எமகாதகர்கள்!


  நான் பூஜை செய்யும் கோயில் உள்ள ஊரில் வயதான பெரியவர்  ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பார். எப்படியும் எழுபதை கடந்த வயதிருக்கும். கருத்த தேகம், குரல் கணீரெண்று ஒலிக்கும், தள்ளுவண்டியில் காய்கறிகளை  கூர் கட்டி கொண்டுவந்து விற்பார். சில சமயம் எடைக்கு விற்பார். பெரிதாய் லாபம் ஒன்றும்  அவருக்கு கிடைக்காது என்றுதான் எனக்குத் தோன்றியது. 
       ஏழ்மை! முதுமை, இந்த தள்ளாதவயதில் இப்படி சம்பாதிக்க வேண்டுமா? என்று தோன்றும். இந்த பெரியவரிடம் பேரம் பேசாமலே காய்கறிகள் வாங்கலாம். ஆனால் அவர் சொல்லும் விலையில் ஒன்றோ இரண்டோ குறைத்துதான் கேட்பார்கள் மக்கள். அவரும் சொல்லிப் பார்ப்பார். கடைசியில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். குறைவான காய்கறிகளே கொண்டுவருவார். இதில் விற்று என்ன கிடைக்கும் என்று பலமுறை எண்ணியதுண்டு. 

     இவர் இப்படி என்றால் ஓர் முதியவர் எங்கள் ஊருக்கு  வருவார் தலையில் அல்லது இடுப்பில் ஒரு மூட்டை சுமந்து வருவார். அது முழுக்க தலையணை உறைகள், குழந்தைகளுக்கான சிறிய உடைகள், ஜாக்கெட்டுகள், உள்பாவாடைகள் என்று அடைத்து எடுத்து வருவார். வியாசர்பாடியில் இருந்து வருவார். இவருக்கும் எழுபதைக் கடந்த வயதிருக்கும். இதை விற்று தம் சொந்த செலவு போக முதலீட்டிற்கும் சேர்த்துவிடுவார். இத்தனைக்கும் இரண்டு பிள்ளைகள் நல்ல சம்பாதியத்தில் இருந்தார்கள். இவரை அவர்கள் தடுத்த போதும் உடம்பில் வலு இருக்கும் வரை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லுவார்.

     இதில் தருமம் வேறு, எங்கள் ஊர் சிவாலயத்திற்கு மாதம் தவறாமல் கால்கிலோ நல்லெண்ணெய் வாங்கித் தருவார். அப்போது ஆலயத்தில் விளக்கேற்றவே எண்ணெய் இருக்காது. இவர் தரும்  எண்ணெய் மிகவும் உபயோகமாக இருக்கும்.  நடந்தே வந்து வியாபாரத்தை கவனித்துவிட்டு  ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாடிவிட்டு மதிய பொழுதில் உணவு உண்டுவிட்டு மாலையில் தான் கிளம்புவார். எப்படியும் மாதத்தில் பத்து பதினைந்து நாட்கள் இப்படி வருவார். இப்போது வருவதில்லை இறந்துவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். கடைசியாக பார்த்தபோது மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார்.

    இப்படி உழைத்து சாப்பிட நினைக்கும் உத்தமர்கள் இருக்கும் உலகில்தான் எமகாதர்களான விற்பனையாளர்களும் இருக்கிறார்கள். அதிலும் இந்த பரிசுச் சீட்டு என்று ஏமாற்றி விற்கும் விற்பனையாளர்களை கண்டால் எனக்கு பற்றிக் கொள்ளும். ஒரு ஐந்தாறு வருடங்கள் முன்பு இப்படித்தான் காலையில் ஏதோ ஓர் கம்பெனி பெயரை சொல்லிக் கொண்டு இருவர் வந்தனர். இந்த மாதிரி கம்பெனி உங்கள் பெயரை சொல்லுங்கள் மாலையில் குலுக்கல் இருக்கிறது உங்களுக்கு பரிசு விழுந்தால் சொல்லுவோம் என்றார்கள்.

