நிற்காதே ஓடு!

 

நிற்காதே ஓடு!

நகரில் இருந்து சற்று ஒதுங்கி கடற்கரை ஓரமாக  இருந்தது அந்த ரிசார்ட். ஆங்காங்கே தனித் தனி குடில்கள். அனைத்திலும் சகலவிதமான வசதிகளுடன் கூடிய அறைகள். டிவி. வைஃபை, ஏசி, ப்ரிட்ஜ் என அனைத்தும் அங்கே வாங்கும் பணத்திற்கேற்ப வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சமூகத்தின் பிரபலங்கள் ரிலாக்ஸ் தேடி அந்த குடில்களில் தஞ்சம் புகுவது வழக்கம். உடன் குடியும் கும்மாளமும் சேர்ந்திருக்கும்.

அப்படி ஒரு குடிலுக்குத்தான் வந்திருந்தாள் மேகலா. மேகலா யார் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் டிவி சீரியல்கள் பார்க்காத விநோத ஜந்துவாக நீங்கள் இருக்க வேண்டும். பிரபல டிவிக்களில் வீஜேவாக இருந்து இப்போது சீரியல் கதாநாயகியாக ப்ரமோட் ஆகியிருந்தாள். அஜய் டீவியில் அவள் கதாநாயகியாக நடிக்கும்ஆண்டவன் ஸ்டோர்ஸ்டி.ஆர்.பி யில் எகிறிக்கொண்டிருந்தது. ஆண்டவன் ஸ்டோர் அமுதா என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தாள் மேகலா.

மேகலா சாதாரணமான பெண் இல்லை! துணிச்சல் மிக்கவள். சிலம்பம் கராத்தே என்று பழகியிருந்தாள். மூன்று மொழிகளில் பேசுவாள். டான்ஸ் ஓவியம் என்று எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் அதிகம் அவளிடம் இருந்தது. இந்த விஷயமே அவளை டிவி விஜேவாக ஆக்கியிருந்தது. மருத்துவம் படித்துக்


கொண்டிருந்தவள் படிப்பு முடிந்த்தும் அவளுக்கு பிடித்த விஜே தொழில் செய்யப்போவதாக சொல்லி ஒரு சின்னஞ்சிறு சேனலில் நுழைந்தாள். இரண்டே வருடங்களில் ஏகப்பட்ட வளர்ச்சி! இதோ அஜய் டீவியில் ஒரு முக்கிய ஆங்கராகவும் சீரியல் கதாநாயகியாகவும் அசத்திகொண்டிருக்கிறாள்.

அன்று சீரியல் ஷூட்டிங்கில் இருக்கையில்  ஒரு போன் கால் வந்தது. அந்தக் கால் தான் இந்த ரிசார்ட்டுக்கு அழைத்து வந்தது. ஷூட்டிங் ப்ரேக்கில் தான் அந்த காலை அட்டெண்ட் செய்தாள் அவள். “ஹலோ மேகலா மேடமா?”

ஆமாம்! நீங்க யாரு?”

நான் யாருங்கிறது முக்கியம் இல்லே! நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியமானது!”

அப்படி என்ன முக்கியமான விஷயம்!”

நீங்களும் ராம்நாத்தும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா கேள்விப் பட்டேன்! உண்மையா?”

ஆமாம்! அதுக்கென்ன?”

ராம்நாத் நல்லவன் கிடையாது!”

இதை நீ ஏன் பொறாமையாலே சொல்லக் கூடாது?”

பொறாமையா? எனக்கா? உங்க மேலேயா?”

ஏன் இருக்கக் கூடாதா? நான் ஒரு பிரபல விஜே! என் மேலே உங்களுக்கு பொறாமை ஏற்பட்டு எனக்கு நல்ல வாழ்க்கை அமையக் கூடாதுன்னு நீங்களா எதாவது கதை கட்டி விடலாம் இல்லையா?”

நான் யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசியிருக்க மாட்டே?”

