அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!

அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!


விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன. மன்னர்கள் பொழுது போக்கிற்காக கானகம் சென்று வேட்டையாடுதல் மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். மன்னர்களுடன் அவரது பரிவாரங்களும் கானகம் செல்லும். ஆனாலும்  காடு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

   விஜய புரம் காட்டில் திடீரென அரக்கன் ஒருவன் புகுந்துவிட்டான். அவன் முதலில் விலங்குகளை பிடித்து உண்டு கொண்டிருந்தான். பின்னர் மனிதர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்துவிட்டான். இதனால் யாரும் காட்டிற்கு செல்லவே அஞ்சினர். மாதம் ஒரு முறை கானகம் சென்று வேட்டையில் ஈடுபடும் மன்னரும் வேட்டைக்கு செல்வது தடைபட்டது.

   அரக்கன் மிகுந்த பலசாலியாகவும் மனிதர்களையே உண்பவனாக இருந்ததாலும் அவனை வெற்றி பெறுவது எளிதான காரியமாக இல்லை! அரக்கனுடன் போரிட்ட பலர் மாண்டு போயினர்.நாளுக்கு நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகமாகி காட்டு எல்லையோரம் இருந்தவர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்து விட்டான். இதனால் மன்னர் மனம் வேதனை அடைந்தார். மக்களை காக்காமல் மன்னனாக இருந்து என்ன பயன்? என்று அரசன் அரக்கனுடன் மோதுவதற்கு கிளம்பினார்.

    அந்த சமயத்தில் அந்த ஊரில் வசித்த குள்ளன் ஒருவன் அரசனை காண வந்தான். "அரசே! நான் அந்த அரக்கனை எப்படியும் வென்று வருகிறேன். எனக்கு உதவியாக பத்தே பத்து வீரர்களை மட்டும் அனுப்புங்கள்" என்றான். சபையில் இருந்தோர் எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்! இந்த சபையில் மாபெரும் வீரர்கள் எல்லாம் அரக்கனுடன் மோதி மரணத்தை தழுவி விட்டார்கள். நீ எப்படி அரக்கனை வெல்லப் போகிறாய்? என்று கேலி பேசினார்கள்.

    குள்ளன் மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையாகவும் சொன்னான்  “எவ்வளவு பெரிய வீரன் என்றாலும் அவனுக்கு ஒரு பலவீனம் இருக்கும். அதை நாம் ஆயுதமாக கொள்ள வேண்டும். என்னுடைய உருவத்தை கண்டு எடை போடாதீர்கள்! என் திறமையை கண்டு எடை போடுங்கள்! ” என்று கூறினான்.

     மன்னரும் குள்ளனின் பேச்சை ஆமோதித்து,  “குள்ளனே! நீ சொல்வது உண்மைதான்! ஆளைக் கண்டு எடை போடுவது தவறுதான்! சரி உனக்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறேன்! நீ அந்த அரக்கனை வென்று வந்தால் நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்! உனக்கு உதவியாக பத்து வீரர்களை அனுப்புகிறேன்! ”என்றான்.

    மறுநாள் குள்ளன் பத்து வீரர்களுடன் கானகம் நோக்கி புறப்பட்டான்.  “போயும் போயும் இந்த குள்ளனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளதே! இவனோடு செல்லா விட்டால் அரச தண்டனை கிடைக்கும் இவனோடு சென்றாலோ அரக்கனிடம் சாவு நிச்சயம்! என்ன கொடுமை இது” என்று வீரர்கள் பேசி கொண்டனர்.

   குள்ளன் அவர்களின் அவநம்பிக்கையான பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான்.  “வீரர்களே! முதலில் உங்களை நம்புங்கள்! அரக்கனை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை குள்ளனாகிய எனக்கே இருக்கிறது! வாள் வேல், வில் வீச்சுக்களில் திறமைப் பெற்ற உங்களுக்கு இருக்க வேண்டாமா? என் மீது நம்பிக்கை இருந்தால் என்னோடு வாருங்கள்! இல்லையேல் நீங்கள் தங்கி விடுங்கள்! நான் அரசனிடம் காட்டிக் கொடுக்க மாட்டேன்!” என்றான். 

