தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை!



  இந்த வார தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை! (அப்படி சொல்லலாமா தெரியவில்லை)  தொடர்ந்து ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் மிக்க நன்றி!



சேர்த்து வைத்த கனவு: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 10th September 2017 03:42 PM  |   அ+அ அ-   |  
ஓங்கி உயர்ந்த தென்னைகள் ஒருபுறம்
காய்த்துத் தொங்க
அடர்ந்த மாந்தோப்பின் கிளைகளில்
பறவைகள் கீதம் இசைக்க!

பச்சை பசும் வயல் வெளிகளில்
நெல்மணிகள் காற்றிலாட
களத்து மேட்டில் கயிற்றுக்கட்டிலில்
கால்நீட்டி படுத்திருக்கும்
பண்ணையாரைப் பார்த்துப்
பெருமூச்சு விட்டுச்சொல்வார் தாத்தா!

பேராண்டி! நாமும் ஒரு நாள்
இதுபோல தோப்புத்துரவும் வாங்கி
சுகமாய் வாழணும்டா! என்றபடி
வயலுக்கு மடை மாறுவார்!

இருக்கும் கால்காணி நிலத்தை பண்ணைக்கு
குத்தகைவிட்டு அங்கேயே கூலி வாங்கி
கால்வயிற்றை நிரப்பியவருக்கு தோப்பும் துறவும்
சேர்த்து வைத்த கனவானது!

என் படிப்பு, தங்கை கல்யாணம்! சீர்வரிசை,
சீமந்தம் என்று காகாணி மீது கடன் வாங்க
சேர்த்து வைத்த கனவெல்லாம்
கரைந்து கொண்டே போனது!

பட்டணத்து அடுக்குமாடி குடியிருப்பில்
படுத்துக்கொண்டு ரியல் எஸ்டேட்
விளம்பரங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம்
தாத்தாவின் சேர்த்து வைத்த கனவு
என் மனதில் மீண்டும் சேமிப்பாகிறது!

சம்பளத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து
ஊருக்கு வெளியே ஒரு கிரவுண்டாவது வாங்கி
தோட்டத்தோடு கூடிய வீடு கட்ட வேண்டும்
கனவுகளோடு தூங்கிப் போகிறேன்!

கனவுகள் சேர்ந்து கொண்டே போகிறது
தட்டி  எழுப்பிய மகன் கையில்
இருக்கும் ஓவியத்திலும் அழகாய் உருப்பெற்று
நிற்கிறது தோட்ட பங்களா!

இது மாதிரி பங்களா நாம எப்போ
வாங்குவோம் அப்பா? என்று கேட்டவன் சொன்னான்
இது அவன் கனவு பங்களாவாம்!

ஒவியப் போட்டியில் அதை வரைந்து
முதல் பரிசை வென்றிருக்கிறான்!

வாழ்த்துக்களை பரிமாறுகையில்
அவனிடமும் சேர்ந்து கொள்கிறது நாங்கள்
சேர்த்து வைத்த கனவு!

Comments

  1. வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2