ஆடுகளம்!

ஆடுகளம்!


உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த ஒற்றை பனைமரங்களின் நிழல்களில் சிலர் இளைப்பாற ஆட்டம் களைகட்டியிருந்தது. கிராமத்தான்களின் கிரிக்கெட் ஆட்டம் அது. சச்சின் டெண்டுல்கராகவும், கபில்தேவாகவும், விராத் கோலியாகவும், தோனியாகவும் தம்மை கற்பனை செய்து கொண்டு அவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

    புல் மைதானம் அல்ல அது! அப்போதுதான் அறுவடை முடித்திருந்த வயல்! பிட்ச் வரை கொஞ்சம் சமனப்படுத்தி இருந்தார்கள். மற்ற இடங்கள் வெயிலில் வெடித்து துருத்தி நின்றன. காலில் ஷு இல்லை! ஜெர்கின்ஸ் இல்லை! எந்த பாதுகாப்பு அரணும் இல்லை! தேய்ந்து போன ஒரு மட்டை! கிழிந்து போகும் பந்துகள்! ஆனால் அவர்கள் ஆட்டத்தில் ஓர் உத்வேகம் இருந்தது. பந்தயம் தொகை கோடிகள் அல்ல! ஆனாலும் வென்றே ஆகவேண்டும் என்ற கொள்கையோடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

    அதோ பாருங்கள்! குள்ளமான ஒருவன்! சச்சின் மாதிரி நாசுக்காக புட்வொர்க் வைத்து பந்துகளை விளாசிக்கொண்டிருக்கின்றானே அவன் தான் மகி! செல்லமாக தாத்தா என்பார்கள். இவனை நம்பியே இந்த அணி இருக்கிறது. ஓப்பனிங் ஆடுவான். சுழல்பந்தும் வீசுவான். துடிப்பான பீல்டர்! தேவைப்பட்டால் கீப்பிங்கும் செய்வான். ஆல்ரவுண்டரான இவனை அந்த ஊரின் சீனியர் டீம் கூட போட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறது. அத்தனை ஸ்டார் ப்ளேயர் அவன். அவன் அவுட்டானால் மொத்த டீமூமே ஆடிப்போய்விடும். அவன் ஆடினால் டீம் ஜெயித்துவிடும். அன்று இந்திய டீமுக்கு டெண்டுல்கரோ அதே போலத்தான் மகி.

    இதோ ஒரு நான்கை விளாசி தனது அணிக்கு வெற்றி தந்துவிட்டான் மகி. இந்த கதை அவனைப்பற்றியதுதான். மகிக்கு பெரிதாக அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை! பதினொன்றாம் வகுப்புதான் படிக்கிறான். அரும்பு மீசை முளைக்கும் வயதில் அப்படியே காதலும் முளைத்துவிட்டது. எல்லாம் இனக்கவர்ச்சிதான் என்று அவனது டீமின் ஆலோசகர் சாமி சொன்னாலும் அதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை!

    சுற்றுவட்டாரத்தில் சாமியின் டீம்தான் தாதா! சாமிதான் இந்த டீமை உருவாக்கினார். முதலில் நிறைய தோல்விகளை கண்டு இன்று அசைக்க முடியாத அணியாகிவிட்டது. சாமிக்கு வயதாகி போக ஆலோசகர் ஆகிவிட்டார். மகிதான் கேப்டனாகவேண்டியது ஆனால் சாமிக்கு என்ன தோன்றியதோ மகியின் நண்பன் பாலாவை கேப்டனாக்கி விட்டார். மகி துணைக் கேப்டன்.

    அதே ஊரில் எதிரணி ஒன்று இருந்தது. கந்தா அதன் கேப்டன். மகியும் அவனும் நண்பர்களும் கூட! ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதுவரை மகி அணியை அவன் மண்ணில் வைத்து கந்தா அணி வென்றதில்லை! அதே போல மகி அணியும் அவர்கள் கிரவுண்டில் அவர்களை சாய்த்தது இல்லை! இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் போல இவர்கள் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
      அந்த வருட கோடை விடுமுறை! டோர்ணமெண்ட் அறிவித்துவிட்டார்கள். போட்டிகள் தொடங்கும் போதே தெரிந்துவிட்டது மகி அணியும் கந்தா அணியும் தான் பைனலுக்கு வரும் என்று. இந்த முறை எப்படியும் மகி அணியை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று கந்தா நினைத்தான். அவன் மனதில் ஓரு பக்காவான ப்ளான் உருவானது. மகி ஏற்கனவே பெண்கள் என்றான் கொஞ்சம் வழிவான். சிரித்து சிரித்து பேசும் இவனைக் கண்டால் பெண்களுக்கும் பிடிக்கும். இது போதாதா கந்தாவுக்கு! அடேய்! மகி! இந்த வருஷம் கப்பு எங்களுக்குத்தாண்டா! என்றான்.

