கூடா நட்பு! பாப்பா மலர்!

கூடா நட்பு! பாப்பா மலர்!


ஒரு அடர்ந்த காட்டின் ஓரமாய் இருந்த ஓர் ஊரில் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த பூனை அந்த ஊரில் இருந்து அடிக்கடி பக்கத்து காட்டிற்கு சென்று வரும். அப்படி சென்று வருகையில் நரி ஒன்றை நட்பு பிடித்தது.
   நரி வேட்டையாடி தின்ற மிச்ச சொச்ச உணவுகளை பூனைக்கு கொடுக்கும். பூனையும் ஒரு கட்டு கட்டும். இப்படி வாரம் ஒருமுறையேனும் காட்டுக்குச் சென்று நரி கொடுக்கும் விருந்தை ருசித்துக் கொண்டிருந்தது பூனை.
  ஊருக்குள் சத்தம் போடாமல் யார் வீட்டின் அடுக்களைக்குள்ளாவது சென்று பயந்து பயந்து பாலையோ சோற்றையோ உருட்டித் தின்னுவதை விட காட்டு வாழ்க்கை பூனைக்குப் பிடித்து இருந்தது. அதே சமயம், நரிக்கு நகரத்துக்குச் செல்லவேண்டும் அங்குள்ள உணவு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆசையாக இருந்தது.
   ஒருநாள் நரி,  “பூனை நண்பா! இத்தனை நாள் என்னுடைய விருந்தினராக வந்து நான் கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுச் செல்கிறாய்! ஆனால் உன் ஊருக்கு மட்டும் என்னைக் கூப்பிட மாட்டேன் என்கின்றாயே? நான் இதைக் கேட்க கூடாதுதான்! ஆனாலும் என் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசை கேட்கத் தூண்டிவிட்டது!” என்று கேட்டது.
   பூனையார், “நரி நண்பா! உன்னை நகரத்துக்கு அழைத்துச்செல்ல ஆசைதான்! ஆனால் நீ மகிழ்ச்சி அதிகமானால் சத்தம் போடுவாய்! அது எனக்கல்ல உனக்குத்தான் ஆபத்து! அதனால்தான் உன்னைக் கூப்பிடவில்லை!” என்றது.
   “இதென்ன பிரமாதம்! நான் என் மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்! ரொம்ப நாளாய் நகரத்து உணவை ருசிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை!” என்றது நரி.
   அப்படியானால் சரி! உன்னை இன்றே என் ஊருக்கு கூட்டிச்செல்கிறேன்! தடபுடலான விருந்து சாப்பாடு போடுகிறேன்! ஆனால் நீ மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காட்டுக்குள் இருப்பதாக நினைத்து மகிழ்வோடு ஊளையிட்டாயோ! அவ்வளவுதான்! எனக்கொன்றும் இல்லை! நீதான் மாட்டிக்கொள்வாய்” என்றது பூனை.
   “அப்படியெல்லாம் நடக்காது நண்பா! நான் என் மனசை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வேன்!” என்றது நரி.
  உடனிருந்த மிருகங்களோ நரியை எச்சரித்தன.  “நரியே! நமக்கு காடுதான் சரி! பூனையை நம்பாதே! நகருக்கு சென்றால் நமக்குப் பாதுகாப்பு கிடையாது” என்றன.
   “உங்க புத்திமதியெல்லாம் யாருக்கு வேண்டும்? நான் நகரத்தை சுத்திப் பார்க்க போறேன்! நாவுக்கு ருசியா சாப்பிடப் போறேன்!” என்று நரி உற்சாகமாக பாடியபடி பூனையுடன் கிளம்பியது.