நீங்கதான் அதைச் சொல்ல மாட்டேங்கிறீங்களே?”

ஹாஹாஹா! இப்படி சாமர்த்தியமா பேசி என்னை யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ண வேணாம். உன்னை விட அதிக புகழ்வெளிச்சம் பார்த்தவள் நான். உன் வருங்கால புருஷனாகப் போற ராம்நாத் எனக்கும் வலைவிரிச்சுப் பிடிச்சு ஏமாத்திட்டான். நான் மட்டும் இல்லே.. இன்னும் சிலபேர் அவன் வலையிலே விழுந்து ஏமாந்து போயிருக்காங்க! உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ஒரு விடியோ க்ளிப்பிங் அனுப்பறேன் பாரு! அப்புறமா இன்னிக்கு ஓல்ட் மஹாபலிபுரம் ரோட்ல இருக்கிற ஸீ ஷோர் ரிசார்ட்டுக்கு வந்து  87 ஹட்டுக்கு வந்து பாரு..!”

பேசியவள் போனை வைத்துவிட்டாள். அடுத்த சில நொடிகளில் ஒரு விடியோ வாட்சப்பில் வர ஓப்பன் செய்தாள். அதில் மங்கலான வெளிச்சத்தில் ராம்நாத் அரைகுறை ஆடையுடன் ஒருபெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

 சே… ”அவள் முகம் கோபத்தால் துடித்தது.

இவ்வளவு மோசமானவனா இந்த ராம்நாத்! எப்படியெல்லாம் சுற்றிசுற்றி வந்தான். வீட்டுக்கே வந்து உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கண்ணீர் விட்டு அழுதான்.

 ஒரு சாதாரண அரசு உத்தியோகம் பார்த்து ரிட்டையர்ட் ஆன அப்பாவிற்கு ராம்நாத்தின் பணக்கார பவிசு சுத்தமாக பிடிக்கவில்லை! உங்கள் தகுதிக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை என்று எத்தனையோ விதமாகச் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு ஷூட்டிங்க் ஸ்பாட்டிலும் கையில் ஒரு ரோஜா பூங்கொத்தோடு காத்திருப்பான். தினம் தினம் வாட்சப்பில் டெக்ஸ்ட் செய்வான். கவிதை மழை அதில் பொழிவான்.

அவனது பெற்றோர் கோயிலுக்குப் போனால் அங்கே அவர்களுக்கு முன்னால் பக்திப்பழமா காத்திருப்பான். அவளது ஓவ்வொரு அசைவையும் அவன் பின் தொடர்ந்தான்.

பலமாத நச்சரிப்புக்கு பின் போன மாதம்தான் மேகலாவின் பெற்றோர் அவனுக்கு தலை அசைத்தார்கள். சிம்பிளாக ஒரு நிச்சயதார்த்தம் செய்து மொதிரம் மாற்றிக் கொண்டார்கள். அதன் பின் ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டான்.” இனி நீ எனக்கு மட்டும் சொந்தம்.  இந்த டிவி சிரியலில் நடிப்பதை எல்லாம் விட்டுவிடு. என் பொண்டாட்டி மற்றவர்களை தொட்டு நடிப்பது எனக்குச் சுத்தமாக பிடிக்காது! எனக்கு நீ உனக்கு நான்”! என்றான்.

மேகலா முதலில் அதிர்ந்து போனாள். அவளுடைய ஆம்பிஷனே ஆங்கரிங் அவளுக்குப் பிடித்த தொழிலையே இவனை மணப்பதற்காக விட்டுவிட வேண்டுமா? ”நோ! முடியாது என்றாள்.

என் கனவு! என் லட்சியம் எல்லாம் டிவி ஷோ காம்பியரிங்கும் ஓர் ஆர்ட்டிஸ்டா வாழணுங்கிறதுதான்! அதுக்காக நான் படிச்ச படிப்பையே தூக்கிப் போட்டுட்டு இந்த பீல்டுக்கு வந்தேன். உங்களுக்காக இதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நான் என் தொழில்லே சுதந்தரமா இருக்கலாம்னு நாம லைப் பார்ட்னராகலாம்! முடியாதுன்னா இப்பவே நம்ம எங்கேஜ்மெண்ட்டை கேன்சல் செய்துக்கலாம்என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டாள்.

