பேச்சியம்மனான சரஸ்வதிபேச்சியம்மனான சரஸ்வதி
புராணக்கடவுள்களுக்கும் சிறு தெய்வங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. கிராமப்புறங்களில் புராணக்கடவுளர்கள் அவர்கள் பகுதிக்கேற்றவாறு பெயர் சூட்டி மகிழ்கின்றனர். வழிபடுகின்றனர். துர்கை அம்மனின் வடிவான தெய்வங்கள் பல்வேறு பெயர்களில் கிராம தெய்வங்களாக உள்ளன. அது போல சரஸ்வதியின் வடிவான தெய்வம் பேச்சியம்மன் என்று வழிபாடு செய்யப்படுகிறது. கல்விக் கடவுளாகிய சரஸ்வதிக்கு நாமகள், வாக் தேவி, கலைமகள் என்று பெயர்கள் உள்ளன.. நாமகள் என்பதே நாட்டுப்புறதெய்வங்களில் பேச்சியம்மனாக வணங்கப்படுகின்றன. நல்ல பேச்சாளாராக வர வேண்டுமெனில் பேச்சியம்மனை வணங்குங்கள். ஆகா!  முத்து முத்தா பேசுபவர் என்று புகழ்கிறோம் அல்லவா? அம்மனுக்கு முத்துப் பேச்சி என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. கல்வி கலையில் சிறக்க பேச்சியம்மன் வழிபாடு நன்மை தரும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கரம் என்னுமிடத்தில் ஐந்து முகங்களும் பத்து கைகளும் கொண்டு’காயத்ரி’ என்னும் பெயரில் அம்பாள் காட்சி தருகிறாள். கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை விரும்பிய பாவத்தால் இந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அதை போக்க பிரம்மனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான். பிரம்மா காட்சி அளித்து தனது கமண்டல நீரால் ஒரு குளத்தை ஏற்படுத்தினார். அக்குளத்திற்கு புஷ்கரம் என்று பெயரிட்டார். அதில் நீராடி காயத்ரி தேவியை வணங்கி பாவ விமோசனம் பெற அருள் செய்தார். காயத்ரிஅருள் செய்ததால் இத்தலத்திற்கு காயத்ரி பீடம் என்று பெயர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நடைபெறும் புஷ்கர விழா பிரசித்தி பெற்றதாகும்.

சிவனும் சக்தியும் இணைந்து அர்த்தநாரியாக காட்சி தருவதை தரிசித்து இருக்கலாம். ஆனால் சிவலிங்கத்தில் சக்தியின் வடிவம் இருப்பதை காண வேண்டுமானால் காஞ்சி புரம் ஆதி காமாட்சி கோயிலுக்கு செல்ல வேண்டும்.இந்த சக்தி லிங்கத்தை வணங்கினால் திருமண தடைகள்விலகும். ச்ரி சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான கோயில் இது ஆதி காமாட்சி என்ற பெயர் கொண்டவள் இங்குள்ள அம்பிகை. காஞ்சியில் காளி கோட்டமாக விளங்குவது இந்த கோயில். உற்சவ அம்பிகையுடன் லஷ்மி சரஸ்வதி இருப்பது இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி, மற்றும் நவமி நாட்களில் அம்பாளின் கதையை கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும் அம்பிகையின் கதையை கேட்பவர்களை கிரக தோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் சேர்வர்.

நவராத்திரியின் ஒன்பது தினங்களை மூன்று மூன்றாக பிரித்து முதல் மூன்று நாட்கள் லஷ்மிக்கும் அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்குரிய காரணம் தெரியுமா?  வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள் இதை பெறுவதற்கு முதலில் லஷ்மியை துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா அதை பாதுகாக்க வேண்டாமா? அதற்குரிய தைரியத்தை தரும் சக்தியை துர்க்கையாக அடுத்த  மூன்று நாட்களும் வணங்குகிறோம். பணமும் பாதுகாப்பும் இருந்துவிட்டால் போதுமா? அதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு வேண்டாமா? அதற்கு தேவை கல்வி அந்த கல்விக்கடவுளான சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்கள் வணங்குகிறோம்

அம்பாளுக்கும் ஐந்தெழுத்து
சிவனை நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் பூஜிப்பது போலவே அம்பாளுக்கும் துர்க்கா என்னும் சொல் பஞ்சாட்சரமாக விளங்குகிறது. த், உ, ர் க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களின் சேர்க்கையே துர்க்கா. துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்தால் எதிரிகளின் தொல்லை நீங்கி மனதைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு ‘அரண்’ அல்லது ‘கோட்டை’ என்று பொருள். அடியவர்களை கோட்டை போல  சுற்றி பாதுகாப்பாள் என்று  வேதம் போற்றுகிறது.

பல்வேறு ஆன்மீக இதழ்களில் இருந்து தொகுப்பு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து மெருகேற்ற உதவுங்கள்! நன்றி!

Comments

  1. நவராத்திரி பற்றியும் அம்மன் பற்றியும் தந்த தொகுப்பு நன்று.

    ReplyDelete
  2. சிறந்த தொகுப்பு...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!