செய்யற வேலையில உங்களுக்கு ஈடுபாடு இருக்கா?
செய்யற வேலையில உங்களுக்கு
ஈடுபாடு இருக்கா?
எந்த வேலையாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள்
ஓர் அர்ப்பணிப்புடன் ஈடுபாட்டுடன் செய்தால் அந்த வேலை கஷ்டமாகவோ செய்ய
முடியாததாகவோ தோன்றாது. வேலையும் கஷ்டமாக இருக்காது. ஈடுபாடு இன்றி ஓர் வேலையில்
என்னால் ஒட்டிக்கொண்டு இருக்க முடியாது. அதே போல என்னை நம்பி ஓர் வேலையைக்
கொடுத்துவிட்டால் அதில் தலையீடு இருப்பதை நான் விரும்ப மாட்டேன். இப்படி செய்!
அப்படி மாற்று! இங்கே குறை! அங்கே கூட்டு! என்பதெல்லாம் எனக்கு பிடிக்காது.
இதனாலேயே நான் பிறரிடம் பணிபுரியவில்லை!
சொந்தமாகவே தொழில் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டேன்! அந்த சொந்த தொழிலிலும் கூட
ஈடுபாடு குறைந்தால் தொழிலை விட்டுவிட்டேன்.
2000 மாவது வருஷத்தில் எங்கள் ஊர் பக்கம்
எஸ்.டீ.டீ பூத்கள் கொள்ளையாக வசூலை அள்ளின. அப்போது நானும் ஓர் எஸ்.டீ.டீ பூத்
வைத்தேன். எனக்கு போட்டியாக மூன்று பேர் அதே ஊரில் பூத் வைத்தனர். அதுவும் எனக்கு
பின் அப்ளிகேஷன் போட்டு எனக்கு முன்னதாகவே லைன் வாங்கிவிட்டனர். விபரம் தெரிந்து
தொலைபேசி அலுவலகத்தில் சத்தம் போட்டபின் ஒருவழியாக இணைப்புத் தந்தனர்.
மற்ற இருவரை விடவும் எனக்கு அதிக கஸ்டமர்கள்.
நல்லவியாபாரம் நடந்தது. அதில் டீக்கடை மற்றும் எஸ்.டீடீ வைத்திருந்த ஒருவருக்கு
என் மீது ஏகப்பட்ட பொறாமை! வெளியூரில் இருந்துவந்து நம்ம ஊரில் இவன்
சம்பாதிக்கிறானே என்று ஏகப்பட்ட வயிற்றெரிச்சல்! என்னன்னோமோ தொல்லைகள் தந்து பார்த்தார். நான் அசரவில்லை!
இரண்டு வருடங்கள் தொழில் செய்தேன். அப்புறம் அதன் மீது ஈடுபாடு குறைந்து போனது.
எதற்கு இப்படி அடுத்தவனோடு போட்டி! விட்டுவிடலாம்! நமக்குத்தான் வேறு தொழில்
இருக்கிறதே என்று அந்த எஸ்.டி.டீ பூத்தை விற்றுவிட்டேன்.
அப்போதே டியுசன் நடத்தி வந்தேன். அதை விரிவு
படுத்தி சிறப்பாக செய்ய ஆரம்பித்தேன். 2004ல் எனது டியுசன் செண்டரில் பக்கத்து
பள்ளியில் படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் மற்றும் பள்ளி முதல்வனாக வர என் டியுசன்
கிட்டத்தட்ட ஓர் மினி பள்ளி மாதிரியே உருவானது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் நடத்திய
டியுசனை 2011ம் வருடத்தோடு நிறுத்திவிட்டேன். காரணம் ஈடுபாடு குறைந்து போனதுதான்
காரணம்.
பெயருக்கு ஏதாவது ஓர் தொழில் ஓர் வேலை
என்று செய்வதில் எனக்கு உடன்பாடில்லை! கடனே என்று வேலை செய்வதில் உடன்பாடில்லை!
கடமையை கருத்தாய் செய்வதே பிடிக்கும்.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன்! நம்ம இந்தியன்
கிரிக்கெட் டீம் ஆஸ்திரேலியாவில் கடனே என்று விளையாடி அடிமேல் அடிவாங்கிக்
கொண்டிருக்கிறதே அதைப்பார்த்ததும் இதெல்லாம் தோன்றியது.