ராம்நாத்துக்கு  ஆத்திரம் அதிகமாக இருந்தது.” நான் யார் தெரியுமா? என் பேங்க் பேலன்ஸ் ஸ்டேட்டஸ் தெரியுமா? என்னோட வைஃப்  ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் காம்பியரிங் செய்தா எனக்கு எவ்வளோ பெரிய அவமானம் தெரியுமா?” என்றான்.

நான் காம்பியரிங் செய்யறது பிடிச்சுத்தானே என்னை பெண் கேட்டு வந்தீங்க? ”

இட்ஸ் ஓக்கே! நீ காம்பியரிங் வேணா பண்ணு! ஆனா சீரியல் பண்ணாதே!”

ஸாரி மிஸ்டர் ராம்நாத்! எங்கேஜ்மெண்ட் ஆனவுடனேயே உங்க சுயரூபத்தை காட்டினதுக்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது! இந்தாங்க நீங்க போட்ட ரிங்! ”என்று கழட்டி எறிந்த மேகலா விறுவிறுவென வெளியேறினாள்.

அதற்கப்புறம் ஒருவாரம் ராம்நாத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை! ஷுட்டிங் ஸ்பாட்டிலும் எந்த தொந்தரவும் இல்லை! நேற்று இரவுதான் டெக்ஸ்ட் பண்ணினான். ”மன்னித்துவிடு! கொஞ்சம் பொசஸ்ஸிவா நடந்துகிட்டேன்! காம்பியரிங் உன் ஆம்பிஷன்னு புரிஞ்சுகிட்டேன்! உன் தொழில்ல நான் இடையூறு செய்ய மாட்டேன்! எனக்கு நீ வேணும்! ”என்றான்.

யோசிக்கிறேன்!” என்று பதில் அனுப்பி போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டாள் மேகலா

இன்று அதைத்தொடர்ந்து வந்த இந்த போன்காலால் ஸீ ஷோர் ரிசார்ட்டிற்கு தன்ன்ந்தனியாக  வந்திருக்கிறாள். அதோ 87 ஹட். வேகமாக நடக்கிறாள் மேகலா.

 கதவு பூட்டியிருக்க திறந்திருந்த ஜன்னல் வழியே  எட்டிப் பார்க்கிறாள். உள்ளே..

ஒரு பெண் அலறும் சத்தம். அவளை பலவந்தம் செய்து கொண்டிருக்கிறான் ராம்நாத்.அவன் பிடியில் இருந்து நழுவ அந்தப் பெண் முயற்சித்துக் கொண்டிருக்க அவள் கரங்களை பிடித்து இழுத்து படுக்கையில் சரித்துக் கொண்டிருந்தான் ராம்நாத். “யூ ராஸ்கல்!” விடுடா அவளை இல்லேன்னா போலிஸை கூப்பிடுவேன்…!”

ஜன்னலுக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தாள் மேகலா

திடீரென மேகலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியான ராம்நாத்தின் பிடி நழுவ அந்தப் பெண் கதவைத்திறந்துகொண்டு ஓட

ஏய்! நீ எப்படி இங்கே வந்தே…! அவ போனா என்ன? உன்னை என்ன செய்யறேன் பார்…!”

ஓட ஆரம்பித்தாள் மேகலா..!

ஏய் நில்லுடி! இது என்னோட ஏரியா! தப்பிக்கவே முடியாது..!”

ஓடிக்கொண்டே தன் அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மேகலா.

ரிசார்ட்டுக்குள்ளே அது என்ன?  ஒரு கல்லறை மாதிரி இருக்கிறதே..!

மூச்சிறைக்க ஓடி ஒரு கல்லறையின் பின் ஒளிந்தாள்.