  “கனவுல கூட உங்களுக்கு கப்பு கிடைக்காதுடா மச்சான்!”

    “பார்ப்போமா?”
 “பார்ப்போம் மச்சி! வேணும்னா பாத்திரக் கடையில உஙகளுக்கு ஒரு டீ கப்பு வாங்கித் தரட்டுமா?” மகி கிண்டலாக சொல்ல
”யாருக்கு டீ கப்பு! யாருக்கு கிரிக்கெட் கப்புன்னு பார்க்கத்தானே போறே! ஓவரா நக்கல் பண்ணாதே நாளைக்குவருத்தப்படுவே!” கந்தா சொல்ல, “தோடா! கொழந்தைக்கு கோவத்தை பாரேன்!” மகி சிரிக்க கந்தாவின் முகம் கறுத்துப் போனது.


      அன்று பள்ளிவிட்டு திரும்புகையில் பஸ்ஸில் ஒருநாள் மகியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மணிஷா. சேட்டுவீட்டு பெண். அவள் வசதிக்கு இந்த பள்ளியில் படிக்க வேண்டியது இல்லை! ஆனால் என்னவோ இந்த பள்ளியில் படித்துவந்தாள். இங்கிலிஷ் மீடியம் நைந்த் ஸ்டேண்டர்ட். அவள் அமரவும் கூட இருந்தவர்கள்  என்ன மச்சி நாங்கள்லாம் தூண்டில் போட்டாலும் மீனுங்க சிக்க மாட்டேங்குது! உனக்கு வாலண்டியரா வந்து விழுது!” கூட இருந்தவர்கள் கலாய்க்கஅந்த பெண்ணின் முகம் கூடுதலாய் வெட்கத்தில் சிவக்க மகியை ஏறிட்டு பார்த்தாள். ”நீங்க தப்பா நினைக்காதீங்க! பசங்க எப்பவும் இப்படித்தான்! கலாய்ப்பானுங்க! மனசுல ஒண்ணும் வெச்சுக்காதீங்க” என்றான். அவள் புன்னகைக்க மகி முகத்தில் வெட்கம் படர்ந்தது அப்படியே கிறங்கி போயிருந்தான்.
  
   அப்புறம் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். மகி கிரிக்கெட் ஆடும் போதெல்லாம் அவள் அங்கு இருப்பாள். பள்ளியின் இடைவேளையில் இருவரும் ஒன்றாய் சுற்றினார்கள். பாலாவுக்கு விஷயம் தெரிந்தது. என்னடா! ஓவரா போவுது? என்றான்.
     “எதுடா மச்சான்?”
  “அந்த பொண்ணுக்கூட சுத்திக்கிட்டு திரியறே?”
 “ நாங்க லவ் பண்றோம் மச்சி!”
 “டேய்! அது பணக்காரவூட்டுப் பொண்ணு! அதை நம்பி..”
  “காசு, பணம், ஜாதி, மதம் எல்லாம் காதலுக்கு முன்னாடி தூசிடா தம்பி”
  “யாரு! நான் உனக்குத் தம்பியா? தேவைதான்! ஒன்னைவிட ஒரு வயசு பெரியவன்! ஒருவருசம் பெயிலானதால ஒண்ணா படிக்கிறேன்! காதல் வந்தாலே பசங்களுக்கு நிலவரம் தப்பிடுது!”
  ‘சாரி அண்ணா! பிள்ளையார் முருகர் காதலை சேர்த்து வச்சமாதிரி எங்க காதலை நீ சேர்த்து வைக்க மாட்டியா?”

  “ அண்ணான்னு சொல்றே! அப்புறம் மாமா வேலை பார்க்கச்சொல்றே! உன்னை புரிஞ்சிக்கவே முடியலைடா! இதெல்லாம் வயசுக்கோளாறுடா தம்பி! ஏதோ பழகறே! கூட சுத்தறே! அத்தோட நிறுத்திக்க! காதல் கல்யாணம் அப்படின்னு கனவு கூட காணாதே!”
     “என்னடா பாலா! நீயே இப்படி சொன்னா?”
 “நான் எப்பவும் உனக்கு நல்லதுதான் சொல்லுவேன்! அப்புறம் உன் இஷ்டம்! அந்த பொண்ணுக்கூடவே சுத்திகிட்டு இருக்காமே நாளைக்கு மேட்ச் இருக்குது வந்துரு!”  பாலா சென்றுவிட்டான்.

