துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!

துன்பங்கள் போக்கி இன்பமளிக்கும் சங்கடஹரசதுர்த்தி விரதம்!

  முழு முதல் கடவுளாம் விநாயகப் பெருமான் பிறந்த தினம் சதுர்த்தி. ஒரு மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வருகின்றன. வளர்பிறையில் வருவது மாத சதுர்த்தி, தேய்பிறையில்வருவது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது
    சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் நீக்குதல் என்று பொருள். துன்பங்களை நீக்கும் சதுர்த்தி என்று பொருள். விநாயகருக்குரிய இந்த விரதத்தை அனுஷ்டித்தால் நமது துன்பங்கள் பனிபோல விலகி இன்பங்கள் நம்மை சூழும். மிகவும் பழமைவாய்ந்த விரதங்களுள் ஒன்று சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
     ஒரு முறை விநாயகரின் சாபத்துக்கு ஆளான சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து சாபநிவர்த்தி பெற்றதுடன் விநாயகரின் சிரசிலும் குடிகொண்டான். விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. 
 மங்களகாரகனான அங்காரகன் இந்த விரதம் தோன்ற காரணம் ஆனவன்.
  வசிஷ்டர் வம்சத்தில் தோன்றிய பரத்வாஜ மஹரிஷிக்கு பிறந்தவன் அங்காரகன். பரத்வாஜர் ஓர் தேவலோகமங்கையுடன் கூடி அங்காரகனை பெற்றார். தேவலோகமங்கை தேவலோகம் சென்றுவிட பரத்வாஜர் குழந்தையை நர்மதை நதிக்கரையில் விட்டு தவம் புரிய சென்றுவிட்டார். குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்தாள். செந்நிறமாக ஜொலித்தமையால் அங்காரகன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தாள்.
     அங்காரகன் வளர்ந்தது தனது தந்தை யார் என்று வினவினான். உன்னுடைய தந்தை பரத்வாஜ முனிவர் என்று கூறிய பூமாதேவி பரத்வாஜரிடம் அங்காரகனை அழைத்துச்சென்றாள். அங்காரகனுக்கு உபநயனம் முதலியன செய்து வைத்தார் முனிவர்.
   ஒருநாள் அங்காரகன் தான் சர்வ கலைகளிலும் வல்லமை பெற என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். விநாயகரை குறித்து தவம் செய்யுமாறு முனிவர் கூறினார். அங்காரகனும் விநாயகர் மூலமந்திரம் ஜெபித்து அவரைக் குறித்து தவம் இருந்தான். மாசிமாதம் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியில் அங்காரகனுக்கு விநாயகர் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
      லம்போதரனே நான் அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான உருவத்தோடு தங்களை தரிசித்த என்னை அனைவரும் மங்களன் என்று அழைக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந் நாளில் தங்களை வணங்கி வழிபடும் பக்தர்களின் துயரங்களை நீக்கி அருள வேண்டும். மேலும் என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளர வேண்டும் என்ற பல வரங்களை வேண்டினான். கனிவான பார்வையுடன் நோக்கிய கணபதி அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன் என்னிடம் நீ அனுகிரகம் பெற்ற இந்த சதுர்த்தி நாள் சங்கடஹர சதுர்த்தியாகவும் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை அடியோடு விலக்கி விடுவேன் என்று அருளி மறைந்தார். 


   இப்படித்தான் சங்கட ஹர சதுர்த்தி விரதம் தோன்றியது. இந்த சதுர்த்தி செவ்வாய் கிழமைகளில் வந்தால் மிகவும் சிறப்பானது.
  இந்த விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
    இந்த நாளில் அதிகாலையில் நீராடி உபவாசம் இருக்க வேண்டும். பால் பழம் மட்டும் அருந்தி உணவருந்தாமல் இருக்க வேண்டும். விநாயகர் நாமாவளிகளையும் பாமாலைகளையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை தரிசிக்க வேண்டும். விநாயகரை 8 அல்லது நான்கு முறை வலம் வர வேண்டும். அன்று இரவு சந்திரன் உதித்ததும் சந்திரனையும் விநாயகரையும் வணங்கி விரதத்தை முடிக்க வேண்டும்.
    பின்னர் உணவருந்தி இந்த விரதத்தை முடிக்கவேண்டும். இந்த விரதம் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி தினத்தில் தொடங்கி அனுஷ்டிப்பது சிறப்பாகும்.


இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள்  நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான  நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

    இந்த விரதத்தை அனுஷ்டித்து விநாயகப்பெருமானின் அருளினைப் பெறுவோமாக!

Comments

 1. தெரியாத புதிய விடயங்கள் தெரிந்து கொண்டேன் நண்பரே,,,,, நன்றி.

  ReplyDelete
 2. சங்கடங்கள் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விளக்கம் அறிந்தேன்.
  நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 3. அருமை சகோதரரே!..

  மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி தினத்தில் தொடங்கி அனுஷ்டிக்கலாம் என்றதும் மனதில் தீர்மானம் செய்தாயிற்று!..

  நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 4. இவ்விரதம் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 5. சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 6. சங்கடஹர சதுர்த்தி விரதம் குறித்த பல தகவல்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 7. சிறந்த தகவல் பகிர்வு!
  ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத்.

  ReplyDelete
 8. சில தகவல்கள் புதிது. அறிந்தோம்....

  ReplyDelete
 9. என் அம்மா அடிக்கடி இந்த விரதத்தைப் பற்றி சொல்லுவார்கள்.
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2