பின்னாலேயே துரத்திவந்த ராம்நாத்தால் அவளை பிடிக்க முடியவில்லை!  பின்னே சும்மாவா? மேகலா ஒரு ரன்னிங் சேம்பியனும் கூட.

மூச்சிறைக்க கல்லறைத்தோட்டத்தில் நுழைந்த ராம்நாத்தை வரவேற்றான் கோவிந்தன்.

என்னங்க சார் இப்படி ஓடியாறீங்க?”

மண்ணாங்கட்டி! எனக்கு முன்னாடி இங்கே ஒரு பொண்ணு ஓடியாந்தா! நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?”

அப்படி யாரும் வரலீங்களே…!”

அப்ப நான் பொய் சொல்றேனா?”

இந்த கல்லறை தோட்ட்த்துக்குத்தான் அவ ஓடியாந்தா? மீடியா பொண்ணு! அவ தப்பிச்சிட்டா நம்ம கதை க்ளோஸ்!”

சார்! அப்படியெல்லாம் நம்மகிட்டேயிருந்து தப்பிக்க முடியுமா? இங்கே எத்தனை பொண்ணுங்களை சமாதி ஆக்கியிருக்கோம்! இது நம்ம கோட்டை! இங்கே இருந்து ஒரு எறும்பு கூட வெளியே போக முடியாது!”

இப்படி வாய் கிழிய பேசு! ஆனா காரியத்துலே கோட்டை விட்டுரு! அவ இந்த வழியாத்தான் வந்தா? அவளை பிடிக்காம கோட்டை விட்டுட்டியே!”

சார்! நான் அவசரமா ஒண்ணுக்கு இருக்கப் போயிருந்தேன்! அப்பத்தான் அந்தப் பொண்ணு உள்ளே நுழைஞ்சிருக்கணும்! இப்ப ஒண்ணும் ஆகிப்போயிடலை! இந்த கல்லறைதோட்ட்த்துக்கு இது ஒண்ணுதான் வழி! அப்படியே வெளியே போயிட முடியாது! நாலா பக்கமும் காம்பவுண்ட் போட்டிருக்கு! தாண்டி குதிச்சு போக முடியாத உயரம். எப்படியும் இந்த பக்கம் வந்துதான் ஆகணும் பிடிச்சிரலாம்.”


ஏய் நீ நினைக்கிற மாதிரி பொண்ணுல்லே அவ! அத்லெடிக் கேர்ள். என்னாலே அவ ஓட்டத்தை பிடிக்க முடியலை!  அவ தாண்டிக் குதிச்சு கூட ஓடிருவா! ”

இன்னிக்கு அவளா நானா பார்த்துடறேன் சாமி!”

இந்தா பிடி! இதை உன் செலவுக்கு வைச்சுக்க! எனக்கு அவ உயிரோட வேணும்!” சில ஐநூறு ரூபாய் தாள்களை நீட்டினான் ராம்நாத்.

அப்போது அங்கேயிருந்த ஒரு கல்லறைக்குப் பின்னால் அசைவு தெரிந்தது.

டேய்! அவ அங்கேதான் ஒளிஞ்சுகிட்டிருக்கா..போலிருக்கு! அசைவு தெரியுது..”

வாங்க சாமி! போய் புடிப்போம்…!”

இருவரும் ஒரு அடி முன் வைக்க,

ஹாஹாஹா! ”என ஓர் பேரிரைச்சல் ஒலிக்க அதிர்ந்து வானை நிமிர்ந்து நோக்கினர்

ஒரு பெண்ணின் முகம் மட்டும் கண்களில் தீ கக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக அங்கே உயர்ந்து நின்றது..

 நீநீ..? “

யாருன்னு மறந்து போச்சா ராம்நாத்?”

கல். கல்பனா…!”

பரவாயில்லையே…! பத்துமாசம் ஓடிப்போயும் மறக்காம நினைவுல வைச்சிருக்கியே..!”