      “அடேய் குள்ளா! உனக்கு ரொம்பவும் அதீத நம்பிக்கைதான்! நீ என்ன எங்களை காட்டிக் கொடுப்பது! நீ எப்படியும் அரக்கனால் சாகடிக்கப் படுவாய்! நாங்கள் தப்பித்து வந்ததாக மன்னரிடம் கூறிக் கொள்கிறோம்! உன்னுடன் எங்களால் வர முடியாது!” என்று வீரர்கள் கலைந்து சென்றனர்.

    “அட கோழைகளே!” என்று நினைத்து விட்டு குள்ளன் கானகம் நோக்கி நடந்தான். அப்போது தாகம் மேலிட குளக்கரையில் நீர் அருந்த சென்றான். அங்கு ஒரு எறும்பு நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. குள்ளன் ஒரு இலையில் அதை எடுத்து மேலே விட்டான். அந்த எறும்பு பேசியது  “மிக்க நன்றி நண்பரே! என்னை காப்பாற்றியமைக்கு! நீங்கள் என்ன காரியமாய் இந்த வழியே செல்கிறீர்கள்?” என்று கேட்டது.

   அரக்கனை கொல்ல செல்வதாக குள்ளன் கூறினான்.  “நண்பரே! நானும் உங்களுடன் வருகிறேன்! என்று எறும்பு அவனது தோள் மீது ஏறிக் கொண்டது. இன்னும் சற்று தூரம் சென்ற போது ஒரு கழுகு ஒன்று வழியில் அடிபட்டு கிடந்தது. குள்ளன் அதை எடுத்து பச்சிலை பறித்து கட்டி பறக்க விட்டான். அந்த கழுகும்  “மிக்க நன்றி நண்பா! நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டது. குள்ளன் விபரம் சொல்ல நானும் உன் உதவிக்கு வருகிறேன் என்றுஅவனுடன் புறப்பட்டது.


    குள்ளன் கானகத்தை நோக்கி  முன்னேறுகையில் வழியில் சங்கு ஒன்று கிடந்தது. அதை எடுத்து ஊதுகையில் அந்த சங்கு பேசியது, “ நண்பா! நான் உனக்கு உதவுவேன் எடுத்துக் கொள்” என்றது. குள்ளன் அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான். அங்கிருந்து கிளம்பி மேலும் சில மைல்கள் கடந்தான். அப்போது கண்ணிழந்த   ஒருவன் வழியில் மரத்தடியில் இருப்பதைக் கண்டான். அவனிடம் சென்று “ நண்பரே! ஏன் இந்த கானகத்தில் தனியாக இருக்கிறீர்கள்! ” என்று கேட்டான் குள்ளன்.

      ”நண்பா! நான் பெரிய வில்லாளி! ஒரு போரில் என் கண்களை இழந்து விட்டேன்! ஆனாலும் சத்தம் வரும் திசை அறிந்து வில் எறிவதில் நான் கில்லாடி! ஆனாலும் என் வீட்டில் என்னை துரத்திவிட்டனர். அதனால் நாடோடியாகத் திரிகிறேன்! ஆமாம் நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்டான் வில்லாளி.

    குள்ளனும் தான் அரக்கனை கொல்ல போகும் செய்தியை சொல்ல,  “நானும் உங்களுடன் இணைந்து கொல்கிறேன்!” என்று வில்லாளி இணைந்து கொண்டான்.

   இப்படி இவர்கள் ஐவரும் அரக்கன் வசிக்கும் இடம் சென்றனர். சங்கு சொல்லியது! “ நண்பா! என்னை எடுத்து ஊது! அரக்கனுக்கு சத்தம் என்றால் ஆகாது” என்றது. எறும்பு சொன்னது  “என்னுடைய உத்தரவுப் படி என் வீரர்கள் இங்கு குழுமி உள்ளனர். அவர்கள் அரக்கனை கடிக்கத் தயராக உள்ளனர்” என்றது. கழுகு சொன்னது “ நண்பா! நான் அரக்கனின் கண்களை குத்திவிடுகிறேன்!” என்றது.

