சிரிப்பின் காரணம்! பாப்பா மலர்!


சிரிப்பின் காரணம்!  பாப்பா மலர்!


மஹாராஜா தர்மர் இந்திரப் பிரஸ்தத்தில் மிகப்பெரிய ராஜசூய யாகம் செய்தார். அந்த வேள்வியின் முடிவிலே கோடிக்கணக்கான தான தருமங்கள் செய்து முடித்தார். கோதானம் என்னும் பசு தானம், பூதானம் என்னும் பூமி தானம், வஸ்திர தானம் என்னும் துணி தானம், சொர்ண தானம் என்னும் பண தானம், அன்ன தானம் முதலியன செய்தார் தர்மப் பிரபு.
     அப்போது அவருடைய மனதில் தம்முடைய தர்ம குணத்தைப் பற்றி பெருமையாக ஓர் சிந்தனை ஓடியது. அவர் தானம் செய்யும் போது தாரை வார்த்த நீரே வெள்ளம் போல ஓடியது. அந்த தீர்த்தத்தில் ஓர் கீரிப்பிள்ளை உருண்டு புரண்டது. அப்புறம் அது தர்ம ராஜரைப் பார்த்து கலகலவென சிரித்தது. அதன் வெடிச்சிரிப்பினை கேட்டு அனைவரும் வித்தியாசமாக நோக்கினர்.


    யுதிஷ்டிரன் என்று அழைக்கப்பட்ட தர்மராஜா அந்த கீரிப்பிள்ளையைப் பார்த்து அதிசயித்தார். அதன் உடல் பாதி பொன் நிறமாகவும் மீதி கருமையாகவும் இருந்தது. தர்மர் கனிவுடன் அந்த கீரியைப் பார்த்து, “கீரியே! இந்த மாபெரும் சபையிலே வந்து என்னைப் பார்த்து ஏன் சிரிக்கின்றாய்?” என்று கேட்டார்.

     “மஹாராஜா தர்மரே! நீ செய்த இந்த கோடிக்கணக்கான தான தருமங்கள் ஓர் ஏழை அந்தணன் தானம் செய்த அரைக்கால்படி மாவுக்கு சமானம் ஆகவில்லை! அதை நினைத்தேன்! சிரித்தேன்!” என்று சொல்லிவிட்டு மேலும் சிரித்தது கீரிப்பிள்ளை.

     இந்தகால மன்னர்கள் என்றால் இந்த கேலியான பேச்சுக்கு சுட்டு வீழ்த்திவிடுவார்கள். ஆனால் அந்தகாலமாயிற்றே! மஹாராஜா சக்ரவர்த்தியான தர்மராஜா, கீரியே! யார் அந்த அந்தணர் அவர் செய்த தானம் எவ்வாறு உயர்ந்தது சற்று விரிவாகச் சொல்! என்றார்.

    மஹாராஜா! அந்த அந்தணர் ஓர் கானகத்தில் வசித்து வந்தார். அவருக்கு ஓர் மனைவியும் ஓர் மகனும் மருமகளும் இருந்தார்கள். அந்த அந்தணர் காட்டில் உதிர்ந்த தானியங்களை பொறுக்கி எடுப்பார். அதை அமாவாசை பவுர்ணமி தினங்களில் குத்தி அரிசியாக்குவார். பின்னர் அதை வறுத்து மாவாக்குவார். அந்த சத்துமாவை நால்வரும் பகிர்ந்து உண்பார்கள். பதினைந்து தினங்களுக்கு ஒருமுறைதான் அவர்கள் உணவு எடுப்பார்கள். ஏனைய தினம் உபவாசம்தான். தண்ணீரே உணவாக கொண்டு தவமியற்றி வந்தார்கள்.

   அப்படி ஒருமுறை அவர் மாவை தயார் செய்து நான்கு தேக்கு இலைகளில் பகிர்ந்து வைத்து உண்ணத் துவங்கிய போது வயிறு ஒட்டிப்போய் பசியோடிருந்த ஓர் ஏழை அங்கே வர அந்த அந்தணர் தன் பங்கு மாவை ஏழைக்குக் கொடுத்தார். அப்போதும் ஏழையின் பசி ஆறவில்லை. அந்தணரின் மனைவியும் தன் பங்கை அந்த ஏழைக்குக் கொடுத்தார். அதை உண்ட பின்னரும் ஏழை பசியாறவில்லை. தயங்கி நின்றார். உடனே இன்முகத்துடன் அந்தணரின் மகன் தன் பங்கு மாவை கொடுத்தார். அப்போதும் ஏழைக்குத் திருப்தி ஏற்படவில்லை. உடனே மருமகளும் தன் பங்கு உணவை இன்முகத்துடன் தந்துவிட்டார். அதை உண்டதும் ஏழை திருப்தி அடைந்து அவர்களை ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

