பிள்ளையார் திருத்தினார்! பாப்பாமலர்!

பிள்ளையார் திருத்தினார்!


விநாயக சதுர்த்தி தினம்! அதிகாலை! அனைவரும் சிறப்பாக பண்டிகை ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். கோபு தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பிள்ளையார் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மண்ணை பிசைந்து கொண்டிருந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் பிள்ளையார் உருவாகவில்லை! தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு!
 
  அந்த நேரத்தில் தான் செய்த அறை குறை பிள்ளையாரை பார்த்து கோபப்பட்டு அதை தூக்கி போட்டு உடைத்தான்.எதிர்வீட்டை நோக்கினான். அங்கு அவனது தோழன் விஜய் அழகான பிள்ளையார் ஒன்றை வடிவமைத்து இருந்தான்.
 
   “ச்சே! என்னால முடியலை! அவன் மட்டும் எப்படி அழகா செய்யறான்? நான் செய்யாததை அவன் செஞ்சு பெருமையடிச்சுக்க போறான்.” என்று விஜய் மீது பொறாமைப்பட்டான் கோபு.
 
  விஜய் என்ன சிற்பியா? நினைத்தவுடன் பிள்ளையாரை உருவாக்க? முயற்சியும் உழைப்பும் அவனை அழகான பிள்ளையார் உருவாக்கச் செய்திருந்தது. சிறுவயது முதலே களி மண்ணில் பொம்மைகள் செய்வதில் ஆர்வம் கொண்டவன் அவன். விடுமுறை நாட்களில் வீணாக பொழுதை கழிக்க விரும்பாது பொம்மைகள் செய்து பழகினான். அந்த பழக்கம் இப்போது அவனுக்கு கை கொடுத்தது.
 
 ஆனால் கோபு திடீரென பிள்ளையார் பிடிக்க முயற்சித்தால் நடக்குமா? இதை உணராது விஜய் மீது வீண் பொறாமை கொண்டான் கோபு. மீண்டும் ஒருமுறை விஜய் செய்த பிள்ளையாரை பார்த்தான். ஆத்திரம் கொண்டான். அவனுக்கு மட்டும் அழகாய் பிள்ளையாரா? கூடாது என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
  அந்த சமயத்தில் விஜயின் தாய் அவனை அழைக்க அவன் அப்படியே பிள்ளையாரை விட்டுவிட்டு உள்ளே சென்றான். இதுதான் சமயம் என்று கோபு அவசர அவசரமாக எதிர்வீட்டுக்கு சென்று விஜயின் பிள்ளையாரை உடைத்துவிட்டு மறுபடி தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
 
  அப்போது கோபுவின் தாய், " கோபு நீ பிள்ளையார் செஞ்சு கிழிச்சது போதும்! நான் கடையில இருந்து பிள்ளையார் வாங்கி வந்தாச்சு அதை வச்சி பூஜை பண்ணிக்கலாம் எழுந்து வா!" என்றாள்.
 
  " சரி " என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கோபு.கோபு உள்ளே சென்றது வெளியே வந்த விஜய் தன் பிள்ளையார் உடைபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். ஆனால் மனம் உடையவில்லை! சிறிது நேரத்தில் புதிய பிள்ளையார் ஒன்றை முன்னைவிட அழகாக மீண்டும் செய்துவிட்டான்.
 
    "கோபு பிள்ளையாரை எடுத்துகிட்டு வா! பூஜைசெய்யலாம்!" தாய் குரல் கொடுக்க " இதோ வரேம்மா! " என்று பிள்ளையாரை தூக்கினான் கோபு. அந்த பிள்ளையார் தலை தனியாக உடல் தனியாக பிய்ந்து போனது. 
 
    "அம்மா! பிள்ளையார் உடைஞ்சு போச்சும்மா! " என்றான் அழமாட்டாத குறையாக கோபு.
 
   "போச்சு எல்லாம் போச்சு! நீதான் பிள்ளையார் செய்யலை! வாங்கி வந்த பிள்ளையாரை கூட பத்திரமா எடுத்து வர முடியலையா? இன்னிக்கு நம்ம வீட்டுல பிள்ளையார் பூஜை அவ்வளவுதானா?  "என்றாள் ஆதங்கத்துடன் அவன் அம்மா.
 
   "அம்மா! பிள்ளையார் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரும்மா! காலையில் விஜய் செஞ்ச பிள்ளையாரை பொறாமைப்பட்டு உடைச்சிட்டேன்!  இப்ப நம்ம பிள்ளையார் உடைஞ்சு போச்சு! " என்று கண்ணீர் விட்டான் கோபு.
 
   "முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்கிறது கண் கூடாயிடுச்சு பார்த்தியா? இனிமே இப்படி பொறாமைப்பட்டு மத்தவங்களை கஷ்டப்படுத்தகூடாது கோபு. பரவாயில்லை! வினாயகர் இல்லாமலே பூஜை செஞ்சுக்கலாம்  "என்றாள் அவனது அம்மா.
 
   அப்போது, " கோபு கோபு! " என்று குரல் கொடுத்தபடி வந்தான் விஜய். 
 
 "கோபு காலையில நீ பிள்ளையார் செய்ய முடியாம திணறினதை பார்த்தேன். உனக்காக நானே பிள்ளையார் செய்தேன். அதை யாரோ உடைச்சிட்டாங்க! மறுபடியும் புதுசா செஞ்சு கொண்டாந்திருக்கேன்  இந்தா!" என்று பிள்ளையாரை நீட்டினான் விஜய்.
  கோபுவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது! " விஜய் என்னை மன்னிச்சுடு! நான் தான் பொறாமையில நீ செஞ்ச விநாயகரை உடைச்சிட்டேன். கடைசியிலே அது எனக்காக நீ செஞ்சதுன்னு இப்பத்தான் தெரியுது. யார் மேலேயும் பொறாமை படக்கூடாதுன்னு இந்த பிள்ளையார் சதுர்த்தியிலே விநாயகர் எனக்கு புத்தி புகட்டி இருக்காரு என்னை தயவு செஞ்சி மன்னிச்சுடு!" என்று அவன் கைகளை கட்டிக் கொண்டான்.
 
    "அழாதே கோபு! நான் நேற்றே எனக்கு பிள்ளையார் செஞ்சிட்டேன்! இன்னிக்கு காலையில நீ கஷ்டப்படறதை பார்த்து உனக்காகத்தான் பிள்ளையார் செய்தேன். அது உடைஞ்சி போனதும் நல்லதா போச்சு! உன் பொறாமை குணம் உன்னை விட்டு போனது! வா விநாயகரை வழிபடுவோம் " என்றான்.
 
  பிள்ளையார் அங்கே புன்முறுவலுடன் சிரித்துக் கொண்டிருந்தார்!
 
 (மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்

    ReplyDelete
  2. நன்னெறிக் கதை நலம் நண்பரே!

    சித்தி புத்தி விநாயகர் கேள்வி பட்டிருக்கிறேன்
    இப்பொழுது தங்களால்

    புத்தி புகட்டி பிள்ளையார்
    கதையின் நாயகனாய்
    வெற்றி வலம் வந்துள்ளார்!

    வாழ்த்துகள்!!!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. நல்ல கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. நல்லதொரு கதை சுரேஷ் நண்பரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2