பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 11



பேய்கள் ஓய்வதில்லை!
       பகுதி 11
உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதாக ஊரே பேச அவள் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. பூஜாரியை மிரட்டிய அவள் ஒரு பூட்டிய வீட்டின் முன் நின்று சாப்பாடு போடும்மா என்று கேட்க உள்ளிருந்தும் பதில் வருகிறது. பஞ்செட்டியில் வசிக்கும் முகேஷின் நண்பன் ரவி பேய் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் அவன் செயல்களும் வித்தியாசமாக இருக்க பயந்து போன முகேஷ் திருப்பதிக்கு அழைத்துச் செல்கிறான். ஆனால் பாதி வழியில் காணாமல் போகிறான் ரவி. பயந்து போனமுகேஷ் அவனை தேட காணாமல் வீட்டுக்கு போன் செய்கிறான். அங்கும் அவன் இல்லை என்று தகவல் வர பயணத்தை தொடர்கிறான். அப்போது ரவியிடம் இருந்து போன் வருகிறது.

இரண்டு வார இடைவெளியில் கதையை மறந்தவர்கள் மற்றும் புதியவர்கள் கீழே சென்று லிங்கை பயன்படுத்தி படித்து வரவும்.முந்தைய பகுதிகளை படிக்க லிங்க் இதோ!


   இனி.

ரவி காலிங்... என்று மின்னும் எழுத்துக்களையே கண்கொட்டாமல் பார்த்த முகேஷ் ஆன் பட்டனை ஆன் செய்தான். ஹலோ! ரவி எங்கேடா போயிட்டே! இப்படியா செய்வே? என்று கோபமாக கேட்டான். மறுமுனையில் கரகரத்த குரல் பேசியது. நான் ரவி இல்ல! அவன் உடம்புல இருக்கற ஆவி! என்னை திருப்பதி கூட்டிப் போய் துரத்திடலாம்னு நினைச்ச இல்ல! அது ரொம்ப தப்பு முகேஷ். இப்ப ரவி என் கட்டுப்பாட்டில் இருக்கான். அவனை உன்னால கட்டுப்படுத்த முடியாது. என் காரியம் முடியறவரைக்கும் அவன் என் கட்டுப்பாட்டில் தான் இருப்பான். அப்புறம் விட்டுடறேன். நீ வீணா தொந்தரவு செய்யாம உன் பாட்டுக்கு இருந்தா நல்லது. திரும்பவும் என் விசயத்தில் தலையிட்டா உன் நண்பணுக்கு மட்டுமல்ல உனக்கும் சேர்த்து ஆபத்து காத்து கிடக்கு! இப்ப கூட உனக்கு நான் போன் செய்ய மாட்டேன். ஆனா நண்பனை காணாம நீ தவிச்ச தவிப்பு எனக்கு கஷ்டமா இருந்துச்சு அதான்! நான் கிளம்பறேன். என் வேலை முடிஞ்சதும் ரவி பத்திரமா வீட்டுக்கு வருவான். நீ திருப்பதி பெருமாளை தரிசனம் செஞ்சிட்டு முடிஞ்சா ரெண்டு லட்டு எக்ஸ்ட்ராவா வாங்கி வை ரவிக்கு பை  என்றது குரல்!
  ஏய்! இப்ப நீ எங்க இருக்க! நான் உடனே வரேன்!
 வேண்டாம் நண்பா! ரவி என் கிட்ட பத்திரமா இருப்பான். அவனை நான் கொண்டு வந்து சேர்க்கிறேன். நீ சந்தோசமா கிளம்பு!
   இ.. இல்ல! நான் ரவியை பார்க்கணும்!
இந்தபிடிவாதம் தான் வேணாம்னு சொல்றது! ரவிக்கு ஒரு அசைண்மெண்ட் இருக்கு முடிச்சதும் தானா நீ திரும்பறதுக்குள்ளே வருவான்!
  இல்ல! நீ செய்ய்றது தப்பு!
 அப்ப அவங்க செஞ்சது எல்லாம் ரைட்டா?
அவங்க என்ன செய்தாங்க!
அதை விளக்க எனக்கு இப்ப நேரம் இல்லை! என் நேரத்தை வீணாக்காம போனை வை! இல்லை நான் வைக்கிறேன். போன் அணைந்தது
  சே! இப்படி கோட்டை விட்டு விட்டோமே! ரவியின் உடம்பில் உள்ள ஆவி என்னவெல்லாம் செய்யப்போகிறதோ தெரியவில்லையே? மீண்டும் ரவியின் நம்பருக்கு டயல் செய்தான் முகேஷ்.
  ரிங்க் போனது! ஆனால் எடுக்கவில்லை! ஒரு பத்து முறை ரீ டயல் செய்தான் பதில் இல்லை! சே ! என்று அலுத்துக் கொண்டான்.
  பக்கத்து சீட் காரர் ஆவலுடன் கேட்டார். என்ன தம்பி உங்க ப்ரெண்ட் கிடைச்சிட்டாரா?
 ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தான்
என்ன தம்பி முழிக்கறீங்க? போன் வந்ததும் ஆர்வமா பேசினீங்க? எங்க இருக்காராம்!
  வீட்டுல! என்றான்
என்னது வீட்டுலயா?
ஆம் என்று தலையசைத்தான்.
கேட்டவர் இப்போது அவனை பார்த்த பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. கண்டக்டரும் ஒரு பார்வை பார்த்து விட்டு போனார்.
ஒரு வழியாய் மூன்றரை மணி நேர பயணத்தில் திருப்பதி வந்து சேர்ந்தான். பேருந்து நிலையம் முழுக்க டாடா பஸ்கள் சிவப்பாய் காட்சி அளிக்க தெலுங்கில் எழுத்துக்கள் மின்னின. இறங்கியவன் ஒரு குளிர்பான கடையினுள் நுழைந்தான். மாஸா ஒண்ணு தாங்க! என்றான்.
  மாஸாவை குடித்தபடி அப்படியே பார்வையை மேய விட்டவன் கண்களில் அவன் தென்பட்டான். வித்தியாசமாக நெற்றியில் கருப்பு பொட்டும் கழுத்தில் பவழமணிகள் தொங்க குறுந்தாடி வளர்த்துக் கொண்டு ஒன்றிற்கு மேல் ஒன்றாக மூன்று சட்டைகள் அணிந்து கொண்டிருந்த அவன் முகேஷை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான்.
 அவன் ஏன் தன்னை நோக்கி வருகிறான் என்று அறியாமல் முகேஷ் கடையில் காசு கொடுத்துவிட்டு நகரவும் அவன் ஏய் தம்புடு! நில்லண்டி! ஏய் தம்புடு மீரு தானே  முகேஷ் தம்புடு! என்று அழைக்கவும் முகேஷ் திகைத்து நின்றான்.