   அடுத்த பதினைந்து நாட்கள் அவர்களுக்கு உணவு இல்லை! மீண்டும் தானியங்களை பொறுக்கி மாவாக்கி உணவுண்ண அமர்ந்தபோது அந்த ஏழை வந்து கையேந்தி நின்றார். இப்போதும் அந்தணர் முகம் சுளிக்கவில்லை. தன் பங்கு உணவைத் தர, மற்றவர்களும் இன்முகத்துடன் தங்கள் பங்கு உணவைத் தந்துவிட்டனர். இன்னுமொரு பதினைந்து தினங்கள் கழிந்தது. மீண்டும் உணவு சேகரித்து உண்ண அமருகையில் ஏழை வந்து நின்றார். அந்தணர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை. இன்முகத்துடன் வரவேற்று உணவளித்தார். அவரது மனைவியும் மகனும் மருமகளும் கூட முகம் சுளிக்காமல் தங்கள் பங்கு உணவையும் தந்து உபசரித்தனர்.

   இப்படி ஐந்து முறை அந்த அந்தணர் குடும்பத்து உணவை அந்த ஏழை யாசித்து உண்டுவிட்டார். ஐந்தாவது முறை அவர் யாசிக்கும் போது இவர்கள் மிகவும் மெலிந்து  நாடி நரம்புகள் தளர்ந்து இருந்தனர். அப்போதும் இவர்களின் தர்ம சிந்தனை நலியவில்லை. அந்த ஏழையை இன்முகத்துடன் உபசரித்தனர். 


   ஐந்தாவது முறை உணவு உண்ட போது அந்த ஏழை அறக்கடவுளாக மாறி அவர்களை ஆசிர்வதித்தார். “ குணவான்களே! 90தினங்களாய் நீங்கள் சாப்பிடாது இருந்த போதும் தர்ம சிந்தனையுடன் என்னை வரவேற்று உங்கள் உணவைத் தந்து உபசரித்தீர்கள்! உங்கள் முகம் வாடவில்லை! எரிச்சல் அடையவில்லை! முன்னிலும் அதிக அன்போடு உபசரித்தீர்கள்! உங்களுடைய இந்த உயர்ந்த பண்பு போற்றப்படவேண்டியது. உங்களை புண்ணிய உலகினுக்கு அழைத்துச் செல்கிறேன்! என்றார்.

   வானத்தில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கி, தேவர்கள் வாழ்த்த அதில் அவர்கள் ஏறி வானுலகம் சென்றார்கள். அப்போது அங்கு சென்ற நான், அவர்கள் தானம் செய்த இடத்தில் சிதறி இருந்த மாவில் உருண்டு புரண்டேன்! அப்போது என் உடலில் பாதி பொன் நிறமாக மாறியது. அது முதல் யார் தானம் செய்கிறார்களோ அங்கெல்லாம் சென்று புரண்டு வருகிறேன். என் உடல் முழு பொன்னிறம் அடையவில்லை!

   இங்கு நீங்கள் தானம் செய்வதாகக் கேள்விப்பட்டு இங்கு வந்து இந்த தீர்த்தத்தில் உருண்டு புரண்டேன்! அப்போதும் என் உடல் நிறம் மாறவில்லை! அப்படியானால் அந்த அந்தணரின் தானமளவுக்கு உங்களுடைய இந்த கோடிக்கணக்கான தான தர்மங்கள் சமானம் இல்லைதானே! அதை நினைத்தேன்! சிரித்தேன்! என்றது கீரி.

   தர்மர் தலை கவிழ்ந்தார்! தானே மிகப்பெரிய தர்மவான்! என்று நினைத்திருந்த அவரது கர்வம் அழிந்தது.

(செவிவழிக்கதை)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. தானே தானத்தில் சிறந்தவன் என்ற மமதை இருக்கக்கூடாது என்பதைச் சொல்லும் கதை...
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லதொரு பாடம் நண்பரே..

    ReplyDelete
  3. கேட்ட கதைதான் என்றாலும்தங்கள் சொல்லிய விதம் நன்று நண்பரே!

    ReplyDelete
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  5. தங்களின் பல கதைகள் கேட்டவனவாகவே இருக்கின்றன. இருப்பினும் தங்களின் பாணி அருமை.

    ReplyDelete
  6. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!