     குலுக்கலில் பரிசு எங்கே விழப்போகிறது? நம் அதிர்ஷ்டம்தான் நமக்குத் தெரியுமே என்று சும்மாவாச்சும் பெயர் கொடுத்துவைத்தேன். ப்க்கத்து வீட்டினரும் கொடுத்தார்கள். மாலையில் அந்த நபர்கள் மீண்டும் வந்தார்கள் உங்கள் பெயர் குலுக்கலில் தேர்வாகி இருக்கிறது இந்த ஊரில் வெற்றி பெற்றது நீங்கள் மட்டும் தான்  என்று மூன்று பொருட்கள்  குக்கர் மற்றும் மிக்சி இன்னும் ஏதோ ஒன்றை காண்பித்து இதன் உண்மை விலை இது ஆனால் நீங்கள் இரண்டாயிரம் கொடுத்தால் போதும் என்று சொன்னார்கள்.

     அவர்களின் ஏமாற்றுத் தனம் புரியாமல் இரண்டாயிரம் கொடுத்து வாங்கிவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது . என்னைப் போலவே ஊரில் பலருக்கும் பரிசு விழுந்த ரகசியம். சிலர் ஏமாந்து இருந்தார்கள் சிலர் உஷாராக இருந்திருக்கிறார்கள். அந்த குக்கரும் மிக்சியும் ரொம்ப நாள் உழைக்கவில்லை! கம்பெனி பொருள் இல்லை! விரைவிலேயே பழுதாகிவிட்டது. அட இப்படி ஏமாந்துவிட்டோமே என்று வயிற்றெரிச்சல்தான் மிச்சப் பட்டது.

    அதற்கடுத்த வருடம் இதே மாதிரி சொல்லிக் கொண்டு வந்தவர்களை விரட்டிவிட்டேன். அதே போல இயற்கை கொசுவிரட்டி என்றும் லிக்விட் பொறுத்த வேண்டாம். இதை பொருத்தி சுவிட்ச் ஆன் செய்தால் போதும் கொசு மட்டும் அல்ல எந்த பூச்சியும் வராது என்று சொல்லி ஒரு மெசினை  விற்றுக் கொண்டிருந்தார்கள். இயற்கை ஆர்வலராக  திகழ விரும்பி ஒன்றை ரூ 100 கொடுத்து வாங்கினேன். அதற்கு பரிசாக கேஸ் லைட்டரும் கொடுத்தார்கள் என்று நினைவு. அதை பொருத்தியதும்  ஏதோ இரைச்சல் ஒன்று வந்தது. அதனால் கொசுவுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை! வழக்கம் போல வந்து ரத்தம் சேகரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது.

    இதே போல கேஸ் சேமிப்பு என்று சிலிண்டர் வடிவில் ஒரு பொம்மையை கேஸ் டியுபில் பொருத்தினால் கேஸ் குறைவாக செலவாகும் என்று ஏமாற்றி ஒரு 100 ஏமாற்றி சென்றார்கள்.
          
    இப்படித்தான்  நேற்றும் ஒரு வாலிபன் வந்து  பைலட் சோப் அறிமுக சலுகையாக ஒரு சோப் பத்து ரூபாய்க்கு தருகிறோம் என்று வாங்கிக் கொள்ள வேண்டினான். சரி என்று ஓர் இரண்டு சோப் வாங்கி கொண்டதும் சென்றவன் மீண்டும் திரும்பி வந்தான். சோப்பை பிரித்து பாருங்கள் அதன் உறையில் பரிசு எழுதி இருக்கும். அப்படி எழுதி இருந்தால் அந்த பொருளின் பாதி விலையில் நீங்கள் வாங்கி கொள்ளலாம் என்றான்.

       இந்த வகையில் பலமுறை அனுபவப்பட்ட என் தந்தை, யோவ்! சோப் வித்தியா? போய்கிட்டு இரு! எங்களுக்கு எப்படி பிரிக்கணும்? எப்ப பிரிக்கணும்றது தெரியும்! இப்பத்தான் பிரிக்கணும்னு சொன்னா இந்தா சோப் எடுத்துக்கிட்டு இருபது ரூபாயைக் கொடுத்திட்டு போய்க் கிட்டே இரு என்றார்.
    
     இல்லே சார்... ப்ரைஸ் அடிச்சா நல்லதுதானே... என்று இழுத்தான்.

யோவ்! எங்களுக்கு ப்ரைஸ் எதுவும் வேணாம்! உனக்கு சோப்புக்கு ப்ரைஸ் கொடுத்தாச்சுல்ல கிளம்பு என்று விரட்டவும், மனசே இல்லாமல் கிளம்பிவிட்டான்.

