இருபத்தைந்து வயதை கடந்ததும் பெண்பார்க்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார்கள். மணப்பெண்கள் யாரும் இவன் உயரத்திற்கு
அமையவில்லை. உயரமான பெண்கள் இவனை திருமணம் செய்ய மறுத்தார்கள். பெண்பார்க்க வீடு வீடாய்
சென்று அவமானத்தோடு திரும்புவார்கள். தரகர்களோ ஏம்பா உன் பையனுக்கு இன்னும் பெண் தேடிக்கிட்டு!
அப்படியே விட்டுத் தள்ளு இனி வரட்டி கல்யாணம்தான்! என்று ஏளனமாக சொல்லி குட்டியின்
மனதை நோகடித்தார்கள்.
குட்டியின் அப்பாவிற்கு
கஷ்டமாக இருந்தாலும் இனி மகனை பெண்பார்க்க அழைத்து செல்லவேண்டாம். நாமே சென்று விபரம்
கூறி பெண் சம்மதித்தால் அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சில இடங்கள் போய்
பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
ஒருநாள் அவரும்
வெறுப்பில், ஏண்டா இப்படி குள்ளமா பிறந்து தொலைச்சே! உனக்கு பெண் தேடறதுக்குள்ளே என்
வாழ்க்கை முடிஞ்சிரும் போலிருக்கே என்று சொல்லி அழ ஆரம்பிக்க, குட்டி மவுனித்தான்.
அன்றிரவே யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பிவிட்டான். போனவன் போனவன் தான்.
ஊரே கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு ஓடிப்போயிட்டான்!
என்று பேசி ஓய்ந்து போனது. குட்டியின் குடும்பத்தாரும் சில மாதங்கள் அவனை தேடி போலிஸில்
கம்ப்ளைண்ட் கொடுத்து ஒன்றும் நடக்காமல் மனதை தேற்றிக் கொண்டு அவனை மறந்து போய்விட்டனர்.
ஆயிற்று நாலைந்து
வருடங்கள்! குட்டி திரும்பி வருகிறேன் என்று போன வாரம் போன் செய்திருந்தான். அதுவும்
கல்யாணம் பண்ணிக்கொண்டுவிட்டேன். புதுப் பொண்டாட்டியுடன் வருகிறேன் என்று சொல்லியிருந்தான்.
புதன் கிழமை அதிகாலை 6மணி வண்டியில் வருவதாக சொல்லியிருந்தான். அதான் வீடே அவனை பார்க்க
வாயிலில் வந்து காத்துக் கொண்டிருந்தது.
குட்டி கல்யாணம்
பண்ணி வரும் பெண் அவனை மாதிரியே குள்ளமாக இருப்பாளா? அல்லது உயரமாக இருப்பாளா? சிவப்பாக
இருப்பாளா? மாநிறமா இருப்பாளா? கருப்பா இருப்பாளா? என்று ஆளாளுக்கு கிசுகிசுத்துக்கொண்டிருக்க
ஆறு மணிக்கு வரும் அந்த டவுன் பஸ் சத்தம் கேட்டது. இன்னும் சில நிமிடத்தில் குட்டி
வந்துவிடுவான். எல்லோரும் ஆர்வத்துடன் வாயிலை நோக்க குட்டி மெல்ல தெருவில் நுழைந்தான்.
அவனோடு சக்கர நாற்காலியில் ஒரு பெண்ணும் வர எல்லோரும் வாயைப்பிளந்தனர்.
குள்ளன் ஒரு நொண்டியை கட்டிக்கிட்டு வராண்டோய்!”
என்று ஒருவன் குறும்பாய் சொல்ல
குட்டி அவனை பார்த்த பார்வையில் நெருப்பாய் சுட்டது.
கடவுள் கொடுத்த பிறப்பு மனிதப் பிறவி. அதுல குறை நிறைகள் சகஜம். குறையே இல்லாத பிறப்பு
கிடையாது. எல்லா உறுப்பும் நல்லா இருக்கிற உனக்கு மனசு சரியா இல்லையே! நாம பேசறது மத்தவங்க
மனசை நோகடிக்கும்னு கூட உனக்குத் தெரியலையே?
குட்டி கேட்ட போது கிண்டலடித்தவன் தலை குனிந்தான்.
தன் மனைவியை வீட்டுக்குள் கூட்டி வந்தவன், அப்பா!
எனக்கு பெண் தேடின நீங்க குறையே இல்லாத பெண்ணா தேடினீங்க! குறையோடு பிறந்த எனக்கு தகுந்த
பெண்ணா பார்க்கலை! என்னைப்போல குறை உள்ளவங்க கஷ்டம் குறை உள்ளவங்களுக்குத்தான் தெரியும்.
மனக்கஷ்டத்தோட வீட்டை விட்டு போன நான் வெளியூரில வேலை செய்த இடத்தில இந்த பெண்ணை பார்த்தேன்.
ஒருநாள் அழுதுகிட்டிருந்தா விஷயம் கேட்டபோது ஊனத்தோட
பிறந்ததாலே கல்யாணம் தள்ளிப் போவுதுன்னு சொன்னா. நானும் என்னோட கதையை சொன்னேன். நீ
விரும்பினா உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். முதல்ல தயங்கினவ அப்புறம் சம்மதிச்சா.
இவளோட குலம் ஜாதி, மதம் எதுவும் நான் பார்க்கவும் இல்லை! கேட்கவும் இல்லை!
நாங்க ரெண்டு பேரும் மாற்றுத்திறனாளிகள்கிற ஒரே
ஜாதி! அதுதான் எங்களை இணைச்சது! மனசார ஆசிர்வதிங்கப்பா என்றான் குட்டி.
மனம் நிறைய வாழ்த்தி அவர்களை உள்ளே அழைத்து சென்றது
அந்த குடும்பம்.
பின் குறிப்பு: தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் தஞ்சையில் மூன்றாம் ஆண்டு சந்திப்பினையொட்டி ஒருபக்க கதை வைத்தார்கள். படம் ஒன்று கொடுத்து ஒருபக்க கதை எழுத சொன்னார்கள். அதில் எழுதிய கதை அவசர கதியில் எழுதியால் வெற்றி பெறவில்லை! அதனால் மாற்றி யோசித்து ஒரு கதை எழுதினேன். அதை இங்கு பதிவிடுகிறேன்.
படம் சேமித்து வைக்க மறந்துவிட்டேன். பிறகு பதிவிடுகிறேன்!
கதைப்போட்டியில் தோற்றாலும் ஜோக்ஸ், கவிதை, சிறுவர்பாடல் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். அதை பிறகு பகிர்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்! நன்றி!
நன்றாக உள்ளது
ReplyDeleteநன்றாக இருக்கிறது சுரேஷ். வாழ்த்துகள்
ReplyDeleteதோல்வி என்று எதுவுமில்லை. தற்போது வெற்றி பெற வாய்ப்பில்லை என்று வைத்துக்கொள்வோம்.
ReplyDeleteரசித்தேன். உங்கள் தளம் திறக்க நெடுநேரம் எடுக்கிறது.
ReplyDelete