வியர்த்து வழிந்தான் ராம்நாத். கோவிந்தன் பேச்சு மூச்சுவரமால் சிலையாக நிற்க

ஏய் கோவிந்தா! ஏண்டா அப்படியே நிக்கறே..! ஏதாவது செய்யுடா! இது  கல்பனாவோட ஆவி… ”

  ஆவிகளை எல்லாம் என்னாலே கட்டுப்படுத்த முடியாது சார்!” குரல் நடுங்கியபடி கோவிந்தன் சொல்ல

  ஓட ஆரம்பித்தான் ராம்நாத்..

ஓடாதே…! நில்லு…! ” கல்பனா ஆவேசமாக குரல் கொடுக்க

.. இல்லே.. ”என்று அலறியபடியே ராம்நாத் ஓடவும் வாசலில் போலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

மேகலாவின் அண்ணன் எஸ். சரவணன் ஜீப்பில் இருந்து இறங்க இரண்டு கான்ஸ்டபிள்கள் ஓட முயன்ற ராம்நாத்தை  பிடித்துவந்தனர்.

கல்லறை தோட்டத்தில் இருந்து கல்பனா வேடத்தை கலைத்தபடி வெளியே வந்தாள் மேகலா.

ராம்நாத்தின் முகம் இன்னமும் வெளிறிப் போனது!” நீ மேகலாவா? கல்பனா இல்லையா?”

அதிர்ச்சியா இருக்கா ராம்நாத்?”

கல்பனா யாரு தெரியுமா?”

யாரு? அவளும் ஒரு டீவி ஆர்ட்டிஸ்ட்தானே..!”

ஆமா! ஆனா அவ கோவிந்தனோட பொண்ணுன்னு உனக்குத் தெரியாது..!”

இந்த ரிசார்ட்டை கட்டி உன் லீலைகளை நடத்தி பல பெண்களை சீரழிச்சி கொன்னு இங்கே புதைச்சிருக்கே! கல்பனா உன் வலையிலே விழுந்து செத்தப்புறம் உன்னை பழிவாங்கறதுக்காகவே இங்கே வேலையிலே சேர்ந்திருக்கார் கோவிந்தன்.”

உன்கூட எனக்கு எங்கேஜ்மெண்ட்னு நியுஸ் வந்த்தும் என்னோட தீவிர ரசிகரான அவர் நானும் பாதிக்கப் படக் கூடாதுன்னு எனக்கு போன் செய்தார். அவர் சொன்ன விஷயங்களை முதல்லே நான் நம்பலை! அப்புறம் வீடியோ ஆதாரத்தோட அனுப்பவும் தனியா வந்து சந்திச்சேன். உண்மைகளை தெரிஞ்சுகிட்டேன்.  உன்னை கையும் களவுமா பிடிக்கணும்னு திட்டம் போட்டோம்.”

இன்னிக்கு நீ அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு ரிசார்ட் வரப்போறதை மேசேஜ் பண்ணிட்டார் கோவிந்தன். நான் உடனே வந்து உன்னை பிடிக்கப் போட்ட நாடகம்தான் இந்த பேய் வேஷம்.”

இந்த பேய்வேசத்தாலே உன் வேஷம் கலைஞ்சு போச்சு! இனிமேலாவது பெண்களை போகப் பொருளா நினைக்காம காமத்தோட பார்க்காம தெய்வமா நினைச்சு பழகுடா!”

மேகலா சொல்லி முடிக்கவும் மீடியாக்கள் வந்து சூழ்ந்து வெளிச்சம் போடவும் முகத்தை மூடிக்கொண்டான் ராம்நாத்.

 டிஸ்கி:  நண்பர் பாலகணேஷ் முகநூலில் வைத்த படத்திற்கு கதை எழுதும் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.

 

Comments

  1. நடப்பு நிகழ்வை இணைத்து அசத்தலான ஒரு சிறுகதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லதொரு கதை. ஆறுதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கதை ஒரு சமீபத்திய நிகழ்வை நினைவூட்டியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!