     . அந்த பெண் இருக்கும் ஊரில்தான் கந்தாவின் உறவினர்கள் இருக்கிறார்கள்.மகி அந்த பெண்ணுடன் சுத்துவது தெரிந்ததும் அப்படியே  மகியை அங்கு அழைத்துச் சென்றான். அந்த பெண்ணின் உறவுப் பெண் ஒன்றை சிநேகம் பிடித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு மகியை அழைத்துச் சென்றான்.எப்படியொ இருவரையும் அடிக்கடி சந்திக்க வைத்தான். அந்த பெண்ணும் மகியை சுற்றி வந்தது. சின்னவயசுதான் அல்லவா? மகியின் கவனம் சிதறிக் கிடந்தது. அந்த பெண் ஒரு கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தது. அதை கட்டிக் கொண்டு இப்போது தோனி கிளவுசை கழட்டி மாட்டுவது போல ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு முத்தம் அந்த வாட்ச்சுக்கு கொடுப்பான். பாவம் அதற்கு வாயிருந்தால் அழுதே விட்டிருக்கும்.
    
      அவனால் முன்பு போல ஆட முடியவில்லை! அந்த பெண் நினைவாகவே இருந்தான். அந்தவருட டோர்ணமெண்டில் முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டது மகி அணி. கவனச்சிதறல்!
பாலாவுக்கு மிகவும் வருத்தம். எப்போதும் அனைத்து போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு வரும். இந்த முறை முதல் போட்டியிலேயே தோல்வி. மகியை அழைத்தார். "ஏன் மகி? நீ ஆடலைன்னா நம்ம டீம் அவ்ளோதான்! உன்னை நம்பி இருக்கிறோம்! இன்னிக்கு சொதப்பிட்டியே!" என்றான். மகியின் முகம் இருண்டு போனது. ”சாரிடா மச்சி! என் பிகர்கூட ஒரு சின்ன சண்டை! அதான் கவனமா ஆடமுடியலை!”
“நான் அப்பவே சொன்னேன்! உனக்கு இந்த விஷயம் சரிபட்டு வராதுன்னு!” “ இல்லேடா! அதுக்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை! நம்ம டீப் எப்படியும் கப் வாங்கும் கவலைப்படாதே!” “சரி சரி! அடுத்த மேட்ச்சாவது ஒழுங்கா ஆடு!” எப்படியோ அடுத்த ரெண்டு போட்டியில் வென்று பைனல்சுக்கு தகுதி பெற்றுவிட்டது.   எதிர்பார்த்தது போல கந்தா அணி பைனல்ஸுக்கு வந்துவிட்டது.

    பைனல்ஸ் விளையாடும்  முன் ப்ராக்டீஸ் செய்கையில் மகிக்கு அழைப்பு வந்தது மணிஷாவிடம் இருந்து, இன்னிக்கு என் கூட சினிமாவுக்கு வரவேண்டும் என்று. எனக்கு மேட்ச் இருக்குது!
  ” மேட்ச்தான் முக்கியமா? நான் முக்கியம் இல்லையா?” “இல்லை! நான் நாளைக்கு ஒழுங்கா ஆடனும்! இல்லேன்னா எங்க டீமோட கவுரவமே போயிரும்.”
    “நீ தான் டீம் டீம்னு உசுரை விடறே! அதனால உனக்கு என்ன பிரயோசனம்? அட்லீஸ்ட் உனக்கு கேப்டன் போஸ்டாவது கெடச்சுதா!”
      “ என் ப்ரெண்ட்தானே கேப்டன்! அவனுக்காக நான் ஆட வேண்டாமா?”
     “ நான் உன் லவ்வர்! எனக்காக சினிமாவுக்கு வரமாட்டியா?”

மகியால் பதில் பேச முடியவில்லை! ”இன்னிக்கும் நாளைக்கும் கொஞ்சம் விட்டுரு! அப்புறம்?”
     “இப்ப என் கூட சினிமாவுக்கு வரமாட்டே!”
மகி பதில் பேசவில்லை!  ஆடுகளத்தில் இருந்து அவள் புயலாக வெளியேற மகி தடுமாறிப் போனான்.
   அடுத்தடுத்து ஸ்டம்ஸுகளை சிதறவிட்டான். அப்படியே சோகமாக வந்து அமர்ந்தான்.
      மகி! இப்ப என்ன ஆகிப்போச்சு! இப்படி தடுமாடறே! ஓக்கே! நீ சினிமாவுக்கு போ! நாளைக்கு மேட்ச்சுக்கு வந்துடு! ப்ராக்டீஸ் உனக்கு வேண்டாம். சாமி சொல்ல மகி சைக்கிளில் விரைந்தான்.