ஒரு பிளெயர் கூட அர்ப்பணிப்பு உணர்வுடன்
விளையாடவில்லை! ஏதோ கடமைக்கு விளையாடுகிறார்கள். ஆடினாலும் பணம்! ஆடாவிட்டாலும்
பணம்! கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது! அப்புறம் எதற்கு ஆடவேண்டும்? அப்படித்தான்
இருக்கிறது இவர்கள் ஆட்டம். கொஞ்சம் கூட
சுதாரிக்காமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த ஆட்டத்தை பார்க்கும் போது நான் ஒன்பதாவது
படிக்கும்போது ஆடிய ஆட்டங்கள் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு கிரிக்கெட்
பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது. எங்கள் கோயில் வளாகத்தில் நானும் என் தங்கைகள்,
என்னுடைய நண்பர்கள் இரண்டுபேர் என பந்தை உருட்டிவிட்டு விளையாடுவோம்.
ஒருநாள் எங்கள் ஊரைச்சேர்ந்த கர்ணா என்பவன்
என்னை அணுகி, சாமி! உங்க டீமுக்கும் எங்க டீமூக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமை பெட்
மேட்ச் வைச்சுக்கலாமா என்றான்.
ஏதோ ஓர் ஆர்வத்தில் சரி என்று
சொல்லிவிட்டேன். எங்கள் டீமில் மொத்தமே ஐந்து பேர்தான். ஒருத்தருக்கும் பந்துவீசத்
தெரியாது. மட்டையை ஏதோ சுழற்றுவோம் அவ்வளவுதான். எங்கள் மட்டையும் கூட தென்னை
மட்டைதான்.
அன்றைய ஞாயிற்றுக்கிழமை மதியம் குளத்தங்கரை
மேட்டில் மேட்ச். இரண்டுமணிக்கு சென்றோம். எதிர்வெயில் கொளுத்தி எடுக்க எவ்வளவு
பெட் என்றான் கர்ணா.
ஐந்து ரூபாய் வைச்சுக்கலாமா? என்றேன்
தயக்கத்துடன்!
அவனுக்கு வாயெல்லாம் பல்! ஓக்கே! அஞ்சுரூபா
என்றான். அப்போதெல்லாம் எட்டணாவுக்கு எல்லாம் பெட் மேட்ச் வைத்து ஆடுவார்கள் இது
எனக்கு அப்போது தெரிந்திருந்தால் நாலரை ரூபாய் மிச்சம் ஆகியிருக்கும். ஓர்
கவுரவத்திற்கு அஞ்சு ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அவனும் இளிச்சவாயர்களிடம்
அகப்பட்ட வரை லாபம் என்று தலையாட்டிவிட்டான்.
உங்க கிட்ட பவுலர் யாரும் இல்லை! ராஜி
மாங்கா பால் போடறான்! பரவாயில்லை! எங்க சைட்லருந்து நாகராஜை அனுப்பறேன்! பத்து
பத்து ஓவர் என்றான். ஏதேதோ சொன்னான். எல்லாவற்றிற்கும் தலையாட்டினோம். டாஸில்
வென்றான் பேட்டிங் எடுத்துக் கொண்டான்.
எங்கள் ஐவரோ அங்கே குளத்து மேட்டில் இருந்த
சிலரை சேர்த்து டீமூக்கு எட்டு பேர் என்று பிரித்து ஆடினோம். அவங்க டீம்
நாகராஜுக்கு எங்க டீமில் வந்து ஆடவே பிடிக்கவில்லை! வேண்டா வெறுப்பாக ஏதோ
வீசினான். பவுண்டரிகள் சிக்சர்கள் பறந்தன. மாங்கா பால் போட்ட ராஜி சில விக்கெட்
எடுக்க நானும் ஏதோ என்பங்கிற்கு ஓவர் வீசினேன். பத்து ஓவர்களில் எழுபது ரன்களை
விளாசி விட்டார்கள்.
நாங்கள் விளையாட ஆரம்பித்தோம். அவர்கள்
கொண்டுவந்திருந்த பேட்டை எங்களால் தூக்கவே முடியவில்லை! அதை தூக்குவதற்குள் பந்து
ஸ்டம்ப்ஸை பதம் பார்த்தது. அப்புறம் எங்கள் தென்னை மட்டையிலே ஆடுகிறோம் என்று
அதிலேயே விளையாட ஆரம்பித்தோம்! அதுவரை உருட்டி போட்டு விளையாடியவர்கள் நாங்கள்.
பவுலிங்கை எதிர்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டோம்! ஜெயேந்திரகுமார் ரொம்பவும் நன்றாக
ஆடினான். பத்து ஒவர்கள் முழுமையாக ஆடவில்லை! எட்டு ஓவர்களில் 45 ரன்களில்
சுருண்டுவிட்டோம். நான் எப்படி ஆடினேன் என்று கேட்கிறீர்களா? வீசிய பந்தை
பவுண்டரிக்கு அடித்ததோடு ஸ்டம்ப்ஸையும் தட்டி ஹிட் விக்கெட் ஆகிவிட்டேன்! ஐந்து
ரூபாய் தண்டம் ஆனதுதான் மிச்சம். ஆனாலும் பெரிதாக எதையோ சாதித்துவிட்டதாக மனதில்
ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருந்தது. நம்மாலும் ஆட முடியும் என்று ஒன்றுமே தெரியாமல்
ஆடப்போனாலும் குறிப்பிட்ட அளவிற்கு ஸ்கோர் செய்தோம்.
