சங்கரன் பெற்ற புண்கள்! தித்திக்கும் தமிழ் பகுதி 21


தித்திக்கும் தமிழ்! பகுதி 21


   துன்பங்கள் துரத்தும் போது, கவலைகள் சூழும் போது ஓர் மன ஆறுதலைத் தேடி நண்பர்களிடம் உறவினர்களிடம் போய் கூறி ஆறுதல் அடைவது வழக்கம். சில சமயம் கோயில்களில் போய் ஆண்டவரிடம் நமது குறைகளை சொல்லி , ஏண்டாப்பா சாமி! இப்படி கஷ்டப்படுத்துகிறாயே! கொஞ்சம் காது கொடுத்து என் குறைகளை கேள்! என் கஷ்டங்களை போக்கு என்று வேண்டுவார்கள்.

   இன்றைய நவீன யுகத்தில் துன்பங்களுக்கு பரிகாரங்கள் செய்கிறேன் என்று பல சாமியார்கள் தோன்றி காசு பிடுங்கி சம்பாதிக்கின்றனர் அது வேறு விஷயம். நமக்கு ஓர் துயரம், கஷ்டம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கையில் ஓர் ஆறுதல் அடைகின்றது. நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை உணர்ந்து அதை இறைவனாக வணங்குகின்றோம். அந்த இறைவனிடத்திலே ஒன்றி தமது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நிற்கின்றோம். அப்போது நமது துன்பங்கள் அந்த பக்தியிலே கரைந்து போகின்றது.

   இதோ இந்த புலவரும் தமக்கு நேர்ந்த துன்பங்களை இறைவன் ஈசனிடம் முறையிட்டாராம். ஈசனோ  புலவரின் குறைகளை களையாமல் அவரின் குறைகளை பட்டியலிட்டாராம். தெய்வத்திடம் சொல்லி அழப்போனால் அங்கு தெய்வமே இப்படி செய்தால் புலவர் பாவம் என்ன செய்வார்?


  சங்கரன் பெற்ற புண்கள்!

  வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்
     வாசறொரு முட்டுண்ட தலையிற் புண்ணுஞ்
  செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணுந்
   தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா
  கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
    கொடுங்காலா லுதைத்தபுண்ணுங்க் கோபமாக    
  பஞ்சவரி லொருவன்வில்லா லடித்த புண்ணும்
     பாரென்றேகாட்டி நின்றான் பரமன் றானே.

விளக்கம்: வஞ்சனை உள்ளம் உடையவரிடத்து சென்று அலைந்ததால் நடந்து நடந்து காலில் உண்டான புண்ணையும், ஒவ்வொரு வீட்டின் வாசலில் சென்று முட்டிக்கொண்டதால் தலையில் அடிபட்ட புண்ணையும் என்னுடைய நல்ல பாடல்களை கேட்டு ரசிப்பார் இல்லையே என்று ஏக்கத்தால் நெஞ்சில் உண்டான புண்ணையும் நீக்குவீராக என்று வேண்டிக்கொள்ள சிவபெருமானிடம் சென்றேன்.

   ஆனால் அப்பெருமானோ, பாண்டியன் பிரம்பால் அடித்ததால் உண்ட புண் சிறியது அல்ல என்று அதையும், வேடனான கண்ணப்பன் தன் செருப்பணிந்த காலினால் மிதித்த போது உண்டான புண்ணையும் மிகுந்த சினத்துடன் பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வில்லால் அடித்த புண்ணையும் பார்! இவை உன்னுடைய புண்களைவிட பெரியது என்று காட்டினான். என்கிறார்.

   புலவர் நகைச்சுவைக்காக பாடினாலும் இதன் உட்கருத்து என்ன?
துன்பங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும் என்பதுதான் உட்கருத்து. நமக்கு துன்பம் என்று புலம்புகிறோம்! நம்மை விட துன்பப்படுவோர் ஏராளம். அவர்களோடு ஒப்பிடுகையில் நம் துன்பம் கடுகளவாகி போய்விடும். இன்பங்கள் மட்டும் நிறைந்ததல்ல வாழ்க்கை! துன்பங்களும் கலந்தது. இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஓர் நாள். அதுபோல இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை! துன்பங்களை பார்த்து துவளாமல் எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் புலவர்.

    இந்த பாடலை பாடியவர் இராமச்சந்திர கவிராயர்.
 என்னவொரு சிறப்பான பாடல்! 

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நல்லதொரு பாடலுடன் சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இறைவனே புன்பட்டு நின்றான் என்றால் நாம் எம்மாத்திரம்;மிக அருமையான பகிர்வு

    ReplyDelete
  2. வேதனைகள் தாங்கும் பக்குவம் எல்லோருக்கும் இல்லையே,
    நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்.

    சற்றேயேயான இடைவெளிக்குப் பிறகு உங்கள் தளத்தின் பதிவு காண்கையில் பழைய புத்துணர்வு.

    மாணவ ஆசிரியனாக இருந்தபோது நான் கற்பித்த பாடல் இது.
    வேதநாராயணன் என்கிற மாணவன் பயிற்சி முடிந்தும் நெடுநாள் தொடர்பில் இருக்கக் காரணமான பாடல்.
    அவன் குண்டு எழுத்துடன் வந்த அஞ்சலட்டைகள் நிழலாடுகின்றன இந்தப் பதிவை வாசிக்கையில்.

    நன்றி!

    ReplyDelete
  4. இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை! துன்பங்களை பார்த்து துவளாமல் எதிர் நீச்சல் போட கற்றுக்கொள்ள வேண்டும்
    அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு சகோதரா...

    ReplyDelete
  6. அட! என்னமா சொல்லுகின்றீர்கள்!! அருமை சுரேஷ்...

    ReplyDelete
  7. நல்ல தகவல் சார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2