   சினிமா தியேட்டரில் நுழைந்தான். அங்கே மணிஷா கந்தா அணியின் பவுலர் குருவுடன் இவனை பார்த்து கை அசைத்தாள்.
  “எங்க வந்தே?” உன் டீமையே கட்டிக்கிட்டு அழறதுதானே! இதோ பார் குரு நான் கூப்பிட்டதுமே வந்தான். இவனுக்கும் நாளைக்கு மேட்ச் இருக்குது! ஆனா நான் கூப்பிட்டதும் மறுக்கவே இல்லை! ரெண்டு டிக்கெட் தான் இருக்கு! ஒன்ணு அவனுக்கு! இன்னொன்னு எனக்கு!”
   “ அப்ப நான்!”
போய் கிரிக்கெட் விளையாடு!”  ஹாஹா ஏளனமாக சிரித்தாள் மணிஷா.
 “மணிஷா! நான் உன்னோட ரொம்ப நாள் ப்ரெண்ட்! இவன் இப்ப வந்தவன்! உனக்காக ப்ராக்டீஸைக் கூட விட்டுட்டு வந்துருக்கேன்!”
 “சரி பார்த்தா பாவமா இருக்கு! ஒரு கண்டீஷன்! அதுக்கு ஒத்துக்கிட்டா இவனை அனுப்பிச்சிட்டு உன் கூட படம் பார்க்கிறேன்!”
   “என்ன கண்டீஷன்!”
 “ கிட்டே வா சொல்றேன்!”
அவள் சொல்லவும் அதிர்ந்தான் மகி. ”இதுதான் உன் கண்டீஷனா! அது என்னால முடியாது!”
 “அப்ப போ! போய் விளையாடு! நான் குரு கூட போய்க்கிறேன்!”
 “வேண்டாம் மணிஷா!”
“அப்ப நான் சொல்ற கண்டீஷனுக்கு கட்டுப்படு!”
“ஓக்கே! உனக்காக கண்டிஷனை ஏத்துக்கறேன்!”
“ குரு நீ போ!” நான் மகியோட படம் பார்த்துக்கிறேன்!”

    “கந்தா! நீ சொன்ன மாதிரியே மணிஷா சொல்லி சத்தியம் வாங்கிட்டா! நாளைக்கு மகி டீம் அவுட்டு! நமக்குத்தான் கப்பு!” குரு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

     “சாமி! பாலா! நாம மோசம் போயிட்டோம்! நாளைக்கு டீம்ல மகி சரியா ஆட மாட்டான்! டக் அவுட் ஆயிருவான்” ஷங்கர் ஓடிவந்து சொன்னான்.
    “என்னடா சொல்றே?”
“நான் இன்னிக்கு தியேட்டருக்கு போனேனா! அங்க மணிஷா இருந்தா கூடவே குரு அப்ப மகி வந்தான்.”
 “ நான் தான் அனுப்பி வச்சேன்! அதுக்கென்ன?”
  “அந்த மணிஷா நாளைக்கு மகி டக் அவுட் ஆகனும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டா! அப்பத்தான் அவன் கூட படம் பார்ப்பேன்னு அடம் பிடிச்சு சத்தியம் கேட்டா! இவனும் பண்ணிக் கொடுத்திட்டான்!”
   “ என்னடா சொல்றே! மகி அப்படி எல்லாம் பண்ண மாட்டானே!”
  தற்செயலாக அங்கே வந்த குரு,  “ஆமா சாமி! மகி சத்தியம் பண்ணிட்டான்! காதல் அவன் கண்ணை மறைச்சிருச்சு!” என்றான்.

“ நாளைக்கு  மகியை டீம்ல சேர்க்காதீங்க! நான் ஓப்பன் பண்றேன்! கப்பு நமக்குத்தான்!” என்றான் ஷங்கர்.
அவனுக்கு மகியின் மீது பொறாமை! அவன் நன்றாக ஆடுவதால் இவனை அணியில் சேர்ப்பது இல்லை! ப்ராக்டீஸ் மேட்ச்சில் ப்ரெண்ட்லி மேட்சில் சேர்ப்பார்கள் டோர்ணமெண்ட்டில் சேர்ப்பது இல்லை! எப்படியாவது மகியை ஓரம் கட்ட வாய்ப்பை நாடியிருந்தான்.

“ அதை நாளைக்கு முடிவு செய்வோம்!” என்றார் சாமி.