அதன் பின்னர் வளர்ந்து அந்த பகுதியிலேயே
எங்கள் அணிதான் சிறந்த அணியாக இருந்தது. அந்த அணியில் இருந்த நாகராஜும் எங்கள்
அணிக்கு வந்துவிட்டான். அவனது ஸ்பின் பவுலிங்கை எல்லொரும் விளாசி அவன் புகழ் மங்க
ஆரம்பித்த சமயம் ஒரு முக்கிய போட்டியில் முதல் ஓவரை அவனை வீசச் சொன்னேன். நானா…?
வேண்டாம் என்றான்.
இல்ல நீ தான் போடனும் என்றேன். முதல் பந்தையே
தூக்கி அடித்தான் எதிரணி பேட்ஸ்மேன். பந்து நடுமட்டையில் படாமல் முனையில் பட்டு
உயரே எழும்பி நாகராஜிடமே கேட்ச் ஆனது.
துள்ளிக் குதித்தான். அப்போது
அவன் என்னை பார்த்த பார்வையில் ஓர் நன்றி தெரிந்தது. முன்பு அவன் செய்த தவறு அவனை
உறுத்தி இருக்க வேண்டும்.
ஒரு கேப்டன் தன் அணியில் உள்ள வீரர்களை
நம்பவேண்டும். கடைசிவரை வெற்றிக்கு போராட வேண்டும். அப்படியே சரண்டர் ஆகக் கூடாது.
இது எதுவும் இப்போதைய இந்திய அணியிடம் இருப்பதாக தெரியவில்லை!
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! ஓவராக அல்டாப்
விடுவதாக கூட நினைத்துக் கொள்வீர்கள். ஆனாலும் சொல்கிறேன். எங்கள் கோயில்
வளாகத்தில் பந்தை குத்திப்போட்டு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தோம் இரண்டு அணிகள்
அணிக்கு 6 பேர். எங்கள் அணியில் ஆறு பேரும் சேர்ந்து எடுத்த ரன்கள் ஆறுதான். எதிர்
அணியிலோ அந்த ஆறு ரன்களை ஒரே ஷாட்டில் எடுக்ககூடிய பலமான வீரர்கள் இருக்க நான்கே
ரன்களில் அவர்களை சுருட்டி வென்றுவிட்டோம். மூன்று ஓவர்கள் மூன்றே ரன்கள்
ஐந்துவிக்கெட் எடுத்து அவர்களை தோற்கடிக்க செய்தேன். ஐந்து விக்கெட் நான்
எடுத்தாலும் உதவியது மற்ற ஐந்து நபர்கள். அவர்களை நான் நம்ப அவர்களும்
நம்பினார்கள் ஜெயித்தோம். இந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் இன்றைய கிரிக்கெட் மட்டும் அல்ல வேறு எதிலும் இருப்பது
போல தெரியவில்லை!
அப்புறம் எப்படி உயர்வுகள் வரும்? வெற்றிகள்
குவியும்? கொஞ்சம் அல்ல! நிறையவே யோசிக்க வேண்டிய விசயம்தான் இல்லையா?
டிஸ்கி} பத்தி எழுத்துக்கள்
பற்றி நீண்ட நாளாகவே ஓர் ஆர்வம்! எனவே முயன்று பார்த்துள்ளேன்! உங்கள் கருத்துக்களை அறிந்து இதை தொடர்வதா
விடுவதா என்று முடிவு செய்வேன்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
Im coming after
ReplyDeleteIm coming after
ReplyDeleteஇதே அனுபவம் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கு ...
ReplyDeleteஅனுபவத்தை பகிர்ந்த விதம் சிறப்பு.
ReplyDeleteஅற்புதமான கட்டுரை சுரேஷ்.உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். சுவாரசியம் கூடியுள்ளது.வாழ்த்துக்கள்
ReplyDeleteவெளி நாடுகளுக்கு சென்றாலே ஒரு நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். அவர்களுக்கு தேவை நல்ல மண வலிமைப் பயிற்சிகள். உலகப் கோப்பையில் எப்படி எல்லாம் சொதப்பப் போகிறார்களோ . இப்போதே சுவாரசியம் போய் விட்டது.
பேசாமல் விளையாடுவதை விட்டு விடலாம்! :(
ReplyDeleteநல்ல பகிர்வு.
அருமையான பகிர்வு நண்பரே!
ReplyDeleteஅல்டாப் என்று நினைக்கவில்லை... சுவாரஸ்யம்...
ReplyDelete