   பூனை தான் வழக்கமாக தங்கியிருக்கும் வீட்டின் மொட்டை மாடிக்கு நரியைக் கூட்டிச் சென்றது. அன்றைக்கு முழுநிலா வானில் ஜொலித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததுமே நரிக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வாயைத் திறந்து பாட ஆரம்பித்தது.
   பூனை, உடனே நரியின் வாயை மூடியது. நண்பா! நான் என்ன சொன்னேன்! அமைதியாக இரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் உணவோடு வருகிறேன்! என்று  வீட்டுக்குள் சென்றது. கொஞ்ச நேரத்தில் வீட்டில் இருந்த விதவிதமான பலகாரங்களை சத்தம் போடாமல் திருடி எடுத்துவந்து நரிக்கு கொடுத்தது.
பலகாரங்களின் ருசி நரிக்கும் மிகவும் பிடித்துப் போக இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்டு வாங்கி வயிறு முட்ட உண்டது. பனிக்காற்று இதமாக வீச குளிர் நிலா ஒளிக்க நரிக்கு பாட்டுப் பாடவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. பூனை எவ்வளவோ தடுத்தும் அது “ஊ…ஊ…” என்று ஊளையிட ஆரம்பித்தது.
     “இதென்னடா மொட்டை மாடியில் நரியோட சத்தம் என்று வீட்டுக்காரர் பதறி அடித்து எழுந்து வந்தார். கையில் டார்ச்சும் தடியும் எடுத்தபடி அவர் வருவதைக் கண்ட பூனை,  “நண்பா! நான் வருகிறேன்! இனி தப்பிப்பது உன் சாமர்த்தியம்! ”என்றது.
    “என்னது! ஆபத்து சமயத்தில் விட்டு ஓடுகிறாயே!”
   “நண்பன் சொல்லை கேட்காமல் பாடினாயே!”
     “நண்பா! காப்பாற்று!”
 “உனக்குத்தான் ஆயிரம் தந்திரங்கள் தெரியுமே! எப்படியாவது பிழைத்துக் கொள்!”
    “எனக்கு ஒன்றும் நினைவுக்கு வரவில்லையே!”
   “எனக்கு தெரிந்த ஒரே தந்திரம் ஓடிப்போய் மரத்தில் ஏறிக் கொள்வதுதான்! வரட்டுமா!” பூனை ஓடிப்போய் பக்கத்தில் இருந்த மரத்தில் தாவிக் கொண்டது.
   நரியால் அப்படி ஓட முடியவில்லை! மொட்டை மாடியில் இருந்து குதித்தாலும் கால் உடைந்துவிடுமே!  அது தயங்க தடியாலும் கல்லாலும் அடித்து விரட்டினார் வீட்டுக்காரர்.
   காயங்கள் வலிக்க அப்படியே காட்டுக்குள் தப்பிச்சோம் பிழைச்சோம்! என ஓடியது நரி.
அப்போ மத்த விலங்குங்க நரிகிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டுதுங்க!
  அப்ப நரி ஓன்னு அழுதுச்சு! அப்புறமா இந்த பாட்டை பாடுச்சு!
  கூடாத பேருடன் கூடலாமா?
  கூடுனாலும் கூடங்கள் மாடங்கள் ஏறலாமா?
  கூடங்கள் மாடங்கள் ஏறினாலும்
  நாதங்கள் கீதங்கள் இசைக்கலாமா?
  நாதங்கள் கீதங்கள் இசைத்ததாலே
மேளங்கள் தாளங்கள் கிடைத்தனவே!
 அப்படின்னு வடிவேலு பாணியிலே அழுதுகிட்டே சொல்லுச்சு நரி!  அதை மத்த விலங்குகள் பரிதாபமாக பார்த்தன! வேறு என்ன செய்ய முடியும்?
(செவிவழிக் கதை தழுவி எழுதியது)

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கதை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஆசையே துன்பத்திற்கு காரணம்!!

    ReplyDelete
  3. ஹாஹா, குழந்தைக்குத் தேவையான நீதிக்கதைனாலும் நானும் குழந்தை தானே! ரசிச்சேன்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!