குரு கந்தாவிடம் இந்தவிஷயத்தை சொல்ல ஓடினான். “கந்தா! நாளைக்கு மகியை இறக்கினா டக் ஆயிருவான். அதே சமயம் அவனுக்கு பதில் ஷங்கர் இறங்கினா நாமலே அவனை டக் பண்ணிருவோம்! கலகலத்து போயிருக்கு பாலா டீம்! இந்த வருஷம் நமக்குத்தான் கப்பு!”

கந்தா குதுகலித்தான்.

மறுநாள் டோர்ணமெண்ட், மகி சாமியிடம் வந்தான். ”சாமி! எனக்கு உடம்பு முடியலை! ஷங்கரை இறக்கி விளையாடுங்க! நான் ஆடலை!”
  “ என்னடா சொல்றே!  இது பைனல்!”
“ அதான் நான் வேண்டாம்னு சொல்றேன்!”
மகி மவுனித்தான்.
சாமி சொன்னார்.  “மகி உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு! யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்! நீயே சொன்னாலும் நம்ப மாட்டேன்! பேடை கட்டு! நீ இறங்கறே! நாம ஜெயிக்கிறோம்! கப்பை வாங்கறோம்!”

  என்ன நினைத்தானோ தெரியவில்லை! உடனே பேட் அணிந்து களம் இறங்கிய மகி முதல் பாலில் இருந்தே விளாசத் துவங்கினான். பவுண்டரிகளும் சிக்சர்களும் பறக்க பலமான ஸ்கோரை எட்டியது மகி அணி.

அந்த ஸ்கோரை எட்ட முடியாமல் தோற்றுப்போனது கந்தா அணி!

”எப்படிடா! அவன் டக் அவுட் ஆயிருவான்னு சொன்னியே! மணிஷா அவன் கிட்டே சத்தியம் வாங்கினதை பார்த்தியா?”

 “இதோ மணிஷாவே வந்திருக்கு! கேட்டுக்கங்க!”
”என்கிட்டே சத்தியம் பண்ணான்! ஆனா இப்படி செய்வான்னு எதிர்ப்பார்க்கலை!”
 மகி அப்போது அங்கே வந்தான்! “ என்ன மணிஷா! டக் அவுட் ஆயிருவேன்னு நினைச்சு ஏமாந்து போயிட்டியா? கிரிக்கெட்னா எனக்கு உசுரு! உனக்காக அதை விட்டுறுன்னு சொன்னாக் கூட விட்டுறுப்பேன்! இனிமே நீ கிரிக்கெட் ஆடாதேன்னு சொல்லியிருந்தா ஆடாம விட்டுருப்பேன்! ஆனா நீ கொலை இல்லே பண்ண சொல்றே! பிக்சிங் பண்றே! என்னை நம்பறவங்களை கொலை பண்ண சொல்லிட்டியே!  இதெல்லாம் தெரிந்தும் என்னை டீம்ல சேர்த்துகிட்டு ஓபன் பண்ண சொன்ன எங்க டீமை ஏமாத்த நான் விரும்பலை! இத்தனை நாளா நீ என்னை ஏமாத்தியிருக்கலாம்! முதல் முறையா நான் உன்னை ஏமாத்தி இருக்கேன்! இந்த ஏமாத்தம் உனக்கு காலம் பூறா நினைவு இருக்கும். வரட்டுமா?” என்றான்.
   மணிஷா முகம் இருண்டு போக, எதிரியை நேர்மையா தோற்கடிக்க முயற்சிக்கணும் மச்சி! டீ கப்பு வாங்கிட்டு வரேன்! ரெண்டுபேரும் ஆத்தி ஆத்தி குடிங்க! என்றான்.
அங்கிருந்த டீம் முழுக்க ஆ..ஹா!.. குரல் கொடுக்க மகி ஒர் ஹீரோவாக அங்கிருந்து அகன்றான்.
     
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


   

Comments

  1. நல்ல கதை..
    அண்ணே ..

    ReplyDelete

  2. "எதிரியை நேர்மையா தோற்கடிக்க முயற்சிக்கணும்"
    சூப்பர் மெசேஜ்!
    அருமையான ஆடுகளம்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. அருமை... எதிலும் நேர்மை வேண்டும்...

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    கதை நன்றாக உள்ளது நல்ல விடயங்களை அறிய முடிந்தது பகிர்வுக்கு நன்றி
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமையான கதை நேர்மைமுக்கியம் எப்போதும்.

    ReplyDelete
  6. நல்ல கதை. பாராட்டுகள்.

    மேட்ச் ஃபிக்சிங் லோக்கல் கிரிக்கெட் போட்டிகள் வரை வந்துவிட்டதே! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2