பூட்டிய வீட்டின் முன் நின்று செல்வி பேசவும் உள்ளிருந்து பதில் வரவும் வினோத் திகைத்து நிற்க. செல்வி நேராக அந்த வீட்டின் வாசலில் நுழைந்து  கதவின் மேல் கை வைக்கவும் கதவும் தானாக திறந்து கொண்டது. வினோத் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான். செல்வி நில்லு நில்லு நானும் வரேன் என்று பின்னால் சென்று உள்ளே நுழைய முற்பட  கதவு மூடிக்கொண்டது கதவில் மண்டையில் அடிபட்டு கீழே விழுந்தான் வினோத்.
  மண்டை வலி விண் விண்ணெண்று வலித்தது! பலமான அடி! அது தேக்கினால் செய்யப்பட்ட பூண் வைத்த பழமையான கதவு! அந்த பூண்களில் ஒன்று அவனை தாக்கியிருக்க வேண்டும் முன் நெற்றியில் சரியான வலி! அப்படியே அமர்ந்து அழுந்த தேய்த்தும் வலி போகவில்லை! சில நிமிடங்களில் நெற்றி புடைத்துக் கொண்டது.
 ஆனால் அவனுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை! செல்வி என்ன ஆனாள்?
  கதவை பலமாக தட்டி செல்வி செல்வி என்று குரல் கொடுத்தான். உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை!
 செல்வி கதவை திற! இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்! என்றான் கோபமாக அவன் கோபக்குரல் சுவரில் பட்டு எதிரொலித்ததே தவிர உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை.
 அவனுக்குள் ஆத்திரமும் பயமும் கலந்து ஒரு வித புதிய அனுபவத்தில் இருந்தான்.கதவை பலமாக தட்டி தட்டி சோர்ந்து போனான். அவன் பின்னாலேயே வந்த ராகவனும் மணியும்  வினோத் வினோத் ஏண்டா இந்த பூட்டின வீட்டை தட்டிகிட்டு இருக்கே உனக்கென்ன பைத்தியமா? என்றார்கள்
  ராகவா! செல்வி உள்ள போய் கதவை சாத்திகிட்டா? அதான் தட்டிகிட்டு இருக்கேன்!
 என்னடா உளற்றே! அவ நம்ம வீட்டுல தூங்கிட்டு இருக்கா!
  என்ன சொல்றீங்க? அவ வெளியே கிளம்பி போனது பூஜாரி வீட்டுல பத்ரகாளியா மாறி அவனை கொல்ல பார்த்தது. இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சது!
 என்னடா எதாவது கனா கண்டியா? செல்வி நம்ம வீட்டுல தூங்கிட்டு இருக்கா! நீதான் இந்த நடு ராத்திரியில எங்க தூக்கத்தை கெடுத்துகிட்டு இருக்கே?
  என்னது!
ஆமாம்! நீதான் பாதி தூக்கத்துல எழுந்து பூஜாரி வீட்டு பக்கமா போனே! என்ன விசயமா இருக்குமுன்னு இவரை கூட்டிகிட்டு உன்னை பின் தொடர்ந்து வந்தேன். நீ அங்கிருந்து கிளம்பி வந்து பூட்டியிருக்கிற இந்த வீட்ட தட்டிகிட்டிருக்கே! யாரும் பாக்கறதுக்கு முன்னாடி கிளம்பிடலாம்! இல்லை இதுக்கு ஊருல  வேற கதை கட்ட ஆரம்பிச்சுருவாங்க!
  ஆமாம் தம்பி! சீக்கிரம் கிளம்புங்க! யாராவது பார்த்துட்டா வம்பு!
 அப்படி என்ன வம்பு! இந்த வீட்டுல யாரு இருக்காங்க?
யாரும் இல்லாதது தான் பிரச்சனையே!
இருந்தவங்க எங்க போனாங்க?
செத்து போயிட்டாங்க!
விரைத்து நின்றான் வினோத்! அவன் காதில் உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது! எண்ணெய் வாசனை வந்தது! ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்டது. கதவில் காது வைத்து கேட்க ஆரம்பித்தான்.


 இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றார் மணி!
 
எனக்கா பைத்தியம் பிடித்து விட்டது! இல்லை இதனுள்தான் செல்வி சென்றாள் உள்ளே பலகாரம் செய்கிறார்கள் என்றான் வினோத்.
கண்டிப்பாக பைத்தியம் முற்றிவிட்டது என்றார் மணி.    மிரட்டும்(11)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவியுங்கள்! நன்றி!



Comments

  1. முந்தைய பகுதியை படித்து விட்டு வந்தேன்... (மறந்து விட்டதால்)

    நன்றாக செல்கிறது... தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2