      இப்படி ஏமாற்றி சம்பாதிக்கும் எமகாதகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தள்ளாத வயதில் உழைத்து பிழைக்கும் பெரியவர்களுக்கு நேர் எதிரிகள் இவர்கள். அந்த பெரியவர்களைவிட அதிகமாக சம்பாதித்தும் விடுகிறார்கள் ஆனால் அது அன்று மாலை வரைக் கூட அவர்களிடம் நிலைத்திருக்காது என்றே தோன்றுகிறது. ஊரை ஏமாற்றும் இந்த ஏமாற்றுக்கார எமகாதகர்கள் பல்வேறு வடிவுகளில் நூதனமாக மாறிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எவ்வளவோ பேப்பர்களிலும் இணையத்திலும் டீவிக்களிலும் இதைப்பற்றி செய்திகள் வந்தாலும் இன்னும் மக்கள் ஏமாந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

    இப்படி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உழைத்து பிழைக்கும் வர்கங்கள் காணாமல் போவது கலியுகத்தின் முரண்பாடு போலும்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் ! நன்றி!

Comments

  1. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் நண்பரே...

    ReplyDelete
  2. தள்ளாத அகவையிலும் (வயதிலும்)
    தொழில் செய்து பிழைப்போரை
    பாராட்ட வேண்டும்!

    ReplyDelete
  3. தன் கையே தனக்கு உதவி என்றே வாழும் வறியவரை வதைக்கும் வசதி படைத்தோரின் பண்பாடற்ற செயல் வருத்தமே!
    நன்றி நண்பரே உண்மை நிகழ்வை படம் பிடித்து காட்டியமைக்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. இவ்வாறான ஏமாற்றுபவர்கள் இருக்கும் சூழலில் நல்லவர்களும் உத்தமர்களும் இருப்பதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. தாங்கள் அறிமுகப்படுத்திய பெரியவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  6. கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் உழைத்து பிழைக்கும் வர்கங்கள் காணாமல் போவதுதான் கலியுகத்தின் முரண்பாடு
    உழைக்கும் பெரியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. ஏமாறுபவர்கள் இருக்கும்வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! அவர்களை இனம் கண்டு நாம்தான் விழிப்புடன் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்...நல்ல பதிவு!

    ReplyDelete
  8. ஹ்ம்ம் இப்படி ஏமாற்றிப் பிழைப்பதற்கு என்றே நிறுவனங்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றனவே..நல்ல பதிவு சகோ.
    //நடந்தே வந்து வியாபாரத்தை கவனித்துவிட்டு ஆலயத்தில் தேவாரம் திருவாசகம் பாடிவிட்டு மதிய பொழுதில் உணவு உண்டுவிட்டு மாலையில் தான் கிளம்புவார். எப்படியும் மாதத்தில் பத்து பதினைந்து நாட்கள் இப்படி வருவார். இப்போது வருவதில்லை இறந்துவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். கடைசியாக பார்த்தபோது மிகவும் உடல் நலம் குன்றி இருந்தார்.// நேரில் பார்த்தது போல இருக்கிறது அப்பெரியவரை.

    ReplyDelete
  9. ஏமாற்றுலகம் இன்று அதிகம் ஏமாற்றுகின்றது நாம் தான் சூதானமாக இருக்க வேண்டும்! சிந்திக்கவைக்கும் பகிர்வு

    ReplyDelete
  10. ஏமாற்றம் என்பது சகிக்கமுடியாத ஒன்று தான் என்ன செய்வது நாமும் எத்தனை முறை ஏமாற்றப் பட்டாலும். திரும்பவும் இவர்கள் நல்லவர்கள் பார்க்கவே பாவமாக இருக்கிறது. அவர்களை போல அல்ல இவர்கள் என்று மீண்டும் மீண்டும் எம்மாறுவோமே.நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தொடர ...!

    ReplyDelete
  11. ஏமாற்றுவதில் புது புது யுக்திகளை கண்டுபிடிப்பதில் காட்டும் ஆர்வத்தினை உழைப்பதில் காட்டினால் நல்லது.

    ஏமாறும் மக்கள் இருக்கும் வரை அவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

    ReplyDelete
  12. திருடுவது, பிறரை ஏமாற்றுவது இவையெல்லாம் ஒருவித மனநோய் ... அவர்களாக திருந்தினால்தான் உண்டு ...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!