      குள்ளன் சொன்னான், “ அதோ பாருங்கள்! அந்த அரக்கன் சிறு குன்று போல படுத்து உறங்கிக் கொண்டு இருக்கிறான். மனித வாடை பட்டால் விழித்து எழுந்து விடுவான். நானும் வில்லாளியும் இங்கே ஒளிந்து நின்றுதான் அவனை தாக்க வேண்டும். எறும்புகளே நீங்கள் முன்னேறுங்கள்! அரக்கனின் உடலில் ஏறி ஆங்காங்கே கடியுங்கள்! நவதுவாரங்களில் புகுந்து தொல்லை பண்ணுங்கள்! நான் சங்கெடுத்து ஊதுகிறேன்! சத்தமும் வலியும் தாளாமல் அரக்கன் எழுந்து என்னைத் தேடுவான்! அந்த சமயம் கழுகாரே! நீங்கள் கண்ணிமைப்பதற்குள் அவனது கண்களை குத்தி விடுங்கள்!  அவன் பார்வை இழந்ததும் நான் அவன் பின்னே சென்று ஒலி எழுப்புகிறேன்! வில்லாளரே! நீங்கள் சரமாரியாக அம்புகளை விடுங்கள்! அரக்கன் மாண்டுவிடுவான்” என்று சொல்லி விட்டு சங்கெடுத்து ஊதத் துவங்கினான்.

    சங்கோசை சத்தத்தில் எரிச்சல் அடைந்து அரக்கன் விழித்து கொண்டு சுற்றும் முற்றும் தேடினான். அதே சமயம் எறும்புக் கூட்டம் அவன் உடலில் பல இடங்களில் புகுந்து கடிக்க அவன் தவிக்கும் சமயம் கழுகு பாய்ந்துவந்து அவன் கண்களை கொத்தியது. அரக்கன்  “ஆ! ஐயோ!” என்று கத்த வில்லாளி சத்தம் வந்த திசை நோக்கி அம்புகளை பறக்க விட்டான். அம்புகள் உடலில் தைக்க மாண்டு விழுந்தான் அரக்கன்.

   குள்ளன் அரக்கன் இறந்ததை அருகில் சென்று உறுதி செய்து கொண்டான். பின்னர் அவர்கள் அனைவரும் அரசனிடம் சென்றனர். அரக்கனை கொன்ற விதத்தை கூறினான் குள்ளன். அரசன் மகிழ்ந்து போனான். “குள்ளனே! உருவத்தில் சிறியவனாய் இருந்தாலும் பெரிய காரியத்தை சாதித்து விட்டாய்! உனக்கு என்ன வேண்டும் கேள்! ”என்றான் அரசன்.

   “மன்னா! நான் ஒருவனாக இதை சாதிக்க வில்லை! எனக்கு எறும்பு முதல் கண்ணிழந்த வில்லாளி வரை அனைவரும் உதவினார்கள்! எங்கள் அனைவருக்கும் இந்த சாதனை உரியது” என்றான் குள்ளன்.

அவனது சுயநலமற்ற பேச்சை கண்டு வியந்த அரசன் அவனை தனது மெய்க்காப்பாளனாகவும் வில்லாளியை பாதுகாவலனாகவும் நியமித்து கழுகு மற்றும் எறும்புகளுக்கு சரணாலயம் அமைத்துக் கொடுத்து கவுரவித்தார்.
  
நீதி: உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

(மீள்பதிவு)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம்
    ஐயா
    உலகத்தில் நாம் ஒருவர் என்பதை மறந்து விட்டு நமக்கு பலர் இருக்கின்றார்கள் உதவ என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் அரசன் எடுத்த முடிவு நன்று... கதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கருத்துள்ள கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான கதை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. கதை நன்றாக இருக்கிறது. நன்றி பதிவுக்கு!

    ReplyDelete
  5. பைபிலில் ஒரு கதை வருமே, கோலியாத் கதை. அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. பைபிலில் ஒரு கதை வருமே, கோலியாத் கதை. அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய மன்மத சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. கதை அருமை நன்றி . அனுராதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2